நூல்  குறித்த விபரம் :

 

நூல் : “வேங்குடிவயல்”

ஆசிரியர்: “அண்டனூர் சுரா”

வகை : அதிபுனைவு புதினம்

முதல் பதிப்பு : 2024

பதிப்பகம்: நாற்கரம்

தொடர்பு எண்: 95510 65500

பக்கங்கள்: 172 / ரூ 220 /-

 

மாய யதார்த்தவாதப் பாணி நாவல்

‘வேங்குடிவயல்’ எனும் இப்புதினம் ஆசிரியரின் இருபத்து மூன்றாவது நூலாகும். இராம.செ.சுப்பையா அறக்கட்டளை நடத்திய புதினப் போட்டியில் மூன்றாம் பரிசை பெற்றுள்ளது இப்புதினம்.

வேங்கை வயல் கிராமத்தில் பெரும்பான்மை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வை, மாய யதார்த்தவாதப் பாணியில் இப்புதினத்தில் விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். பல்வேறு விலங்குகள், மரங்கள், மலர்கள், புற்கள் குறியீட்டுப் பாத்திரங்களாக்கி,  சாதீய கட்டுமானத்தின் இறுக்கத்தையும் அவலத்தையும் பேசுபொருளாக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது ‘வேங்குடிவயல்’.

இந்நாவலின் மாந்தார்களாக உயிர்பெறும் பல்வேறு உயிரிகள் சாதீய அமைப்பின் பாகுபாட்டு  வெம்மையை முப்பரிமாணச் சித்திரமாக நம்முன் காட்சிப்படுத்துகின்றன.

அணிலி எனும் அணில்பிள்ளை தான் கதையின் நாயகி. அவளின் ஓட்டம், பார்வை மற்றும் அனுபவத்தில் இருந்து விரிகிறது வழமையில் இருந்து மாறுபட்ட இந்த நாவலின் கதையாடல்.

“வேங்குடி” என்பது ஒரு மரத்தின் பெயர். மரங்களின் பெயராலேயே கிராமங்களை அடையாளப்படுத்தினார்கள் தொல் தமிழர்கள்.

* “கிணறு வட்டம் வட்டமாக அலையடித்துக் கிடந்தது. காளையின் முதுகில் ஈ அமர்கையில் அதன் தோல் சலனமிப்பதைப் போன்று நீர் சலனம் கொண்டது.”

* ” மழைக்கு ஒரு விசேசக் குணமுண்டு. பூமியை ஈரப்படுத்துவது இரண்டாவது பட்சம். பள்ளங்களை மேட்டிற்கு நிகராகச் சமப்படுத்தும். அதை நினைக்கையில் மேகத்தைக் கையெடுத்துக் கும்பிடாமல் இருக்க முடியவில்லை”

* “மடியிலிருந்து இறங்கும் பாலைப் போல வானம் மெல்ல விடிந்து வந்தது.”

* “பூக்களில் நீர்ப்பூக்கள் அழகானவை; ஆனால் நறுமணம் குறைந்தவை. நிலப்பூக்கள் அழகில் குன்றியவை; ஆனால் நறுமணம் மிக்கவை. கொடிப்பூக்கள் பெரும்பாலும் கூம்பி விரிபவை; கோட்டுப்பூக்கள் விரிந்தபின்பு குவிவன.”

இதுபோன்ற பல்வேறு அபூர்வ தரிசனங்கள் இப்புதினத்தின் பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. வேங்குடிவயல் கிராமம் இரு தெருக்களைக் கொண்டது. மேல்வயல் உடும்பூர்; கீழ்வயல் நத்தம். உடும்பூரில் உடும்புகளும், நத்தத்தில் அணில்களும் வாழ்ந்து வருகின்றன. கீழ்வயல் நத்தத்து அணில்களுக்கு சிறு தெய்வம் ‘அணிலி’. கீழ்வயல், மேல்வயல் ஆகியன கிராமத்தின் சாதீய பிரிவினைக்கு குறியீடாக நாவலில் இடம்பெற்றுள்ளன.

அண்மையில், குடிநீரில் மலம் கலந்த சம்பவமொன்று ஒரு கிராமத்தில் நடந்தேறியது. இதற்கான காரண காரியங்களை, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதீய கட்டமைப்பை புனைவு வழியாக கேள்விக்குட்படுத்துகிறது ஆசிரியரின் இந்நாவல். தீக்காயம்பட்ட சிட்டுக்குருவிகளை காப்பாற்ற, தன் முதுகில் மூலிகை மருந்தை சுமந்தபடி அவற்றின் கூட்டை நெருங்கிச் செல்லுகிறது நத்தை ஒன்று. தங்கள் கூட்டைச் சுற்றிலும் ‘மெய்யறுப்பான்’ என்றொரு புல்லை ஒட்ட வைத்திருக்கும் குருவிகள். இந்த புற்கள் தன் மீது ஊர்ந்து செல்லும் எதனையும் வெட்டி துண்டாக்கக்கூடிய தன்மைகள் கொண்டவைகள். ஆனால் வாள் மீது நடக்கும் திறன் கொண்டவைகள் இந்த நத்தைகள். குருவிக்கூட்டை நெருங்கி அவைகளின் நெருப்புக்காயத்திற்கு மருந்தினை தடவிவிடுகிந்து நத்தை. சக உயிரிகளிடத்தில் இருக்கக்கூடிய இத்தகைய பேரன்பை குறியீட்டுத் தன்மையுடன் பேசும் நாவல் தான் அண்டனூர் சுராவின் “வேங்குடி வயல்”.

*

 

 

*