
ஆசிரியர் பெயர் :சோ. தர்மன்
பதிப்பகம் :அடையாளம்
பக்கங்கள் :500
விலை :380
முதற்பதிப்பு :2016
கதைச்சுருக்கம்
கண்மாய்க் கரிசல் மண்ணின் சூல் என்பதையும், கருவேலமரம், கள்ளிச்செடி போன்றவற்றின் அழிவு கிராமத்தின் வளர்ச்சிக்கு வெடி வைக்கும் கருப்பு புள்ளிகள் என்பதையும், ஆடு மாடு கோழி.. ஏன் பெண்கள் செயற்கை முறையில் கருத்தரிப்பது ஆபத்தான அழிவு என்பதையும் பசுமைப் புரட்சி வெண்மைப் புரட்சி.. நீலப்புரட்சி எல்லாம் ஏமாற்றும் தந்திரங்கள் என்பதையும் சொல்லாமல் கொள்ளாமல்… வாசிப்பாளரைச் சொல்ல வைக்கிறார்.
எட்டயபுர மன்னர் தொண்டைமான் அரசாண்ட உருளைக்குடியில் சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் துவங்கும் சூல் அந்தக் கிராமத்தில் வசிக்கும் உழவர்களின் உயிராகக் கருதப்பெறும் நிலங்களில் நீரால் சூல் கொண்டு பிள்ளைப் பெற்று உணவுப் பொருட்களை வழங்கும் மரம், செடி கொடிகளின் பிரசவத்தைப் பேசுகிறது. கேலியும் கிண்டலும் வெகுளியும் கலந்த கிராமத்தாரின் நகைச்சுவைப் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி செல்கிறார்.
கருத்தின் ஆழம்
உலகிலேயே மிகச்சிறந்த வீடு கட்டும் பொறியாளரான தூக்கணாங்குருவி பசையைத் தடவி மழை தண்ணீர் உள்ளே புகா வண்ணம் கூடுகட்டும் விதத்தைக் கொண்டு அந்த ஆண்டு மழை அதிகமா? குறைவா? என்பதை நிர்ணயிக்கும் உழவனின்
அனுபவ உண்மையில் வியந்து தான் போனேன்..
“உச்சிக் கொப்பில் கூடு கட்டினால் மழை அதிகமாகவும், தாடிக் கொப்பில் கூடு கட்டினால் மழை குறைவாக பெய்யும் “என்பதையும்,
தூக்கணாங் குருவிகள் எப்படி அவ்வளவு துல்லியமாகப் பனை மட்டையை மட்டும் வைத்து ஆண் பனை,பெண் பனையென அடையாளம் கண்டு கொள்கிறது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார்.
கள்ளிற்கு பெயர் பெற்ற ஊரைக் கண்டறியும் சூல் கதையில் வரும் தொத்தல் போன்ற கதாபாத்திரம் கள் குடித்து முடித்ததும் எந்த ஊர்…..கள் என்பதைச் சரியாகச் சொல்லும் காட்சியில் நகைச்சுவை இழையோடுகிறது .
ஒரே சத்தத்தின் மூலம் ஊரில் ஏற்படும் இறப்பைக் கூறும் சாக்குருவியின் செயலைக் கூறும் ஆசிரியர் கண்முன் நிழலாடுகிறார்.கண்மாயில் நாம கோழியின் வரவைக் கண்டறிந்து முதலில் கூறுபவர்களுக்குப் புது வேட்டி , துண்டு என்ற குடிமக்களின் பழக்கம் வாழ்க்கையின் உயர்வை முன்பே உணர்த்துவதாக உள்ளது.
கண்மாயின் கரையைப் பாதுகாக்கும் சங்கஞ்செடியின் தனித்தன்மையையும், வியர்வை சிந்தி உழைக்கும்
கரிசல் மண்ணில் வாழும் முத்துவீரன், பெருமாள்,சேவுகன் செம்பட்டையன் போன்றோரின் செயல்பாட்டையும் தங்கவேல் ஆசாரி விவசாய கருவிகளை வார்த்துக் கொடுப்பதுடன் காளைகளுக்கு லாடம் கட்டி அதன் கொட்டத்தை அடக்கும் லாவகத்தையும்
கூறும் திறன் மிகவும் போற்றுதற்குரியது.
கருப்பு வைரமான கரிசல் மண் சூல் கொண்ட காட்சியைச் சுவையுடன் சொல்லி களிப்பளித்த ஆசிரியருக்கு காலமெல்லாம் பாராட்டும் பரிசும் உறுதியாகக் கிடைக்கும்.
நடையின் தனிச்சிறப்பு
மொத்தத்தில் சூல்.. என்ற ஒற்றை சொல் சுமந்துவரும் கர்ப்பத்தில் எண்ணற்ற உயிர்கள் பிரசவித்து மேலும் பல எழுத்தாளரை உருவாக்கும் என்பது நிச்சயம்.
சூல் உயிர்கள் சூழ் சூட்சமம்
வாழ்க தர்மன்! வளர்க தர்மம்!
