நூல் – கன்னியாகுமரி.

ஆசிரியர் – ஜெயமோகன்.

வெளியீடு – கவிதா பப்ளிகேஷன்.

இரண்டாம் பதிப்பு  
பிப்ரவரி 2006
விலை – ரூ. 90.
பக்கங்கள் – 192
  கி.ராவின் ‘கன்னிமை’ என்னும் சிறுகதையின் தாக்கத்தால் இந்நாவலை எழுதியதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.ஏதோ ஒரு கோணத்தில் இருகதைகளும் ஒன்றாகவே தோன்றுகிறது.
    மலையாளத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படம் கொடுத்துப் பின், தொடர் தோல்வியால் துவண்டு போகிறான் ரவி. மீண்டும் ஒரு வெற்றிப் படம் இயக்குவதற்காக கதை விவாதத்தில் பங்கு கொள்ள சிறந்த நடிகை எனப் பெயர் எடுத்தே தீர வேண்டும் என்ற கொள்கையுடைய பிரவீணா மற்றும் வேணுவுடன் கன்னியாகுமரி வருகிறான். அங்குத் தன் முன்னால் கல்லூரிக் காலக் காதலி விமலாவைக் காண்கிறான். அவளது நினைவு அவனை உறங்கவிடாமல் துரத்துகிறது.
 தன் கல்லூரி காலத்தில், காதலியான விமலாவை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியில் விடுதி ஒன்றில் தனித்திருக்கும் பொழுது மூன்று ரவுடிகள் அவனைக் கட்டி வைத்துவிட்டு அவளை வன்புணர்வுக்கு உள்ளாக்குகின்றனர். இந்நிகழ்வுக்குப் பின் அவன் அவளை வெறுக்கிறான். அவளும் தற்கொலைவரை சென்று மீள்கிறாள்.பின் அவன் சியாமளா என்பவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.அதன்பின் விமலாவைப் பற்றி அறியாத ரவி, அன்றுதான் கடற்கரையில் அவளைப் பார்க்கிறான். அவளைப் பற்றி தெரிந்து கொள்ள அவளைப் பின்தொடர்கிறான். நடிகை பிரவீணாவுடன் சென்று அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறான். அவள் அறிவியல் ஆராய்ச்சியாளராக வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் இரண்டு வருட தொடர் ஆராய்ச்சிக்குப் பின் தான் விரும்பும் ஆடவனுடன் இரண்டு மாதம் கடல் பயணம் செய்வதாகவும் கூறுகிறாள். பழைய நினைவுகளைப் பற்றி குழப்பிக்கொள்ளாமல் மிகவும் எதார்த்தமாக அவனுடன் பேசுகிறாள்.தன்னிடம் இயல்பாய் நடந்துகொள்ளும் விமலாவைக் கண்டு பொறாமையால் மனம் புழுங்குகிறான் ரவி. 
 மேலும் தன்னுடன் இருக்கும் நடிகை பிரவீணாவையும் அவ்வப்போது பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறான் ரவி.எனினும் தனக்கென ஒரு வாழ்க்கை, குறிக்கோள் உண்டு என்றும் தான் அவனைவிட அனைத்திலும் சிறந்தவள் என்பதை அவள் பேச்சு தெளிவுபடுத்துகிறது .ஒரு நடிகையைக்கூட தன்னால் வெற்றிகொள்ள முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கிறான்.தன்னால் அவளை வெற்றி கொள்ளமுடியாதபட்சத்தில் அவள்மீது வெறுப்பை உமிழ்கிறான்.
தனது கனவுக்கதை கிடைக்காமல் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறான்.கதை முழுவதும் மன உளைச்சலில் சிக்கித் தவிப்பவனாகவே சித்தரிக்கப்படுகிறான் ரவி. பெண்களை அடக்கி ஆள நினைக்கும் ஆணாதிக்கத்தின் மொத்த அடையாளமாக ரவி திகழ்கிறான்.
    நாவலில் பெண்களை வேறொரு கண்ணோட்டத்தில் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர் ஜெயமோகன். அவர் சொல்ல விரும்புவது பெண்ணின் கலங்கமற்ற தன்மையை. காமம் பெண்ணின் கன்னிமையைப் பாதிப்பதில்லை. இதை மிக அந்தரங்கமாக ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்கிறாள் என்பதையே விமலா மற்றும் பிரவீணாவின் கதாப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.
   இந்நூலில் விமலாவின் கதாப்பாத்திரம் மிகவும் என்னைக் கவர்ந்தது. தன் காதலன் கண்முன் வன்புணர்வுக்கு உள்ளாகியவள். காதலனால் ஒதுக்கப்பட்டவள். அவளை, அவன் கண்முன்னே மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். செய்தித்தாள்களில் இத்தகைய பெண்களைப் பற்றி படிக்கும் நாம் அதன் பின் அவர்களது வாழ்க்கையைப் பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. அந்நேரத்தில் மட்டுமே நாம் உணர்ச்சிப்பொங்க இச்சமூகத்தைச் சாடுகிறோம்.
 அதன் பின் மறந்தே போகிறோம். இப்படிப்பட்ட பெண்களைக் கதாபாத்திரமாக்கி நாவலை சிறப்புற அமைத்துள்ளார் ஆசிரியர்.
    
   சாதாரணமாக ஒரு ஆண் பெண்களைப் பார்க்கும் பார்வையும் அவனே தந்தையானபின் தன்பெண்ணைப் பாதுகாப்பனாக மாறும்போது பார்க்கும் பார்வையும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை
பெத்தேல்புரம் ஸ்டீபன் கதாப்பாத்திரம் சித்தரிக்கிறது.
   காலம் காலமாய் கற்பு பற்றி சித்தரிக்கப்பட்டு வரும் பல கருத்துக்களை உடைத்தெரிந்துள்ளார். புதிய சிந்தனையோடு தற்காலத்தினைப் பிரதிபலிக்கும் ஒரு நூலாகும். 
   குரூர புத்திகொண்ட ரவி போன்ற ஆடவர்களுக்கும் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கும் ஆடவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இவர்கள் சமூதாயத்தில் எப்பதவியில் இருந்தாலும் சமூகத்திற்கே இழுக்கு என்பதை இந்நாவலில் அழுத்தம் திருத்தமாய் கூறியுள்ளார் ஆசிரியர்.