
நூல் -நீர்வழிப்படூஉம்.
ஆசிரியர் – தேவிபாரதி. வெளியீடு – நற்றிணை பதிப்பகம்.
இரண்டாம் பதிப்பு 2021
விலை- ரூ. 250.
பக்கங்கள் -200.
இந்நூல் 2024 ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளது.
நீரில் அடித்துச் செல்லப்படும் புணை எவ்வாறு நீரின் வழியை எதிர்க்க சக்தியற்று அதன் போக்கிலேயே செல்லுமோ அதைப்போல் வாழ்வின் போக்கிலேயே வாழ்ந்து மறைந்த தன் முன்னோர்கள் பட்ட துயரக்கதையை இந்நாவலில் கூறுகிறார் தேவிபாரதி.
தமிழ்நாட்டின் கொங்கு வட்டாரத்தில் உள்ள ரங்கம்பாளையம், ஆம்பாரத்துக்கரை, உடையாம்பாளையம், வெள்ளக்கோவில் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளைக் கதைக்களமாகவும் அவ்வட்டார வழக்கையும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
காரு மாமாவின் இறப்புச் சடங்கில் இருந்து கதை தொடங்குகிறது. கதை சொல்லியான ராசா (தேவிபாரதி) இக்கதையினைக் கூறுவதாக நாவல் அமைந்துள்ளது.
காருமாமாவின் குடும்பத்தார் குடிநாவிதர் தொழில் புரிந்துவந்தனர்.காரு மாமாவின் அக்காவை உடையாம்பாளையத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலேயே அவளது கணவன் இறந்து விடுகிறார். குடிநாவிதம் செய்ய அவ்வூரில் வேறு ஆள் இல்லாததால் அவ்வூருக்கு தன் அண்ணன் காருவை அழைக்கிறாள்.அதனால் ரங்கம்பாளையத்திலிருந்து உடையாம்பாளையத்துக்கு தன் தங்கைகளையும் தன் அம்மாவையும் அழைத்துச் செல்கிறார் காரு மாமா. இளம் வயதிலேயே குடும்பப்பொறுப்பைத் தன் தோளில் சுமக்கிறார் காருமாமா.மூத்த தங்கையை வாத்தியார் வேலை பார்ப்பவருக்கு கட்டித் தருகிறார். அவர் மகன்தான் கதை சொல்லி ராசு(தேவிபாரதி). கடைசி தங்கையை மெட்ராஸில் திருமணம் செய்து கொடுக்கிறார். ராசம்மா என்பவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின்பு அவள் செட்டியோடு ஓடிப் போகிறாள். அவளைத் தேடிச் சென்றபோது காருமாமாவுக்கு வந்த காக்கா வலிப்பு அவரை இறுதி காலம் வரை பாடாய்படுத்தியது. இறுதிவரை வேறு திருமணம் செய்து கொள்ளாமல் அவளையே நினைத்து தனிமையில் வாழ்ந்து இறந்து விடுகிறார்.
இக்கதையில் குடி நாவிதர்களின் சமூக வாழ்வும், அவர்கள் சமூகத்தில் வகித்த இடமும் விரிவாக விளக்கப்படுகிறது. கல்யாணம், கருமாதி, பூப்புனித நீராட்டு, வளைகாப்பு, பிள்ளைப்பேறு, நோய் நொடி வந்தால் மருந்து கொடுத்தல் என அனைத்து நிகழ்வும் அவர்கள் இன்றி நடைபெறாது. பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவச்சிகள் அதிகாரம் படைத்தவளாக இருந்திருக்கிறார்கள் என அவர்களின்பெருமைகள் பேசப்படுகிறது. எனினும் பண்ணையார் மற்றும் பண்ணையாரச்சிகள் ஏவும் வேலைகளைச் செய்யக் கூடிய சிறுமைகளும் பேசப்படுகிறது.
ராசம்மாள் இன்றி தவித்த காரு மாமாவின் தனிமையைப் போக்கியது முத்தையன் வலசு பெரியப்பாவின் டிரான்சிஸ்டரில் இருந்து ஒலிக்கும் பழைய பாடல்களும் ஒலிச்சித்திரங்களுமே.ஒருநாள் மின்கலம் இன்றி ரேடியோ பாடாமல்போக பல மைல் தூரம்நடந்தே சென்று மின்கலம்(battery)யை வாங்கிவந்து கொடுத்து பாட வைக்க சொல்கிறார்.இதன்முலம் அவரின் தனிமையை வானொலி போக்கியதை அறியமுடிகிறது. அவரைப்போல் அக்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வானொலியே பெரிய துணையாக இருந்ததையும் அறிய முடிகிறது.
பாசமலர் படத்தில் வரும் சிவாஜியாக காரு மாமாவையும், சாவித்திரியாக தன்னையும்(மூத்த தங்கை கதைசொல்லியின் அம்மா) கற்பனை செய்து கொள்வது காரு மாமாவின் எல்லையற்ற பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதோடு படிப்பதற்கும் சுவையூட்டுவதாக உள்ளது.
குடும்பத்தையே தூக்கி சுமந்த காரு மாமாவின் பெருந்தன்மை நாவல் முழுவதும் அக்கா,தங்கைகளால் பேசப்படுகிறது.
தமிழ்ச் சமுதாயம் அன்பினால் பின்னிப்பிணைந்திருப்பதையும், தன் வாழ்வை எதிர்கொள்ள திணறிக் கொண்டிருக்கும் வறுமையான நிலையிலும், முரட்டு தோற்றம் உள்ள மனிதருக்குள்ளும் அன்பும் மனிதாபிமானமும் வற்றிப்போகாத் தன்மையை இக்கதை மிக அழகாய் எளிமையாய்,எதார்த்தமாய் படம்பிடித்துக் காட்டுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை மன்னிப்பதற்கும் மறப்பதற்கும் எத்தனை பேருக்கு முடியும்? ஆனால் காரு மாமாவுக்கு முடிந்தது. காரு மாமா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முடிந்தது என்பதை காருமாமாவின் மரண நிகழ்வில் ‘தாலி அறுப்பு’ சடங்கில் கலந்துகொள்ள செட்டியோடு ஓடி சென்ற ராசம்மா தன் குழந்தைகளுடன் வருகிறாள். தன்னைச் செட்டி ஏமாற்றி விட்டதாகவும் ஒரு மாதம் கூட அவனோடு வாழவில்லை. மீண்டும் இங்கு வர அவமானப்பட்டு கிடைத்த வேலை செய்து பினள்ளைகளைக் காப்பாற்றி வந்ததாகக் கூற குடும்பமே அவளுக்காக கண்ணீர் விடுகிறது. தன் மகனையே (கதை சொல்லியை) அவள் மகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறுகிறாள் காருமாமாவின் தங்கை.இது மனிதாபிமானத்தின், மன்னிப்பின் உச்ச நிலை எனலாம்.
இந்நாவலை வாசித்த எவராலும் காரு மாமாவின் நினைவில் இருந்து விடுபடுவது சுலபம் அல்ல.
நீர் வழிபடுப்படூஉம் சாகித்ய அகாடமிக்குச் சாலப் பொருத்தம். மன்னிப்பதும் மறப்பதும் மனிதத் தன்மை என்பதை,’அன்பின் வழியது உயிர்நிலை’ என காருமாமா வாழ்ந்துகாட்டிய வாழ்க்கையை நீங்களும் ஒருமுறை வாசியுங்கள்.
