நூல் விமர்சனம்:
நூல் – மீண்டும் ஒரு காதல் குற்றம்
ஆசிரியர்: டாக்டர் ஆர்.சிதம்பர நடராஜன்
பதிப்பகம்: புஸ்தகா
புத்தகம் படிக்கும் ஆவல் கொண்டவருக்கு சில சமயங்களில் புத்தகத் தலைப்பே சற்றே பயமுறுத்தும். அதுவும் நாவலைப் படிக்கப் படிக்க எதனால் இப்படி ஒரு தலைப்பு, என்ன தான் ஆகப் போகிறது என்ற கேள்வி நெற்றிச் சுருக்கம் வைத்து தொடர்ந்து படிக்கவைக்கும். பின் முடிவில் தெரியும் போது நாம் நினைத்ததைத் தான் இவரும் தலைப்பாய் வைத்திருக்கிறார்,ஆஹா, என நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம்.
அப்படி இல்லாமல் இறுதியில் தான் இந்த நாவலின் ஆசிரியர் தலைப்பின் அர்த்தத்தைப் பூடகமாக விளக்குகையில் அட என்று ஆச்சர்யம் தான் ஏற்பட்டது.
அபர்ணா என ஒரு பெண் ஆளுமையைக் நம் கண் முன் செதுக்கி விவரிக்கிறார் ஆசிரியர். கதை – அபர்ணாவின் மகன் மகேஷ் மரித்த செய்தியை அபர்ணாவிடம் சொல்வது போல ஆரம்பிக்கிறது. பின் அபர்ணா தங்கை ஷோபனாவுடன் வளர்வது, அவளின் படிப்பு, சந்திரனுடனான அவள் சந்திப்பு,பின் வெங்கடேசனுடனான திருமணம், வேலை ,திறமையுடன் டாக்டர் பட்டம் பெறுவது என நான்லீனியர் நேரேஷனாக அபர்ணாவின் வாழ்க்கையைச் சொல்லி பின் இன்று நடப்பது என்ன – அதுவும் ஒரு ஆச்சர்யக் குறியான விஷயத்தோடு – எனச் சொல்லி முடிகிறது.
முதல் அத்தியாயம் படிக்கையிலேயே நம்மை உள்ளிழுத்து நாவலுக்குள் செல்ல வைக்கிறார்.
அபர்ணா,அவள் தங்கை ஷோபனா, சந்திரன்,சுனில்,கீர்த்தனா என விரியும் கதாபாத்திரங்கள் இயல்பாகப் பேசியே நாவலை நகர்த்திச் செல்கின்றன.
நடுவில் வருகின்ற மற்ற புத்தகங்களின் தலைப்புகள் – உதாரணத்திற்கு அன்னா கரீனா ; எண்ணப் பறவைப் பாடலைப் புகுத்திய விதம், தீர்க்கமான உரையாடல்கள் – உதாரணத்துக்குச் சில:
“டாக்டரேட் வாங்கறது பெரிய ஆசை தான். அதைச் சின்னச் சின்ன ஆசைகளா துண்டு போட்டு அச்சீவ் பண்ணிடு. பெரிசு ஈஸியா வசப்படும்
வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெருசா எதிர்பார்க்காதே. ஒரு குழந்தை சிரிக்கிறதப் பார்த்து சந்தோஷப்படு,ஆட்டுக்குட்டி அம்மாக்கிட்ட பால் குடிக்கறத, நாய் நாய்க்குட்டிகள்ளாம் வெளிப்படுத்தற அன்பை.. இன்னும் இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களில் தினமும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது
எனக்குப் பிடிக்காத விஷயம்னு இருந்தா அதை அப்படியே டெலீட் செஞ்சுடுவேன்.
இவை எல்லாம் சில உதாரணங்கள் தான்.
நாவலைப் படிக்கும் போது சுவாரஸ்யமாக விரிந்து கொண்டே செல்வது இதன் பலம். நிகழ்ச்சிகளைத் தொடர்கையிலேயே ஆசிரியரின் அனுபவ அறிவு புலப்படுகிறது.
எனில் கதை ச் சுருக்கம் எனச் சொல்லி சுவாரஸ்யத்தைக் சுருக்க விரும்பவில்லை.
அதுவும் கடைசிப் பக்கத்தில் நாவல் முடியும் போது ஒரு விதமான் திகீர் உணர்வு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஏற்படும். எனக்கு ஏற்பட்டது.
தயங்காமல் வாங்கிப் படிக்கலாம். ஒரு நல்ல வாசிப்பனுபவம் தரும் இந்த நாவல்.
(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்)

