‘கலைமாமணி’ யோகா அவர்கள் எழுதிய “இயக்குநர் இமயத்துடன் 25 வருட இனிய நினைவுகள்” நூல்
யோகா -சாவித் பப்ளிகேஷன் வெளியீடு.
256 பக்கங்கள்   விலை: ரூ 600/-
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள். இந்த அரிய நூலில் கணக்கிட்டுப் பார்த்த பொழுது 200 படங்கள் இருக்கின்றது. அப்படியானால் இது வெறும் 25 அத்தியாயங்கள் கொண்டதொரு கட்டுரை நூல் மட்டுமல்ல. பேசுகின்ற புகைப்படங்கள் நம்மை இந்த நூலை கீழே வைக்க முடியாமல் வாசிக்க வைக்கின்றது.
இந்த நூலுக்கு பத்மபூஷன் திரு நல்லி குப்புசாமி செட்டியார், பேராசிரியர் உலகநாயகி பழனி, பிரபல எழுத்தாளர் திரு என் சி மோகன்தாஸ் என்று மூன்று பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். தவிர, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்த்துரை கவிதையுரையாக. 
இந்த நூல் 16 வயதினிலே, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற காவியங்களை இயக்கிய ஒரு ஜாம்பவான் இயக்குனர் இமயம் பாரதிராஜா பற்றியது என்று நினைத்தால் அது தவறு. இன்றைய புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் அவசியம் தமது உயர்வுக்கு தேவையான விஷ்யங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் உள்ளடிக்கிய ஒன்று என்றால் அது மிகையல்ல.
கலைமாமணி யோகா அவர்கள் மிகத் திறமையான ஒளிப்படக் கலைஞர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அதைத் தாண்டி அவரிடம் உள்ள நல்ல குணங்கள் எவ்வாறு அவரை மென்மேலும் உயர்த்தி இந்த ஒளிப்பட கலைஞர்களின் ஆதர்ச மனிதனாக ஆக்கியது என்பதை இந்த புத்தகத்தை படிக்கும் போது  தெரிந்து கொள்ளலாம். ஒரு நல்ல பாட்டு கேட்டால் இது இசைஞானி இளையராஜா இசை என்று யூகிப்பது போல ஓர் அழகிய படம் பாரத்தால் இது யோகா அவர்களின் கைவண்ணம் என்று நிச்சயம் யூகிக்கலாம் என்று பெயர் வாங்கியவர் இந்த நூல் மூலம் தான் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
சக கலைஞர்களை அன்புடன் நேசிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் 100% ஈடுபாடு கட்ட வேண்டும்.  பெரியவர் சிறியவர் என்ற பேதம் பார்க்காமல்  அனைவரிடமும் பரஸ்பர  மரியாதையுடன் கலந்த சினேகமாய் இருக்க வேண்டும்.  எந்தவிதமான எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் பாசிட்டிவாக மட்டுமே சிந்திக்க வேண்டும். எந்த ஒரு தேவையற்ற விமர்சனங்களை மற்றவர்கள் பற்றி வேறு நபர்களுடன் ரகசியமான விஷயங்கள் உட்பட மற்றவர்களிடம் பரிமாறக்கூடாது. நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை  மிகச் சரியாக கையாள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தனது பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் .தன்னை தன் படங்கள் மூலம் எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி படங்கள் பலவற்றோடு பாடங்கள் பல சொல்லித்தரும் ஒரு உன்னத புகைப்படக் கவிஞரின் நூல் இது.
சுமாராக இருப்பவர்களைக்  கூட மிகவும் நன்றாக நடிக்க வைத்தவர் இயக்குநர் பாரதிராஜா அவர்கள். சுமாராக இருப்பவர்களைக் கூட மிகவும் அழகாக தனது லென்ஸின் மூலம் படம் பிடித்து தடம் பிடித்தவர் கலைமாமணி திரு யோகா அவர்கள்.  
78 வயதிலும் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாமல், நேர்மையான மனதோடு இருப்பதனால் இன்றும் மாதத்திற்கு குறைந்தது 20 நிகழ்ச்சிகளை படம் எடுக்கும் ஒரு மிகப்பெரிய புகைப்படக்கலைஞராக ,அனைவரும் நேசிக்கும் புகைப்படக்கலைஞராக அனைவரையும் நேசிக்கும் புகைப்படக் கலைஞராக அனைவரும் மகிழ்வுடன் சந்திக்கும் புகைப்பட கலைஞராகஅவரை உயர்த்தியுள்ளது என்பதை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் இமயம் மற்றும் திரு யோகா அவர்கள் இருவரின் ஆழ்ந்த நட்பு மற்றும் அன்புக்கு ஓர் அழகிய ஆவணம் இந்த நூல். ஒரு புகைப்படக் கலைஞருக்குள் இருக்கும் திறன்மிகு எழுத்தாளர் இந்த நூல் மூலம் வெளிப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. அதிர்ந்து பேசாதவர், தமது துறையில் அனைத்தும் தெரிந்தவர், ஆற்றல் மிக்கவர், அழகானவர், அனைவரையும் அழகாகக் காட்டுபவர், அரியபல பண்பு மிக்கவர் ஒருவரின் அனுபவப் பிழிவு தான் இந்த நூல். 
“என்னுடைய வாழ்க்கையே பல அத்தியாயங்கள் கொண்ட நாவல் என்று சொல்லலாம். நான் எதிர்பார்க்காமல் நடந்த பல மகிழ்ச்சியான சம்பவங்கள் ஏராளம்’ அப்படியான பல அத்தியாயங்களில் மிகவும் மகோன்னதமான ஒன்று தான் இயக்குநர் பாரதிராஜா அவர்களுடனான நெருக்கம்” என்று திரு யோகா அவர்கள் இந்த நூலில் தமது ‘என்னுரையில்’ குறிப்பிட்டு இருக்கிறார்.