![]()
“தாத்தா என் ரூம் ஏஸி ஓடவில்லை,” இரண்டாவது மகனின் மகள் கிருஷ்ணனிடம் சொன்னாள். சாதாரணமாக அவருடைய மகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் அவரிடம் பேசும் நேரம் அவர் டைனிங் டேபிளுக்கு வரும் நேரம்தான்.
கிருஷ்ணன் புன்னகையுடன் “நமக்கு ஏஸி ஸர்விஸ் பண்றவனுக்கு ஃபோன் செய்தாயா” என்று கேட்க “தாத்தா ஏற்கனவே இரண்டு தடவைகள் அந்த ஏஸியை சர்வீஸ் செய்தாகிவிட்டது “என்று கூறி நிறுத்தினாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது கிருஷ்ணனுக்குத் தெளிவாகப் புரிந்ததது. புது ஏஸி கேட்கிறாள். அவள் சிறது தயங்கி பின்னர் “டைகின் ஏஸி வாங்கலாமா தாத்தா” என்று கேட்க கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே “நாளை மாலைக்குள் உனக்கு புது ஏஸி வந்து விடும். இன்றிரவு யார் அறையிலாவது படுத்துக் கொள் “என்று கூறினார். என்ன பிராண்ட் வாங்க வேண்டும் என்பதை நீ முடிவு செய்யாதே நான் செய்கிறேன் என்பதை நாசுக்காக சொல்லியதை அறிந்து கொண்ட பேத்தி “தாங்க்ஸ தாத்தா” என்றாள். இருந்தாலும் முகத்தில் சின்னதாக ஓர் ஏமாற்றம். டைகின் கிடைக்கவில்லையே. தாத்தா பேச்சை முடித்து விட்டார் இனி எதுவும் சொல்ல முடியாது.
கிருஷ்ணன் ஒரு விஞ்ஞானி.மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் இயக்குநர் பதவியிலிருந்து ரிடையர் ஆனவர். கடந்த வருடம் காலமான அவருடைய மனைவியும் வங்கியில் அதிகாரியாக பணியாற்றியவள். இப்பவும் மத்திய அமைச்சகம் ஏதேனும் முக்கியக் குழு அமைப்பதானால் கிருஷ்ணன் அந்தக் குழுவில் இடம் பெறும் அளவிற்கு வேலையில் திறமையும் செல்வாக்கும் உடையவர்.
அதைவிட முக்கியம் உலக அறிவு அதிகமுள்ளவர். வாழ்க்கையில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு அடியாக வைத்து முன்னுக்கு வந்ததால் அவருக்கு பணம் மட்டுமல்ல உறவுகளைப் பற்றியும் தெரியும். அவர் வசிக்கும இந்த வீடே சென்னையின் வசதியானவர்கள் வாழும் பகுதியில் ஒரு பெரிய பங்களா. இதைத் தவிர அவருக்கு இன்னும் மூன்று வீடுகள் உள்ளன. அதிலிருந்தும் வாடகை வருகிறது.
அவர் மகன்கள் வேலைக்குச் சென்று திருமணம் ஆனவுடன் அவரும் அவருடைய மனைவியும் குழந்தைகள் தங்களை ஒதுக்குவதற்கு முன்பே தாங்களே அவர்கள் வாழ்க்கையிலுருந்து ஒதுங்கிக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அவர்களை அழைத்து நீங்கள் தனிக்குடித்தனம் போக விரும்பினால் தாராளமாக போகலாம் நானோ உன் அம்மாவோ குறுக்கே நிற்க மாட்டோம் என்று கூறினார்.
ஆனால் மகன்களும் அவர்களுக்கு வாய்த்த மனைவிமார்களும் புத்திசாலிகள். ரொட்டியின் எந்தப் புறத்தில் வெண்ணை இருக்கிறது என்பதை அறிந்தவர்கள்.
கிருஷ்ணன் இந்த வீட்டை முழுமையாக பராமரித்து வந்தார். மருமகள்களுக்கு எந்த வேலையும் கிடையாது. கிருஷ்ணன் தன் மனைவியோடு கீழ்ப் பகுதியில் வசித்து வந்தார். கிருஷ்ணன் தனக்கென்று வைத்துக் கொண்டது ஒரு பெரிய படுக்கை அறை மட்டுமே அந்தப் பிரம்மாணட வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் மகன்களும் அவர்கள் குடும்பமுமே அனுபவித்து வந்தார்கள்.
வீட்டில் சமையலுக்கு ஓர் ஆள், வீட்டை சுத்தம் செய்ய மற்றும் தோட்ட வேலைக்கு தனியாக ஆட்களை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது கிருஷ்ணன்தான். அதோடு தன் மனைவி இறந்த பிறகு தன் வேலைகளுக்காக ஒரு பையனை நியமித்திருந்தார்.
வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களை வாங்குவதோடு எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்வது கிருஷ்ணன்தான்.கிருஷ்ணன் தனது 75வது வயதிலும் அவரொத்த மற்றவர்களைப் போல் கணினியை வெறுத்து ஒதுக்காமல் பண பரிவர்த்தனை செய்வது, வீட்டுக்கான கரெண்ட் பில், வீட்டு வரியிலிருந்து அனைத்து விஷயங்களையும் கணினி மூலமே செய்து வந்தார். ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமானால் தன் கூட தான் நியமித்த பையனையே அழைத்துச் செல்வார்.
அவருடைய மகன்கள் அவரிடம் “ஏன்பா நாங்கள் உங்க கூட வர மாட்டோமா” என்று கேட்ட போது ஒரு புன்னகையோடு மறுத்து விட்டார்.
இரண்டு மருமகள்மகளும் ஒற்றுமையாக அந்த வீட்டில் இருப்பதாகத் தெரியும். ஆனால் அதன் உண்மைக் காரணம் கிருஷ்ணனுக்குக் தெரியும். ஒரு பைசா செலவு செய்யாமல் ஹோட்டலில் இருப்பதுபோல் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு சௌகரியமாக இருக்கும் இந்த வீட்டை விட்டு வெளியே போக அவர்கள் முட்டாள்கள் இல்லை. கிருஷ்ணனுக்குப் பிறகு சொத்து எல்லாம் அவர்களுக்குதானே.
“சித்திரை வெய்யிலில் இந்த டைனிங் ஹாலில் சாப்பிடவே முடியவில்லை அப்பா. இங்கே ஓர் ஏர் கூலர் வைத்துவிடலாமா” என்று மூத்த மகன் அவரிடம் கேட்டான். கிருஷ்ணன் ஒரு வினாடி யோசித்து விட்டு புன்னகையுடன் “ஏற்பாடு செய்கிறேன் “என்றார்.
அவர் எதையுமே மற்றவர்களை வாங்க அனுமதித்ததில்லை. இணையத்தில் போய் என்னென்ன பிராண்டுகள் உள்ளன அதன் நன்மைகள் தீமைகளை ஆராய்ந்து பின் அவரே வாங்குவார். ஒரு விஷயத்தில் கிருஷ்ணன் மிகவும் தீர்மானமாக இருந்தார். அவர் மகன்கள் வீட்டில் இல்லை. அவர் வீட்டில் மகன்கள் குடும்பம் இருக்கிறது என்பதை பல விதங்களில் அவர்களுக்கு உணர்த்தி வந்தார்.
தன் அறைக்குத் திரும்பிய கிருஷ்ணன் ஏஸி பற்றி யோசித்தார்.
ஏ.ஸி. அதைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு தன் தாயார் நினைவு வந்து தாக்கும்.
அவருக்கு முப்பது வயதாகும் வரையில் அவர் வீட்டில் ஒரு மின் விசிறி கூட இல்லை. கிருஷ்ணனின் அப்பா வாசல் திண்ணையில் படுத்துக் கொள்வார். அவர்கள் வசித்து வந்த வீடு ஒரு பொந்து போல் இருந்தது. அந்த வீட்டிற்குள் காற்று என்ற பேச்சுக்கே இடமில்லை,
கிருஷ்ணனின் தாயார் பாவம் ஒரு விசிறியைக் கையில் வைத்துக் கொண்டு இரவு முழுவதும் விசிறிக் கொண்டே இருப்பாள். “கிருஷ்ணா என் பக்கத்திலே வந்து படுத்துக்கோடா என்னோட விசிறி காற்று உனக்கும் வரும்” என்று அம்மா சொன்னது இப்பவும் அவர் காதில் கேட்டது.
இப்போது கிருஷ்ணனின் வீட்டு சமையலறை அதி நவீனமாக இருக்கிறது. சமையல் செய்யும் வேலைக்காரி கூட கிருஷ்ணனிடம் ஐயா நம்ம வீட்டு சமையலறைதான் நான் வேலை செய்யற எல்லா வீட்டிலேயும் இருக்கிறதைவிட அதிக சௌகரியமாக இருக்கிறது. குக்கிங் ரேஞ்சில் துவங்கி தற்போது வந்திருக்கும் சிங்கள் பாட் குக்கர் வரை அனைத்து நவீன சாதனங்களும் அந்த அறையில் இருந்தன. மிகப் பெரிய ஜன்னல் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் எலக்ட்ரிக் சிம்னி எல்லாம் இருந்ததால் “நம்ம வீட்டிலே சமைக்கும் போது வேர்க்கிறதே இல்லை ஐயா” என்பாள்.
ஆனால் தன் தாய் சமைத்ததை நினைத்துப் பார்க்க கிருஷ்ணன் தவறுவதே இல்லை. அறுபதுகளின் மத்திய காலக்கட்டத்தில் கேஸ் அடுப்பு வசதி குறைந்தவர்களுக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரிக்குச் செல்வதற்கு மேற்கு மாம்பலத்திலிருந்து இவர் போயாக வேண்டும். சரியாக எட்டு மணிக்கு சாப்பிட உட்கார்ந்து விடுவார்.
கிருஷ்ணனின் தாயாருக்கு அப்போது அறுபது வயதுக்கு மேல் ஆகியிருந்தது எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் சமைத்தாள் என்று நினைத்துப் பார்த்தார். கிருஷ்ணன் தன் தாயாரின் நாற்பதாவது வயதில்தான் பிறந்தார். அவளுக்கு தன் பிள்ளை மீது அதீத பாசம். இரண்டு குமிட்டி அடுப்பில் எந்த நவீன வசதியுமில்லாமல் சாதம் வடித்து, குழம்பு ரஸம் பொறியல் செய்து சூடச்சூட கிருஷ்ணன்க்குப் பறிமாறுவாள்.
தட்டில் இருக்கும் உணவை கையால் தொட முடியாது அப்படி கொதிக்கும் அம்மாதான் பாவம் அப்போதும் அவருக்கும் அந்த உணவு ஆறுவதற்காகவும் கை நோக விசுறுவாள். இப்போது இவர்களுக்கு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஏர் கூலர் வேண்டுமாம். கிருஷ்ணன் விரக்தியுடன் புன்னகை செய்து கொண்டார்.
சித்திரை மாதத்து மாலை வேலைகளில் அம்மா உடம்பு முழுக்க நீரைத் தெளித்து கொண்டு வந்து உட்கார்ந்து அனல் தாங்காமல் தவித்தது இன்னும் அவர் கண் முன்னே இருக்கிறது. வெப்பம் தாங்காமல் அரிப்பு எடுக்கும் இடத்தை விசிறிக் கட்டையால் சொறிந்து கொள்வாள். கிருஷ்ணன் அப்போது படித்துக் கொண்டிருந்தால் அவருக்கு விசிறுவாள். எப்படி விசிறியிருக்கிறாள் அவள் கை எவ்வளவு வலித்து இருக்கும். இப்போதும் கிருஷ்ணன்யின் கண்கள் லேசாக பனித்தன. அம்மா இறந்தே நாற்பது ஆணடுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
“ஜில்லுனு ஏதாவது குடிக்கணும் போலிருக்கு” என்று அம்மா தன் எதிரே உட்கார்ந்து சொல்வது போலிருந்தது கிருஷ்ணன்க்கு. வயிற்றை பிசைந்தது.
இப்போது அவர் வீட்டில் ஒன்பது ஏசிக்கள் ஓடுகின்றன. பிரம்மாண்டமான் ஃப்ரிட்ஜ் சமையலறையை அலங்கரிக்கிறது. அம்மாவுக்கு தேவையான எல்லாம் என்னிடம் இருந்து என்ன பயன் அம்மா இல்லையே. கடைசிவரை இந்த சுகங்கள் எதையுமே அவள் அனுபவிக்கவில்லை.
தன் தாயார் தகப்பனார் நினைவு நாட்களில் பல முதியோர் இல்லங்களுக்கு தாராளமாக பண உதவி செய்வார்.
இப்போது திடீரென்று அவர் மனத்தில் மின்னலிடித்தது போல் ஓர் எண்ணம் தோன்றியது.
வசதியில்லாத முதியோர் இல்லங்களில் எத்தனை முதியவர்கள் வெப்பம் தாங்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு ஏஸி வசதி செய்து கொடுத்தால் என்ன என்று தோன்றியது. இதைக் கேட்டால் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் சிரிப்பார்களோ. இன்றும் இந்தியாவில் ஏஸி என்பது பணம் படைத்தவர்களின் சின்னமாகத்தான் இருக்கிறது. மாதா மாதம் கரண்ட் பில் கட்ட வேண்டுமே.
கிருஷ்ணன் உடனே அதற்கும் தீர்வு கண்டார்.
ஏஸி வேண்டாம் ஏர் கூலர் வாங்கி வைக்கலாம். ஏஸி அளவிற்கு இல்லாவிட்டாலும் அதன் முன்னே மின்விசிறி வைத்தால் வெப்பம் அவ்வளவாக தெரியாது. தான் பண உதவி அளித்து வரும் ஐந்து முதியோர் இல்லங்களுக்கு ஒவ்வொன்றிர்க்கும் இரண்டு ஏர் கூலர்கள் என்ற கணக்கில் பத்து ஏர் கூலர்களை ஆர்டர் செய்து விட்டு அந்த முதியோர் இல்லத் தலைவர்களிடம் பேசினார். நான் ஒரு பெரிய தொகையை உங்கள பெயரில் டெபாசிட் செய்து விடுகிறேன் அதிலிருந்து வரும் பணத்திலிருந்து நீங்கள் கரெண்ட் பில் கட்டிவிடுங்கள். இதை நான் செய்வது என் மனத் திருப்திக்காக என்றார்.
அன்று மாலையே பேத்தி அறையில் புதிய ஏஸி மாற்றப்பட்டது. டைனிங் ஹாலில் ஏர் கூலர் வைக்கப்பட்டது.
ஆனால் ஏர் கூலர் விஷயம் ஏர் கண்டிஷன் மாட்ட வந்த மெக்கானிக் மூலம் எப்படியோ வெளியே வந்துவிட்டது. மருமகள்கள் இருவரும் இவர் காதில் விழும்படிபேசிக் கொண்டனர்.“கிழவருக்குப் பைத்தியம் பிடிச்சிடுத்து. அந்தப் பணத்தில் நமக்கு நகை வாங்கிக் கொடுக்கலாம் இல்லையா” என்று ஒரு மருமகள் சொல்ல “பொறு இன்னும் எத்தனை நாளைக்கு . அவருக்கு அப்புறம் எல்லாம் நமக்குதானே.” என்றாள்.
கிருஷ்ணன் சிரித்துக் கொண்டார்.அவர் சொத்துக்கள் அனைத்தும் அவருடைய தாயார் இறப்பதற்கு காரணமாக இருந்த செர்விக்ஸ் கேன்சர் நோயாளிகளின் வைத்தியத்திற்காக உயில் எழுதி கேன்சர் இன்ஸ்டியுட்டில் ஒப்படைத்தும் விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அவர்கள் அதிரப் போவதைப் பார்க்க அவர் இருக்க மாட்டார்.
