விடுதி
மாணவப் பருவத்திலே நீங்கள் பள்ளி அல்லது கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை என்றால், பல இனிய அனுபவங்களை இழந்துவிட்டீர்கள் என்று சொல்லலாம் !
எங்கள் பள்ளியில் “ஹாஸ்டல்” இருந்தது. ஆனால் நான் ஹாஸ்டலில் இல்லை.. எங்கள் வீட்டிலிருந்து ஏழு நிமிடங்கள் நடக்கும் தொலைவிலே இருந்த பள்ளி.யில் நான் விடுதி மாணவனாகச் சேரும் வாய்ப்பு என்றுமே இருந்ததில்லை. ஆனால் எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் பள்ளி மாணவர் விடுதி இருந்த காரணத்தால், நான் பலமுறைகள் விடுதிக்குச் சென்றிருக்கிறேன். மேலும் விடுதிக்குப் பின் புறம்தான் பள்ளியின் பழைய விளையாட்டுத் திடல் இருந்தது.
கூடப் படிக்கும் விடுதி மாணவர்களைச் சந்திக்கவும், அங்குள்ள விளையாட்டுத் திடலில் டென்னிஸ் விளையாடவும் நாங்கள் ரெகுலராகச் செல்வதுண்டு. நாங்கள் ( நானும் என் இரட்டை சகோதரன் கணேசனும்) சுவாமி விவேகானந்தா நூற்றாண்டு விழாவில் ( 1963) நிறைய ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்ட பிறகு ஹாஸ்டலுக்குச் செல்வது அதிகரித்தது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு. அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
பள்ளியில் நடக்கும் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் அதிக முனைப்புடனும் ஆர்வமுடனும் கலந்து கொள்ள ஆரம்பித்த போது நாங்கள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். சிவாஜியின் “கட்டபொம்மன் “ வசனங்கள் , தங்கவேலுவின் “குசேலர் கதா காலக்ஷேபம் “ ஆகியவை செய்து நாங்கள் பள்ளி அளவில் கொஞ்சம் “பேர்” பெற்றிருந்தோம்.
விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின் போது சுவாமிஜியின் வாழ்க்கையை “கதா காலஷேப “ மாடலில் எங்கள் ஆசிரியர் திரு மந்திரமூர்த்தி என்ற மந்திரம் சார் பாடல்களாக எழுதி இசையும் அமைத்திருந்தார். ஏற்கனவே இத்தகைய நிகழ்ச்சியை மேடையில் நடத்தி பேர் வாங்கியவர்கள் என்பதால் எங்களை அதில் பங்குகொள்ள மந்திரம் சார் அழைத்தார்.
அந்த நிகழ்ச்சியை பேசியும் பாடியும் நடத்துபவன் நான். உடன் பாடி கூடப் பேசுபவன் என சகோதரன் கணேசன். இது பலராலும் பாராட்டப்பட்டது. இப்பாராட்டு, இராமகிருஷ்ண மிஷன் நடத்தும் பல பள்ளிகளிலும், சுவாமிஜி மீது பக்தி கொண்ட வேறு சில அமைப்புகளிலும் இந்நிகழ்ச்சியைப் பல முறைகள் மேடையேற்ற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.. இந்நிகழ்ச்சிகளுக்கு ஹாஸ்டல் பொறுப்பில் இருந்த இராமகிருஷ்ண மடத்து துறவிகளும் வருவார்கள். அவருள் ஒருவர் “சுவாமி நந்தானந்தா “. அவர் அழைப்பில் சிறுவர்களாக இருந்த நாங்கள் பலமுறை ஹாஸ்டலுக்குச் சென்றுள்ளோம். அவரோடு அமர்ந்து உணவும் உண்டிருக்கின்றோம்.
மந்திரம் சார் அப்போது திருமணம் ஆகாதவர். தன் தாயுடன் வசித்து வந்தார். பள்ளியில் சயின்ஸ் பாடம் எடுப்பார்; வீட்டில் எப்போதும் பாட்டும் இசையும்தான். மாலை வேளைகளில் அவர் வீட்டுக்கு சென்று பாடல் நுகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஒத்திகை பார்ப்போம். அவருக்கு “இராமகிருஷ்ண இலக்கியத்தில்” தீராத பக்தி. சுவாமிஜிதான் அவர் கடவுள். சுவாமிஜியைப் பற்றியும் அவரது அற்புதமான பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் சொல்லிக் கொடுத்து எங்களை வளர்த்த ஆசான் அவரே !
நாங்கள் ஒரு பத்துப் பேர் எப்போதும் அவரைச் சுற்றியே இருப்போம். அவரது ஆழ்ந்த இராமகிருஷ்ண -விவேகானந்த பக்தி எங்களையும் பற்றிக் கொண்டது.
ஏற்கனவே இராமகிருஷ்ண மாணவர் விடுதியில் செல்வதும் அங்குள்ள துறவிமார்களோடு உரையாடுவதுமாக இருந்த நாங்கள் , விடுதியில் இருக்கும் நூலகத்தில் பல நூல்களைப் படிக்க ஆரம்பித்தோம்.. விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை அங்கேயே இருப்போம்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் தூய அன்னை சாரதா தேவி பற்றியும் சுவாமிஜியைப் பற்றியும் நிறையப் படித்தேன். துறவிகள் அவ்வப்போது நடத்தும் வகுப்புகளுக்கும், சொற்பொழிவுகளுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.. அதன் தொடர்பாகவே என் சகோதரன் கணேசன், நான், மற்றும் நண்பர்கள் சுந்தர், ரகு , பிரபு, ஆகியோர் “ பகலவன்” என்றொரு கையெழுத்தேடு நடத்த ஆரம்பித்தோம்.
“பகலவன்” கையெழுத்து ஏட்டில் நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். கணேசன் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தான். பின்னால் பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்த போது அவர்களுக்கும் இளம் வயதில் கையெழுத்து ஏடுகள் நடத்திய அனுபவம் உண்டென்று அறிந்தேன். இலக்கிய ஈடுபாடு இளமைப் பருவத்தில் மிக நல்ல துணை என்று நிச்சயமாக என்னால் சொல்லமுடியும்.
இன்னும் சில பேருக்கு இளமையில் ஏற்படும் கலை இலக்கிய ஆர்வம் பின்னாளில் அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும்.. எனது கல்லூரிக் கால நண்பர்கள் பாம்பே கண்ணன், கிரேஸி மோகன் போன்றவர்கள் கல்லூரி நாடகப் போட்டிகளில் கலந்து கொண்டு பின்னாளில் நாடகத் துறையில் தனிப் பெயர் பெற்றவர்கள் ஆனார்கள்..
இசைத் துறையில் இது போன்ற பட்டியல் இன்னும் மிக நீளம். எனது கல்லூரி நண்பனான வெங்கடேசன் வணிக இயல் படித்து விட்டு ஆடிட்டர் ஆன பின்னும் ஆலப்புழை வெங்கடேசன் என்று பிரபலமான கர்நாடக இசை வல்லுனராக வலம் வருகிறார்.
திருச்சி சங்கரன் என்ற உலகப் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர் எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை பொருளாதாரம் பயிலும் போது அதை விடுத்து மிருதங்கக் கலைக்குத் தன்னைக் கொடுத்துவிட்டார்.
சங்கீத கலாநிதிகள் டி. வி. சங்கரநாராயணன், சஞ்சய் சுப்பிரமணியன், டி. எம். கிருஷ்ணா, ஆர். கே /ஸ்ரீராம் குமார், ஆகியோர் கடம் கார்த்திக், அபிஷேக் ரகுராம், சிக்கில் குருசரண், ரித்விக ராஜா போன்ற கர்நாடக இசைக்கலை நட்சத்திரங்கள், உன்னி கிருஷ்ணன், ஹரீஷ் ராகவேந்திரா போன்ற திரையிசைப் பாடகர்கள் ஆகியோர் எங்கள் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து வேறு வேலைகள் கிடைத்தும் அதனை விட்டுவிட்டு கலைத்துறையில் தங்கள் இளவயது ஆர்வத்தையும் திறமையையும் தொழில்முறையாக ஏற்று பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இளமையில் நமது ஆர்வத்தை வழிநடத்துவது , திறமைக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் பள்ளி கல்லூரிகளுக்கும் , அவற்றின் விடுதிகளுக்கும் அங்கு நாம் பெற்ற நண்பர்களுக்கும் பெரிய பங்கு இருந்தது என்பதை மறக்கமுடியாது; மறுக்கவும் முடியாது.
பதின்பருவத்தில், பள்ளி இறுதி ஆண்டுகளில், கல்லூரி வாழ்க்கையில் ஈடுபடுமுன் , இராமகிருஷ்ண விடுதி மூலமாகக் கிடைத்த அனுபவம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
விவேகானந்தா கல்லூரியில் ஒரு மாணவனாகவும் ,ஆசிரியனாகவும் , பேராசிரியனாகவும். நிறைவாக, கல்லூரி முதல்வராகவும் நான் ஆற்றிய பணிகளுக்காகப் , பெற்ற அத்தனை பெருமைகளுக்கும், புகழுக்கும், மன நிறைவுக்கும் என் பள்ளி விடுதியில் இருந்த நூலகமும் , அங்கிருந்த துறவிப் பெருமக்களும், மந்திரம் சாரும்தான் காரணம் என்றால் அது மிகையில்லை.. ஆம் ! அதில் ஐயமும் இல்லை..
விவேகானந்தா கல்லூரியில் நான் விடுதி மாணவனாகத் தங்கியது கிடையாது. ஆனால் பல நாட்கள் மாலை எங்கள் காலேஜ் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடி முடித்த பிறகு நண்பர்களின் விடுதி அறைக்குச் செல்வதுண்டு. “குரூப் ஸ்டடி” “கம்பைண்ட் ஸ்டடி” போன்ற நேரங்களில் ஓரிரு இரவுகள் விடுதியில் தங்கியதுண்டு.
நான் கல்லூரி முதல்வராக இருந்த போது ஒரு விடுமுறை நாள் மாலை எங்கள் ஹாஸ்டலில் இருந்து போன் வந்தது. ஹாஸ்டல் வார்டன் பேசினார்.
“சார் இரவு சாப்பாட்டுக்கு இன்று உப்புமா அதை எதிர்த்து மாணவர்கள் கோஷம் . சாப்பிட மாட்டேன் என்று ஸ்டிரைக் செய்கிறார்கள்”
“ ஏன் இன்று என்ன மெனு இருந்தது?”
“ஊத்தப்பம்”
“ ஏன் போடலை?”
“ கிரைண்டர் ரிப்பேர் சார் ! நாளைக்கு சரி செய்துவிடுவோம் ; இன்று அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறார்கள்”
“ சரி! சீனியர் மாணவர்களைக் கூப்பிட்டு நாளைக்கு சரியாகிவிடும் என்று பிரின்சிபால் உறுதி கொடுத்திருக்கிறார் என்று சொல்லுங்கள்”
“சரி சார் !”
“இருங்க இருங்க ! நான் இன்னும் முடிக்கலை. தவறு நம்ம ஸைட்ல இருக்கு.. ஸோ ஒரு ஸ்வீட் .. கேசரி அல்லது பாயஸம் இம்மீடியட் ஆ ப்ரிப்பேர் பண்ணி எல்லோருக்கும் போடுங்க “
ஒருமணி நேரம் கழித்து வார்டன் ஃபோன் பண்ணினார் .
“ சார் ! பெர்பெக்ட் சொல்யூஷன். பசங்க ஹாப்பி. பிரின்சிபால் வாழ்க! அப்படின்னு கோஷம் . எப்படி சார் இது வொர்க் ஆகும்ன்னு தெரியும்”
இதே போல சிட்சுவேஷன்ல பல ஆண்டுகளுக்கு முன்னால் இதே சொல்யூஷன் வொர்க் ஆனதை நான் அறிவேன் என்று அவரிடம் சொல்லவில்லை.
சிரித்துக் கொண்டே மொபைலை ஆஃப் செய்தேன்.
