புத்தகம் : கூரேச விஜயம்
தொகுப்பாசிரியர்: டாக்டர் பி.கே.வாசுதேவன் (ஆங்கிலத்தில்)
தமிழாக்கம் : பி.வி. ஓம்பிரகாஷ் நாராயணன், B.Sc. FCA
வெளியிட்டோர்: “திருவடி”, சென்னை 600 002
இரண்டாம் பதிப்பு : 2024
பக்கங்கள் : 500 +
விலை : ரூ. 625
எனக்கும் வைணவத்துக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படி சம்பந்தம் இல்லை. ஆன்மீகத்தில், சைவ சமயத்தோடு ஓரளவு ஈடுபாடு உண்டு. எல்லாவித இந்து ஆலயங்களுக்கும் சென்று அனைத்து இந்துக் கடவுளரையும் வழிபடும் பழக்கம் என் அன்னையாலும், பிற குடும்பத்தாராலும், வழி வழியாக வந்த நம்பிக்கைகளினாலும் எனக்கும் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல, சமய நூல்களிலும், எளிதாக படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய சைவ சமய நூல்களே என் விருப்பத் தேர்வாக இருந்து வந்திருக்கிறது.
அதனால் “கூரேச விஜயம்” என்ற இந்த வைணவ நூல் என் கைக்கு வந்து சேர்ந்ததும், அதை நான் ஓரளவு படிக்க முற்பட்டதும் அந்தப் பெருமாளின் கருணையாகத்தான் இருக்க வேண்டும். “பாரி அக்கா” என நாங்கள் அன்புடன் அழைக்கும் டாக்டர் பாரிஜாதம் என்ற எங்கள் குடும்ப நண்பர் சமீபத்தில் எங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்தபோது “கூரேச விஜயம்” என்ற இந்த உயரிய வைணவ நூலை எங்களுக்குப் பரிசாக அளித்தார். இதனை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் அவருடைய மாமனார் தெய்வத்திரு டாக்டர் பி கே வாசுதேவன், பிஏ, ஐபிஎஸ் ,(முன்னாள் இந்திய அஞ்சல் பணி) அவர்கள். இவர் “திருவடி பூஷணம்”, “ஸ்ரீ பாத சேவா” என்ற பட்டங்களைத் தாங்கியவர். பணி நிறைவுற்றோரின் பாரத ரத்னா, ஓய்வு பெற்றோரின் காப்பாளர் என்றெல்லாம் அவருடைய வாழ்நாளில் போற்றப் பெற்றவர்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், இறுதிநாள் வரை ஓய்வு பெற்றவர்களுக்காக இடையறாமல் உழைத்தவர். இத்தனை அலுவல்களிடையே தீராத ஆன்மீக தாகத்தில் திளைத்து, ஸ்ரீ கூரேசரின் கருணையினால் இப்பெருமானாரின் ஆன்மீக சரித்திரத்தை பல நாட்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அயராது உழைத்து, அருமையான நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். இதன் அருமை பெருமையினை உணர்ந்த அவருடைய தவப்புதல்வர் திரு பி வி ஓம் பிரகாஷ் நாராயணன் தன்னுடைய கணக்காயர் பணிகளுக்கிடையே அரும்பாடு பட்டு தமிழ் கூறும் நல்லுலகம் பயன்பெறும் பொருட்டு இந்நூலை தமிழாக்கம் செய்து பெருங்கொடை ஒன்றை நமக்கு அளித்திருக்கிறார். மகன் தந்தைக்காற்றிய உதவி அவர் புகழை நிலை நிறுத்தியதாகும்.
வைணவர்கள் கூரேசர் பெருமானைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் மற்றவர்கள் என்னைப் போல் அறியாதவர்களாகவே இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். எப்படி இருப்பினும் ஸ்ரீ மகா விஷ்ணுவின் ஒரு அம்சமாக அவதரித்த கூரேசரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
ஸ்ரீவத் சங்கா அல்லது கூரேசர் கிபி 1009 ஆம் ஆண்டில் அவதரித்தார். ஒவ்வொருவரும், முக்கியமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் முக்தி அடைவதற்கு ஒரு எளிய பாதையை எல்லோருக்கும் அமைத்துக் கொடுத்த கூரேசரின் வாழ்க்கை நெறியைக் குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
விசிஷ்டாத்வைதத்தை செம்மைப்படுத்தி, மேலும் வளர்த்து அதனை நன்கு எங்கும் பரப்பியவர்களில் சிறந்த ஆச்சாரியர்களுள் ஒரு இளவரசனைப் போன்ற பகவத் ஸ்ரீ இராமானுஜர் ஆற்றிய தொண்டு நன்கு அறிந்ததே. கூரேசர், பகவத் ஸ்ரீ இராமானுஜரின் சிறந்த சீடராக இருந்தமையால், அவரது வாழ்க்கை அவரது ஆச்சரியனின் வாழ்க்கையோடு முற்றிலும் கலந்திருந்தது. கூரேசர் இல்லாதிருந்தால் இராமானுஜரே தன்னுடைய செயற்கரிய செயல்களைச் செய்வது இயலாம லே போயிருக்கலாம் என்பதை இந்நூலை வாசிப்பவர்கள் முழுதும் உணர்வர்.
கூரேசரின் மகத்தான வாழ்க்கை வரலாற்றையும் மற்றும் அவர் காட்டிய வழியினையும் தெரிந்து, ஆன்மீகப் படிகளில் முன்னேற அவசியம் படிக்க வேண்டிய நூல் “கூரேச விஜயம்”


