மொழிப் பாலம்
தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் அசாத்திய புலமை கொண்டவர் அமரர் ரா.வீழிநாதன். உருது, குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா மொழிகளையும் கற்றுக் கொண்டார். பிரேம் சந்த்,கே.எம்.முன்ஷி, குல்ஷன் நந்தா, கமல் ஜோஷி, வசந்சலால் தேசாய் உள்ளிட்ட பிறமொழிப் படைப்பாளகளின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பிறமொழிகளுக்கும் தமிழுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார். புகழ் பெற்ற வங்காள மொழி எழுத்தாளர் விமல் மித்ர. இவரது சாட்சி நம்பர் 3 நவீனம் 1977-இல் கல்கி இதழில் தொடராக வெளிவந்தது.நாவலின் தமிழாக்கம் ரா.வீழிநாதன். ஓவியம் மணியம் செல்வன்.ஒரே பெண் இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று புத்தாடை அணிந்து புத்தெழில் காட்டி மினுக்குவதை நினைவு படுத்துகிறார்போல் இந்த கல்கத்தா நகரமும் நிறம் காட்டி மகிழ்கிறது மகிழ்விக்கிறது- இந்த வரி மூலக்கதாசிரியரின் கற்பனை வளத்தையும் மொழிபெயர்ப்பாளரின் புலமையையும் பறை சாற்றுகிறது. பல்வேறு இதழ்களில் வீழிநாதன் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.குழந்தைகளுக்காவும் பல சிறுகதைகள் எழுதியுள்ள இவரது காசி யாத்திரை கட்டுரை நூல் சிறந்த பயண நூல்.கல்கி இதழில் 30 ஆண்டுகளுக்கு மேல் துணை ஆசிரியராக பணியாற்றிய இவர் அமர பாரதி இதழின் ஆசிரியராக 12 ஆண்டுகள் இருந்தார்.
பேய்க்கதை மன்னன்
பேய், பிசுாசுகளை வைத்தே கதை எழுதியே நம்மை கதிகலங்க அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் நாஞ்சில் பி.டி.சாமி. பேய்க் கதை மன்னன் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர். பல வார, மாத பத்திரிகைகள் இவரது அமானுஷ்ய படைப்புகளை வெளியிட்டுள்ளன. பேய் எஸ்டேட், மோகினி இல்லம், ரத்தச் சுவடு, ரத்த அழைப்பிதழ்,தொடரும் மரணதேவதை, அழகியின் ஆவி, பேய் பிடிப்பவள், கறுப்புப் பூனை உள்ளிட்ட 2000 நாவல்களை எழுதிக் குவித்துள்ளார். ஆனந்தவிகடன் இவரது சித்திரக் கதைகளை தொடர்ந்து வெளியிட்டது.சினிமாத் துறையிலும் தடம் பதித்துள்ளார். ஜெய்சங்கர் நடித்த ஹோட்டல் சொர்க்கம் மற்றும் புனித அந்தோனியார் படங்களின் திரைப்பட வசனகர்த்தா இவர்தான்.
உண்மை நின்றிட வேண்டும்
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் எழுதிய உண்மை நின்றிட வேண்டும் புத்தக வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்றது. பாரதி பற்றிய புனைவுகளை, கட்டுக்கதைகளைத் தரவுகளோடு தகர்க்கும் இந்த ஆய்வு நூலை புஸ்தகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வயிற்றுக்கு சோறில்லாமல் பாரதி வறுமையில் வாடினார் என்பது மிகைப் படுத்தப்பட்டது என்கிறது இந்த நூல். நிவேதிதா அறிவுரை கூறியே பாரதி பெண் கல்வியில் அக்கறை காட்டினார், வேல்ஸ் இளவரசர் மீதான பாடலை நிர்பந்தத்தின் பேரில் எழுதினார், அரவிந்தரிடம் வேதம் பயின்றார் என்பவற்றை நிராகரிக்கவும் செய்கிறது.பாரதியார் எப்படி இருப்பார்? உடுப்பார்?நடப்பார்?சிரிப்பார்? பேசுவார்? என்பனவற்றை அவரைப் பார்த்தவர்கள், அவரிடம் பழகியவர்கள் சொன்னவற்றை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளது இந்த படைப்பு. நூலை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெளியிட பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி பெற்றுக் கொண்டார். ‘ஈ.வெ.ரா. பெரியாரும் பாபா சாகிப் அம்பேத்கரும் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய சமுதாயத்தை தட்டி எழுப்பிய புரட்சியாளர் மகாகவி பாரதி’ என்றார் கி.வைத்தியநாதன். விழாவுக்கு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவில் சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன், இலக்கியச் சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர்.
மூவரும் ஒருவரே
பரணீதரன் என்ற பெயரில் ஆன்மிகக் கட்டுரை, ஸ்ரீதர் என்ற பெயரில் கார்ட்டூன்கள், மெரினா என்ற பெயரில் நாடகங்கள் என்று பன்முகத் திறமை காட்டியவர் வெவ்வேறு நபர்கள் அல்ல. மூவரும் ஒருவரே ‘அருணாசல மகிமை’, ‘ஆலய தரிசனம்’, ‘ஸ்ரீ மஹா பெரியவா’, ‘ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்டவை அவரது ஆன்மிக நூல்கள். ‘ஊர்வம்பு’, ‘தனிக் குடித்தனம்’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘சாமியாரின் மாமியார்’, ‘அடாவடி அம்மாகண்ணு’ உள்ளிட்டவை அவரது நாடகங்கள். காந்தியின் மனைவி கஸ்தூரி பாய் பற்றி அவர் எழுதிய கஸ்தூரி திலகம் நாடகமாகவும் அரங்கேறியது. பரணீதரன் எழுதிய இலக்கியத் தொடர் ‘கவி சொல்லும் கதைகள்’.மகாகவி காளிதாஸரின் ரகு வம்சமே இது. ராமரின் தந்தை தசரதன் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ராமரின் தாத்தா அஜன், கொள்ளு தாத்தா ரகு, எள்ளுத் தாத்தா திலீபன் என்பதையும் அவர்களது ஆட்சியைப் பற்றியும் இந்த நூலை வாசி்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பிரான்சிஸ் கிருபா
நாம் விலை கொடுத்து வாங்கும் சடலமே புத்தகம் அதை வாசிக்கும் போதே அது உயிர்த்தெழுகிறது– மறைந்த இளம் கவிஞரும் நாவலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா மறைவுக்கு பின் ‘ஓலங்கள் சுழலும் உடைந்த இசைத்தட்டு’ என்ற பெயரில் அவரது கவிதைத் தொகுப்பு வந்துள்ளது. படைப்பு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட கவிதை முதல் கவிதையாக அவரது கையெழுத்தில் பிரசுரம் ஆகியுள்ளது. எட்டாவது படித்துக் கொண்டிருந்த போது கிராமத்தை விட்டு மும்பை சென்றார். லேத் பட்டறை முதலாளியாக உயர்ந்தார். மும்பையில் வெளியான இதழ்களில் கவிதைகள் எழுதினார். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த வன்முறையில் இவரது கடை முற்றிலும் சூறையாடப்பட்டது மீண்டும் தொழிலாளியாக விரும்பாமல் தமிழகம் திரும்பினார். யூமா வாசுகி போன்ற நண்பர்கள் உதவியால் அவர் எழுத்துலகில் பிரவேசம் செய்தார். ‘மல்லிகைக் கிழமைகள்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’, ‘மெசியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்’ உள்ளிட்ட 8 கவிதை நூல் களை எழுதினார்.கவிதை நடையில் காதலின் வலியைச் சொல்லும் ‘கன்னி’ என்ற அவரது நாவல் மாஸ்டர் பீஸ்.ஆனந்த விகடன் சிறந்த புதின விருது இந்த நாவலுக்கு கிடைத்தது.. நாவலில் அவர் விவரித்த வாஞ்சை, தாய்மை, காதல், திமிரும் பெண்மை அவரது எழுத்தாளுமைக்குச் சான்று. ஒரு தொலை பேசி அழைப்பில் ஒரு சிட்டுக்குருவி மடிவதாக கிடைத்த தகவலையடுத்து அலைபேசியை துறந்த பறவைகள் நேசன். மும்பை வாழ்க்கையை ‘ஏறக்குறைய இறைவன்’ என்ற தலைப்பில் நாவல் எழுத திட்டமிட்டிருந்தார். அது நிறைவேறாது போனது தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். தாம்பூலப் பையில் தனது உடைமைகளுடன் வாழ்ந்த அவர் அற்ப ஆயுளில் மறைந்தார்.
கு.சின்னப்ப பாரதி
கரும்பு விவசாயி, தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, படைப்பாளி என்ற பரிமளித்தவர் எழுத்தாளர் சின்னப்ப பாரதி. இயற்பெயர் சின்னப்பன். பாரதி மீதான பற்று காரணமாக சின்னப்ப பாரதியானார்.செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார். இடதுசாரி சித்தாந்தங்களை உள்ளடக்கி இலக்கியம் படைத்தவர். இவரது ‘தாகம்’,’சர்க்கரை’,’பவளாயி’ புதினங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சங்கம்’ நாவல் இலக்கியச் சிந்தனை விருதும் பெற்றது. மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் தங்கி நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதிய நாவல் ‘சுரங்கம்’. ‘தலைமுறை மாற்றம்’, ‘பாலை நில ரோஜா’ ஆகிய நாவல்களும்,கவிதை நடையில் எழுதிய ‘கிணற்றோரம்’, ‘தெய்வமாய் நின்றான்’ ஆகிய குறுங் காவியங்களும் இவரது எழுத்தாளுமைக்குச் சான்று.
உலகின் முதல் நாவல்
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 11-ம் நூற்றாண்டில் ஜப்பான் மொழியில் எழுதப்பட்ட நாவல் கெஞ்சியின் கதை (THE TALE OF GENJI). அரண்மனை அந்தப் புரத்தில் ராணியின் பணிப்பெண்ணாக இருந்த மொராசாகி சீமாட்டி என்பவர் இதை எழுதியுள்ளார். 54 பகுதிகளைக் கொண்ட நாவல் 1400 பக்கங்களைக் கொண்டது. உலகின் முதல் நாவல் என்று ஒன்றை வரையறுப்பது கடினம். இருந்த போதிலும் இந்த தொன்மையான நாவலே முதல் நாவலாக இலக்கிய உலகில் இன்று கருதப்படுகிறது.இதில் போர் கிடையாது. முழுமை அடைவதற்கான பாதையைக் காட்டும் இந்த நூல் நிலையாமை என்பது தவிர்க்க முடியாதது என்பதையும் உணர்த்துகிறது. சிறிய பனித் துளியில் மொத்த உலகத்தையும் காணமுடிந்தாலும் அது நொடியில் மறைவதை தடுக்க முடியாது என்றும் அறிவுறுத்துகிறது. பொறாமையின் விஸ்வரூபத்தை காட்டும் இந்த நாவல் அந்தப்புரம் பெண்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகளாக இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசன் கெஞ்சி பலவீனத்தின் அடையாளமாக இருந்ததை ஆவணப்படுத்தும் இந்த நாவல் சொந்தத் துயரத்தில் இருந்து உருவான படைப்பு.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘நாவல்வாசிகள்’, ‘பொம்மை பேரரசன்’ உள்ளிட்ட 5 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்றது. தேசாந்திரி பதிப்பக வெளியீடான இந்த நூல்களை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் வெளியிட கவிஞர் சங்கரன் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன் உலகின் முதல் நாவல் குறித்த மேற்கண்ட தகவலை பதிவு செய்தார்.
