திறக்கக் கூடாத கதவும், தெனாலியும்!

அது ஒரு திங்கட்கிழமை காலை.
பாமா கோபாலன் ஆபீசில் கால் வைத்ததான் தாமதம்.
“பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரம் ஏறணும் தெரியுமா பாமா?” குமுதம் ஆபீசில் நுழையும்போதே, தனக்கே உரிய அதிரடிச் சிரிப்புடன் வரவேற்றிருக்கிறார் இணை ஆசிரியர் திரு ரா.கி.ரங்கராஜன்.
எப்போதும் சீரியஸாகவும் முனைப்புடனும் ஒரு புறம் வேலை நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் ஜோக்கும் சிரிப்புமாகவே அதைச் செய்வது அந்த ஆபீசில் இயல்பான ஒன்று.
“புளிய மரம்தானே? ஏறிட்டா போச்சு.. எவ்ளோ உயரம்? எத்தனை கிளைகள்?” என்று இவர் எசப்பாட்டு பாடியிருக்கிறார்.
“இவங்களுக்கு வேற எங்கும் கிளைகள் இருக்கான்னு தெரியலை. இருக்கும்..” என்று புதிர்போட்டார் ரா.கி.ர.
பிறகு விஷயத்தைச் சொன்னார்.
“மார்ச்சுவரிக்குப் போகணும் கோபாலன். உங்களால ஏற்பாடு செய்ய முடியுமா?”
ஒரு நிமிடம் இவர் அயர்ந்துதான் போனார். என்னது? பிணவறையா?
கேள்வியே கிசுகிசுப்பாக ரகசியமாகத்தான் வந்தது. எனவே அப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார் என்று புரிந்தது.
குமுதம் ஆபீசில் வேப்ப மரம் ஒன்று மிகப் பிரபலம். அதனடியில் போய் உட்கார்ந்து பேசுவது சப்-எடிட்டர்கள் மற்றும் நிருபர்களின் வழக்கம். ரா.கி.ர, ஜ.ரா.சு, புனிதன் போன்றவர்கள் புரூஃப் திருத்தவும் பக்கங்களைப் படித்துச் சரிபார்க்கவும்கூடக் காற்றாட அந்த மரத்தடியில் போய் உட்காருவது வழக்கம்.
ரா.கி.ர இவரை அங்கே அழைத்துப் போய்ப் பேசினாராம். (மார்ச்சுவரி பற்றி வேப்பமரத்தடியில் பேசுவது பாதுகாப்பு என்று ஜோக் வேறு..)
“ஒரு அமானுஷ்யத் தொடர்கதை ஆரம்பிக்கப்போறேன்” என்றார்.
ரா.கி.ர சார் பற்றி உங்களுக்கெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சகலகலா எழுத்தாளர். அமானுஷ்யக் கதைகள் எழுதுவதற்கென்று கிருஷ்ணகுமார் என்று புனை பெயர் வைத்திருந்ததையும் அறிந்தே இருப்பீர்கள்.
“கதை முக்கியமா நடக்கற இடம் மார்ச்சுவரி. அதுல எப்படிப் பிணங்களை அரேஞ்ச் செய்திருப்பாங்க… ‘ராக்’ மாதிரி இருக்குமா? அடுக்கி வெச்சிருப்பாங்களா.. எப்படிப் பட்டியல் போட்டு மெயின்டெயின் செய்வாங்கன்னு தெரியணும்..” என்று கேட்டிருக்கிறார்.
பயம் என்றெல்லாம் பெரிதாக ஏதுமில்லை என்றாலும் இதெல்லாம் அவசியமா என்று தயங்கும் டைப் பாமாஜி. எனினும் அவர் போகப்போகிறார். பார்க்கப்போகிறார். இதில் தனக்கென்ன, என்று சமாதானப்படுத்திக்கொண்டார்.
ஒரு வகையில் நிம்மதி என்னவென்றால், இவருக்கு சாத்தியமான உதவியைத்தான் அவர் கேட்டிருக்கிறார்.
ஆமாம்.
எங்களுடைய மிக நெருங்கிய நண்பர் எழுத்தாளர் நிவேதா. உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய முதல் கதை ‘நிதி வேண்டும் தா’. அதைச்சுருக்கி நிவேதா என்று புனைபெயர் வைத்துக்கொண்டார்.
குமுதம் உள்படப் பல பத்திரிகைகளில் நிறையக் கதை எழுதியவர். கே.எஸ்.ரவிகுமாரின் அஸிஸ்டென்ட்டாக இருந்தவர்.
அவர் வேலை பார்த்தது ஓர் அரசாங்க ஆஸ்பத்திரியில். அக்கவுன்ட்ஸ் பிரிவில் பல வருடங்களா வேலை பார்த்ததால் அவரால் இதைச் சுலபமாகச் செய்து கொடுக்க முடியும் (என்று நினைத்திருக்கிறார் என் கணவர்.)
ஆனால் அது அத்தனை சுலபமில்லை.
அந்தக் குறிப்பிட்ட அரசாங்க ஆஸ்பத்திரியின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் சுதந்திரமாக நாம் வலம் வரலாம். மார்ச்சுவரி வாசல் வரை வேண்டுமானால் போகலாம். ஆனால் உள்ளே போவது அத்தனை சுலபமில்லை. அதற்கான காரணங்களை நாம் யாருமே ஊகிக்க முடியுமே? எத்தனை துப்பறியும் சினிமாக்களில் போலீஸ் விசாரணைகளைப் பார்த்திருக்கிறோம்?
எனவே அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் நிவேதா. ஸ்டாஃப்கள்கூடப் போக முடியாதாம்.
ரா.கி.ர கேட்டு ஒரு விஷயத்தை முடியாது என்று சொல்வதாவது? இவருக்குப் பதற்றம், இருந்தாலும் ரங்கராஜன் சாருக்கே போன் செய்து என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்.
“பாதாளம் வரை பாயும் சமாசாரம் இருக்கே? அதை யூஸ் பண்ணிடலாம். எவ்ளோன்னு கேட்டுச் சொல்லுங்கோ..” என்று சொல்லியிருக்கிறார் ஆர்.கே.ஆர்.
அந்த மார்ச்சுவரி காவலாளியின் மனம் கனிந்தது. தொகை சற்று அதிகம்தான். 1987ல் என்று ஞாபகம். அப்போதே மூன்று இலக்கம்.
பண விஷயத்தில் வழக்கமாய்ச் சற்று யோசிக்கும் ரா.கி.ர வே பச்சைக்கொடி காண்பித்துவிட்டார்.
தொகையைக் கொடுத்தோமா போய்ப் பார்த்துவிட்டு வந்தோமா என்று அவர் போவார் என்று நினைத்தால்…
“நீங்க.. நிவேதா ரெண்டு பேரும் என்னோட வரணும்” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டார்.
இன்னொரு திருப்பம்…
“சார் மெயின் டோர் வழியா வராதீங்க. பின் வழியா வரணும்” என்று காஷுவலாய்ச் சொல்லிவிட்டார் காவலாளி.
பின் புறம் கூவம் ஓடிக் கொண்டிருக்கிறது. கொசுக்களின் மாநாடு. நிவேதாவே மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் ஒப்புக்கொண்டார்.
“மாட்டினா எனக்கு வேலை போயிடும் சார்” என்று நியாயமாய் பயந்திருக்கிறார். வெளி ஆட்களை அழைத்துப் போய்ச் சுற்றிப் பார்க்க அது எக்ஸிபிஷனா என்ன?
முதலில் அந்த ஆஸ்பத்திரியில் பின் வழியாக எப்படிப் போவது என்றே குழம்பியிருக்கிறார்கள். பிறகு ஒரு வழியாகப் போய்விட்டார்கள்.
இழுப்பறைகளில் பிணங்கள். ஒரு ஆராய்ச்சி மாணவனைப்போல் எப்படிக் கணக்கு வைத்துக்கொள்வார்கள், இழுப்பறைகளின் அமைப்பு எப்படி இருக்கும், நம்பர்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்றெல்லாம் விசாரித்து, குறிப்புகள் எழுதிக்கொண்டு பிறகுதான் கிளம்பியிருக்கிறார்கள். ஒரே ஒரு டிராவைத் திறந்து காட்டச் சொல்லியிருக்கிறார் ரா கி ர. காலியான இழுப்பறையைத்தான் திறப்பேன் என்று அவர் சொல்ல.. அதற்குச் சம்மதித்துப் பார்த்துவிட்டு வந்தார்கள்.
“சார் பின் வழியாப் போங்க சார். சூப்பர்வைஸர்ஸ் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்” என்று கெஞ்சாத குறையாய்க் கேட்டுவிட்டு, “சார்.. ஏதோ பார்த்தோமா போனோமான்னு கிளம்பிடுவீங்கன்னு நினைச்சேன். எதுக்காக இத்தினி கேள்விங்க கேட்டீங்க? டென்சன் பண்ணிட்டீங்களே சார்.. இப்டி அரை அவர் இருப்பீங்கன்னு நினைக்கலை. இன்னொரு நூறு இருநூறு குடுத்துட்டுப் போங்க சாமி..” என்று கேட்டிருக்கிறார் அந்தக் காவலாளி.
“இப்போதைக்குக் கையில் இல்லை. நாளைக்குக் குடுத்துவிடறேன்” என்று சொன்னாரே தவிர, அப்போது அங்கே யாருமே பேசும் நிலைமையில் இல்லையாம்.
காவலாளிக்கு மட்டுமே அது தினசரி பழகிய காட்சி. நிவேதா உள்பட மற்றவர்களுக்கு உள்ளூர நடுக்கம். எப்போது வெளியே வருவோம் என்றிருந்ததாம். அந்த வாடையும், ஜீரோ வாட்ஸ் வெளிச்சமும், ஐஸ் சில்லிப்பும் சகிக்க முடியாததாக இருந்திருக்கிறது.
இவர்கள் போனதே சாயங்காலம் ஆபீஸ் விட்டபிறகுதான் என்பதால் வெளியே வரும்போது எட்டரை மணி.
வெளியே இயற்கை வெளிச்சம் இல்லாவிட்டாலும், மனித நடமாட்டமும் பளிச்சென்ற மின் விளங்குகளும் இருப்பதைப் பார்த்த பிறகே இயல்பாக மூச் வந்ததாம்.
என் கணவர் வீட்டுக்கு வந்தபோது அந்த ராத்திரி வேளையிலும் பின்புறமாய்ச்சுற்றி வந்து கிணற்றடியில் தலைக்குக் குளித்துவிட்டு உள்ளே வந்தார். விவரித்துச் சொல்லச் சொல்ல இருவரும் சிரித்தோம்.
ஆனால்..
‘திறக்கக்கூடாத கதவு’ என்ற தலைப்பில் ரா கி ரங்கராஜன் எழுதிய அந்த அமானுஷ்யத் தொடரைப் படித்த பிறகு அத்தனை முயற்சியும் வீண் அல்ல என்று நன்றாய்ப் புரிந்தது.
“நானும்தான் அவருடன் அத்தனை விஷயங்களையும் பார்த்தேன். மனிதர் என்னமாய்ப் பின்னியிருக்கிறார்” என்று வியந்தார்.
டைட்டிலிலேயே கொக்கி வைத்துவிட்டார். அவர் திறக்கக்கூடாத கதவு என்று குறிப்பிட்டது பிணவறையில் ஒரு குறிப்பிட்ட உடல் இருக்கும் இழுப்பறையை ஒருவர் தவறாகத் திறந்துவிட..அதன் விளைவுகள் என்னவாகும் என்பதைச் சுற்றித்தான் கதை பின்னியிருந்தார்.
பிற்பாடு அது புத்தகமாக வந்தபோது முன்னுரையில் இரண்டே வரிகளில் தான் போய்ப் பார்த்ததைக் குறிப்பிட்டிருந்தார்.
இன்னொரு சுவாரஸ்யமான துணுக்கு சமாசாரத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ரா கி ர சின்னஞ்சிறு ‘வேல்’ ஒன்றைத் தன் ஜிப்பாவின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருப்பார். சுண்டுவிரல் சைஸ் வேல்தான். ஆனால் அது அவருக்குப் பெரும் தூண் போன்ற ஆதரவு. (துணைத் துணுக்கு.. எடிட்டர் எஸ் ஏ பியைப் பார்த்து சப் எடிட்டர்கள் மூவரும் அவரைப்போன்றே எப்போதும் கதர் ஜிப்பாதான் அணிவது என்றொரு வைராக்கியம் வைத்திருந்தார்கள். எடிட்டர் அந்தக் காலக் காங்கிரஸ் ஆதரவாளர்)
“அந்த வேல் பாக்கெட்ல இருக்கற தைரியத்தில்தான் மார்ச்சுவரிக்குத் துணிந்து வந்தேன்” என்றாராம்.
ஒரு சமயம் அந்த வேல் காணாமல் போய்விட்டது. பதறிவிட்டார் ஆர்.கே.ஆர். ஆபீஸ் இருந்த பகுதியிலும் சரி, அவர் வீடு இருந்த அயனாவரத்திலும் சரி, உடனே கிடைக்கவில்லை.
“பாமா கோபாலன்… உங்க குரோம்பேட்டைல கிடைக்குமா? நான் வைத்திருந்த வேல்தான் நீங்க பார்த்திருக்கேளே… அதே மாதிரி வேணும்.” என்று கேட்டிருக்கிறார்.
அவர் கட்டளையிடுவதெல்லாம் எங்களுக்கு பாக்கியம். என் கணவர் போனில் சொல்ல, நான் உடனே பொற்கொல்லர் கடைக்குப் போய் விசாரித்து விலையைச் சொல்லி, அவர் சம்மதித்து, வாங்கிவிட்டேன்.
மறுநாள் ஆபீசில் கொண்டு கொடுப்பார் போலும் என்று நினைத்தால், என் கணவரிடமிருந்து மறுபடியும் போன்.
“அதை எடுத்துண்டு எழும்பூர் ஸ்டேஷனுக்கு வா. நான் அதை வாங்கிண்டு போய் உடனே ரா.கி.ர சாரிடம் தரணும். அவருக்கு உடனே வேணுமாம். அது தன்னிடம் இல்லைன்னா எதாவது ஆயிடுமோன்னு பதற்றப்படறார்” என்றார் பாமாஜி.
நான் ஒரு படி மேலே போய், “ஆபீசுக்கே வந்து கொடுக்கறேன்” என்றேன். கொடுத்தேன்.
அவர் கண்கலங்காத குறையாய் அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு பயபக்தியுடன் பாக்கெட்டில் வைத்துக் கொண்ட சம்பவம் மறக்க முடியாதது.
தான் பாக்கெட்டில் வேல் வைத்துக்கொள்ளும் சம்பவத்தை அவர் தெனாலி பட டிஸ்கஷனின்போது கமலஹாசனிடம் சொல்ல.. அதையும் தன் படத்தில் புகுத்திவிட்டார் கமல்.. ரா.கி.ர வின் அனுமதியுடன்!! தெனாலியின் பாக்கெட்டில் வேல் வைத்திருக்கும் ஐடியாவுக்கு இன்ஸ்பிரேஷன் ரா.கி.ர தான் !
