அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது

இந்த மாதம் முழுவதும் கண்ணிலும் மனதிலும் நிறைந்திருப்பது சென்னை புத்தகக் காட்சியைப் பற்றிய நினைவுகள் தான். கிட்டத்தட்ட 1000 அரங்குகள், லட்சத்துக்கு மேல் புத்தகங்கள், குவியும் வாசகர்கள். என்று திருவிழாக் களைகட்டி இருக்கிறது. இந்தக் கண்காட்சி.
அரங்குக்குப் போய் என்ன வாங்கலாம் என்று தேர்ந்தெடுப்பது ஒரு விதம். முன்கூட்டியே இந்தத் தலைப்புகள் அல்லது எழுத்தாளர்களின் புத்தகங்கள் அல்லது இந்தப் புத்தகம் என்று நிச்சயித்துக் கொண்டு போய் வாங்குவது இன்னும் சிறப்பு. சுலபம். கண்காட்சியில் லேடீஸ் ஸ்பெஷலுக்கு ஸ்டால் அமைத்து இருப்பதால் தினமும் மாலை அங்கு செல்கிறேன். பலரை சந்திக்கிறேன்.
அப்படி நான்கு நாட்களுக்கு முன் நான் சந்தித்த பெண்தான் ப்ரியா. பெயரை மாற்றி இருக்கிறேன். அவளுடைய பாட்டியைத் தான் எனக்கு தெரியும். தொண்ணூறுகளில் என்னுடைய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கு பெற்றிருக்கிறார். அந்த அறிமுகத்தோடு ஒரு வருடத்திற்கு முன்பு ப்ரியா என்னை சந்தித்தாள். திருமணத்தில் பிரச்சனை என்று பேசினாள். பிறகு விவாகரத்தும் பெற்றுவிட்டாள். இப்போது புத்தக கண்காட்சியில் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ப்ரியா இளைத்துக் கொஞ்சம் கருத்துப் போயிருந்தாள்.
“ஆண்டி! உங்கள இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை. வாத்சல்யத்துடன் வந்து கையைப் பிடித்துக் கொண்டாள்.
“எப்படிம்மா இருக்க?” உண்மையான சந்தோஷத்துடன் அவளை அணைத்துக் கொண்டேன்.
“நாட் குட் ஆண்ட்டி.ரொம்ப உடைஞ்சு போயிருக்கேன்”,என்றவள் கண்களில் கண்ணீர்.
“ஏம்மா… உனக்குப் பிடிக்காத அந்த வாழ்க்கையில இருந்துதான் விலகி வந்துட்டியே !.”
“அதுதான் ஆண்ட்டீ! தப்பு பண்ணிட்டேனோன்னு இப்ப தோணுது. நான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருக்கலாம். மகேஷ் நல்லவன் தான் ஆண்ட்டீ!”
விக்கித்துப் போனேன் நான்! ‘என்ன சண்டை, எத்தனை வார்த்தைக் காயங்கள்? அவள் கணவன் மகேஷ் மேல் எத்தனை அபாண்டங்கள்? இப்போது அப்படியே பல்டியடித்துப் பேசுகிறாளே இந்தப் பெண்’, என்று யோசித்தேன்.
இது தான், இந்த அவசரம் தான், இன்றைய தலைமுறையின் பலவீனமோ என்று தோன்றியது. கண்ணாடிப் பாத்திரத்தை போட்டு உடைத்து விட்டு யோசிக்கிறாளே என்று வருத்தமாக இருந்தது.
ஆனால் திறமையிலும் புதிதாக யோசிப்பதிலும் இன்றைய இளைஞர்களை மிஞ்ச முடியாது. நம்முடைய கலாச்சாரம், பழக்கவழக்கம் இவைகளெல்லாம் இளைஞர்களிடம் இருக்கிறதா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. தெரியாதவற்றை Google, Chat GPT யிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
கார்ப்பரேட் அலுவலகங்களில் பொங்கல், ஓணம், தீபாவளி என்று எல்லாவற்றையுமே இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த மாதிரி நேரங்களில் அவர்கள் போடும் கோலங்களையும், அணிந்து வரும் பாரம்பரிய உடைகளையும் ஆபீஸ் அலங்காரங்களையும் பார்க்க வேண்டுமே! அவ்வளவு ரம்மியமாக இருக்கும்! வீடுகளிலும் அப்படித்தான். குழந்தைகளுக்குக் கூட ரெடிமேட் வேட்டி, சட்டை அணிவித்து பாவாடை சட்டை போட்டு அழகு பார்த்துத் தாங்களும் கூட புடவை,வேட்டி கட்டி பொங்கல் வைத்து எல்லாம் தான் இளைஞர்கள் செய்கிறார்கள்.
நம் வீட்டுக்குள்ளே அடுத்த தலைமுறையைப் பார்க்கும் போது, மகன் மகளோ அல்லது மருமகள் மருமகனோ அவர்கள் தன் போக்கில் செய்பவைகளைப் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டாலே போதும். பழைமை புதிய வடிவில் இருப்பதைப் பார்க்கலாம்.
புத்தகக் கண்காட்சியில் என் ஸ்டாலுக்கு ஒருவர் மூன்றாவது முறையாக வந்தார். 70 வயதிருக்கும் இரண்டு தோளிலும் பைகள் பூராவும் புத்தகங்கள். முதலில் சந்தா கட்டினார். நான் எழுதிய புத்தகங்களை செட்டாக வாங்கிச் சென்றார். அடுத்த முறை திருப்பூர் கிருஷ்ணனின் சாயி புத்தகம், நண்பர் டாக்டர் பாஸ்கரனின் பிருந்தாவன துளசி புத்தகம் என்று வாங்கியவர், மூன்றாவது முறை பழைய லேடீஸ் ஸ்பெஷல் பத்து வருட தீபாவளி மலர் பிரதிகளையும் சேர்த்து வாங்கினார். தூக்கக்கூட முடியாதே என்று அவர் அருகே போய்ப் பேசினேன். அவருக்கு வயது 84. கண்ணாடி இல்லை. காது நன்றாக கேட்கிறது. திடமாக இருக்கிறார். படிக்கும் தாகம் ஏராளம். இத்தனைக்கும் பிள்ளைகள் வெளியூரில். மனைவி ஒரு வருடத்திற்கு முன் இறந்துவிட்டாராம். அவர் முகத்திலோ பேச்சிலோ கொஞ்சமும் எதிர்மறை சிந்தனைகள் இல்லை. வயதைப் பற்றிய பயமோ, புலம்பலோ இல்லாத அவரை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது
“வாழ்க்கையில வரத அப்படியே ஏத்துக்கணும். பக்தியும் வாசிக்கிறதும் தான் என்னோட தினசரி வேலை. மனச சுறுசுறுப்பா வச்சிக்கிட்டா, வயசு என்ன பண்ணும் மேடம்”. அவர் சொன்னது எனக்கு மட்டுமல்ல எழுபது வயதைத் தாண்டிய எல்லோருக்குமே வேதவாக்கு என்று தோன்றியது.
