சிவசங்கரி – சிலிகான் ஷெல்ஃப்

                               ————————————————————————————————————————————————

டிசம்பர் 2025 மாதத்திற்கான சிறந்த சிறுகதையாக  கணேஷ்ராம்  தேர்ந்தெடுத்த கதை

காணுமாறு காணேன்  –   நிர்மல் – சொல்வனம்    28.12.25

 ————————————————————————————————

கிட்டத்தட்ட நூறு கதைகள்

தொழில் நுட்பம் கதையுலகத்தை  விஸ்தரித்து இருக்கிறது. சல்லடைகளும் பூதக்கண்ணாடிகளும் தணிக்கையின் உபகரணங்களாக கோலோச்சிய காலம் மலையேறி இணையம் கண்ணுக்குத் தெரியாத வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது. கவனிக்கப் பட்டிருக்காத மூலைகளில் இருந்தும் இலக்கியம் பீறிட்டு அடிக்கும் காலத்தை ஒருவழியாய் எட்டி விட்டோம் என்று தான் தோன்றுகிறது.

பாடங்களை வாசிக்கும் நிர்ப்பந்தம் நிலவிய மாணவப் பருவத்தில், அசுர வேகத்தில், பக்கங்களாக நீளும் கதைப் புத்தகங்களை அநாயாசமாகப் படித்தது நாம்தானா என்று இப்போது வெறும் நூறு கதைகளை ஒருசேர வாசிக்கும் போது கவனம் சிதறுவதில் எழும் புன்னகையைத் தவிர்க்க இயலவில்லை..

பதினேழு வயதிலேயே அப்போதைய கணையாழியை வாசிக்க ஆரம்பித்தது, இடைப்பட்ட இத்தனை நீண்ட காலத்தில் வேறுவகை எழுத்துக்களை அறவே வாசிக்க முடியாமல் போய் விட்டது. மறுபடியும் பிறிதொரு காரணத்திற்காக அவைகளை ஒருசேரப் படித்துத் தரம் பிரிப்பது என்பதற்கு விசேஷப் பிரயத்தனம் வேண்டும்.

இன்னமாதிரி கதைகள் தான் கதைகள் என்று சொல்வதற்கு யாருக்குமே அதிகாரம் இல்லை. அவரவர் பாணி அவரவருக்கு ஒசத்தி.

நிறையப் பேர் படிக்கும் எழுத்து இலக்கியமற்றது என்பதோ குறைவான வாசகர்களைப் பெற்ற எழுத்தே இலக்கிய அந்தஸ்து பெறத் தகுதியானது என்று கொண்டிருந்த கர்வம் ஒட்டடை போல் படிந்திருந்த நினைப்பைத் தளர்த்திக் கொள்ள வேண்டிய காலத்தை அடைந்து விட்டோம்.

எழுத்தாளர்களுக்குத் தனித்தனி பாணி இருப்பது போல பத்திரிக்கைகளுக்கும் இருக்கின்றன.

கல்கி, அமுதசுரபி, கலைமகள், மங்கையர் மலர் என்று தனியாக ஒரு ரசனை இயங்கினால் தினமலர், ராணி என்று ஒரு பாணி உலவுகிறது. குமுதம் குங்குமம் குவிகம் வாசகசாலை எல்லாம் ஒரு ரகம் என்றால் விகடன், காலச்சுவடு, நடுகல், சொல்வனங்கள் மற்றுமோர் ரகம்.

ரஞ்சகமான பத்திரிக்கையின் கதையை சிறு பத்திரிக்கைக் கதைகளோடு  ஒப்பிட்டுத் தரம் பிரிப்பது நியாயமன்று. இரண்டும் வெவ்வேறு வாசகர் தளங்களைக் கொண்டவை.

அந்த வகையில் கூடியவரை அந்தந்த தளத்துக் கதைகளில் ஒப்பீடு செய்வது அவசியமாகிறது.

இருந்தாலும், சிறந்த கதை என்று ஒரேயொரு கதையைத்தான் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் ஒரு முதல் தரமான கதையையும் ஐந்து மிகவும்  தரமான கதைகள் வெவ்வேறு தளத்தில் இருந்து பெறப்பட்டவைகளாகவும் தேர்வு செய்து இருக்கிறேன்.

என் முடிவு ஒன்றும் முடிவானதல்ல. அவரவர் ரசனைப்படி வேறேதேனும் கதைகள் வேறேதேனும் தளத்தைத் தகர்க்கக் கூடும். இயல்பு தான் அதுவும்.

இப்போது என் ரசனைக்குட்பட்டு என்னை பாதித்த கதைகளைக் கொடுத்திருக்கிறேன்.

குவிகத்திற்கு நன்றி.

என் ரசனைக்குட்பட்ட வரையில் இருபத்து மூன்று கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் மிகுந்த சிரமங்களின் ஊடே வடிகட்டிப் பத்து கதைகளை தேர்ந்தெடுப்பதற்குள் வியர்த்து விட்டது.

இந்தப் பத்து கதைகளிலும், எது தலைசிறந்த கதை என்று அறுதியிட்டுக் கூறுவது கடினம். எனினும், ஒவ்வொரு கதையும், தொடர்ந்த மறுவாசிப்புகளில் தம்மை முன்னிறுத்திக் கொண்டன. அவ்வாறு சங்கப் பலகையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய ஆறு  கதைகளில் கடைசி வரை, தனது புதிய உத்தியிலும், சுவாரஸ்யமான நடையிலும், மறைமுகமாகவும் இணையாகவும்  புலப்பட்ட சாரத்தினாலும் தன்னை முன்னிறுத்திக் கொண்ட கதை, சொல்வனத்தில் நிர்மல் அவர்கள் எழுதிய சற்றே நெடுங்கதையான “காணுமாறு காணேன்”.

 

 

  1. காணுமாறு காணேன் –         நிர்மல் –         சொல்வனம் 28.12.2025

பலகாலம் முன்பு அமெரிக்க தேசத்திற்குப் புலம் பெயர்ந்த இரு நண்பர்கள் குடும்பங்களில் நடந்த எளிமையான கதை.

ராமசாமியும் அவர் மனைவி தமயந்தியும் இன்னொரு நண்பரான சுந்தரத்தின் கல்லூரித் தோழமைகள். மரணப் படுக்கையில் கிடக்கும் சுந்தரத்தைக் காண இருவரும் வருகிறார்கள். இந்தத் தம்பதி சற்றே மேட்டிமை சிந்தனை கொண்டவர்கள். வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் என்றாலும் ஒரே மகன் விக்ரம் ஐவி லீக் எனப்படும் ஏழு முக்கியமான கல்லூரிகளில் மேல்படிப்பு படிக்க முடியாமல் தோற்றதில் பெரிதாகத் துக்கம் கொள்கிறார்கள். நிறைய சம்பாதித்து வசதியுடன் நவநாகரீக வாழ்வை மேற்கொண்டிருக்கும் இவர்களிடமும் மகனுக்காகத் தாங்கள் மேற்கொண்ட தங்கள் இளவயதுத் தியாகங்களால் தாங்கள் அடைந்தது என்ன என்னும் எண்ணம் உதிக்காமல்  இல்லை.

அதே சமயம், இவர்களது நீண்ட நாள் நண்பர் வாழ்வில் தோற்றுப் போய் விட்டதை இருவரும் அசை போடுகிறார்கள். சுந்தரம் மிகவும் நல்ல சம்பளத்தில் இருந்த வேலையை, மகனின் கெட்ட நடத்தையால் துறந்து, சொல்ப சம்பளம் பெறும் ஆசிரியராக மாணவர்களை உயர் படிப்பிற்குத் தயாரிக்கும் வேலையை மேற்கொள்கிறார்.

மகன் திருந்தி வால்மார்ட்டில் வேலை செய்கிறான். உபரி நேரத்தில் ஊபர் ஓட்டுகிறான். அவன் மனைவியும் குறைவாகவே சம்பாதிக்கிறாள். மரணத்தை எந்நேரமும் எதிர் கொள்ளும் தந்தையைக் கூட இருந்து  கவனித்துக் கொள்கிறான். அவரது மகள் எங்கோ வேறொரு மாகாணத்தில் மருத்துவத்தில் உயர் படிப்புகள் படித்து விட்டு கிராமமொன்றில் குறைவான சம்பளத்தில் காலத்தை ஓட்டுகிறாள்.

சுந்தரம் தன்னார்வ வேலை போல் ஏதோ சேவையொன்றையும் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ராமசாமி தம்பதிகள் சுந்தரத்தை வாழத் தெரியாதவர் என்று எடை போடுகிறார்கள்.

மலர்க்கொத்து வாங்குமிடத்தில் பலவருடங்களக்கு முன் பழகிய கடையொன்றில் வேலை செய்து அது மூடப்பட்டதில் வாழ்விழந்த ‘சோமாவை’ சந்திக்கிறார்கள். அவர், மிகுந்த மலர்ச்சியுடன் இவர்களை எதிர் கொள்கிறார். அந்தப் பெரிய அங்காடியில் பணிபுரிகிறார். அதே இடத்தில், கையில் மலர்க்கொத்துடன் இருக்கும் தனது மகளை அறிமுகப் படுத்தும் போது, “இவளும் இங்கே தான் வேலை செய்கிறாளா” என்று இவர்கள் கேட்கிறார்கள். அவர்களது மேட்டிமை சிந்தனை அதைத் தாண்டி அவர்களை சிந்திக்க அனுமதிக்கவில்லை.

அவர் இல்லை என்று மறுத்து, அவளும் பூங்கொத்து வாங்க வந்திருக்கிறாள் என்றும், அவள் இவர்கள் அனுதினமும் ஏங்கும் ஐவி லீக் கல்லூரியொன்றில் முழு  உதவிப்பணத்துடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் கெலித்திருக்கிறாள் என்றும் தெரிவிக்கிறார்.

இருவராலும் அதை ஜீரணிக்க முடியவில்லை.

பூங்கொத்துகளுடன் சுந்தரம் வீடு சென்றால் கார்த்திக் டீ கொடுத்து உபசரிக்கிறான். அவனும் அவன் சகோதரியும் சுந்தரத்தின் மீது வருத்தம் கொள்வார்கள் என்ற இவர்கள் நினைப்பு தவறாகிறது.

சுந்தரம் தன்னுடைய ரிட்டையர்மென்ட் பணம் பூராவும் போட்டு மாணவர்களின் கல்விக்கான ட்ரஸ்ட் ஒன்றை இவர்கள் மகன் விக்ரம் உதவியால் ஏற்படுத்தியதை அறிகிறார்கள். விக்ரம் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதோடு இவர்கள் அவனிடம் பேச முயன்றபோது அவன் இவர்களுடன் பேச இயலாத ஜூம் மீட்டிங்களில் பிசியாக இருந்தது சுந்தரத்துடன் தான் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

அதே சமயம் சோமாவின் மகளான கல்பனாவும் பூங்கொத்துடன் வருவதைக் கண்டு இவர்கள் திகைப்பு அதிகமாகிறது. அவளையும் கார்நெல் பல்கலைக்குத் தயார் செய்தது சுந்தரம் என்று தெரிகிறது.

சுந்தரம் மரணத்தறுவாயில் ராமசாமியிடம் தாங்கள் பால்யத்தில் தத்தம் குடும்பத்தோடு அளவளாவிய மிக்ஸிகன் பால் போட்டியில் வென்ற தருணத்தில் பாடிய Hail to the conquering heroes…. Hail, Hail to the Michigan.. the Champions of the West…என்ற பாடலைப் பாடச் சொல்கிறார்.

தங்கள் வெற்றியின் குதூகலத்தைப் புகழும் அந்தப் பாடலை கேட்டவாறே இறந்து போகிறார்.

தமயந்தி தன் கணவர் ராமசாமியிடம் கடைசியில் அவன் (சுந்தரம்) தெரிவித்தது புரிந்ததா என்று கேட்கிறார்.

நமக்குப் புரிகிறது யார் champion என்பது.

மிகவும் அற்புதமான நடையில் நம்மை வேறொரு தேசத்திற்கே அழைத்துச் சென்று அந்த ஜெட்லாக் இல்லாமல் நிர்மல் அவர்கள் மிகவும் ப்ரொஃபஷனலாக எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.  ஃபோட்டோஃபினிஷில் முதலிடம் பெற்ற கதை இது, என் வரையில்.

 

  1. அணங்கு – சித்ரா சிவன் – வாசகசாலை

பாரம்பரியம் மிக்க ஆச்சியின் நகைகளில் ஒரு ஆபரணக் காப்பு மணிமேகலையின் கவனத்தைக் கவர்ந்தது. மணிமேகலை ஒரு அரசாங்க உயர் அதிகாரியின் மனைவி. அந்த ஹோதாவில் அவள் ஆச்சியின் பேத்தியின் நட்பில் அந்த நகையைப் பார்க்க மாலை நேரம் வருகிறாள். ஆச்சி விளக்கு வைத்தபின் அறையைத் திறக்க முடியாது என்று வள்ளென்று விழுந்ததில் அதிர்ச்சி அடைகிறாள். மணிமேகலை சொல் பொறுக்காதவள் எனினும் பிறிதொரு நாள் வந்து ஆச்சியின் காலில் நமஸ்கரித்து அவளது அன்பை சம்பாதித்து விட, ஆச்சி, அவளது எவ்வளவோ நகைப்பெட்டிகளில் ஒன்றைத் தேடி எடுத்து வந்து காட்டுகிறாள். அதைத் திறந்து அந்த சிவப்புக்கல் வளையலை, ஐந்து பவுன் தேறும், மணிமேகலை எடுத்துப் பார்த்து, அதை இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறாள். பிற்பாடு அவள் கிளம்பியவுடன், ஆச்சியுடன் உடனிருப்பதாக அவர்கள் வீட்டார் நம்பும் பூதம் அவளோடு போகிற மாதிரி இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களில் ஆச்சியின் ஓலம், கிட்டத்தட்ட மரண ஓலம் கேட்டது. அவளது அந்தப் பிரத்யேகமான நகைப்பெட்டியைக் காணவில்லை.

அது எங்கு போயிருக்கலாம் என்பதை கதாசிரியர் தமக்கே உரிய வாசகனை மதிக்கும் மிக அழகான பாணியில், கதையின் வடிவத்தைப் பாதிக்காத அமானுஷ்யம் தோன்றுகிறது போல, ஆனால் அது இல்லாத பூடகமாகவும் கூட,  ஒரேயொரு பத்தியில் முடித்திருப்பது, எதிர்நீச்சலில் நாயர் சொல்வது போல் “ஒண்ணாங்கிளாஸ்”.

  1. பிடி – ஜார்ஜ் ஜோசப் – உயிரெழுத்து

சுப்பிரமணி முன்னெப்பவோ வேலை செய்து வந்த சுடரிதழ் பத்திரிக்கையில் அவனது மேலதிகாரி சிதம்பரம். உணர்ச்சிகளை வெளிக்காட்டாத அல்லது அதற்கு இடமில்லாத வறண்ட முகம் கொண்டவர் சிதம்பரம்.

அவரோடு கொஞ்சநாளில் நட்புறவு ஏற்பட்டாலும் பத்திரிகை நின்று விடுகிறது. அதனால், சுப்ரமணி திருச்சிக்குப் புலம் பெயர்ந்து நகலகம் தொடங்கி சுமாராக வாழ்கிறான்.

ஒருநாள், வீட்டில் சமைக்க சௌகரியப் படாததால் மனைவி அவனை டிஃபன் வாங்கி வரச் சொல்கிறாள்.

அதே நாள் மணியை சிதம்பரம் ஃபோனில் அழைக்கிறார். திருச்சி வந்திருக்கும் அவரை டிஃபன் வாங்கி வரும் வழியில் ஓரிடத்தில் சந்திக்கிறான்.

அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. அதனால் , யாருக்கோ டிஃபன் வாங்கிக் கொடுப்பது போல சொல்லி, வீட்டு வாசலில் அவரோடு வண்டியில் நிற்க, மனைவி வந்து உரிமையுடன் வாங்கிச் செல்கிறாள்.

இவர்கள் இருவரும் வேறொரு உணவு விடுதி சென்று மாடியில் மது அருந்தும் போது சிதம்பரம் அவனிடம் வேறொரு மாதுவிடம் உறவு கொள்ளலாகாது என்று உணரும் வகையில் அறிவுரை சொல்கிறார். அவனது மனைவியை அவனுடைய கள்ள உறவு என்று அவர் தப்பிதமாக நினைத்துக் கொண்டு அடுத்தது சொல்வது என்னவாக இருக்கும் என்று நினைக்கும் சுப்பிரமணிக்கு வருத்தமாக இருக்கிறது. கொஞ்சம் கூடத் தொய்வே இல்லாமல் எழுதப் பட்டிருக்கும் கதை. ஒரு இருசக்கர வாகனத்தில் மூவர் போவது குற்றம். ஆனாலும், மணி, சிதம்பரத்தை மட்டுமல்லாது நம்மையும் ஏற்றி திருச்சியை சுற்றிக் காட்டுகிறான்.

  1. ஜீவநதி – கௌதம் நாராயணன் – சொல்வனம்

ஆசிரியர் சொல்வனத்தில் பரிச்சயமானவர். இந்தக் கதை செல்வந்தியாக இருந்து தர்ம சிந்தனையால் செல்வம் அழிந்து நல்ல ஆன்மாவாக நடமாடிய ஒரு கிழவி பற்றியது. கதை சொல்லியின் குடும்பம் முதல் அநாதரவான மாமி வரை அத்தனை பேரும் அந்தக் கிழவியால் பயனடைந்தவர்கள். கிழவி திடுமென இறந்து போகிறாள். இறப்பதற்கு முன்னும் பின்னும் சிலருக்குக் கனவுகளின் மூலம் உத்தரவுகள் இடுகிறாள். அல்லது அவ்வாறு கனவில் வந்ததாக சொல்கிறார்கள்.

கிழவியின் கணவர் மறைந்து செல்வம் முழுதும் ஊதாரியான தறுதலையான மகனால் அழிந்து போய் விடுகிறது. கிழவிக்காக அவனது குற்றங்கள் எப்பவும் மன்னிக்கப் படுகின்றன. ஆனாலும், அவனது கொடூரமான சேட்டைகள் எல்லை மீறுகின்றன. ஒரு நாள் கதைசொல்லியின் தந்தை, இன்னும் சிலர் மற்றும் மாமி உட்பட நதியில் குளித்து விட்டு கரையில் நிற்கும் போது அவன் குளிக்க இறங்குகிறான். சுழலில் மாட்டி இவர்கள் கண்முன்னே இறந்து போகிறான். காப்பாற்றப் பட்டிருக்கக் கூடிய அவன்,  அவனது குற்றங்கள் ஒருக்கணம் இவர்கள் மனத்தில் தலைதூக்கிய இருண்ட நேரத்தில் இறந்து போகிறான்.

ஊர் முழுக்க நல்லது செய்த அவளது ஒரே பந்தம் கோரமான முடிவை எட்டுகிறது. கிராமத்து மனிதர்களால் அவளிடம் இயல்பு காட்ட முடியவில்லை. கிழவி இறந்த சில நாட்கள் கழிந்தே அழுகிய நிலையில் அவளைப் போய் பார்க்கிறார்கள். ஆனாலும், கிழவி இவர்களது கனவில் தோன்றி இயல்பாக நீடிக்கிறாள்.

மறுபடியும் வித்தியாசமான சுவாரஸ்யமான எழுத்து.

  1. இரவும் பகலும் உரசிக் கொள்ளும் – இத்ரீஸ் யாக்கூப் – நடுகல்

நிறைய உதாரணங்களைக் கதை நெடுக இறைத்திருக்கிறார் கதை சொல்லி. சில இடங்களில் உதாரணங்கள் சாதாரணமாக, கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தை லேசாகத் தடை செய்கின்றன. உதாரணங்கள் இல்லாமலும் வாசகர்கள் கதைகளை புரிந்து கொள்ள வல்லவர்கள்.

கதை மிகவும் அரிதான தஞ்சை இஸ்லாமிய வழக்கில் தொய்வில்லாமல்  முழுவதும் எழுதப் பட்டிருக்கிறது.

பிரசித்தி பெற்ற ஒரு பாடகரை மதியம் தொழுகை முடிந்து சந்திக்கிறான். அவனது இளமையில் அவர் கல்யாண மத சடங்குகளில் புகழ் பெற்ற பாடகர். பெண் குரலிலும் அச்சு அசலாகப் பாடக் கூடியவர். மனைவி மக்கள் நெருக்கடியில் பாடுவதை நிறுத்தி விட்டார். மற்றவர்களை சார்ந்து நிற்கும் வாழ்வாதாரத்தில் தவிர்க்க இயலாத அவரது முடிவு அவரது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

ஜமால் தன்னைப் பற்றியும் நினைக்கிறான். கல்லூரியில் மலர்ந்து சடுதியில் உதிர்ந்த அவனது காதல். அகஸ்மாத்தாக, அவனால் பெண் குரலில் இனிமையாகப் பாட முடியும் என்பது வெளிப்பட்ட போது, மேடைகளில் தோன்றி பெண் குரலில் பாடும் வாய்ப்பு கிடைத்தபோது, மகிழ்ச்சியை விட சோகம்தான் மிஞ்சியது. முளை விடத் தொடங்கியிருந்த அவன் காதல் இவனது புதிய பிரபாவத்தில் அவளால் ஒரு மெலிதான முகச்சுளிப்பில் உதாசீனப் படுத்தப்படுகிறது.

ஊருக்குத் திரும்பும் வழியில் அவரைப் பார்த்த உற்சாகத்தில் அவன் சாலையில் வாகனம் ஓட்டியவாறே பாடத் துவங்குகிறான். மனைவியின் முகம் நினைவில் வர நிறுத்திக் கொள்கிறான்.

  1. அன்பில்லம் – ஹேமா ஜெய் – அந்திமழை

ஜோடனைகளும் வாக்கியச் சாதுரியங்களும் இல்லாமல் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே தொனியில் எழுதப்பட்ட கதை. பெரிய திருப்பங்களும் நாடகத்தனமும் இல்லை. சிறிய அல்லது சாமானிய மனிதர்களிடம் நிலவும்

மனித மன வக்கிரங்கள் ஓரிரு கதாபாத்திரங்களிடையே மிக அழகாக அலசப் பட்டிருக்கின்றன.

சின்னஞ்சிறு மகளுடன் அந்த வீட்டிற்குக் குடி வரும் ஒரு இளம் தம்பதி. அவர்களது வீட்டுக்கார தம்பதிகளுக்குப் பிராயம் கடந்து கொண்டு இருக்கிறது. குழந்தைகள் இல்லை. இவர்கள் மகளிடம் மிகவும் பிரியம் வைக்கிறார்கள்.

குழந்தை பெரும்பாலும் அவர்களிடமே தான் இருக்கிறது.

வீட்டுக்காரப் பெண்மணியின் இளைய சகோதரி சிட்டியில் நல்ல வேலையில் நிறைய சம்பாதிக்கிறவள். திடுமென்று ஒரு நாள் அக்கா வீட்டுக்கு வருகிறாள்.

ஆரம்பம் முதலே அவளுக்கு அக்காவும் அவள் கணவரும் குடித்தனக் காரர்களோடு இழைவது பிடிக்கவில்லை.

ஒரு விடிகாலை இவர்கள் குடியிருப்பின் பின்னே அமர்ந்து அவள் தனது கணவனிடம் தொலைபேசியில் பேசூமாபோது, இவர்கள்  குழந்தையை வைத்து, குழந்தை இல்லாத தனது அக்கா குடும்பத்தை வளைத்துப் போடச் சதி செய்வதாகப் பழி போடுவதை இவள் கேட்டு விடுகிறாள்.

இவளுக்கு அதைக் கேட்டு அருவருப்பாயிருக்கிறது. நிறையப் படித்து நகர்ப்புறத்தில் நிறைய சம்பாதித்தும் குறுகிய மனம் கொண்டவர்களின் வீட்டில் வசிக்க அவளது மனம் ஒப்பவில்லை. தனது குழந்தையை வழக்கம் போல அவர்கள் அழைக்கும் போது மறுத்து விடுகிறாள். வெகு விரைவில் வேறிடத்திற்குக் குடி பெயரப் போகும் அவள் வீட்டு வாசலில் பொறித்திருக்கும் “அன்பில்லம்” என்ற வீட்டின் பெயரைப் பார்த்து “தகுதி இல்லாதவர்கள் மேல் வைக்கும் அன்பு விஷத்துக்கு சமானம்” என்று  ஏளனமாகப் புன்னகைப்பதாகக் கதை முடிவு பெறுகிறது.

 

கவனத்தைக் கவர்ந்த மற்ற சிறந்த கதைகள் :

மூன்று ஆளுமைகள் கதைகளும் பரிசீலனைக்கு வந்திருந்தன. அவற்றில் இரண்டு கதைகள் மிகவும் நன்றாகவே இருந்தன. என்றாலும், எழுதிய ஆளுமைகளின் உயரத்தை முன்னிறுத்திப் பார்த்ததில் அவைகளை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மேற்சொன்ன ஆறு கதைகளோடு தரத்திலும் சுவாரஸ்யத்திலும் வாசகனை புத்திசாலியாக எண்ணியதிலாகட்டும் அணுவளவனும் குறையாத மேலும் சில கதைகள் என்னை பாதித்தன. சுவாரஸ்யம் கருதி அவைகளின் பெயர்களை இங்கு பகிர்கிறேன்.

  1. அம்மாவின் தோடு (ஷ்யாமளா கோபு)- கலைமகள்
  2. யாத்ரா (நந்து சுந்து)- குமுதம்
  3. நூற்றுக்கு நூறு (நெய்வேலி பாரதிக்குமார்)- குமுதம்
  4. பத்தாம் பாலம் (ரா.சண்முகவள்ளி) -நடுகல்
  5. தடம் (பரிவை சே குமார்) -நடுகல்
  6. வேண்டுதல் தப்பாது (H N ஹரிஹரன்) – வாசகசாலை
  7. தனியன் (தேஜூ சிவன்) – கல்கி
  8. தீவிளி (சவிதா) – காலச்சுவடு
  9. ஒரு மிசோஜினிஸ்டின் உளுந்தவடை (சுஷில் குமார்) – சொல்வனம்
  10. பிராயச்சித்தம் (ஆர் கே அருள்செல்வன்) – தினமணி கதிர்
  11. நிர்மலன் vs அக்சரா (கே எஸ் சுதாகர் ) – குவிகம்
  12. அண்ணாந்தாள் (செவக்குளம் செல்வராஜூ) – விகடன்
  13. குமரேசனின் குமுதவல்லி (விஜிலி தேரிராஜன்) – விகடன்

நல்ல கதைகளை ஏககாலத்தில் படிக்க வாய்ப்பளித்த குவிகத்திற்கு மறுபடியும் நன்றி.

அன்புடன்

கணேஷ்ராம்