சாஸ்திரம் பற்றிய திரட்டு: பெண்கள் ருத்ராஷத்தை அணியலாமா?
 இரவு 11.30 மணிக்கு மருத்துவமனையிலிருந்து சங்கரனை கைபேசியில் தொடர்பு கொண்டார்கள். “ஸ்வாமினி ஆத்மானந்தா லஷ்மி என்ற உங்களின் முன்னாள் மனைவி, ஐந்து நிமிடத்திற்கு முன் முக்தி அடைந்துவிட்டார் . மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை விவாதிக்க நீங்கள் உடனே வரமுடியுமா?” என்றார்கள்.
 இந்த எழுபது வயதில்கூட தோற்றத்திலும் , மன ரீதியாகவும் நாற்பது வயதானவனைப்போல் இருக்கும் சங்கரனுக்கு இந்த செய்தியை நம்ப முடிவில்லை. அப்பொழுதுதான் அவனுடைய சகாக்களுடன் தன்னுடைய அடுத்த பெரிய திரைப்படத்திற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை விவாதித்து முடித்திருந்தான் . இந்த புராஜக்ட்டை முடிக்க குறைந்த பட்சம்  மூன்று ஆண்டுகள் ஆகலாம் . இதைப்பற்றி நினைத்துக்கொண்டே உறங்கவேண்டிய நேரத்தில் வந்த இந்த செய்தி அவனை உலுக்கிப்போட்டது. 
 மூன்று நாட்களுக்கு முன்புதான் ஸ்வாமினி கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டதாக ஸ்வாமினியின் சிஷ்யை ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார். சங்கரன் ஒடிப்போய் பார்த்துவிட்டு வந்தபோது , முடிவு இவ்வளவு சீக்கிரமே வந்துவிடும் என்று சற்றும் நினைக்கவில்லை. இந்த தருணம் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் அவன் எழுபது வயதை கடந்துவிட்டான் என்பதையும் அவனுக்கு மீண்டும் உணர்த்தியது. 
 உடனே வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டான் . மருத்துவமனை முப்பது நிமிட தூரம். இரவு நேரம் சாலைப்போக்குவரத்தும் குறைந்தே இருந்தது. எப்பொழுதுமே வாகனத்தை வேகமாக ஓட்டுபவனுக்கு இப்பொழுது ஏனோ வேகமாக ஓட்ட மனமில்லை, முடியவில்லை. மருத்துவமனையில் முக்தி அடைந்த ஸ்வாமினிக்கு அவரின் முன்னாள் கணவனாக இவன் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று தெரியாது. ஆலோசனைகள் சொல்லவும் யாரும் இல்லை.ஆகவே , மனம் கடந்து வந்த வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கத்தொடங்கியது.
 கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு கால உறவு. காதல் புரிந்து திருமணம் செய்தது முதல் அவர்களுடைய உறவில் ஏற்றத்தாழ்வுகள், பகிர்ந்து கொண்ட இன்ப துன்பங்கள், ஒன்றாக செய்த சாதனைகள், சந்தித்த சோதனைகள் , இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மனைவி துறவரத்தை ஏற்றுக்கொண்டபின் அவர்களின் வாழ்க்கைப்பயணம் , பாதை முற்றிலும் வேறுபட்டதாக அமைந்தது., இருந்தாலும் இருவரும் நண்பர்களைப்போல் தொடர்பில் இருந்தது, அவர்கள் பரஸ்பரம் இந்த அலாதியான அசாதாரனமான உறவை இருவர் மனதும் புண்படாதவாறு நாசூக்காக கையாண்ட முறை , இதற்கு காரணமாக இருந்த அவர்களின் மகள் எல்லாம் ஒரு திரைப்படம் போல் அவன் கண்முன் ஓடத்தொடங்கின. சன்னியாசிகள் முக்திஅடைந்தால் துக்கப்படக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சங்கரனால் அவனுடைய சோகக்கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
 சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் , கிராம ப்புற பின்னனியிலுருந்து வந்த சங்கரனும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்த கிரிஜாவும் சந்தித்தது அவர்கள் முதன் முதலாக பணியில் சேர்ந்த ஒரு பெரிய நிறுவனத்தில்தான். வசீகரமான தோற்றம் , கூர்ந்த அறிவு, கடும் உழைப்பு, வாழ்க்கையில் உயரத்தை எட்ட வேண்டும் என்ற லட்சியம் என்ற எல்லா குணங்களும் இருவரிடமும் ஓங்கி ஒரே அளவில் இருந்தன. இருவரும் காதல் செய்து ,திருமணம் செய்து கொள்வார்கள் என்பது அலுவலகத்தில் எல்லோருக்குமே கண்கூடாக தெரிந்தது. எல்லோரும் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே, இரு குடும்பத்தாரின் ஒப்புதலோடும் ஆசியோடும் இவர்கள் திருமணம் நடந்தபோது சங்கரனுக்கு வயது 24, கிரிஜாவுக்கு வயது 23. 
காதல் சிட்டுகள் கனவு வாழ்க்கை வாழத்தொடங்கினார்கள். புல்லட் இரு சக்கர வாகனத்தில் ஒவ்வொரு நாளும் இருவரும் நகரத்தை சுற்றி வந்தபோது இவர்களை வியந்து பார்த்து போற்றாதவர்களே இல்லை, மிகவும் பொருத்தமான ஜோடி என்றார்கள். சிலர் பொறாமைப்பட்டார்கள். இவர்களின் காதல் திருமண உறவிற்கு சாட்சியாக ஒரே வருடத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
 குடும்ப வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை இரண்டிலுமே வெற்றி நடை வேகமெடுக்கத்தொடங்கியது. அதே சமயம் கல்வி அறிவை மேலும். வளர்த்துக்கொண்டால் முன்னேற்றம் இன்னும் சிறப்பாகவும் வேகமாகவும் இருக்கும் என்று பகுதி நேரப்படிப்பில்்பல பட்டங்களைப்பெற்றார்கள். இப்படி வேகமாகவும் சந்தோஷமாகவும் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அடுத்த கட்டமாக சங்கரனுக்கு வெளி நாடுகளில் பணிபுரியும் அரிய வாய்ப்பு கிட்டியது. “பெரும் பொருள் ஈட்டலாம் , உலகத்தை சுற்றிப்பார்க்கலாம். வாழ்க்கையின் முன்னேற்றத்தில் இந்த அரிய வாய்ப்பு கடவுள் தந்த வரப்பிரசாதம் “ என்றான். கிரிஜாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. “நான் முன்னே செல்கிறேன், மகளும் நீயும் சில மாதங்களில் வந்துவிடுங்கள்” என்று சொல்லி சங்கரன் பறந்துவிட்ணான். சில மாதங்களிலேயே மனைவியும் , மகளும் சேர்ந்து கொண்டார்கள். மனைவிக்கும் அதே நாட்டில் பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் பணி செய்ய வாய்ப்பு கிட்டியது. அவர்கள் நினைத்துப்பார்க்காத அளவுக்கு செல்வம் வந்து சேரத்தொடங்கியது. பங்களா, சொகுசு வாகனங்கள் என்று வாங்கி குவித்தார்கள். மகளும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த மாணவியாக பெயரெடுத்தார். அந்த பத்து வருட கால வாழ்வு செழிப்பாகவும், சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் ஆனால் மிக வேகமாகவே சென்றுவிட்டதே, அந்த காலத்தை இன்னும் சற்று நிதானமாக கொண்டாடியிருக்கலாமே , ரசித்திருக்கலாமே என்று சங்கரனுக்கு இப்போது தோன்றியது. காலச்சக்கரத்தின் விளையாட்டு , மகிழ்சியான நாட்கள் வேகமாக சுழன்று கடந்துபோய்விடுகின்றன. கஷ்ட காலம் வரும்போது காலச்சக்கரம் நிதானமாக சுழல்கிறது.
 இந்த கனவு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது , மகள் உயர் கல்விக்காக அமெரிக்கா பறந்து சென்ற மறுநாள். எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் , கிரிஜா “ நான் இன்றுடன் பதவியிலிருந்து விலகிக்கொள்ளப்போகிறேன். லெளகீக வாழ்க்கையிலிருந்து விலகி ஆன்மீக தேடுதலில் ஈடுபடப்போகிறேன்”  என்றாள்.
சங்கரன் “ஏன் இந்த திடீர் முடிவு. என்னுடன் ஆலோசிக்கவில்லையே.” என்று கேட்டான். 
“ நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து ஏற்றுக்கொண்ட கடமைகளை முடித்ததுவிட்டேன் என்று நினைக்கிறேன். மீதமுள்ள நாட்களை ஆன்மீக தேடலில் ஈடுபட்டு வாழவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். என்னுடைய முடிவை விவாதப்பொருளாக்க விறும்பவில்லை” என்று சொல்லிவிட்டாள்.
இது நடந்த இரண்டு வாரங்களில் இந்தியா திரும்பிவிட்டார். சங்கரன் ஆட்சேபிக்கவில்லை , அனுமதி மறுக்கவில்லை. மாறாக மனைவியின் இந்த ஆன்மீக பயணத்திற்காக அவன் ஆசையாக கட்டிய மாளிகையையே கொடுத்துவிட்டான்.
 கிரிஜா அடுத்த எட்டு ஆண்டுகளில் சமஸ்கிருதம், வேதம், உபனிஷதம், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் முறையாக படித்து முனைவர் பட்டம் பெற்றார் . தான் குருவாக ஏற்றுக்கொண்ட ஞானியிடம் தீட்சை பெற்றுக்கொண்டு ஒரு துறவியாக பரினமித்தார். கணவனின் கனவு மாளிகையிலேயே ஒரு ஆஸ்ரமத்தை நிறுவி பல சிஷ்யைகளை ஏற்றுக்கொண்டார்.
 சங்கரன் ஆழ்ந்து சிந்தனை செய்தான். இனி தானும் தனது தேடலில் ஈடுபடவேண்டும். சமூக சேவை, கலை, இலக்கியம், நல்ல கலை ரசனையுள்ள திரைப்படங்கள் தயாரிப்பது என்பதெல்லாம் நீண்ட கால ஆசைகள். இதையெல்லாம் செயல்படுத்த தேவையான பொருள் ஈட்டவேண்டும். அவன் பணிபுரிந்த நிறுவனத்தில் பத்து வருடங்களில் மிக உயர்ந்த பொறுப்பை அவனுக்கு கொடுத்தார்கள். கூடவே அவனுடைய தேடல்களில் கவனத்தையும் நேரத்தையும் அதிகம் செலவழிக்கத்தொடங்கினான். ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்தாலும் , வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை கொள்கையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தான். பெயரும் புகழும் சர்வதேச அளவில் உயர்ந்த விருதுகளும் அவனைத்தேடி வந்தன.
 இப்படியாக இருவரும் அவரவர் தேர்ந்தெடுத்த பாதையில் பயணித்து உச்சத்தை எட்டினார்கள். சங்கரனுக்கு , துறவியாகிவிட்ட மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. ஒரு வகையில் இல்லறம் இல்லாத அவனுடைய வாழ்க்கையும் துறவறம் போல் மாறிவிட்டது. மகள் அவளுடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டாள். தந்தை, தாய் இருவரிடமும் அன்பு காட்டினாள். ஊருக்கு துறவியானாலும் மகளுக்கு தாய்தானே.
 இவையெல்லாம் ஒரு திரைப்படம்போல் அவன் கண்முன் ஓடின. வாழ்க்கைப்பயணம் வெகு வேகமாக அமைந்துவிட்டதே. நாம் வாழ்ந்த, வாழ்கின்ற வாழ்க்கை சரியான பாதையா? இது எதுவுமே நாம் திட்டமிட்டபடி இல்லாமல் ஆண்டவன் கட்டளைப்படி நடக்கிறதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் முக்தி அடைந்துவிட்ட துறவியிடம் பதில் கிடைத்திருக்குமா? மருத்துவமனையை நெருங்கிவிட்டான் . வாகனத்தை நிறுத்திவட்டு நிதானமாக சென்று முன்னாள் மனைவியான ஸ்வாமினியின் சலனமில்லாத முகத்தை பார்த்தபோது மனதில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதுபோல் உணர்ந்தான். ஆனால் அந்த சஞ்ஜலமில்லாத முகம் அவனுக்கு “ நான் தேர்ந்தெடுத்த பாதையில் மகிழ்ச்சி அடைந்தேன், முழுமையை உணர்ந்தேன். நீயும் நீ தேர்ந்தெடுத்த பாதையில் நில்லாமல் செல். வெற்றியும் மகிழ்ச்சியும் நிச்சயம் “ என்று செய்தி சொல்வதுபோல் உணர்ந்தான் .
 அடுத்த பத்து நாட்களில் , மகள் தாய்க்கு செ்ய்யவேண்டிய க்ரியைகளை செய்துவிட்டு அவள் குடும்பத்துடன் அமெரிக்கா திரும்ப ஆயத்தங்கள் செய்யத்தொடங்கினாள். அவளும் தந்தையிடம் “அம்மாவைப்போலவே, நீயும் உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் எந்த செயலில் ஈடுபட்டாலும் , என்னுடைய முழு ஆதரவு உனக்கு உண்டு “ என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டாள். 
 ஸ்வாமினி முக்தி அடைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாத காலம் சங்கரன் ஐம்பது ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள், இனிய தருனங்கள், இவைகளையெல்லாம் நிதானமாக அசை போடுவதிலேயே கழித்தான். ஏராளமான புகைப்படங்களை வரிசைப்படுத்தி வைத்தான். ஆழ்ந்த சிந்தனைகள் செய்தான். மனதில் ஒரு நிதானமும், தெளிவும் ஏற்பட்டது. 
 காலை சீக்கிரமே கண் விழித்துவிட்டது. மனதில் சாந்தமும் பார்வையில் தெளிவும் ஏற்பட்டிருப்பதை உணரமுடிந்தது. மனைவி சொல்லாமல் சொன்ன அறிவுரையும் , மகள் தந்த ஊக்கமும் அவனுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தன. அவனுடைய சகாக்களுக்கு செய்தி அனுப்பினான்.  அவனுடைய அடுத்த படைப்பைப்பற்றி ஒரு மாதம் முன் தொடங்கிய ஆலோசனைகளை தொடர்வதர்க்கு , காலை சிற்றுண்டிக்கு 10 மணிக்கு அவனுடைய வீட்டிற்கு வர செய்தி சொல்லி அனுப்பிவிட்டு , அவர்களின் வருகைக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான்.
 முக்தி அடைந்துவிட்ட ஸ்வாமினியின் கணவனின் வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது.