அமீர் குஸ்ரோ

Amir Khusrau Project recreates the beauty of the poet-musician's works - The Hindu

அடிமை வம்சத்துக்கு அப்புறம் கில்ஜி, துக்ளக், என்று வரிசையாகப் போவோம் என்று எதிர்பார்த்த வாசகர்கள் ஏமாந்து போனார்கள். நாம் என்னடா என்றால். அடிமை வம்சத்தில் இன்னும் கொஞ்சம் பழம் தின்று கொட்டை போடப்போகிறோம். அதிலும் ஒரு பன்முகம் கொண்ட ஒரு ஆளுமை பற்றி..அவர், தில்லி சுல்தான்கள் பலரது அரசவை மற்றும் ஆஸ்தானக் கவியாக இருந்தவர். பல சுல்தான்களைக் கண்டவர்.. பால்பன், அவரது மகன், பேரன், பிறகு வந்த ஜலாலுதீன் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி, அவர் மகன் முபாரக் கில்ஜி, கியாத் அல் பின் துக்ளக், முகம்மது பின் துக்ளக் – இப்படி பல சுல்தான்களின் அரசவைப் புலவராக இருந்து, அவர்கள் சரித்திரத்தையும் எழுதி, கவிக்குவியலை உருவாக்கிப் பெருமை சேர்த்தவர். ஒரு கண்ணதாசன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் எல்லோரும் ஒன்று சேர்ந்தது போன்ற ஒரு பன்முகக் கலைஞர்!

அவரது பன்முகங்களைப் பற்றிச் சில குறிப்புகள்:

  • அவர் ஒரு கலைஞர். கவிஞர். இந்திய, பாரசீக, பஞ்சாபி, சமஸ்கிருதம், அரபு மொழிகளில் கவி புனைந்தவர். ‘இந்தியாவின் குரல்’, இந்தியாவின் கிளி’ என்று பாராட்டப்பட்டவர்.
  • இசையமைப்பாளர். இசைக் கலைஞர். இசை வல்லுனர்.
  • கவ்வாலி (quawwaali) என்ற இசைவடிவத்தின் தந்தை.
  • சூபி (sufi) என்ற இசைவடிவத்தின் தந்தை.
  • கஜல் (ghazal) இசைவடிவத்தை உலகத்துக்குக் கொண்டுவந்தவர் குஸ்ரோ.
  • பண்டிட் ரவிசங்கர், ஜாகீர் ஹுசெயின் போன்ற அகில உலக இசை சாதனையாளர்கள் குஸ்ரோவுக்கு முதல் நன்றி சொல்லியிருப்பர். ஏனென்றால், ரவிசங்கர் வாசித்த சிதார் இசைக்கருவியை உருவாக்கி, இசை வடிவமைத்துப் பிரபலப்படுத்தியவர் குஸ்ரோ. ஜாகீர் ஹுசெயின் வாசித்த தபேலா இசைக்கருவியை உருவாக்கி, இசை வடிவமைத்தவர் குஸ்ரோ.
  • பற்பல சுல்தான்களின் அரசவைக் கலைஞர்.
  • அறிவுஜீவி.
  • மறைஞானி (ஆன்மீகவாதி)

அவரது வாழ்க்கை வருடங்கள்-வாரியாகக் காண்போம்:

  1. 1253 குஸ்ரோ வட இந்தியாவில் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாடாவ்ன் என்ற இடத்தில் பிறந்தார்.
  2. 1260 தந்தையின் மரணத்துக்குப் பிறகு, குஸ்ரோ தனது தாயாருடன் தில்லிக்குச் சென்றார்.
  3. 1271 குஸ்ரோ தனது முதல் திவான் கவிதையான “டுஹ்ஃபாடஸ்-சிக்ர்” என்பதை எழுதினார்.
  4. 1272 குஸ்ரோ, பால்பான் மன்னனின் உடன்பிறந்தார் மகனான மாலிக் சாஹாஜ்ஜுவுடன் அவைப்புலவராக தனது முதல் பணியைப் பெற்றார்.
  5. 1276 குஸ்ரோ, புக்ரா கானுடன் (பால்பானின் மகன்) புலவராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.
  6. 1281 சுல்தான் மொகமதுவிடம் (பால்பானின் இரண்டாவது மகன்) பணியாற்றி, அவருடன் முல்டன் சென்றார்.
  7. 1285 குஸ்ரோ, மங்கோலியப் படையெடுப்பில் படைவீரராகப் பங்கு பெற்று, கைதாகினாலும், பின்னர் தப்பிவிட்டார்.
  8. 1290 ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்த போது, குஸ்ரோவின் இரண்டாவது மாத்னாவி “மிஃப்டாஹல் ஃபூடூ” தயார் ஆனது.
  9. 1294 தனது மூன்றாவது திவான் “குர்ராடல்-கமல்” என்பதை நிறைவு செய்தார்.
  10. 1295 அலாவுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்து, தேவகிரி மற்றும் குஜராத்மீது படையெடுத்தார்.
  11. 1301 கில்ஜி ரந்தம்போர், சித்தூர், மால்வா மற்றும் மற்ற இடங்களைத் தாக்கினார், மேலும் குஸ்ரோ வரலாற்று நிகழ்ச்சிகள் எழுதுவதற்காக மன்னனுடன் இருந்தார்.
  12. 1310 ஹசரத் நிஜாமுதீன்அவுலியா என்றொரு சூபி முனிவர் இருந்தார். அவருக்கு, குஸ்ரோ, நெருக்கமானவராகினார்.
  13. 1315 அலாவுதீன் கில்ஜி மரணமடைந்தார். குஸ்ரோ மாத்னாவி “டுவால் ரானி-கிஸ்ர் கான்” (காதல் கவிதை) என்பதை நிறைவு செய்தார்.
  14. 1316 குத்புதீன் முபாரக் ஷா அரசரானார், மேலும் நான்காவது வரலாற்று மாத்னாவி “நோஹ்-செபர்” நிறைவு செய்யப்பட்டது.
  15. 1321 முபாரக் கில்ஜி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கியாத் அல்-தின் துக்ளக் ஆட்சிக்கு வந்தார். குஸ்ரோ, துக்ளக்னாமா எழுத ஆரம்பித்தார்.
  16. 1325 சுல்தான் முகம்மது பின் துக்ளக்ஆட்சிக்கு வந்தான். ஹசரத் நிஜாமுதீன் அவுலியா மரணமடைந்தார், அதன்பின்னர் ஆறு மாதங்கள் கழித்து குஸ்ரோவும் மரணமடைந்தார். குஸ்ரோவின் சமாதி தில்லியில் அவரது குரு ‘ஹசரத் நிஜாமுதீன்அவுலியா’ சமாதிக்கு அருகில் இருக்கிறது.

குஸ்ரோவின் கவிதைகளின் சில மாதிரிகள்:

நான் ஒரு காதல் யாசகன் (தொழுபவன்): என்னுடைய ஒவ்வொரு நரம்பும் கம்பியாக மாறுகின்றன.

காதல் நோயாளிக்கான ஒரே மருந்து அவனது காதலியின் பார்வை மட்டுமே – இது தவிர வேறு எந்த மருந்தும் அவனுக்குத் தேவையில்லை.

நமது கப்பலுக்கு மாலுமி இல்லாமல் இருந்தால், அங்கு யாரும் இருக்க வேண்டாம். நம்மிடையே கடவுள் இருக்கிறார்: ஆகவே, மாலுமி நமக்குத் தேவையில்லை.

மக்கள் எனக்குத் தேவையில்லை. இந்த உலகம் எனக்குத் தேவையில்லை.

காதல் நதி எதிர்திசையில் பாய்கிறது. அதில் நுழைபவன் மூழ்கிவிடுவான், அதில் மூழ்கியவன் கடந்துவிடுவான்.

வெறும் படுக்கையைப் பார்த்து பகலும் இரவும் நான் அழுகிறேன்.
என் இனியவளை நாள் முழுவதும் அழைக்கிறேன், அந்த தருணங்களில் மகிழ்வும் ஓய்வும் இல்லை.

என் பார்வைகள், மற்றும் என் அடையாளங்களை உனது ஒரு பார்வையில் எடுத்துச் சென்றாய். தூய்மையான காதலில் இருந்து பழரசத்தை என்னைப் பருகச் செய்தாய். உனது ஒரு பார்வையில் என்னை மயக்கமுறச் செய்தாய்; என்னுடைய அழகான, மென்மையான மணிக்கட்டுகள் பச்சை நிற வளையல்களுடன் இருக்கின்றன, அவை சில கணங்கள் உன்னால் இறுக்கமாகப் பிடிக்கப் படுகின்றன.

நான் என்னுடைய வாழ்வை உனக்குத் தருகிறேன்.  ஓ, என்னுடைய ஆடைகள் வண்ணம் பெறுகின்றன,
உன்னுடைய ஒரு பார்வையில் உன் மூலமாக எனக்கு வண்ணம் தருகிறாய். நான் என்னுடைய முழு வாழ்க்கையையும் உனக்குத் தருகிறேன், ஓ நிஜாம், உன்னுடைய ஒரு பார்வையில் என்னை உன்னுடைய மணப்பெண் ஆக்குகிறாய்.

காதல், மழையில்லாமல் இது ஒளிர்கிறது – எரிகிறது;
மனிதனில் இருந்து தோன்றுகிறது மற்றும் மனிதனுக்குள் செல்கிறது. ஆனால் இது என்னவென்று ஒருவராலும் யூகிக்க முடியாது.

என்னுடைய துன்பத்தை என்னால் கவனிக்க முடியவில்லை
கொஞ்சுகின்ற உனது கண்கள், கதைகள் புனைகின்றன;
என்னுடைய பொறுமை விளிம்பின் மேல் இருக்கிறது, ஓ மனதிற்கினியவனே, ஏன் நீ என்னை உனது நெஞ்சுக்குள் எடுத்துச் செல்லவில்லை?.

தனிமையான இரவுகள் கூந்தல்களைப் போன்று நீண்டதாக இருக்கின்றன. நான் உன்னுடன் இணைந்திருக்கும் நாள் வாழ்க்கையைப் போன்று சிறியது. என்னுடைய விருப்பமான நண்பரை நான் பார்க்க முடியாத போது, இருண்ட இரவுகளை எப்படி நான் கழிப்பேன்?

இரண்டு மயக்கும் கண்கள் இருக்கின்றன.
ஆயிரம் மாயங்கள் மற்றும் அமைதியினை அழிக்கும் தன்மையுடன் அவை அலைகின்றன;
ஆனால் யார் அதற்காகச் சென்று புகார் அளிக்க இயலும்
என்னுடைய இனியவருக்கு, என்னுடைய விருப்பமான நிலைக்கு?

விளக்கு ஒளிர்கிறது; ஒவ்வொரு அணுவும் திளைக்கின்றன
நான் எப்போதும் காதல் நெருப்புடன் அலைகிறேன்;
என்னுடைய கண்களுக்கு உறக்கமில்லை, என்னுடைய உடலுக்கு அமைதி இல்லை. எனக்கு எந்த செய்தியும் வருவதில்லை, நானும் அனுப்புவதில்லை.

நான் என்னுடைய இதயத்தை அடக்கி வைத்திருக்கப் போகிறேன்,
அவருடைய இடத்திற்குச் செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிட்டும் வரையில்.

கவிதை எப்படி? புதுக்கவிதைக்கும் முன்னோடி அவர்தானோ?

புதிர்கள்: குஸ்ரோ பல விளையாட்டுத்தனமான புதிர்களை பாடல்கள் மற்றும் புராணக்கதைகளின் வாயிலாக எழுதினார், இது தெற்காசியாவில் பிரபலமான பழம்பெரும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அவரது புதிர்களில் வேடிக்கையான இரட்டைப் பொருள் மற்றும் வார்த்தை விளையாட்டுகள் அடங்கும்

புதிர்களின் ஒரு பிரிவில், சில சாதாரண நிகழ்வுகளை விவரிக்கும் ஒரு பெண்ணுக்கும், அவளிடம் அவளது காதலனைப் பற்றியும், அவர்களின் உறவை பற்றியும் பேசுவதாக கற்பனை உரையாடலை செய்யும் ஒரு உரையாசிரியருக்கும் இடையேயான உரையாடலாக முன்வைக்கப்பட்டு, ‘யார், பெண்ணே, உங்கள் ஆணா?’ என்ற கேள்வியுடன் புதிர்கள் கேட்கப்படுகின்றன.உதாரணமாக:

வருடத்திற்கு ஒருமுறை என் ஊருக்கு வருவார்.
அவர் என் வாயை முத்தங்களாலும் அமிர்தத்தாலும் நிரப்புகிறார்.
என் பணத்தை எல்லாம் அவனுக்காக செலவு செய்கிறேன்.
யார், பெண்ணே, உங்கள் ஆண்?

புதிருக்கு விடை: இல்லை, ஒரு மாம்பழம்.

என்னுடன் தனியாக இரவு முழுவதும் விழித்திருப்பார்
மற்றும் விடியற்காலையில் மட்டுமே வெளியேறுகிறது.
அவரது விலகல் என் இதயத்தை உடைக்கிறது.
யார், பெண்ணே, உங்கள் ஆண்?
புதிருக்கு விடை: இல்லை, ஒரு எண்ணெய் விளக்கு.

இந்தியாவின் கலை, கவி, இசை, இலக்கியம் அனைத்துக்கும் ஒரு காலைக் கதிரவன் போல வந்த அமீர் குஸ்ரோவைத் தொடர்ந்து சரித்திரம் பேசுவோம். வழக்கம் போல, போர்.. போர்.. என்று அலையும் மன்னர்களைப் பற்றிப் பேசுவோம். அவர்களது வாழ்க்கை இந்தியர்களின் வாழ்க்கையை எப்படி உருமாற்றியது என்பதைக் காண்போம். விரைவில்.