
’காலில் இது ஏது ? புது செருப்பு’ தன் காலைப்பார்த்துக்கொண்டான். ஆமாம் அது அவன் செருப்பில்லை . ’வேறு ஒருவர் செருப்புதான். ’அது இருக்கட்டும் இது எப்படி என் காலுக்கு வந்தது’. முணு முணுத்தான். அவன் செராக்ஸ் போடுவதற்குப் போன கடையிலிருந்து வேகு வேகு என்று வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.
அம்மாவுக்கு பூர்வீகம் தருமங்குடி. நாட்டு ஓடு போட்ட ஒரு கல் வீடும் பெரிய தோட்டமும் அம்மா பெயரில் இருந்தது. அம்மா தான் இறப்பதற்கு முன்பாகத் தன் வீட்டையும் தோட்டத்தையும் பையன்களுக்கு உயில் எழுதி வைத்தாள். முடிந்து போனாள். பையன்கள் என்றால் அவனும் அவனோடு உடன் பிறந்த இரண்டு சகோதரர்களையும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும்.
அந்த வீடு அவனுடைய அம்மா தாத்தா வாங்கியது. அதன் கிரையப்பத்திரத்தில் உள்ள நீள அகல கணக்குப் பார்த்ததில் ஒரு பக்கம் உள்ள நீளம் இன்னொரு பக்கத்தில் காணோம். செவ்வகமாய் இருக்கவேண்டிய மனை வரைப்படம் நாற்கரமாய் காட்சியானது. பத்திரத்தில் உள்ள படி பார்த்தால் மனையின் மொத்த பரப்பு இருபத்தி நாலு செண்ட்டுக்கு வரவேண்டும். ஏனோ குடியிருக்கும் வீட்டோடு சேர்ந்து தோட்ட நிலத்தையும் அளந்து பார்த்தில் பதினைந்தே செண்டுதான் வந்தது. வீட்டையும் தோட்டத்தையும் சரியாய் அளந்து கொடுக்க வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்தான். நிலம் அளக்கும் சர்வேயரை வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு மாப்பிள்ளையை ஜானவாசத்திற்கு அழைத்து வருவது போல் அல்லவா அவனுக்கு அது அனுபவமானது. அப்படி வந்த சர்வேயர் நிலத்தை அளக்க அவன் வீட்டில் அளவை சங்கிலியைப் பிடித்தார். அவன் தயாராய்க்கூர் சீவி வைத்திருந்த வேப்பம் முளைக்குச்சிகளை அங்கங்கு நட்டார். ஒரு பதினைந்து அடி அளவு அகலத்தில் குறைகிறது. கிரைய பத்திரத்தில் கண்டுள்ளபடிக்கு அது தன் வசமுள்ள அரசாங்க வரைப்படத்தில் இல்லையே என்றார்.
‘இதுக்கு நா என்ன செய்யணும்’
‘இந்த ஊரு தருமங்குடி முதுகுன்றம் தாலுக்கா, இதுவே ரெவின்யூ டிவிசனாவும் இருக்கு. ஆக முதுகுன்றம்கோட்டாட்சியருக்கு மனு ஒன்னு எழுதி குடுங்க. அவுருதான் இந்த அளவுல எது சரின்னு எது தப்புன்னு சொல்லணும்’
கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள நீளம் அகலம், எஃப். எம். பி அரசு நிலவரை படத்தில் இல்லை குறைகிறது. இது விஷயம் தெரிந்துகொள்ளவே ஆறு மாதமானது. வீட்டுப் பத்திர சொத்து விபரத்தையும் ரெவின்யூ அலுவலக மேப்பையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே இது தெரிந்து விடும். ஆனால் இதற்குச் சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அளக்கிறேன் பார் என்று சர்வேயர் வீட்டுக்கு ஏன் வரவேண்டும். கூடவே தருமங்குடி வி ஏ ஓ வும் ’இதனில் நானில்லாமலா’ என்று வந்திருந்தார். அவர்கள் அளவைக்கு வந்த அன்று அந்த இருவரும் கேட்டது எல்லாமும் கொடுத்தான் அதில் எந்த குறையும் வைக்கவில்லை அவன்.
அந்த சர்வேயர் அவனுக்குச் சொன்னபடி முதுகுன்றம் கோட்டாட்சியருக்கு மனு கொடுக்கவேண்டும். பத்திர நகலுக்கும் பட்டா நகலுக்கும் செராக்ஸ் போடத்தான் அவன் அந்தக்கடைக்குப் போயிருந்தான். அப்படிப் போன இடத்தில் அவனது செருப்பை யாரோ காலில் மாட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். தெரிந்தா இப்படிச் செய்வார்கள். தெரியாமல்தான் இது நடந்திருக்ககூடும். இனி என்ன செய்ய ?. உடன் அந்த செராக்ஸ் கடையை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தான். செருப்பை நாம்தான் மாற்றி போட்டுக்கொண்டு வந்துவிட்டோமா இல்லை இது ஒரே ஒரு ஜோடிதான் வாசலில் பாக்கியாய் இருந்து அதைச் சரியாயக கவனிக்காமல் நாமே காலில் மாட்டிக்கொண்டு விட்டோமா. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் காலில் போட்டிருக்கும் செருப்பு மட்டும் அவனதில்லை என்பதில் உறுதியாயிருந்தான்.
செராக்ஸ் கடை வந்தாயிற்று. செருப்புக்காலோடு வாடிக்கையாளர்கள் யாரும் அந்தக் கடையின் உள்ளே செல்வதில்லை. அதுப்படியே அவன் தான் போட்டிருந்த செருப்பைக்கடை வாசலில் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.
‘இப்ப சித்த மிந்தி உங்க கடைக்கு வந்து பத்திர காபி செராக்ஸ் போட்டுகிட்டு போனேன் சார். என் செருப்பு மாறிப் போயிருக்கு. யாரோ என் செருப்பை போட்டுகிட்டு போயிருக்கணும்’ அவன் ஆரம்பித்தான். செராக்ஸ்கடை வைத்திருப்பவரின் மனைவி அந்தக்கடையிலேயே கணவருக்கு ஒத்தாசையாக இருந்தாள். அவள் செருப்புப் பிரச்சனையில் மாட்டிக்கொண்ட அவனையே கவனித்து பார்த்துக்கொண்டிருந்தாள். கடைக்காரரோடு அவன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.
‘சார். ஒரே ஒரு பெரியவர் உங்களுக்கு மின்னாடி செராக்ஸ் போட்டுகிட்டு போனாரு’
‘அப்ப அவர்தான் என் செருப்பை மாத்தி போட்டுகிட்டு போயிருக்கணும்’
‘சார் அவுரு நல்ல மனுஷன். அப்பிடி நெதானம் இல்லாம எதையும் செய்றவரு இல்ல.’
‘நான் இங்க கொஞ்சம் வெயிட் பண்றேன். தெரியாம போட்டுகிட்டு போனவங்க யாராவது திரும்பி வந்து என் செருப்ப என் கிட்ட குடுத்துட்டும் போகலாமில்ல’
‘பேஷா வெயிட் பண்ணுங்க. இந்த சேர்ல உக்காருங்க. ஆனா எனக்கு தெரிஞ்சி அவுரு பெர்ஃபெக்ட்டான ஆசாமி’
’உங்களுக்குத்தான் நல்லா தெரியும் அவர. எனக்கு சுத்தமாத் தெரியாது.தவறுதலா கூட எதுவும் நடந்திருக்கலாம். ஆர்த்தோ டாக்டர் எனக்குன்னு பிரஸ்கிர்ப்ஷன் எழுதிக் குடுத்து பிரத்யேகமா தயார் பண்ணின செருப்பு. அதுக்குன்னு ஸ்பெஷலா ஒரு செருப்பு தெச்சி தர்ர தொழிலாளி அந்த டாக்டர்கிட்ட வந்து போறாரு. எனக்கு குதிகாலு வலின்னு அந்த ஆர்த்தோ டாக்டர் கிட்ட போயி நின்னேன். அவரு அந்த வலிக்குற குதிக்கால எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாரு. குதிகாலு எலும்பு ரொம்ப ஒழச்சி தேஞ்சிடுச்சி. அந்த தேஞ்ச எலும்ப சப்போர்ட் பண்ணறதுக்கு புதுசா ஒரு எலும்பு மொளச்சி இருக்கு. அதனாலதான் அந்த வலின்னு’ டாக்டர் அவனிடம் சொல்லியதை ஒரு பாட்டம் ஒப்பித்தான்.
‘என்ன டாக்டர் அப்பிடி எல்லாம் கூட இருக்குமா. எலும்பு தேஞ்சி போச்சின்னா இன்னொரு எலும்பு கூட அந்த எடத்துல மொளைச்சி வந்துடுமா’ அவன் டாக்டரையே திரும்பவும் கேட்டிருக்கிறான்.
‘மொளச்சி வந்துருக்கே. அப்பிடி ஒரு எலும்பு வர்ரதும் சாதாரணமா நடக்கறதுதான். இந்த எலும்பு தேஞ்சிடுச்சி. தேஞ்ச எலும்ப சப்போட் பண்ண இன்னொரு எலும்பு வேணும்னு நம்ப ஒடம்பு முடிவு பண்ணி நடக்கற வேல இது. நம்ப மூளைக்கும் அங்க நடந்த அந்த வேலைக்கும் தொடர்பு இருக்கும். ஆனா நமக்கு மட்டும் அது வெளங்காது. நமக்கு தெரியாம எவ்வளவோ வேலைங்க நம்ப ஒடம்புக்குள்ள நடக்குது. அப்பிடித்தான் இதுவும்’ டாக்டர் சொல்லியிருக்கிறார்.
யோசிக்கும்போது விஷயங்கள் ஒவ்வொன்றாய் அவன் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.
அவனுக்கு வந்த குதிகால் வலிக்காக வாங்கியது. அது விலை கூடிய பகிள்ஸ் வைத்த செருப்பு. செருப்பில் ஒரு கர்வ் அமைப்பு அதன் நடுப்பகுதியில் மேடாக இருக்கும்.இதனை தைத்து வழங்கும் நிறுவனம் ஆதம்பாக்கத்தில் இருப்பதையும் அங்கிருந்து தாம்பரத்தில் இருக்கும் ஆர்த்தோ டாக்டருக்கு, குதிகால் வலியைக் குறைக்கும் செருப்பு டெலிவரி செய்யப்படுவதையும், அவன் அறிந்திருந்தான். ஒரு ஜோடி செருப்பின் விலையே மூவாயிரம் ரூபாய் ஆனது. இந்த லட்சணத்தில் ஆர்த்தோ டாக்டர் வீட்டுக்குள்ளே ஒரு செருப்பும் வீட்டுக்கு வெளியே போகும் போது வேறு ஒரு செருப்பும் என இரண்டு செட் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறார். அவன் தான் ரூபாய் மூவாயிரம் கொடுத்து ஒரு ஜோடி மட்டும் வாங்கினான். காலில் போட்டு நடந்து பார்த்தான். குதிக் கால் வலி குறைந்து போனது. அந்த வகை செருப்பை காலில் மாட்டிக்கொண்டால் அவன் உயரம் சற்றுக் கூடிப்போவதுவாய்க்கூட உணர்ந்தான்.
செராக்ஸ்கடைக்காரரும் அவர் மனைவியும் அவர்களுக்குள்ளாக இப்படிப் பேசிக்கொண்டார்கள். அவனும் கூட அதில் கவனமாகவே இருந்தான்.
‘செருப்பு மாறின விஷயம் எனக்கும் கஷ்டமா இருக்குங்க. ஏங்க அந்த பெரியவரு வீட்டுக்கு பக்கத்து வீடு என் சிநேகிதி வீடு. அந்த சிநேகிதி இது விஷயம் என்னிடம் முன்னமே சொல்லியிருக்கா. அந்த சிநேகிதிக்கு இப்ப ஒரு போன் போடுவோம். அந்த பெரியவர அழச்சி பேச சொல்லுவம்’
‘நல்லா தெரியுமா உனக்கு. பெரியவரு வீடு உன் சிநேகிதி வீட்டுக்கு பக்கத்து வீடுதானா.’
‘அது சரிதாங்க . அதுல ஒன்னும் தப்பு இல்ல.
செராக்ஸ் கடைக்காரரின் மனைவி தன் சிநேகிதிக்குப் போன் போட்டார். செருப்பு மாறிப்போன விபரம் சொன்னார்.’ அடுத்த வீட்டு பெரியவர என் கிட்ட கொஞ்சம் பேசச் சொல்லுங்க ’ என்று கேட்டுக்கொண்டாள். பெரியவர் வந்தார். போனில் பேசினார்.’ என் செருப்புதான் எங்கிட்ட இருக்கு. வேற யாராவது மாத்தி போட்டுகிட்டு போயிருப்பாங்க உங்க கடையிலேயே நல்லா பாருங்க என்றார். பட்டென்று போனை வைத்துவிட்டார்.
அந்த நேரம் பார்த்து அவன் மனைவியிடமிருந்து மொபைலில் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘ என்ன சேதி’ என்றான். அவள் ஆரம்பித்தாள். ‘ மொதல்ல நீங்க கால்ல போட்டுறுக்கறது யார் செருப்புன்னு பாருங்க. உங்க செருப்ப எதுன்னு நீங்க பாத்து போடாம உங்க பையன் செருப்ப மாட்டிகிட்டு போயிருக்கீங்க. இங்க அவன் என்னண்ட வந்து சத்தம் போடுறான். அவனுக்கு இப்ப வெளியில எங்கோ போகணுமாம். உங்க செருப்பு கூடம் உங்களுக்கு தெரியாதா. யார் செருப்பையாவது மாட்டிகிட்டு கெளம்பறதா. வயசு மட்டும் ஆவுது அவ்வளவுதான்’
‘அப்ப என் பக்கிள்ஸ் வச்ச ஆர்த்தோ செருப்பு’
‘நீங்க அங்காண்ட போனீங்க. கேஸ் சிலிண்டர் காரரு வந்தாரு. அவரு உங்க செருப்ப மாத்தி போட்டுகிட்டு போயிட்டாரு. அவரே எனக்கு போன் போட்டாரு விஷயம் சொன்னாரு. அவருதும் பக்கிள்ஸ் வச்ச செருப்பாம். நம்ம வீட்டுக்கு திரும்பவும் வந்தாரு. அவர் செருப்பை அவர் போட்டுக்கொண்டாரு. ’ பக்கிள்ஸ் போட்ட உங்க செருப்பை அவரே செராக்ஸ் கடைக்கு வந்து, உங்களை நேரா பாத்து உங்க கிட்டயே குடுத்துடறேன்னு சொன்னாரு’
‘அதுக்குள்ள இவ்வளவு கதை ஆயிடுச்சா. இப்பதான் உயிர் எனக்கு வந்த மாதிரிக்கு இருக்கு’
‘அது வரட்டும். இப்ப நம்ம பையன் செருப்ப மறக்காம திரும்ப எடுத்துகிட்டு வரணும். அதான் ரெம்ப முக்கியம்’
‘நா என் கையில புடிச்சிகினு வந்துடறேன்’
‘அதான் தப்பு. செருப்ப கையில தூக்கிகிட்டு ரோட்டுல வருவாங்களா. எதுதாவது தெரியுதா உங்களுக்கு’
‘பின்ன’
‘முக்கியமா உங்க கிட்ட சொல்லுணும். ஒரு பிளாஸ்டிக் பையி, செராக்ஸ் போடுற டாகுமெண்ட் பேப்பரெல்லாம் வச்சி எடுத்துகிட்டு போனீங்களே, அது உள்ள பையன் செருப்பை போட்டு கீட்டு கொண்டாராதிங்க’
‘அது கூடமா எனக்கு தெரியாது’ அவன் சொல்வதற்குள் அவள் போனை வைத்து விட்டாள்.
‘ அவனும் அவன் மனையாளும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்த செராக்ஸ் கடைக்காரரின் மனைவி ஒரு மஞ்சள் தாம்பூலப்பையைக் கொண்டு வந்தாள். அதனுள்ளாக பையனின் செருப்பை அவன்தான் நுழைத்தாள்.
‘இப்ப இத கையில புடிச்சிகினு ரைட்டா போங்க’ என்றாள். அவனுக்குச் சிரிப்பாய் வந்தது.
செராக்ஸ் கடை வாயிலில் சிலிண்டர் காரர் வந்து அவனை ’சார் சார்’ என்று அழைத்துக்கொண்டிருந்தார். அவனுடைய பக்கிள்ஸ் போட்ட செருப்பு கேஸ் சிலிண்டர் வண்டியின் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருந்தது.செராக்ஸ் கடைக்காரரும் அவர் மனைவியும் அவனையும் அந்த சிலிண்டர் காரரையுமே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேஸ் சிலிண்டர் வண்டிக்காரர் அவனுடைய செருப்பை எடுத்து அவனிடம் நீட்டினார். ‘ செய்யிற வேலயில பதனம் இருக்கணும் சாரு’ வேகமாய்ச் சொன்னார். அவனிடம் புன்முறுவலும் செய்தார். அப்படித்தானும் செருப்பு மாற்றி போட்டுக்கொண்டு போய்விட்டதை மனதில் எண்ணி வண்டியை மிதித்துக்கொண்டே நகர்ந்து போனார்.அவர் கால்களிலும் பக்கிள்ஸ் போட்ட செருப்பு இருப்பதை அவன் கவனித்தான்
‘ ரெண்டு ரூவாய மனுசன் சம்பாரிக்கறதுக்குள்ள எவ்வளவு பிரச்சனை’ என்றார் செராக்ஸ் கடைக்காரர்.
