சோழரின் கலைத் திறன்

அனகொண்டா – பெயர்ச்சொல் பிறப்பு

ஆர். எட்வின் என்பவர் “இலங்கையில் புலியை விழுங்கிய பாம்பு” ஒன்றைக் கண்டேன் என்று ‘ஸ்காட்ஸ்’ இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் “ஒரு ஆங்கிலேய சீமானின் கடிதத்தில் இருந்து தெரியவருவது” என்கிற தலைப்பில் 1768 ஆம் ஆண்டு ஒரு செய்தியாக வெளியாகியுள்ளது. அனகொண்டா பாம்பு பற்றி ‘ரிச்சர்டு பாயில்’ என்பவரின் குறிப்பே முதல் செய்தியாகப் பதிவாகியுள்ளது. (https://ta.wikipedia.org/wiki/ஆனைக்_கொன்றான்)

தஞ்சையில் அனகொண்டா – தஞ்சைப் பெரியகோயில் நுழைவாயிலில் துவாரபாலகர் சிற்பம் உள்ளது. துவாரபாலகரின் மிகப் பெரிய உருவத்தை உவமைப் படுத்துவதற்காக அவருடைய தண்டத்தைச் சுற்றி யிருக்கும் பாம்பு ஒன்று யானையை விழுங்குவது சிற்பமாகக் காட்டப் பெற்றுள்ளது.
யானையை விழுங்கும் இந்தப் பாம்பை “யானைகொண்டான்” என்று இலங்கைத் தமிழர் குறிப்பிட்டுள்ளனர். பின்னாளில்,
யானைகொண்டான் —> ஆனைகொண்டான் —> ஆனகொண்டா —> Anaconda அனகொண்டா என்று மறுவியுள்ளது.

களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்

அனகொண்டா பாம்பின் நீளம் சுமார் 15அடி முதல் 60 அடி நீளம் வரை வளரும். தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் அனகொண்டா என்ற பாம்பைப் பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அறிந்துள்ளனர் என்பதற்குத் தஞ்சைப் பெரியகோயில் நுழைவாயிலில் உள்ள இந்தச் சிற்பமே சான்றாகும்.
“தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ” என்று கம்பராமாயணத்தில் அனகொண்டா பற்றிய குறிப்பு உள்ளது.
“ஆனகொண்டா” Anaconda பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளன. சங்கப்பாடல்கள் இதை மாசுணம் என்று குறிப்பிடுகின்றன. சில உரையாசிரியர்கள் சுணம் என்றால் பாம்பு என்றும், மா+சுணம் என்றால் மலைப்பாம்பு என்றும் பொருள் கூறியுள்ளனர். ஆனால் சுணம் என்ற சொல் சங்கப்பாடல்களில் இடம் பெறவில்லை. ஆனால் சங்கப்பாடல்களில் மலைப்பாம்பு அசுணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாசுணம் என்பது “ஆனகொண்டா”
அசுணம் என்பது மலைப்பாம்பு.
அசுணம் மாசுணம் இரண்டையும் சங்கப்பாடல்களில் காணலாம்.

நற்றிணையில் அனகொண்டா – மலைகளில் வாழும் யானையைப் பாம்பு விழுங்குகிறது. இதை நற்றிணைப் பாடல் பதிவு செய்துள்ளது. “ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்” (நற்றிணை 14)

தேவாரத்தில் அனகொண்டா – யானையை விழுங்கும் பாம்பு பற்றிய செய்தியைப் “பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த கரிய மீடற்றர் செய்ய மேனிக் கயிலை மலையாரே’” (1–58–2} என்ற தொடரில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
தமிழரின் தொன்மையை அறிவோம். உலகம் முழுவதும் வாழும் பழங்குடியினர் எல்லோரும் பண்டைத் தமிழர் என்பதை அறிவோம். தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.


—————————————————————-
அசுணம் (மலைப்பாம்பு) இடம் பெற்றுள்ள பாடல்கள்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் – நற். 244/4
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் – நற். 304/8
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகம். 88/12

மாசுணம் (அனகொண்டா பாம்பு) இடம் பெற்றுள்ள பாடல்கள்
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்/
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற். 261/6,7
தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம். 311/3
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை. 261
பேர் அவாவொடு மாசுணம் பேர வே – பால:16 27/1
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – அயோ:10 35/2
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – ஆரண்:1 14/4
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி – ஆரண்:7 29/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – ஆரண்:14 43/3
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கிட்:10 21/3
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – சுந்:11 60/3
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட – சுந்:11 61/1
கற்பக கொம்பினை கரிய மாசுணம்
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – யுத்2:15 112/3,4
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – யுத்2:16 252/1,2
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – யுத்2:16 338/3
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/4

கட்டுரையாளர்,
காசிஸ்ரீ முனைவர் நா. ரா. கி. காளைராசன்,
மேனாள் துணைப்பதிவாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 630 003
kalairajan26@gmail.com WhatsApp : +91 9443501912