
‘மாதவ், அவசரப்பாக தக்காளி தேவைப்படுகிறது’
‘சரி வாங்கி வருகிறேன்’
‘இந்தா, எடுத்துக் கொள்’
‘சாரி, இப்பொழுது மஞ்சள் பொடி வேண்டும்’
‘அதற்கென்ன இதோ வாங்கி வருகிறேன்’
‘உங்களை எப்படி கஷ்டப்படுத்தி கொண்டு இருக்கிறேன், அதற்குத்தான் சொல்கிறேன், வாருங்கள், நாம் மாலுக்குப் போகலாம், அங்கே போய் நமக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வரலாம், சில சமயம் அங்கே போனால் வேறு சில சாமான்களும் கிடைக்கும், நமக்கு வேண்டியதை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வரலாம், சரிதானே’
‘எல்லாம் சரிதான், ஆனால் நான் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேள், என்னை நீ இரண்டு முறை கடைக்கு அனுப்பினாய், எனக்கு அது இரண்டு தடவைக்கான நடை ஆகிவிட்டது, பிறகு அந்த அண்ணாச்சி கடையில் ‘அண்ணாச்சி தக்காளி அரை கிலோ வேணும் நல்லதா கொடுக்கவும்’ என்று நான் கேட்க, அவர் ‘அண்ணி எப்படி இருக்காங்க, பையன் நன்றாகப் படிக்கிறானா, அப்பா எப்பொழுது ஊருக்கு வரப் போகிறார்கள், தக்காளி நீங்கள் எடுத்துக்கொண்டு போங்கள், பணம் பிறகு தரலாம், அண்ணியைக் கேட்டதாகச் சொல்லவும்’ என்றார்.
‘தக்காளி நல்லதாக இருக்கிறது, ஒரு கிலோ வாங்கிக் கொண்டு போங்கள், திரும்பி இந்த மாதிரி கிடைப்பதற்கு ரெண்டு மூணு நாள் ஆகும்’ என்று அண்ணாச்சி நமக்கு வேண்டியது பார்த்து எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்’
‘தக்காளி என்ன விலை அண்ணாச்சி’
‘கிலோ 30 ரூபாய், உங்களுக்கு நான் 25 ரூபாய்க்கு தருகிறேன்’ என்று டிஸ்கவுண்டில் எனக்குக் கொடுக்கிறார், மாலில் இந்த சலுகையை எதிர்பார்க்க முடியாது, அவர்கள் தேதி முடிந்த பொருளுக்கு எப்போதாவது தள்ளுபடி கொடுப்பார்கள், அவ்வளவுதான், அது நமக்கு தேவையான பொருளாகக் கூட இருக்காது’
‘இரண்டாவது தடவை சென்ற போது அண்ணாச்சி உன்னைப் பற்றியும், அப்பாவைப் பற்றியும் மீண்டும் அன்போடு விசாரித்தார், மாலில் விற்பனையாளன் இப்படி ஆத்மார்த்தமாக விசாரிப்பானா? கணக்கு எழுதிக் கொள்ளவும் என்றதற்கு ‘தாராளமாக நீங்கள் எடுத்துக் கொண்டு போங்கள், எங்கே போகப் போகிறீர்கள்?’ என்றார்.
‘நான் கணக்கில் எழுதிவிட்டு வந்தது என்னிடம் பணம் இல்லை என்று இல்லை, நான் திரும்பவும் அந்த கடைக்கு வருவேன் என்று ஒரு உத்தரவாதம் கொடுப்பதற்காகவும், அவர் என்னுடைய நாணயத்தை புரிந்து கொள்வதற்காகவும்தான்’
‘கடைசியாக ஒன்று, கடைக்குச் செல்லும் பொழுது நீ சொன்ன அந்த பொருளை வாங்கிக் கொண்டு நான் வந்து விடுகிறேன், ஆனால் மாலுக்கு சென்றால் சில நாட்கள் கழித்துத்தான் திரும்பவும் வருவோம் என்று நமக்குத் தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விடுகிறோம், அதை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய், அது சில சமயம் உபயோகிக்காமல் கெட்டும் போய்விடுகிறது, இந்த அண்ணாச்சி கடையில் வாங்குவது ஆத்மார்த்தமான கணக்கு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் கணக்கு, பரஸ்பர நம்பிக்கை கணக்கு, நாளை என்ற எதிர்பார்ப்பு உள்ளடக்கிய கணக்கு, உனக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்’
‘நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி, இப்ப பெருங்காயம் வாங்கிக் கொண்டு வாருங்கள்’
‘அடடா இந்த பெண்களே இப்படிதான், ஒத்துக் கொள்வது மாதிரி ஒத்துக்கொண்டு நமக்கு மேலும் வேலை கொடுப்பார்கள், ஆனாலும் நான் சொன்ன நியாயத்தைப் புரிந்து கொண்ட மாலதி நீ தங்கமணி தங்கம்!’
இந்த 2026 ஆம் ஆண்டில் இந்த நம்பிக்கை கணக்கை நாமும் தொடரலாமே!
