ஸ்ரீமத் பகவத் கீதை - கிருஷ்ணா, கிருஷ்ணா புத்தகங்கள், இந்து, இந்து மதம், இந்து மத புத்தகங்கள், ஆன்மீகம், மதம், ஆன்மீகம் புத்தகங்கள், மத ...

அத்தியாயம் பதின்மூன்று

ஞானம் பெறுவதற்கும், கர்மயோகியாக நடப்பதற்கும், மனத்தூய்மையோடு இருப்பது மிக முக்கியம். மனத்தூய்மை பெற பதினொன்று வழிகள் இருப்பதாக பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லுகிறார். அவையாவன:

                      1. தேவ யக்னம்
                      2. தம யக்னம்
                      3. விஷய போக யக்னம்
                      4. சம யக்னம்
                      5. திரவிய யக்னம்
                      6. தபோ யக்னம்
                      7. யோக யக்னம்
                      8. ஸ்வாத்யாய யக்னம்
                      9. ஞான யக்னம்
                      10. பிராணாயாம யக்னம்
                      11. ஆகார நியம யக்னம்
  1. தேவ யக்னம்: அக்னிஹோத்ரம் போன்ற வைதீக வழிபாட்டு முறைகள் தேவர்களை வழிபடும் முறையாக இருக்கிறது. இதையே தேவ யக்னம் என்பர்
  2. தம யக்னம் என்பது புலன் கட்டுப்பாடு கொண்டு வாழ்க்கை நடத்துவதைக் குறிக்கிறது. இது புலன்களை அடக்குவது பற்றிக் கூறவில்லை. நெருப்பில் நெய்யை ஆகுதியாகச் செலுத்தும்போது, ​​நெய் மறைந்துவிடுகிறது. அதேபோல், இந்த யாகத்தில், கட்டுக்கடங்காத, அடக்கப்படாத புலன்கள் மறைந்து விடுகின்றன. அதற்குப் பதிலாக, ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள் தோன்றுகின்றன. ஒழுங்கீனம் ஒழுக்கத்திற்கு ஆகுதியாகச் செலுத்தப்படுகிறது. எனவே, இது தம யக்ஞம் என்று அழைக்கப்படுகிறது.
  3. விஷய போக யக்னம் என்பது கட்டுப்பாட்டிற்குள் இருந்து, புலனின்பங்களைச் சட்டப்பூர்வமாகவும் தார்மீக ரீதியாகவும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு அனுபவிப்பது. அந்தப் புலனின்பங்களை வலிமையுடனும், ஆளுமையுடனும் அனுபவிப்பது. அத்தகைய இன்ப அனுபவமே ஒரு வகையான யாகமாக மாறுகிறது. இதைத் தான் விஷய போக யக்னம் என்பர்.
  4. சம யக்னம் என்பது மனக் கட்டுப்பாட்டைக் குறிக்கும். புலனடக்கத்தை விடக் கடினமானது மனக் கட்டுப்பாடு. இந்த மனக் கட்டுப்பாட்டின் மூலம், பத்து உறுப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கிருஷ்ணர் கூறுகிறார். கட்டுக்கடங்காத புலன் உறுப்புகள் பின்னர் மனக் கட்டுப்பாட்டிற்குள் அர்ப்பணிக்கப்பட்டு, அவை கட்டுப்படுத்தப்பட்ட புலன் உறுப்புகளாக மாற்றப்படுகின்றன.
  5. திரவிய யக்னம் என்பது பலவிதமான தானங்களைக் குறிக்கும். பணம், பொருட்கள், அறிவு என எதை வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். எந்தக் கட்டணமும் வாங்காமல் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது. நேரத்தைப் பகிர்ந்துகொள்வது, அல்லது அன்பான வார்த்தைகளைப் பேசுவது கூட இதில் அடங்கும். ஆறு மலையிலிருந்து நீரைப் பெறுகிறது, அதை மேகத்திடம் ஒப்படைக்கிறது; மேகம் மீண்டும் ஆற்றிடம் கொடுக்கிறது, ஆறு அதை மீண்டும் கடலுக்குத் திருப்பித் தருகிறது. படைப்பில் அனைத்துமே ஒரு சுழற்சி முறையில் இயங்குகின்றன; உதாரணமாக, ஆக்சிஜன் சுழற்சி, கார்பன் டை ஆக்சைடு சுழற்சி, உணவுச் சங்கிலிச் சுழற்சி. சுழற்சி என்பது பெறுவதும் கொடுப்பதும் ஆகும்.
  6. தபோ யக்னம் என்பது புலன்களின் மீது மனம் ஆதிக்கம் செலுத்துவதற்காக, மனப்பூர்வமான சுய மறுப்பின் மூலம் புலன்களைக் கட்டுப்படுத்துவதாகும். புராண காலங்களில் தவம் என்று சொன்னதையே இது குறிக்கும்.
  7. யோக யக்னம் என்பது அஷ்டாங்க யோகப் பயிற்சியைக் குறிக்கும். பதஞ்சலி ரிஷியால் பரிந்துரைக்கப்பட்ட எட்டு அம்ச ஒழுக்கமுறை இதில் அடங்கும்.
  8. ஸ்வாத்யாய யக்னம் என்பது வேதங்களை ஓதுவதைக் குறிக்கும். வேத நூல்களைப் படிப்பதும், அதில் சொல்லப்பட்ட வழிமுறைகளை வாழ்வில் பின்பற்றுவதும் இதில் அடங்கும். சுலோகங்கள் சொல்வதும் இதில் அடங்கும். இதனை சப்தப் பிரமாணம் என்றும் கூறுவர்.
  9. ஞான யக்னம் என்பது வேத நூல்களின் பொருளைப் பற்றிய ஆய்வு, விசாரணை மற்றும் பகுப்பாய்வு. ஞான யக்ஞம் என்பது அர்த்த கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நான் யார் என்ற கேள்விக்கு விடை காண வைப்பது ஞான யக்னம்.
  10. பிராணாயாம யக்னம்; அன்னமய கோசம் என்பது பருவுடல் அடுக்கு, பிராணமய கோசம் என்பது ஆற்றல் கவசம் மற்றும் மனோமய கோசம் என்பது மன/உணர்ச்சி ஆளுமை ஆகும். பிராணமய கோசம் அன்னமய கோசத்திற்கும் மனோமய கோசத்திற்கும் இடையில் அமைந்து இரண்டையும் பாதிக்கிறது. பிராணன் ஒழுங்குபடுத்தப்படும்போது, ​​உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் மேம்படும். பிராணாயாமம் இரண்டு வகைப்படும் – ஒன்று ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகச் செய்யப்படும் ஒரு பொதுவான பயிற்சி, மற்றொன்று இறைவனின் நாமங்களை உச்சரித்துச் செய்யப்படும் ஒரு ஆன்மீகப் பயிற்சி. பிரார்த்தனை சேர்க்கப்பட்டால் பிராணாயாமம் ஒரு யாகமாகிறது; இல்லையெனில் அது உடல் ஆரோக்கியத்தை மட்டுமே மேம்படுத்துகிறது.
  11. பதினொன்றாவதாக வரும் ஆகார நியம யக்னம் என்பது உணவுக் கட்டுப்பாடு அல்லது உணவில் மிதமான பழக்கம் கொண்டு வருவது. இது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை அளவுக் கட்டுப்பாடு, இரண்டாவது நிலை தரக் கட்டுப்பாடு. மாமிசம் மற்றும் மதுபானம் போன்ற தாமச உணவுகளைப் படிப்படியாகத் தவிர்ப்பது; ராஜச உணவுகளைப் படிப்படியாகக் குறைத்து, அதன் பிறகு சாத்விக உணவை மட்டும் உட்கொள்வது. உணவுக் கட்டுப்பாடு போதுமானதாக இல்லாதபோது, ​​பஞ்ச பிராணன்கள் நோயுறுகின்றன. உணவு பிராணனின் தன்மையை பாதிக்கிறது. ஒருவர் உணவு நியமத்தைப் பின்பற்றும் போது, ​​நோயுற்ற பிராணன்கள் ஆரோக்கியமான பிராணன்களாக மாறுகின்றன.

இந்தப் பதினொன்று பயிற்சிகளைப் பின்பற்றுபவர் சிறந்த சாதகர்களாகப் பார்க்கப்படுவர் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

சுவாமி சின்மயானந்தரது அழகான கூற்றை இங்கு நாம் பார்க்க வேண்டும். ஒரு மிருக குணம் கொண்ட மனிதனாகத் தொடங்குகிறீர்கள், ஆனால் ஒரு முழுமையான மனிதனாக மாறுங்கள்; இந்த யாகங்களைப் பயிற்சி செய்யுங்கள்; மேலும் உங்களுக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்போது, ​​நீங்கள் ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த மனிதனாக மாறி விடுவீர்கள்.

ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனையுடன் தொடங்க வேண்டும். கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரிய பகவான் எழுவதற்கு முன்னால் எழுந்து, உடலை ஸ்நானம் மூலம் தூய்மையாக்கி, மனதை பிரார்த்தனைகள் மூலம் தூய்மையாக்கி பிரசாத புத்தியுடன் வாழ்பவருக்கு இல்லற வாழ்க்கையோ அல்லது துறவற வாழ்க்கையோ ஒரே விதமான அமைதியையும் ஆனந்த்தத்தையும் தரும்.

மேலே கூறப்பட்டுள்ள யக்னங்கள் எல்லாம் இரண்டு யக்னங்களுக்குள் அடங்கும். அதுவே கர்ம யோகம் மற்றும் ஞான யோகம். கர்ம யோகம் தூல உடல், சூக்ஷ்ம உடல் மற்றும் காரண உடலை தூய்மையாக்கி, அனைத்து விதமான மாசுகளையும் நீக்கி, ஞானம் பெற வழி ஏற்படுத்தித் தருகின்றன. கர்ம யோகம் மூலமாக ஞானம் பெற்று இறைவனுடன் இணையும் வீட்டுப் பேற்றை நாம் அனைவருமே பெற முடியும்.

ஞானம் பெறுவதால் ஒருவரது வாழ்க்கையில் என்ன பெரிதாக நிகழ்ந்து விடும்? ஞான நிலையை ஒருவர் அடையும் பொழுது, மூன்று விதமான கர்ம் வினைகள் மறையும். கடந்த பிறவிகளில் ஈட்டிய புண்ணியமும் பாவமும் தொலையும். கடந்த காலங்களில் நாம் செய்த செயல்கள், இந்தப் பிறவியில் முதிர்ச்சியடைந்து பலன் தரத் தயாராக இருக்கும் பிராரப்த கர்மவினைகளும் இந்தப் பிறவியோடு மறையும். இந்தப் பிறவியின் செயல்கள் மூலம் மேலும் கர்மங்கள் சேரா; ஏனெனில் சுயநலமற்ற வாழ்க்கையில், தன்னை அறிந்து இறைவனுடன் ஐக்கியமாகி நிற்கும் வாழ்க்கையில், எல்லாச் செயல்களும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப் பட்டு இருக்கும். அதனால் எந்த விதத்திலும் பாவ புண்ணியங்கள் இந்த தவசீலரை எதுவும் செய்யாது.

இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது:  ஞானமே மிகப்பெரிய தூய்மையாக்கும் பொருள். (மற்ற அனைத்து சாதனைகளும் புண்ணியத்தை உருவாக்க முடியும், அதுவே ஒரு பிணைப்பு. மேலும், வேறு எந்த சாதனையும் அனைத்து பாவங்களுக்கும் மூல காரணமான அறியாமையை அழிக்க முடியாது. இந்த அறியாமையை எப்பொழுது அழிக்கிறோமோ, அப்பொழுது பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்தும் விடுதலை பெறுகிறோம். ஞான நிஷ்டையில் இருக்கும் ஒரு குரு தன் சீடனுக்கு, இறைவனுடன் ஐக்கியமாகும் வழிகாட்டி, பரமானந்தத்தை உணர்த்துவார்.

 

***********