இந்த முறையும் நாம் பார்க்கப் போவது, எங்கள் வங்கியில் மண்டலங்களுக்கு இடையிலான நாடகப் போட்டியில் சூரத் குழுவினர் அரங்கேற்றிய ஒரு மிக மிக வித்தியாசமான (கதை, கதைக்களம் கொண்ட) நாடகம்.
ஒரு கிராமத்தில் திருவிழா நடக்கப் போகிறது. ஊரே கோலாகலமாக இருக்கிறது. ஒருபக்கம் உயர் வகுப்பினர் ஏற்பாடுகள் செய்கின்றனர். மறுபக்கம் சாதாரண மக்கள் அவர்களுடைய பங்கு வேலையை முடித்து விட்டு உட்கார்ந்து இருக்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு இருக்கின்றனர். ஒரு கிழவன் மட்டும் மிகவும் பயபக்தியோடு வேண்டிக் கொண்டே இருக்கிறான். ஒவ்வொருவரிடமும் “இந்த முறை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். கிடைக்கும் அல்லவா?” என்று கேட்கிறான்.
அந்த கிராமத்தில் ஒரு மிக மிக வித்தியாசமான வழக்கம் உண்டு. வருடா வருடம், கோவில் திருவிழாவில் கிராமத்தில், சேரிப் பகுதியில் வாழும் மனிதர்களில் ஒருவரின் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்து எடுத்து அவருக்கு முதல் மரியாதை வழங்கப்படும். முதல் மரியாதை என்றால் சாதாரணம் இல்லை. அவருக்கு அபிஷேகம் செய்வித்து, பூணூல் அணிய வைத்து, பட்டம் கட்டி எல்லா மரியாதையும் செய்யப்படும். ஊரில் உள்ள எல்லோரும் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். அவர்தான் அந்த விழா முடியும்வரை தலைவர் போல.
அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் எதிர் பார்த்து, எதிர் பார்த்து அந்தக் கிழவன் மிகவும் சோர்வாகி விட்டார். அந்த ஆசை அந்த கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் உண்டு.
அன்றும் எல்லார் பெயரும் எழுதிப் போட்ட ஒரு பாத்திரம் எடுத்து வரப் படுகிறது. கோவில் பூஜை அதிகாரி வந்து அந்த பாத்திரத்திலிருந்து ஒரு சுருட்டி வைக்கப் பட்டிருந்த காகிதத்தை எடுக்கிறார். எல்லோரும் தங்கள் பெயர் வரவேண்டும் என்று கை கும்பிட்டு வேண்டிக் கொள்கிறார்கள்.
அந்தக் கிழவனின் பெயர் எடுக்கப்படுகிறது. அளவுகடந்த சந்தோஷம். கண் கலக்குகிறார். எல்லோரும் காலில் விடுகின்றனர். சிலருக்கும் பொறாமை, தங்கள் பெயர் வரவில்லை என்று.
எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன. அவனுக்கு விஷேச அபிஷேகம். பூணூல், மாலை எல்லாம் அணிவித்து, பட்டுத்துணியால் தலையில் பட்டம் கட்டி…. அவனுக்கு பெருமையாகவும், கொஞ்சம் லஜ்ஜையாகவும் இருக்கிறது. மேள வாத்தியம், இசைக் கருவிகளின் சப்தம்… விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்வாமி ஊர்வலம் முடிந்து ஒரு இடத்தில் வைத்து அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. இன்னும் 30 நிமிடத்தில் எல்லாம் முடியப் போகிறது. எல்லோருக்கும், விபூதி மற்றும்.. பிரசாதங்கள் வழங்கப் படுகின்றன… அந்தக் கிழவன் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான். மெல்ல பக்கத்துத் தூணில் சரிகிறான் இறந்து போய்விடுகிறான். அந்த களேபரத்தில் சிறிது நேரம் கழித்துத்தான் அதை அவனுடைய மகன் பார்க்கிறான். “அப்பா” என்று தாங்கி பரிசோதித்து மற்றவர்களிடம் பெரிய அழுகையோடு சொல்கிறான். எல்லோரும் பார்த்துவிட்டு ஆறுதல் சொல்லிவிட்டு , கிளம்பப் போகிறார்கள். அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதைப் பற்றி பேசுகிறான். அவனுடைய ஆட்கள்..”அவன் உயர் ஜாதியாக அங்கீகரிக்கப்பட்ட போது இறந்ததால் அந்த சம்பிரதாயப்படிதான் செய்ய வேண்டும். அவர்கள்தான் செய்ய வேண்டும். நாங்கள் செய்யக் கூடாது, செய்யவும் மாட்டோம்” என்று சொல்கிறார்கள்.
அவன் உயர்ந்தவர்களிடம் கேட்கிறான். அவர்கள் “அவனுக்கு அந்த பட்டம் கொடுக்கும் பட்டது சில மணி நேரத்துக்குத்தான், அந்த நேரம் முடிந்து விட்டது. நீ உங்கள் முறைப்படியே உங்கள் ஆட்களை வைத்துக் கொண்டு செய்ய. நாங்கள் கிளம்புகிறோம் ” என்று சொல்லிக் கிளம்புகிறார்கள்.
இரு குழுவுக்கும் இடையில் மாற்றி கண்ணீரோடு கதறியபடி கெஞ்சுவான். அந்த இடத்தில் இசை அபாரம். அந்த இரு குழுக்களும் இவனையும், அந்த பிணத்தையும் தனியே விட்டு வி்ட்டு போய்விடுவார்கள். வேறு உறவினர்களே இல்லாத அவனும் அந்த உடலும் மட்டும் இருக்கும் அவனுடைய கதறலோடு மெல்ல மெல்ல விளக்கு அணையும். கை தட்டலால் அரங்கு நிறைந்தது.
அவன் மண் வெட்டியால் பள்ளம் வெட்டுவது போல நிழலில் காட்டுவார்கள். வெள்ளை துணி போட்டு பின்னால் விளக்கு போட்டு, நடுவில் அவன் வெட்டுவது நிழலாகத் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிழல் பெரிதாகும். பின் விளக்கு அணைந்து இருட்டு. ஸ்க்ரீன் டௌவுன்.
பார்த்து முடித்து பின்னும் மனம் கனத்தது.
