பாகம் : 1
கெய்ரோவில் ஒரு மலைக்கோட்டை


பட்டத்துராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்..
சிவந்தமண் திரைப்படத்தில் துள்ளும் இசை கொண்ட இப்பாடல், பள்ளிப்பருவத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தது. பாடலுக்கான நடன அரங்கத்தின் பின்னணியில் இருந்த பிரம்மாண்டமான பிரமிட்களும், ஸ்பிங்க்ஸ் சிலையும். நடிகர் திலகத்தின் முகஅசைவுகளையும், காஞ்சனா மீது பாயும் சாட்டையையும் கடந்து என் கவனத்தை ஈர்த்தது.
அதைத் கவனிக்க விடாமல், கூட வந்த பெரியவர்கள் எத்தனை சாட்டை அடி என்று எண்ணிக்கையில் திசைத் திருப்பியது, இன்னும் நினைவில் உள்ளது.
ஆக, சிறிய வயது முதலே பிரமிடுகளின் மீது ஒரு தாக்கம் இருந்தது. அதற்குள் என்னதான் இருக்கும்?
பண்டைய உலகத்திலிருந்து இன்றுவரை உலக அதிசயங்களை எப்படி வரிசைப் படுத்தினாலும் தவறாமல் அதில் நுழைந்து கொள்ளும் பிரம்மாண்டமான பிரமிடுகள் எப்பொழுது என்னை பார்க்க வரப் போகிறாய்? என்று அழைத்தபடி இருந்தன.
எகிப்திற்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா ஏற்பாட்டாளர் வழங்கிய வழவழ கையேட்டில், எகிப்து சரித்திரத்தில் இடம் பெற்ற, பல நகரங்களின் பெயர்கள் இருந்தன. நண்பர்களிடம் கலந்தாலோசித்த போது அவர்களும், மற்றும் முந்தைய சுற்றுலாக்களில் எங்களுடன் பயணம் செய்த சில தம்பதிகளும் சேர்ந்து கொள்ள சம்மதித்தார்கள்.
பிறகென்ன? பயணம்தான்.
எட்டு இரவுகள், ஒன்பது பகல்கள் கொண்ட எகிப்து நாட்டு சுற்றுலாக்காக விடியற்காலை சென்னை விமான நிலையத்தில் கூடிய பொழுதே அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி கொப்பளித்தது.
சென்னையிலிருந்து எண்ணெய் நகரமான குவைத் வழியே பயணித்து, எகிப்து தலைநகரமான கெய்ரோ வந்தடைந்தோம்.
நாள் -1
கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள எகிப்தின் பண்டைக்காலப் பிரம்மாண்டமான ஓவியங்களைக் கண்டதுமே பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்கத் தயாராகி விட்டோம். தற்காலிகக் குடியேற்ற சம்பிரதாயங்களை முடித்து, உடைமைகளை வெளியே எடுக்கக் காத்திருந்தபோது,
ஒரு வயதான எகிப்தியர், என்னைப் பார்த்து “ஹிந்தி?” என்று வினவினார்.
“ஆம், இந்தியாவில் இருந்து உங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறோம்” என்றேன். பொதுவாக இந்தியர்களை ஹிந்தி என்றே அழைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில், “You, We, Same, Same” என்று கைக் குலுக்கினார்.
“நம் இரண்டு நாடுகளிலுமே பண்டைய நாகரீகத்தின் சான்றுகளுக்கான எச்சங்கள் உள்ளன. இரண்டு நாடுகளும் உலக அதிசயங்களை வைத்து இருக்கிறோம். அதனால்தான் நாம் இருவரும் ஒன்றே என்று சொன்னேன்” என்றார் புன்சிரிப்புடன்..
உடைமைகள் வரத் தாமதமானதால், தொடர்ந்தார்;
“எனக்கு இந்தியாவில் மேலும் இரண்டு விஷயங்களைப் பிடிக்கும், ஒரு காலத்தில் நாம் இருவரும் NAM இல் இருந்தோம் (Non Aligned Movement) அப்போதிருந்த அதிபர் நாசர், இந்தியாவின் சிறந்த நண்பராக இருந்தார். அவர் இறந்த பொழுது, இந்தியாவில் விடுமுறை அறிவித்ததாகப் படித்திருக்கிறேன்”
“ஆம், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நாசர் மறைவுக்கு லீவு விட்டார்கள்”
“ஓ.. எங்கெல்லாம் போகப் போகிறீர்கள்?”
பயணத்திட்டத்தைக் காண்பித்தேன்.
“பிரமாதமாக இருக்கிறது, எகிப்து உங்களை அன்போடு வரவேற்கிறது!” என்று தலைகுனிந்து வணக்கம் செய்தார்.
எங்களை வரவேற்க பதாகையுடன் டூர் ஆப்பரேட்டர் அமுன், வெளியே காத்துக் கொண்டிருந்தார். தயாராக இருந்த குளிர்சாதன பேருந்தில் ஏறினோம்.
“நேராக ஹோட்டலுக்குப் போய் சூடாகக் குளித்துவிட்டு.. “என்று பக்கத்து சீட் நண்பர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, கைடு அமுன் பேருந்தின் முன் இருக்கையிலிருந்து எழுந்தார். செக்கச்செவேர் என அமுல் பேபி மாதிரி இருந்தார். ஆங்கில காஃபியில், அரபி டிகாஷன் கலந்த மாதிரி இருந்தது அவருடைய பேச்சு.
“பொதுவாக இங்குள்ள விடுதிகளில் மதியம் 3:00 மணிக்குத்தான் செக்-இன் துவங்கும். எனவே, நாம் உடனடியாகச் சுற்றுலாவைத் துவக்குகிறோம். கெய்ரோவை ஒர் அலசு அலசிவிட்டு, மாலை உங்களை அறையில் கொண்டுபோய் விடுகிறேன். முதலில் நாம் பார்க்க இருப்பது கெய்ரோ சிட்டாடல்” என்றார்
கெய்ரோ சிட்டாடல்
கெய்ரோவின் மத்திய பகுதியில் முகட்டம் மலைக்கருகில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளதுதான் இந்தக் கோட்டை. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சலாவுதீன் என்ற மன்னரால் கட்டப்பட்ட இது, எகிப்தின் அதிகார மையமாகப் பல நூற்றாண்டுகள் இருந்து வந்திருக்கிறது.
பிரம்மாண்டமான கோபுரங்கள், குவிமாடங்கள், ராணுவ அருங்காட்சியகம், போலீஸ் அருங்காட்சியகம் எனப் பலவற்றைக் கொண்ட வளாகம் இது.
“வாருங்கள் உள்ளே செல்வோம்” என்றார் அமுன்.
1176ஆம் ஆண்டு (CE) இந்தக் கோட்டையைக் கட்ட துவங்கினாலும் 1207ஆம் ஆண்டு சுல்தான் – அல் – கமல் ஆட்சியின்போதுதான் முழு வடிவம் பெற்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை எகிப்தின் சக்தி மையமாகவும், தலைமைப் பீடமாகவும் இந்தக் கோட்டை இருந்துள்ளது.
கட்டிடக்கலையின் பண்டைய எகிப்திய பெருமையைப் பறைசாற்றும் பல நினைவுச் சின்னங்கள் இந்தக் கோட்டையில் உள்ளன.
இங்கு 1848ஆம் ஆண்டு முகமது அலி பாஷா என்கிற மன்னரால் மிகப்பெரிய பொருட்செலவில், கலைநயம் கொண்ட அலபாஸ்டர் மசூதி கட்டப்பட்டது. பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு. துருக்கி கட்டிடக்கலை பாணியில் பளிங்குப் பலகைகளால் இழைக்கப்பட்ட, இந்த மசூதி எகிப்து நாட்டிலேயே மிக உயரமான (84 மீட்டர்) இரண்டு மினார்கள் கொண்டது.
எகிப்திய வெயிலுக்கு இந்த இடம் குளிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு தூணும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்தது குறிப்பாக தரையில் அமர்ந்து குவிமாடத்தைப் பார்க்கும் பொழுது துருக்கி கட்டடக்கலையின் பிரம்மாண்டம் புரிந்தது.
இங்கு சலவைக் கற்களால் செதுக்கப்பட்ட அலங்காரச் சிற்பங்கள், மயில்கள், பறவைகள், மலர்கள் என்று ஒவ்வொரு தூணிலும், வளைவுகளிலும், கதவுகளிலும் சிறப்பான வேலைப்பாடுகள் காணப்பட்டன.
இந்தக் கட்டிடக் கலையின் அழகைக் கண்டு வியந்த அப்போதைய பிரஞ்சு ஆட்சியாளர் லூயி பிலிப், ஒரு தாமிர மணிக்கூண்டைப் பரிசாக அளித்தார். அதை இங்கு காணலாம். இதற்கு பதில் பரிசாக எகிப்திய மன்னர் முகமது அலி பாஷா அளித்த ஸ்தூபியை பாரிஸ் நகரின், பிளேஸ்-டி-லா கன்கார்டு சதுக்கத்தில் இன்றும் காணலாம்.
சிட்டாடல் கோட்டையிலுள்ள 18 கோபுரங்கள் பல அடுக்குகளுடன் பிரம்மாண்டமாக இருந்தன. சுற்றுச் சுவரிலிருந்த சிம்மங்கள், நம்மூர் நந்திகளை நினைவுபடுத்தின. கோட்டையை நோக்கி எல்லை மீறி வரும் பகைவர்கள் மீது அம்புகள் எய்தும் வகையில் துளை போன்ற ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோட்டை எகிப்த்தின் இராணுவ மயமாக இருந்திருக்கிறது.
மலை மீதிருக்கும் இந்தக் கோட்டையிலிருந்து பார்த்தால், பழமை வாய்ந்த கெய்ரோ நகரம் கீழே கொட்டிக் கிடக்கும் அழகிய காட்சியைக் காணலாம். வானிலை தெளிவாக இருந்தால் கிசா பிரமீடுகள் இங்கிருந்தே தெரியும் என்றார் டூர் கைடு அமுன்.
கெய்ரோவின் மத்திய ஆட்சி பீடமாகயிருந்த இக்கோட்டை அரசர் ‘கிடைவ் இஸ்மாயில்’ காலத்தில் அபதின் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.
கெய்ரோவில் நிறைய இந்திய உணவகங்கள் உள்ளன. மதிய உணவை முடித்துப் பேருந்தில் ஏறியபோது,
“பண்டைய அதிசயங்களில் மறைந்த ஒன்றான பாபிலோனின் தொங்கும் தோட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்தானே?. அது போல தொங்கும் தேவாலயத்தைப் பார்க்கலாம் வாருங்கள்” என்றார் கைடு அமுன்.
எப்பொழுதும் புன்சிரிப்பு அவரின் ட்ரேட்மார்க். வெகு சீக்கிரமே எங்களுடன் நெருக்கமாகிவிட்டார்.
செயிண்ட் வர்ஜின் மேரி சர்ச் :
எகிப்து நாட்டின் மிகப் பழமையான, 690 (பொ.ஆ) இல் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த பசிலிக்கா மிகவும் அழகானது. இங்குள்ள இரட்டை தூண்கள் இந்தத் தேவாலயத்திற்கு ஓர் அடையாளமாக காட்சியளிக்கின்றன. ஜீசஸ், மேரி, இறைத்தூதர்களின் ஓவியங்கள் என கத்தோலிக்க நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கிட்டத்தட்ட 110 ஓவியங்கள் இங்குள்ளன. அவற்றில் சில எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
‘உன் நம்பிக்கை உறுதியாக இருந்தால் மலையையும் நகர்த்தலாம்’ என்கிற பைபிளின் வரிகளை நிரூபித்துக் காட்டுமாறு, தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்று 976 ஆம் ஆண்டில் காப்டிக் போப் ஆக இருந்த ஆபிரகாம் அவர்கள்,
அருகில் தெரியும் மலையை நகர்த்திக் காண்பித்தார் – என்கிற செய்தி இங்கு உள்ளது.
“இதை ஏன் ‘ஹாங்கிங் சர்ச்’ என்று அழைக்கிறீர்கள்? பார்த்தால் அப்படி ஒன்றும் தொங்கிக் கொண்டு இல்லையே?” என்று எங்கள் டூரில் வந்த சுவராசியமான நபரான, வெங்கட் மாமா கேள்வியெழுப்பினார்.
“இந்த சர்ச்சின் நுழைவாயிலைக் கவனித்தீர்களா? அதை அடைய 29 படிகள் ஏறி வரவேண்டும். பண்டைய ரோமானிய ஆட்சியின் பொழுது கட்டப்பட்ட பாபிலோன் கோட்டையின் இடிபாடுகளின் மீது இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான் ‘ஹாங்கிங் சர்ச்’ என்று பெயர் வந்தது” என்றார் அமுன்.
எங்கள் பேருந்து, கான்-அல்-காலில் பஜார் வழியாக செல்லும்பொழுது, வாகனத்தை நிறுத்தி, “யாருக்கெல்லாம் அரேபியன் காஃபி குடிக்க விருப்பமோ, இறங்கலாம்” என்றார் அமுன்.
கான்-அல்-காலில் பஜார்:
கான் அல் காலில் பஜார் பழைய கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள முக்கியமான மார்க்கெட். கெய்ரோ கைவினைப் பொருட்கள் வாங்குவதற்கு முக்கியமான இடம், நாங்கள் டூர் ஆரம்பத்தில் இருந்தாலும், பின்னால் நேரம் கிடைக்காது என்று கருதி சில நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டோம்.
புராதனப் பொருட்கள், அலங்கார கவரிங் நகைகள் வாங்க சிறந்த இடம். நம்ம ஊர்போல நிறைய பேரம் பேச வேண்டும். கூடவே, பாதுகாப்பிலும் கவனம் தேவை.
இங்கு எகிப்திய ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் ஏராளம். ‘கவ்வா’ என்னும் கசப்பு காபியை, மிகச் சிறிய பீங்கான் கிண்ணத்தில் தருகிறார்கள். கிட்டத்தட்ட டிகாஷன் போல உள்ளது. அதை ஒரு ஸிப் அருந்திவிட்டு, கூடவே கொடுக்கப்படும் இனிப்பான பேரிச்சம் பழத்தைச் சுவைக்கவேண்டும். நன்றாகவே இருக்கிறது. அரபி காப்பி குடிக்க EL FISHAWY CAFÉ சிறந்த இடம்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து செக்-இன் செய்தோம்.
“எல்லோரும் உங்களைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ரிசப்ஷனில் வந்து கூடுங்கள். நாம் இன்றே கிசா பிரமீடுகள் இருக்கும் இடத்திற்குச் செல்ல போகிறோம்” என்றார் அமுன்.
மாலை ஆகிவிட்டது, போவதற்குள் இருட்டிவிடுமே? இருட்டில் என்ன தெரியும்? என்று குழுவில் ஒருவர் குரல் கொடுக்க,
“உங்கள் கவலை புரிகிறது. நாளை மறுநாள் காலை மீண்டும் அங்கு போக போகிறோம். ஆனால் இப்பொழுது அங்கு பார்க்கப் போவது சவுண்ட் & லைட் ஷோ. யாரெல்லாம் வரப் போகிறீர்கள்? “
“எல்லோரும்” என்கிற குரல் ஒருங்கே ஒலித்தது.
எகிப்திய பழமொழி :
கேள்விப் பட்டவரை அல்ல, அனுபவித்தவரைக் கேளுங்கள்
(தொடரும்)
