
இந்துமதியால்தான் அந்த `வித்யாலயா’ பள்ளிக்கு நல்லபெயர். எனக்கும் அந்த ஆசிரியை மீது உயர்ந்த மரியாதை உண்டு. பிள்ளைகளின் மேல் அவர் காட்டுகிற அக்கறை போல் அம்மாக்கள் கூடக் காட்டுவதில்லை. என்னைப் பொறுத்தவரை, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும்,ஆரம்பநிலைப் பள்ளி ஆசிரியர்களே மேலானவர்கள். எதுவுமறியாத பசும்நாற்றுகளை நட்டு,நல்லது-கெட்டதுகளை மனதில் பதியனிட்டு அக்கறையோடு வளர்க்கிற ஆரம்பநிலைப் பள்ளி ஆசிரியர்களே பாராட்டத் தக்கவர்கள்.
எங்களின் ஒரேமகள் சக்தியின் அறிவு வளர்ச்சியில் இந்துமதிக்குத் தனிப்பங்கு உண்டு. மாறுபடுகிற பிள்ளைகளின் திறமைகளை இனம்கண்டு அதற்கேற்ப ஊட்டுகிற திறமைசாலி. சக்தி எல்லா பாடங்களிலும் முதல்வி என்பதோடு,பாட்டு-பேச்சு-மாறுவேடம் என்று பள்ளியில் நடக்கும் போட்டிகள் அனைத்திலும் முதல்வியாக வருவதற்கு இந்துமதிதான் அடிப்படைக் காரணம். சக்திக்குப் பிறவியிலேயே கிரகிக்கும் சக்தி அதிகம். அதை நானே என் மனைவி சுபாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்துமதியும் அதைக் கண்டுகொண்டு பயிற்றுவித்தாள்..
`பிரபஞ்சத்திறமைசாலி’-என்றொரு போட்டியை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மாநில அளவில் அறிவித்தது. முதல்வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு, ஆறாம்வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு என்று இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப் பட்டன.
அந்தப் போட்டிக்காக, பள்ளி நேரம் போக , சக்தியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தனியே பயிற்சி கொடுத்தது இந்துமதிதான். ஒருவார கால அவகாசத்தில், மாநில அளவில் நடந்த போட்டியில் சக்திக்கு இரண்டாம்பரிசு கிடைத்தது. பரிசுத்தொகை ஐந்தாயிரம் ரூபாயுடன், வெற்றிக்கோப்பை-மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை வாணிமஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பிதழும் வந்திருந்தது.
சக்திக்கு இந்தப் பரிசு கிடைப்பதற்கு முற்ற-முழுக்காரணம் இந்துமதிதான் என்பதால் நன்றி சொல்லும் நோக்கில் நான் அலுவலக இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு வந்தேன். சக்திக்கு மதிய உணவு கேரியரை கொடுத்துவிட்டு அப்படியே இந்துமதியைச் சந்திப்பதாய்த் திட்டம்.
“அப்பா!”-என்று ஓடிவந்த சக்தியிடம் கேரியரைக் கொடுத்தேன்-“சக்தி, இந்துமதி டீச்சர் எங்கடா இருப்பாங்க?”
`ஸ்டாஃப்-ரூம்ல இருக்காங்கப்பா… நீங்க பார்க்க வருவீங்கன்னு அவங்கள்ட்ட சொல்லிட்டேன்!”
“சரிடா, நீ போய்ச் சாப்பிடு… நான் அவங்களைப் பார்த்திட்டு ஆபீஸ் போறேன்.”
“சரிப்பா.”-சக்தி ஓடி மறைந்தாள். அவள் போன மறுநிமிடம் இந்துமதி வந்து நின்று,“வணக்கம் சார்.”என்றார்.
“வணக்கம் டீச்சர்”’
“உங்களுக்குமா நான் டீச்சர்?”-அழகாய்ச் சிரித்தாள்..
“இல்ல மேடம்….சக்திக்கு மாநில அளவில் பரிசு கிடைக்க நீங்கதான் காரணம்…அதான் உங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!”
“வெறும் நன்றி மட்டும்தானா- இனிப்பெல்லாம் எதுவும் கிடையாதா?”’
“நாளைக்கு வகுப்பில் இருக்கிற பிள்ளைகள் எல்லாருக்கும் கொடுக்கலாம்னு சுபா சொன்னாள்..!”
“இருக்கட்டும், நான் சும்மா விளையாட்டாதான் கேட்டேன் …பரிசளிப்புவிழா வர்ற ஞாயிற்றுக் கிழமை சென்னை வாணி மகாலில் ஏற்பாடு செய்திருக்காங்க சார்!… நீங்கள்ளாம் கார்ல போகப் போறதா சக்தி சொன்னாள்!”
“ஆமாம் மேடம்.”
“உங்கள்ட்ட ஒரு ரிக்வெஸ்ட்… கார்ல இன்னொருத்தர் வர இடம் கிடைக்குமா?”
“யார் மேடம்?”
“நான்தான்…போகும்போது அழைச்சிட்டுப் போனாப் போதும்…வரும்போது நான் பஸ்ஸில் வந்திடுவேன்….!”
“தாராளமா வாங்க மேடம்….எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை… இன்னும் சொல்லப்போனால் நீங்க எங்க கூட வர்றதுல எங்களுக்கு மகிழ்ச்சிதான்.”என்றேன்.
“ரொம்ப நன்றி சார்….ஞாயிற்றுக் கிழமை காலையில் கிளம்பினோம்னா, மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் சென்னைக்குப் போய்டலாம்…ஆறு மணிக்குதான் நிகழ்ச்சி… நான் சென்னையில் என் `ரிலேடிவ்’ வீட்டுல தங்கிக்குவேன்!”
“ஓகே மேடம்… ஞாயிற்றுக் கிழமை காலையில் ஐந்து மணிக்குத் தயாரா இருங்க… நான் உங்க வீட்டுக்கு வந்து அழைச்சிக்குறேன்!”
ஃ ஃ ஃ
(3)
இந்துமதி அழகான பெண்.. ஆனால் தான் அழகென்பதற்காக அலட்டுகிற பெண்ணில்லை. அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறதென்றால் யாரும் நம்பக்கூட மாட்டீர்கள். யோகா செய்து உடலை அத்தனைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்.. ஒருமுறை பாரத்தால் மறுமுறையும் பார்க்கச் சொல்லுகிற தோற்றம்…
சிகப்பு உடம்பு. நெற்றியில் அகண்ட குங்குமப் பொட்டுக்கு இடையே அலைபாயும் முடிக்கற்றை. வகிட்டிலும் சின்ன குங்குமத் தீற்றல். பெரும்பாலும் காட்டன் புடைவைதான். இடை தெரியாமல் நேர்த்தியாய் உடுத்துவாள். புதிதான ஆண்களிடம் பேசினால் முன்றானையை இழுத்து முதுகை மூடிவிடுவாள். சொற்களிலும் பணிவு மாறாது..
இப்படி அழகான இந்துமதியின் கணவன் பசுபதி எல்லாவகையிலும் அவளுக்கு நேர்-மாறானவன். காக்கை நிறம். முன் வழுக்கை. வெற்றிலைக் காவியான பற்கள். அழுக்கு லுங்கி-கசங்கிய சட்டை. இவர்களை எப்படி இணை சேர்த்தார்கள் என்ற மகத்தான கேள்விக்கான விடையையும் என் மனைவி சுபாதான் கண்டுபிடித்துச் சொன்னாள்.
இந்துமதியின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட,தாயார் வடிவாம்பாள் கைக் குழந்தையுடன் பிறந்தவீட்டுக்கு வந்துவிட்டாள். அதன் பிறகு எல்லாமும் அவளுக்குப் பிறந்தவீடுதான் என்றானது. வடிவாம்பாளின் கடைசித் தம்பி பசுபதி,. உறவு விட்டுப் போய்விடக் கூடாதென்று சொந்தங்கள் சேர்ந்து பசுபதியை-இந்துமதிக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள். இருவருக்கும் எந்தவகையிலும் பொருத்தமில்லை என்பது பற்றி அவர்கள் சிறிதும் கவலைப் படவில்லை.
பசுபதிக்குப் படிப்பு ஏறவில்லை.அவனது அப்பாவுக்கு தியேட்டர் ஒன்றில் ஆபரேட்டர் வேலை.அப்பாவுடன் தியேட்டருக்குச் சென்ற பசுபதி அந்தவேலையைக் கற்றுக் கொண்டான். அப்பா இறந்த பிறகு அங்கேயே தானும் ஆபரேட்டர் ஆகிவிட்டான். அவனது சம்பாத்தியம் வெற்றிலை-பாக்கு-புகையிலை, பீடி செலவுக்கே போதுமானதாய் இருந்தது. திருமணம் முடிந்தபின் அவனைத் திருத்திவிடலாம் என்ற இந்துமதியின் நம்பிக்கையில் மண் விழுந்தது.அவள் ஒரு பெண்-மகவை ஈன்றதுதான் மிச்சம்.,கணவனை நம்பிப் பலனில்லையென்று தானே படித்த இந்துமதி பட்டம் பெற்றாள். ஆசிரியருக்கான தகுதித் தேர்விலும் வென்றாள்.
தன் கணவனிடத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், இந்துமதி ஒருநாளும் அதை வெளிக்காட்டுவதில்லை. அவனைப் பற்றி யார் கேட்டாலும், ஒரு புன்னகையைப் பதிலாக்கிவிட்டு அங்கிருந்து அகன்று விடுவாள். விதியை நோவதும் இல்லை!
ஃ ஃ ஃ
(4)
ஞாயிற்றுக் கிழமை திட்டமிட்ட படியே சென்னைக்குப் பயணமானோம். நான் முன் இருக்கையில். சுபா-சக்தி- இந்துமதி மூவரும் பின் இருக்கையில்.
திருச்சியில் காலை டிஃபன் சங்கீதாவில்; இந்துமதியின் யோசனைப் படி. நன்றாகவே இருந்தது. அவளுக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தது. வழி நெடுகிலும் சக்தியிடம் புதிர்கள், விடுகதை, கணக்கு, ஒவ்வொரு விளையாட்டிலும் உலக அளவில் சிறந்த வீரர்கள் யார், சோழர் காலத்தில் சிறந்து விளங்கிய மன்னர்கள் என்று பல செய்திகளைப் பகிர்ந்த படியே வந்தாள்.
“தனது தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஏன் தொடர்ந்து இந்தியாவால் ஜொலிக்கமுடியவில்லை?- கிரிக்கெட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் எப்படி-யாரால் வந்தது?- பண்டைய கோவில்களின் பராமரிப்பு எவ்வளவு முக்கியமானது?- கடல் கடந்து பல வெற்றிகளைக் குவித்த ராசேந்திர சோழனால், ஏன் ராசராசச்சோழன் அளவுக்குப் பெயர் பெற முடியாமல் போனது?- தஞ்சைப் பெருவுடையார் கோவில் அளவுக்கு, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஏன் முக்கியத்துவம் தரப்படுவதில்லை?- தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகள் அளவுக்கு ஏன் தேசியக் கட்சிகளால் வெற்றி காண முடியவில்லை? –இணையம்,கணினி என்ற விஞ்ஞான முன்னேற்றங்களால் தமிழ் இலக்கியங்களுக்குப் பாதிப்பு வந்து விட்டதா?- மலையாளத் திரைப்படங்கள் அளவுக்கு தமிழ் திரைப்படங்களால் ஏன் தேசிய விருதுகள் வாங்க முடிவதில்லை?”’ என்று எல்லா துறைகளையும் அறிந்த இந்துமதி எனக்கு அபூர்வப் பெண்மணியாய்த் தெரிந்தாள். எவ்வளவு செய்திகள்? கூண்டில் கட்டாயமாய்ச் சிறைப்பட்டுப் பின் தற்காலிக விடுதலையடைந்த பச்சைக்கிளியாகவே அவள் என் கண்களில் தோன்றினாள். கிளிச்சோதிடன் பசுபதி இந்நேரம் அங்கே பீடிப் புகையை ஊதிக் கொண்டிருப்பான்! புழுதியில் இந்த வீணையை எறிந்த உறவுக்காரர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்!
சென்னை வந்ததே தெரியவில்லை. பயணக்களைப்பும் தோற்றவில்லை. மதியம் மணி இரண்டாகி இருந்தது. இதற்குள் சுபா இரண்டு முறை தூங்கி விழித்துக் கொட்டாவி விட்டாள்.
“சார்,ஜெமினி மேம்பாலம் தாண்டி வண்டியை இடதுபக்கமா ஓரம்கட்டச் சொல்லுங்க… அங்கதான் என் ஃபிரண்டு வெயிட் பண்ணுவாரு… ஈவ்னிங் அஞ்சுமணிக்கெல்லாம் வாணி மகாலுக்கு வந்திடுங்க!”-என்றாள் இந்துமதி.
“நாகராஜ், மேடம் சொன்னது காதில் விழுந்துச்சா?”- நான் டிரைவரைக் கேட்டேன்.
“சரிங்க சார்!”- என்ற நாகராஜ் காரை ஓரமாக நிறுத்தினார்.
(5) இந்துமதி சிறிய சூட்கேசுடன் இறங்கினாள்.-“வரேன் சார்….வரேன் சுபா!” என்று எங்களிடம் விடைபெற்ற இந்துமதி, தயாராய் நின்ற ஒரு புல்லட்டின் பில்லியனில் ஏறவும் அது வேகமெடுத்தது. அதை ஓட்டியவனை எனக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது!
கார், விருகம்பாக்கத்திலிருந்த எனது அக்கா வீட்டுக்கு விரைந்தது.
ஃ ஃ ஃ
அன்றுமாலை வாணிமகாலுக்கு இந்துமதி சுடிதார் அணிந்து வந்திருந்தாள். இன்னும் அழகாய்-இளமையாய்த் தோன்றினாள்.அவளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் பசுபதியின் நினைவும் கூடவந்து என்னைத் தொல்லை செய்தது.
“நீங்க இந்துமதி மேடத்தோட தங்கச்சியா?”–நான் விளையாட்டாய்க் கேட்டேன். அவள் அழகாய்ச் சிரித்தாள். சுபா என் பின்னால் இடித்தாள்.
“பரிசு வாங்கின பிள்ளைகளுக்கெல்லாம் முன்னால் தனியே இருக்கைகள் ஒதுக்கி இருக்காங்க சார்…எங்க ஸ்கூலுக்கும் ஒரு டிராஃபி ஒண்ணு உண்டு… அதனால நான் சக்தியை என் கூடவே உட்கார வச்சிக்குறேன்!”-இந்துமதி, சக்தியுடன் நகர்ந்தாள்.
உடனே சுபா என்னிடம்,“வாயைத் துடைங்க… ஜொள்ளு வடியுது!”-என்றாள்.
“அழகு எங்கே இருந்தாலும் ரசிக்கணும்டி!”
நாங்கள் இடம் தேடி உட்கார்ந்தோம்.
விழாவுக்கு கல்வி அமைச்சரும், மார்கெட் இல்லாத சினிமா நாயகன் ஒருவனும் அழைக்கப் பட்டிருந்தார்கள்.
அவர்கள் பேசி முடித்ததும், பரிசளிப்பு. கல்வி அமைச்சர் ஒரு சிறிய ஷீல்டு-சான்றிதழுடன் ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் பரிசு பெற்ற பிள்ளைகளுக்கு வழங்கினார். அடுத்து தேசியகீதம் ஒலிக்க விழா முடிந்துவிட்டது.
சக்தியை அழைத்துவந்து எங்களிடம் ஒப்படைத்த இந்துமதி, “சரி சார், நான் கிளம்புறேன்… நைட்டே ஊருக்குக் கிளம்புறேன்… ரதிமீனாவுல டிக்கெட் போட்ருக்கேன்!” என்றாள்.
“ஓகே மேடம், நீங்க கிளம்புங்க… நாங்க எங்க அக்கா வீட்டுல தங்கிட்டு நாளைக்கு இரவு கிளம்பிடுவோம்!”- என்றேன்.
அடுத்த வினாடியே மின்னல் மறைந்துவிட்டது!
ஃ ஃ ஃ
(6) அதன் பிறகு நான் இந்துமதியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அலுவலக வேலையில் ஆழ்ந்து போனேன். சக்தியின் படிப்பும் அந்தப்பள்ளியில் முடிந்துவிட்டது.
நானும்-சுபாவும் சக்தியை `ப்ளஸ்ஒன்று’ நாகர்கோவிலில் சேர்க்கலாம் என்று முடிவு செய்தோம். பிராஸ்பெக்டஸ் வாங்க அன்று நான் நாகர்கோவில் ஆருத்ரா பள்ளிக்கு வந்திருந்தேன். வாங்கிக்கொண்டு திரும்பிய நான்,இந்துமதி அந்தப் பள்ளிக்குள்ளிருந்து வருவதைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியம். சென்னையில் பார்த்த புல்லட்-மனிதன் அவளுடன் வந்திருந்தான். பேசலாமா-வேண்டாமா என்று நான் தயங்கி நின்றவேளை இந்துமதியே என்னிடம் வந்தாள்.
“என்ன சார், நல்லா இருக்கீங்களா?”
“இருக்கேன் மேடம்… நீங்க இந்த ஸ்கூல்ல எப்படி?”
“இந்த வருசத்துலேர்ந்து இந்த ஸ்கூல்ல நான் ஜாய்ன் பண்றேன் சார்.”
“நல்லதும்மா, நானும் சக்தியை இங்கே சேர்க்கலாம்னுதான் வந்தேன்!”
“உங்களை நெனச்சா எனக்குச் சந்தோசமா இருக்கு சார்… உங்க மகளோட எதிர்காலம் நல்லா அமையணும்னு எப்படியெல்லாம் கஷ்டப் படுறீங்க…. ஆனா நான் நல்லா இருக்கணும்னு என் உறவுகள் யாருமே யோசிக்கல சார்!”- என்ற இந்துமதி குரல் தழு-தழுக்கப் பேச்சை நிறுத்தினாள். கண்களில் கண்ணீர்.
பக்கத்தில் நின்ற புல்லட் மனிதன் அவளைத் தோளில் தட்டி ஆற்றுப் படுத்தினான்.
இந்துமதி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்-“சார், இவர் பேரு சத்யா….எங்க அப்பாவின் நண்பரோட பிள்ளை…டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றார்…அப்பவே நாங்க காதலிச்சோம்.. உறவுகள்தான் எங்களைப் பிரிச்சிட்டாங்க…. ஆனா இப்போ நான் `டைவோர்ஸ்’ அப்ளை பண்ணிட்டு இவர்கூட வந்திட்டேன்…. இனிமேல் இவர் கூடத்தான் என் வாழ்க்கைனு நான் முடிவு பண்ணிட்டேன்…!”
“நல்ல முடிவுதாம்மா…உங்க துணிச்சலான முடிவுக்கு என் மனப்பூர்வமான . வாழ்த்துகள்…!”என்றேன். -“என் மகள் சக்தியும் இங்கதான் வருவா, பார்த்துக்கங்க!”
“கண்டிப்பா சார்!”-என்ற இந்துமதி சிரித்தாள். அதே அழகான சிரிப்பு.
ஃ ஃ ஃ
