
எனக்கு இப்போது 65 வயது ஆகிறது. இப்போதே “போதுமடா சாமி இந்த வாழ்க்கை“ என்று இருக்கிறது.
கதை புத்தகங்கள் படிக்க புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்கள் படிக்கும் முன் தூங்கி விடுகிறேன். டிவி நாடகங்கள் பார்க்க பிடிக்கவில்லை.
சீசனில் பாட்டு கச்சேரிகள் போவேன். இப்போதெல்லாம் அதிலும் மனம் லயிக்க மாட்டேன் என்கிறது. குறுக்கே நூறு குறுக்கு யோசனைகள் வருகிறது.
ஓ இவர்கள் 2 மணி நேரம் இடை விடாது பாடுகிறார்களே எப்படி அவுங்களால் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்து ஆடியன்ஸ் ரசனைக்கு ஏற்ப பாட முடிகிறது ?
ஆடியன்ஸ் எல்லோரும் கூட எழுந்து போகாமல் உட்கார்ந்து ரசிக்கிறார்கள். இதுவும் எப்படி சாத்தியம் ஆகிறது? கச்சேரியில் பாடுபவர் ஆடியன்ஸ் ஐ கட்டிப்போட்டு உட்கார வைத்து இருக்கிறாரே!!
ஓ இது தான் குரல் வசீகரமோ !!
அடுத்த வாரம் நாங்கள் சினிபாவிற்லகு போனோம். மறுபடியும் எனக்கு மனதில் ஏகப்பட்ட கேள்விகள். எப்படி கண் கொட்டாமல் அனைவரும் 3 மணி நேரம் சினிமா பார்க்கிறார்கள் ?
ஓ இந்த ஹீரோ ஹீரோயின் பாடல் ஆடல், அவர்களின் முக வசீகரம் தான் போலும்.
அடுத்த நாள் கோயிலுக்கு சென்றேன். இப்போதெல்லாம் சாமியிடம் வேண்டிக்கொள்ள கூட மனம் இல்லை. இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.
அங்கு ப்ரபலமான ஒருவர் கதா காலக்ஷேபம் செய்துகொண்டிருந்தார். நிறைய கூட்டம். மறுபடியும் என் மனதில் அதே கேள்விகள்.
‘எல்லோரும் எப்படி கட்டுப்பட்டு உட்கார்ந்து கேட்கிறார்கள் ?
ஓ இது தான் பேச்சு வசீகரமோ ?
சரி சரி என்று நானே சுதாகரித்துக்கொண்டு வீட்டிற்கு போக நடந்தேன். என் மனம் கட்டுப்படவில்லை. மேலும் கேள்விகள்.
கடவுளே! இது போன்று வசீகரம் வரம் நான் ஒன்றும் பெற்று இருக்கவில்லையே ?!
நான் ஏதாவது பேசினால் யாரும் என் வீட்டில் கேட்பது இல்லை. நான் எனது அபிப்ராயத்தை சொன்னால் என் பிள்ளை
“அம்மா cool cool Be calm, எங்களை பற்றி கவலை படாதீர்கள் எங்களுக்கும் வயசு ஆயிடுத்து so எங்கள் பிர்ச்சனைகளை நாங்களே கவனித்துக்கொள்கிறோம் நீங்கள் தலையிடாதீர்கள். நீங்கள் சொல்லுவது எல்லாம் அந்த கால கணிப்புகள். இப்போது இது எல்லாம் ஒன்றும் நடை முறைக்கு ஒப்பாது. இப்போ காலமே மாறிடுத்து.”
என்று சொல்லி என்னை அடக்குகிறார்கள்.
வீட்டிற்கு வந்து பால் காய்சி குடித்து விட்டு,
நான் என் அறைக்கு சென்று படுக்க போனால், தூக்கம் வருவது இல்லை. மறுபடியும் பல கேள்விகள் என் மனதிற்குள்.
கோவிலில் ராமாயணம் மகாபாரதம் கதை சொல்கிறார்கள் ; அது எல்லாம் பழைய கதை தானே அதை இத்தனை பேர் ஆவலுடன் கேட்கிறார்கள்.? வீட்டில் நான் சொல்லும் ஆலோசனைகள் பழைமை என்கிறார்கள்.
சரி சரி இப்போது எல்லாம் பூனை களுக்கு பால் தரக்கூடாதாம். அதற்கு தனியாக பொறை வாங்கி தருகிறார்கள். செல்ல பிராணி நாய் குட்டிக்கு கூட pedigree தான் வாங்கி தருகிறார்கள்.
காலம் மாறித்தான் போயிடுத்து.
என் பிள்ளைகள் வீட்டில் யாரும் சர்க்கரை சாப்பிடுவது இல்லை. என்னையும் சர்க்கரை சாப்பிடாமல் பழகணும் என்று பல நிபந்தனைகள். சரி எல்லாம் நல்லதுக்கு தானே சொல்கிறார்கள் என்று பெருமை படுவேன்.
இப்போதுதான் புரிகிறது; என் தாத்தா ஏன் மௌன சாமியாராக இருந்தார் என்று. ஆக்கப்பட்டார் ? !! என் பிள்ளை பிராயத்தில் நானும் என் அக்காவும் தாத்தாவிடம் சென்று பல கேள்விகள் கேட்ப்போம். அவர் எதற்கும் பதிலே சொல்லமாட்டார். தாத்தா பெரிய தாடி வைத்துக்கொண்டிருப்பார். நாங்கள் தாடியை சீவி விட்டு பின்னல் போட்டு ரிப்பன் கட்டி அழகு பார்ப்போம். தாத்தா ஒன்றும் சொல்லமாட்டார். பேச ஒன்றும் புதிதாக இல்லை என்பார். மௌனம் சாதிப்பார். எனக்கு அவரது மௌனம் மிக பிரமிப்பாக இருக்கும்.
தாத்தா அந்த காலத்தில் PWD இல் நல்ல வேலையில் இருந்தார். சைக்கிளில் இரண்டு பக்கமும் நிறைய மஞ்சள் பைகளில் நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார். அவருக்கு 9 குழந்தைகள். குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை. சீர் சிறப்பாக பெண்களுக்கு கல்யாணம் கட்டி கொடுத்தாயிற்று. தாத்தாவும் வேலையில் ஓய்வு பெற்றாலும் அருகில் ஒரு சிறிய வேலைக்கு சென்றார்.
நம் வீட்டில் ஒன்று இரண்டு பிள்ளைகள் வளர்க்கவே ஏகப்பட்ட பிர்ச்சனைகள். தாத்தாவின் பெண் பிள்ளைகளின் பிரச்சனைகள் அவரை வெகுவாக தாக்கி உள்ளது. அதனால் தாத்தாவிற்கு அறிவு முதிற்சி வந்ததால் மௌனமாகிவிட்டார். மௌனம் ஒரு தவம் போல்.
எந்த காலத்திலும் தலைமுறை விரிசல்கள் கட்டாயமாக தொடர் கதையாக வருகிறது. அதைத்தான் தாத்தாவும் அனுபவ பட்டுள்ளார் இப்போது நானும் எதிர் கொண்டு இருக்கிறேன் என்று எனக்கு புரிந்தது.
உறக்கம் என்னை ஆட்கொண்டது.
அடுத்த நாள் மாலை அலுவலகத்திலிருந்து வந்த உடன் என் மகன் –
“அம்மா சீக்கிரம் வாருங்கள்” என்றன்.
என்னை இன்று என்ன சொல்லப் போகிறான் என்று பட படத்து போனேன்.
“அம்மா நீங்கள் ரிட்ரீட் (RETREAT )சென்று வாருங்கள். துணைக்கு பெரியம்மாவையும் அழைத்து செல்லுங்கள். நல்ல வாய்ப்பு. உங்களுக்கு நல்ல 10 நாட்கள். அங்கேயே தங்கணும், சத்துள்ள சாத்வீக உண்வு, பழம் எல்லாம் அங்கேயே தருவார்கள். நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். விடிகாலை எழுந்து தியானம் செய்யணும். தியானம் செய்வது உங்களுக்கு பிடித்தது தானே என்ஜாய் ” என்றான்.
என் அக்காவுடன் அரட்டை அடித்து ரொம்ப நாளாச்சு ஜாலியாக போகலாம் என்னறு எண்ணி “சரி போகிறோம் பீஸ் கட்டு ” என்றேன்.
“ பீஸ் ஒன்றும் கிடையாது. அப்புறம் டொனேஷன் தரலாம். அடுத்த வாரம் செல்ல தயாராக இருங்கள்” என்றான்.
அடுத்த நாள்
என் அக்காவிடமிருந்து போன் வந்தது
“என்ன ரிட்ரீட் போக ஏற்பாடு செய்துள்ளான் உன் மகன். நீ தயாரா??
நான் வரலை அம்மா ; என்னால் 10 நாட்கள் பேசாமல் இருக்க முடியாது
ஏய் உன்னால் மட்டும்ம் என்ன 10 நாட்கள் பேசாமல் இருக்க முடியுமா” என்று கேட்டாள்.
எனக்கு தூக்கி வாறி போட்டது.
“என்ன பேசக்கூடாதா??அது எப்படி முடியும்?
நான் உன்னுடன் அரட்டை அடித்து பிறகு தியானமும் பண்ணலாம் என்று தானே நினைத்தேன்,”
“நீ வெப் சைட் போய் பார். விபாசனா மெடிடேசன்!

அங்கு போனவுடன் முதலில் நம் போனை வாங்கி வைத்துக்கொள்வார்கள். 10 நாள் தியான பயிற்சி முடிந்து போகும் போதுதான் தருவார்கள். அங்கே யாரும் யாருடனும் பேசவே கூடாது; கண்ணும் கண்ணும் கூட பார்த்து பேசக் கூடாது. யாரும் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது.”
“தியானம் தியானம் தியானம் மட்டும் தான். நம்மால் 10 நாட்கள் வாட்ஸ்அப் பார்க்காமல், டிவி நாடகம் பார்க்காமல் ….?? முடியுமா?? யோசித்து சொல். நான் வரலை. ஆளை விடு. என்னால் முடியாது, எனக்கு ஜுரம் வந்து விடும். பயமாக இருக்கு.”
என்று போனை வைத்துவிட்டாள் என் அக்கா.
எனக்கும் படபடப்பு ஏற்படுத்தி விட்டாள். நான் பலவாராக யோசித்தேன் கொஞ்சம் பயமாக இருந்தாலும் சவாலாக எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து தனியாகவே செல்ல தயாராகிவிட்டேன். என் மகன் என்னை காரில் அழைதுக்கொண்டு போகும் போது சொன்னான்
“ ஒரு பயமும் இல்லை அம்மா ; தலை வலி, வயத்து வலி அல்லது உணவு போதவில்லை என்றால் அங்கு உதவியாளர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களிடம் சொன்னால் உதவி செய்வார்கள். எப்போ ஆனாலும் நான் வந்து உங்களை திருப்பி அழைத்து செல்கிறேன்.
முதல் இரண்டு நாட்கள் அறிமுகம், தியான பயிற்சி வகுப்பு.
நாம் சுவாசிக்கும் மூச்சு சீராக இருக்க பயிற்சி செய்யணும். சுவாசக்காற்றை உள்ளே இழுத்து சற்று நிறுத்தி மெதுவாக காற்றை வெளியே விட வேண்டும். .அப்போது நம் மூக்கிற்கு கீழே உதடுக்கு மேலே உள்ள மீசை பகுதியில் நம் சுவாச காற்று படுவதை உணர வேண்டும்.
மாலை தியானம் முடியும் போது குரு அவர்கள் பாலி மொழியில் சுலோகம் பாடுகிறார் – அதுவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடல்.
“புத்தம் சரணம் கச்சாமி” என்ற பாடல் வரிகள் –
ஆமாம் புத்த்ர் போதித்த வரிகள். விப்பாசனா தியான பயிற்சி தத்துவங்கள் புத்தர் அளித்த அறிவுறைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால் தியான வகுப்பின் குறிக்கோள் புத்த மதத்தை பரப்பும் நோக்கம் அல்ல.
ஒவ்வொருவரும் அவர்களின் மனதையும் செயல் பாட்டையும் எப்படி பழக்கிக்கொள்ள வேண்டும் ; நல்லது கெட்டது, இன்பம் துன்பம், பிரச்சனை அனைத்தையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் Equanimity என்று சொல்கிறார்கள்.
நம் கை மேல் ஒரு ஈ அல்லது கொசு உட்கார்ந்தால் நாம் அதை உணருகிறோம் பிறகு உதறி தள்ளி விடுவதைப்போல ; நமக்கு பிரச்சனை வந்தால் துவளாமல், நம் உடல், மனம் நலம் கெடாமல் நிதானமாக கையாள வேண்டும்.
மௌனப்பயிற்சி எளிதாகவே இருந்த்தது. மௌனம் என்பது நாம் வாய் பேசாமல் இருத்தல் மட்டும் அல்ல, நம் மனமும் அமைதியாக இருக்க வேண்டும்.
தியானப்பயிற்சியின் போது நன் மனதில் பலப்பல கேள்விகளும், புலம்பல்களும், பல நிகழ்வுகளின் நினைவூட்டல்களும், சஞ்சலங்களும் குறிக்கிடும். அது இயல்பு தான். அதை சுலபமாக அனுசரிக்க வேண்டும்.
பல எதிர்மறை நினைவுகள் வந்த வழியே தானே வெளியேறும் என்று பயிற்சியில் சொல்கிறார்கள். தினமும் காலை மாலை இரு முறை தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நம் மனதிலும் சலசலப்பு இல்லாமல் மௌனம் ஏற்பட பயிற்சி. அந்த புனிதமான மௌனம் சாதிப்பதற்கு பழக்குவதே விப்பாசனா வின் மௌன பயிற்சி முகாமின் நோக்கம்.
10 நாட்கள் பயிற்சி முடிந்த அன்று என் மகன் வந்து என்னை வீட்டிற்கு அழைத்து வந்தான். நான் என் மகன் மருமகள் பேரக்குழந்தைகளுடன் கொண்டாட்டமாக இருந்தேன்.
பிறகு ஒரு நாள் குடும்பத்தில் சின்ன குழப்பம் வந்த்தது. என் காதில் விழாதது போல நான் ஒதுங்கி இருந்தேன். அலுவலகத்திலிருந்த்து ஓய்வு பெற்றது போல மற்றவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் தலை இடாமல் ஓய்வு பெற எண்ணினேன்.
நானாக தலை இடுவது இல்லை.
நான் என் குடும்பம் என்று தலை தாங்கி வாழ்ந்து அனுபவித்து எல்லாம் ஆயிற்று. அடுத்த தலைமுறை தலை எடுத்தாயிற்று. அவர்கள் இக்காலத்திற்கு ஏற்றது போல் வாழட்டும்.
அவர்களுக்கு சமையலில் சந்தேகம் வந்த்தாலும், குழந்த்தை வளர்ப்பில் சந்தேகம் எதுவானாலும் சாட் ஜிபிடி கூகிள் யூ டியூப் என்று பல டெக்னாலஜியை விசாரித்தால் செய்முறை விளக்கம் எல்லாம் தரும்.
என் காலத்தில் இது எதுவும் இல்லை. பிள்ளை பெற்றாள் லேக்யம் எப்படி செய்வது, பூஜை செய்முறை பழக்க வழக்கங்கள் எல்லாம் குடும்ப பெரியவர்களை கேட்டு தான் எதுவும் செய்யணும்.
இப்போது எல்லோருக்கும் தனிமை தேவைப் படுகிறது. யாரும் யாரையும் சார்ந்து இல்லை.
AI உலகம் வந்தாயிற்று.
இனி என் கடமை என்று நினைத்து அறிவுறை என்று நினைத்து மொக்கை போடுவதை முதலில் நிறுத்தினேன்.
“தாமரை இலை மேலே தண்ணீர் போலே ஒட்டி ஒட்டாமல் இரு”.
“ஓ மனமே ஓகே ஓகே- மனமே – நில் நில் நில் = ஓடாதே “ என்று
மன ஓட்டத்தை நிறுத்திக் கொண்டேன்.
பேசுவதை குரைத்துக்கொண்டேன். மௌனம் காத்தேன். மகன் மருமகள் என்னிடம் உண்டான மாற்றத்தை உணர்ந்தார்கள். என் அக்கா என்னை பார்த்து வியந்தாள். உறவினர்களும் என் இயல்பை மாற்றிக்கொண்டதை விமர்சனம் செய்தார்கள். எனக்கு அவர்கள் பேசுவது எல்லாம் பொருள் அற்றதாக தோன்றியது.
ஓ இதுதான் அறிவின் முதிற்சியோ!
மௌன சாமியார் – என் தாத்தா அடிக்கடி நினைவுக்கு வருகிறார். அஞ்ஞானம் தவிர்த்து, ஆசை பாசம் குறைத்து, பற்று அற்று, தன் தேவைகளை குறைத்து, தன் தலையீடுகளை கட்டுப்படுத்தி, மௌனம் என்ற சிறந்த வழியை கையாண்டு வாழ்ந்து காட்டிய தாத்தாவும் எனக்கு வழிகாட்டி ஆனார்.
