
பொதுவாக வாத்தியார்கள், அதாவது கல்லூரி விரிவுரையாளர்கள் என்றாலும் அங்கு முதல் முதலாக படிக்கச்செல்லும் பள்ளி மாணவர்களுக்கு தோன்றுவது முதலில் பயம்தான்.
அது கொஞ்சம், கொஞ்சமாக சில நாட்களில் மறைந்து விடும். அது அந்த ஆசிரியர் அல்லது விரிவுரையாளரை பொறுத்தது. எனக்கு புகுமுக வகுப்பில் கணிதம் எடுக்க வந்த சங்கர சுப்ரமணியம் என்ற ஆசிரியர் வந்த நாளிலேயே தான் ஓர் சிம்ம சொப்பனம் என்று நிரூபித்து விட்டார். அவர் கணக்கை கரும்பலகையில் எழுதி விளக்கம் கொடுக்கும்போது மாணவர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் கவனித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். திடீரென்று திரும்புவார். எவனாவது பேசிக்கொண்டிருந்தாலோ, அல்லது பராக்கு பார்த்துக்கொண்டிருந்தாலோ போதும். ‘ஏய். யு கெட் அப் அண்ட் கெட் அவுட்.’ என்று விடுவார். மறுவார்த்தை பேசமுடியாது. வெளியில் போக வேண்டியதுதான்.
ஆனால், ஒன்று சொல்ல வேண்டும். அவர் கணக்கு எடுக்கும் விதமே வித்யாசமாக இருக்கும். எதோ ஓர் நாடகத்தை அரங்கேற்றுவது போல் அவர் கணக்கின் பல படிவங்களை தாண்டி செல்வது பார்ப்பவருக்கு பிரமிப்பை உண்டாக்கும். என் மாதிரி கணக்கு பாடம் பிடித்தவர்களுக்கு அவர் ஓர் ஆதர்சம்.
‘கால்குலஸ்’ (நுண்கணிதம்) மற்றும் ‘த்ரிகோனமெட்ரி’ (முக்கோணவியல்) இரண்டும் அவர் பாடங்கள். அதில் அவரை போல் தலை சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம். அவர் கையில் எந்த ஓர் புத்தகத்தையும் எடுத்து வரமாட்டார். மாணவர்களை பல புத்தகங்களை தேடி எடுத்துகொண்டு வந்து அவர் மேசை மேல் வைக்கச்சொல்லுவார். எதோ ஓர் புத்தகத்தில் ஓர் பக்கத்தை புரட்டுவர். அதிலிருந்து ஓர் கணக்கை எடுத்து போர்டில் போட தொடங்கிவிடுவார். அடுத்து இன்னோர் புத்தகம். இப்படித்தான்…தங்களால் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் உள்ள கணக்குகளையும் சில புத்திசாலி மாணவர்கள் அவர் மேசையில் கொண்டு வைப்பார்கள். அவர் அதையும் எடுத்து சுலபமாக ஓர் நொடியில் போட்டு காட்டி விடுவார்.
முதல் நாள் வகுப்பு வந்ததும் ‘இந்த வகுப்பில் யார் எஸ்.எஸ்.எல்.சி இல் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கினீர்கள், என்று கேட்டார். யாருமே எழுந்திருக்கவில்லை. அவர் சிரித்தபடியே யார் 99 வாங்கியது? என்றார்.
ஒரே ஓர் மாணவன் எழுந்து நின்றான். கருப்பாக களையாக கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தான். வகுப்பு கொல் என்று சிரித்தது. அவரும் சிரித்தார். ‘நிஜமாகவே?’ என்றார் அந்த பையனை பார்த்து. அவன் நிஜம் என்று சொல்லி தலையாட்டினான். உன் பெயர் என்ன? என்று கேட்டார். அவன் சம்பந்தம் என்று சொன்னான். அவர் சிரித்தபடி ‘உட்கார்’ என்றார்.
எனக்கு சம்பந்தத்தை உடனே பிடித்து விட்டது. அவன் எங்கோ கடைசி வரிசையில் அமர்ந்திருந்தான். நான் அவனை எனக்கு அருகில் மூன்றாவது வரிசையில் காலியாக இருந்த ஓர் இடத்தில் அமர வைத்தேன். நானும் சம்பந்தமும் மிகுந்த நண்பர்கள் ஆகி விட்டோம். எனக்கு அந்த பக்கத்தில் சிவராமன் என்று இன்னோர் நண்பன்; நானும் அவனும் பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.
ஒரு நாள் நாங்கள் எதோ ஓர் கணக்கை தீர்க்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தோம். அதை ஓர் பேப்பரில் எழுதி சார் மேஜையில் வைத்தோம். அவர் அதை எடுத்து பார்த்தார். நான்கே ‘ஸ்டெப்பில்’ அந்த கணக்கை தீர்த்து விட்டார். நானும் என் நண்பனும் ஆச்சர்யத்தில் அசந்து போய் ‘ஐயோ ..இவ்வளவு சுலபமா?’ என்று பேசிக்கொண்டோம். அதை உடனே பார்த்த அவர் ‘க்ளாசில் என்ன பேச்சு. இரண்டு பெரும் வெளியே போங்கள்,’ என்றார் கடுமையாக. வேறு வழி இல்லை. பேசாமல் வெளியேறினோம்.
இன்னொரு முறை சம்பந்தம் வேறு எதோ பாட சம்பந்தமான குறிப்புகளை வகுப்பின் இடைஇடையே குறித்துக்கொண்டிருந்தான். சங்கு எங்களுக்கு எதோ ஓர் கணக்கை கொடுத்து தீர்க்கச்சொல்லி விட்டு வகுப்பை சுற்றி வந்து கொண்டிருந்தார். நான் சம்பந்தத்திடம் ‘ஏய்.அந்த நோட்ஸை மூடு. சங்கு பார்த்தால் கொன்று விடுவார்.’ என்றேன். அவன் கேட்காமல் எழுதி கொண்டிருந்தான். அந்த சமயம் பின்னாலிருந்து அவர் வந்து ‘சம்பந்தம். என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டபடி அந்த நோட்ஸ்யை எடுத்து விட்டார். அது கெமிஸ்ட்ரி பாடத்துடையது. ஒன்றுமே பேசாமல் கோபமாக அவை அத்தனையையும் கிழித்து எறிந்தார். பின் பேசாமல் போய் விட்டார். நாங்கள் அதிர்ந்து போய் அமர்ந்த்திருந்தோம்.
இவ்வளவு கட்டுப்பாட்டுடனும், எதிர் பார்க்கமுடியாத காரியங்கள் மூலமும் எங்களை மிரட்டி வைத்திருந்தாலும் அவருக்கு கணிதத்தில் இருந்த அசாத்தியமான திறமை எங்களை நிஜமாகவே வியக்க வைத்தது. எங்களுக்கு தீர்க்க முடியாமல் இருக்கும் கணக்குகளை அவர் மேசை மீது கொண்டுவந்து வைக்கச் சொல்லிவிடுவார். அவர் அவைகளை பார்த்து விட்டு எதாவது ஒன்றை எடுத்து மிக சுலபமாக போட்டு காட்டுவார். அடுத்து இன்னொன்று. பிறகு மற்றொன்று. அலுப்போ ஆயாசமோ இல்லாமல் அவர் கணிதப் பாடத்தை நடத்தியது போல் நான் வேறு எந்த ஆசிரியரையும் பார்த்ததில்லை.
ஆனால், அவர் எதிர்பாராத விதமாக எங்கள் கடைசி நாள் வகுப்பில் எங்களிடம் நாங்கள் யாருமே எதிர்பாராத வகையில் மிக உருக்கமாக பேசினார். ‘நான் பல நாட்கள் உங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருப்பேன். அதற்கு காரணம் இருக்கிறது. உங்களுக்கு இப்போது கவனத்துடனும், பொறுப்புடனும் படிக்க வேண்டிய வயது. காலம். அதில் கவனத்தை பல வகைகளில் சிதற விட்டால் உங்களுக்கு நான் நடத்துவது புரியாது; விளங்காது. அதன் முக்கியத்துவத்தை உணர மாட்டீர்கள். அதற்கு கண்டிப்பு தேவை. அதைத்தான் நான் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர் சார்பில் செய்தேன். நான் கோபமாக பேசி இருப்பேன். திட்டி இருப்பேன். வகுப்பை விட்டு வெளியே அனுப்பி இருப்பேன். அவை எல்லாமே உங்களின் நலனுக்காகவும், உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கவும், நான் நடத்திய பாடம் உங்கள் மனதில் ஆழமாகப் பதியவும்தான். வேறெந்த நோக்கமும் கிடையாது. நீங்கள் எல்லோருமே மிக நல்ல பிள்ளைகள். என் வகுப்பில் மிக கவனமாகப் பாடத்தைக் கவனித்தீர்கள். அதில் எனக்கு மிகுந்த திருப்தி மற்றும் மகிழ்ச்சி. அதை தாண்டி உங்களை என் வார்த்தைகளோ, நடத்தையோ மனதை வருத்தி இருந்தால் அதற்காக இன்று உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மனதில் அதை வைத்துக் கொள்ளாதீர்கள். மிக்க நன்றி. உங்கள் எதிர் காலம் சிறப்பாக அமையும். அதற்கு என் வாழ்த்துக்கள்.’ என்று உணர்ச்சி மையமாக ஓர் உரை நிகழ்த்தி விட்டு ‘விடு விடு’ என்று வகுப்பை விட்டு சென்று விட்டார். அவர் கடைசி இரண்டு வரிகளை கூறும் போது அவர் கண்கள் கலங்கியதையும், வார்த்தைகள் உணர்ச்சிகளுடன் வருவதையும் எங்களால் உணர முடிந்தது.
எங்களுக்கு அடுத்த வகுப்பு கெமிஸ்ட்ரி கிளாஸ்; அதற்கு சற்று தூரம் நடந்தது போகவேண்டும். அநேகமாக எங்களில் பலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இருந்தோம். எங்களை அறியாமல் எங்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.
‘சங்கு சார்’ என்று நாங்கள் குறிப்பிட்ட அந்த ஆசிரியரை போல் நான் என் வாழ்க்கையில் வேறொரு ஆசிரியரை பார்க்கவில்லை.
புகுமுக வகுப்புக்கு பின் நான் அங்கு படிக்கவில்லை. இன்ஜினியரிங் சேர்ந்துவிட்டேன்.
*****
பல ஆண்டுகளுக்கு பின் நான் ஓர் நாளிதழுக்கு ஆங்கிலத்தில் கச்சேரி விமர்சனம் எழுதி வந்தேன். ஓர் பாடக சகோதரிகளின் பாட்டை கேட்கச் சென்றபோது நான் அவர்களின் பின்னணி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அருகில் இருந்த ஒருவரிடம் கேட்டபோது அவர் என்னிடம் சொன்னார். ‘அதோ அங்கே ஓர் பெரியவர் அமர்ந்திருக்கிறார். அவர்தான் இந்த சகோதரிகளின் தந்தை. அவரிடம் சென்று கேளுங்கள். நீங்கள் கேட்கும் விவரங்கள் கிடைக்கும்,’ என்றார்.
நான் வலுவில் அந்த பெரியவர் அருகில் சென்று அமர்ந்து என்னை அறிமுகம் செய்துகொண்டு பாடும் சகோதரிகள் பற்றிய விவரங்களை கேட்டேன். அவர் சொன்னார். பின் அவர் என்னிடம் ‘நீங்கள் அந்த தினசரியில் பணி செய்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை. நான் ஓர் கெமிக்கல் என்ஜினீயர். இசை எனக்கு பிடித்த பொழுதுபோக்கு,’ என்று கூறினேன். அவர் தன்னை ஓர் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று கூறினார். எங்கு என்று கேட்டபோது ‘ஏ எம் ஜெயின் காலேஜ். கணிதப் பாடம்,’ என்றார். நான் வியப்புடன் அவரிடம் உங்களுக்கு ‘சங்கர சுப்பிரமணியத்தை தெரியுமா?’ என்று கேட்டேன். அவர் ‘தெரியுமாவாவது? அவர் என் நெருங்கிய நண்பர்,’ என்றார்.
எனக்கு சட்டென்று நினைவு வந்தது. ஸ்ரீநிவாசன் என்ற பெயருடைய ஒருவர் அவரது நெருங்கிய நண்பர் என்று நான் படித்த காலத்தில் கூறுவார்கள். அவர்தான் இவர் என்று அறிந்தபோது எனக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று.
நான் ஆவலுடன் ‘சங்கரசுப்ரமணியம் சார் எப்படி இருக்கிறார்?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் முகம் மாறியது. ‘அவர் இறந்து போய் பல ஆண்டுகள் ஆகின்றது.’ என்றார், வருத்தத்துடன். ‘எப்படி?’ என்றேன் அதிர்ச்சியுடன். ‘ஹார்ட் அட்டாக்’ என்றார் ஒரு வரியில்.
என் மனதில் மிகுந்த சோகம் ஏற்பட்டது. நமக்கு பிடித்தவர்கள் நம் தொடர்பிலோ பார்வையிலோ இல்லை என்றாலும் எங்கோ நன்றாக இருக்கிறார்கள் என்று கேள்வி பட்டால் மனதில் ஓர் திருப்தி உண்டாகிறது. செய்தியை கேட்டபின் மனதில் வருத்தம் மிகுந்தது.
ஆனால், அதை விட சோகம், பின்னல் ஓர் நாள் என்னுடன் அந்த வகுப்பில் படித்த என் நெருங்கிய நண்பனிடம் சொன்ன போது அவன் ஒரே வார்த்தையில் ‘அவரை எனக்கு நினைவே இல்லை. மறந்து போய் விட்டது,’ என்று அலட்சியமாகச் சொன்னபோது அதிர்ச்சியாகவே இருந்தது.
நினைவுகளும், மறதிகளும் வாழ்க்கையை சுவையாக்குகிறதா இல்லை உணர்ச்சிகளை தொலைக்கச் செய்கிறதா என்று எனக்கு புரியவில்லை.
நான் என்னவோ என் வாழ்க்கையின் பல நேரங்களில் சந்தித்தவர்களையும், நன்மையோ, தீமையோ செய்தவர்களையும், மறக்க முடியவில்லை. என் ஞாபக சக்தி எனக்கு ‘வரமா இல்லை சாபமா’ என்று சொல்லத் தெரியவில்லை.
பல சமயங்களில் வரமே, சாபமாகும் என்று தோன்றுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
*என் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எழுதியது. *
