சற்று வித்தியாசமான சூழ்நிலை! உடல் இன்னல்கள் ஏதும் இல்லாத ஐம்பது வயதுள்ள தியாகராஜன் தன் மனைவி சுபாவுடன் வந்தார். சில குழப்பங்களைச் சுதாரித்து ஆலோசிக்க முன்வந்திருந்தார்.
கூட வந்திருந்த மகன் ஜகன், மற்றவர்கள் ஏமாற்றி எங்கள் சொத்தை அபகரித்துவிடுவார்கள் என்றான். மருமகள் ஜெயா, மாமியார்-மாமனார் சேமிப்பை தானம் செய்துவிட்டு துறவியாகி விடுவார்களோ எனக் கவலையுற்றாள்.
பெற்றோரிடம் ஜகன் சொற்களை வீச, வீட்டில் அமைதியற்ற நிலை உருவாகியதென்று தியாகராஜன் விவரித்தார்.
ஜெயாவின் பெற்றோர் செல்வமுள்ள குடும்பம். ஏராளமான வசதிகள். போதாது. பணத்தைக் குவிப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.
தயை கொண்டு பெற்றோர் யாருக்குப் பண உதவி செய்தாலும் மகள் ரத்னா, எதிர் காலத்தில் தமக்குக் குறைபாடாகும் என எண்ணி எரிச்சலானாள்.
தியாகராஜன்-சுபா தம்பதியரோ தங்களது உழைப்பால் உருவாக்கிய சேமிப்பிலிருந்து பிள்ளைகளுக்குத் தாராளமாக ஒதுக்கி வைத்து, மிச்சத்தை வசதியற்றவரின் மற்றும் ஆதரவற்றவரின் படிப்பு, மருத்துவச் செலவுகள் இவற்றிற்கு உதவும் நிறுவனங்களுக்குத் தர விரும்பினார்கள். முடிவாகவில்லை.
தற்செயலாக இதைக் கேட்டதிலிருந்து பெற்றோரிடம் ஜகன், ரத்னா, ஜெயா கோபப்பட, வீட்டில் அதிருப்தி நிலவியது.
தியாகராஜன்-சுபாவிற்கு இது அர்த்தமற்றது எனத் தோன்றியது. தூக்கம் போனது, பசி மறைந்தது. பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவில்லை என்று மனம் துளைத்தது. இந்த இக்கட்டான நிலையில் ஏதாவது தெளிவு பெறமுடியுமா என்ற கேள்வியைத் தியாகராஜன் எங்கள் சீஃபிடம் வைத்தார். எங்களுடைய ஸைக்காட்ரிக் சோஷியல் வர்க் துரையின் படிப்பு, பயிற்சியைப் பற்றி சீஃப் விவரித்தார். என்னுடன் ஸெஷன் ஆரம்பமானது.
தம்பதியர் இருவரின் வாழ்க்கைக் கொள்கைகளும் ஒன்றிணைந்திருந்தது. கண்ணோட்டங்கள் ஒற்றுப் போனதால் மணந்தார்கள்.
இருவருக்கும் திருப்தி அளிப்பதே மற்றவர்களுக்கு வாங்கித் தருவது. ஏதேனும் வாங்கினால் இருப்பதிலிருந்து இரட்டை மடங்காக யாருக்காவது கொடுப்பது வழக்கமானது! அதனால் தான் என்றைக்குமே வீட்டில் தேவைக்கேற்றவாறு மட்டுமே பொருட்கள் இருக்கும்.
தியாகராஜன்-சுபா தம் தோட்டக்காரன் குமாரின் குணாதிசயங்களைப் பாராட்டினார்கள். யார் எதைத் தந்தாலும் பங்கு போடாமல் அவர் உபயோகப் படுத்த மாட்டார் என. இதைக் கேட்ட ஜகன், “ஏம்பா குமாரு, ஒரு கடுகு கொடுத்தாலும் பங்கு போடுவியா?” எனக் கேட்டானாம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தியாகராஜன்-சுபா வெட்கமும் வேதனையும் அடைந்ததை அவர் கூறினார்.
ஜகன் ஜெயா மற்றும் ரத்னாவோ பெற்றோர் இப்படி நல்லுறவுகளை அமைத்து அவற்றை பெரும் சொத்தாகக் கருதுவதை அவதூறாகப் பேசினார்கள். தியாகராஜன்-சுபாவின் ஏழைப் பணக்காரர் பாரபட்சம் இல்லாமல் பரந்த மனப்பான்மை நடத்தைகளைப் பற்றித் துச்சமாகப் பேசினார்கள்.
ஆராய்ச்சியில் இதுபோன்ற நிபந்தனையற்ற அன்பின் விளைவே திடமான உறவுகள் என்கிறார்கள்!
இந்தத் தம்பதியினர் போன்றவர்களைப் பற்றி முப்பது வருட நீண்டகால ஹார்வர்ட் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் போல வாழ்வோருக்கு Emotional intelligence (உணர்ச்சி அறிவு) அதிகமே. அதாவது உணர்வுகளை அறிந்துகொண்டு, உபயோகிப்பதன் மூலம் உறவை உருவாக்குவார்கள், போற்றுவார்கள். இவர்களின் வாழ்வு இதன் மூலம் நோக்கமுள்ளதாக இருக்கும் என!
ஆராய்ச்சியாளர்களின் இன்னொரு கண்டுபிடிப்பு, இவ்விதமான “eudaimonic” (நிறைவான) வாழ்முறையில் தன்னடக்கம் கடைப்பிடித்தல் இருக்கும், அளவிற்கு ஏற்ற பொருட்கள் மட்டும் வைக்கப்படும். தனக்கென்று இல்லாமல் மற்றவருக்கு நன்மை செய்வதே பிரதானமாகக் கருதுவார்கள். பகிர்ந்து கொள்வதில் திருப்தி அடைவார்கள், கடின உழைப்பாளி, ஒழுக்கமான சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
சிறுவயதிலிருந்தே ஜகன்-ரத்னா இவ்விதமான வாழ்முறையை நிராகரித்தார்கள். சிற்றின்ப ஆசைகளுக்கே பிரதானம் அளித்தார்கள், இஷ்டம் போல் வாழ்ந்தார்கள், hedonic (உல்லாச வாழ்முறை) நிலையிலிருந்தார்கள்.
தியாகராஜன்-சுபா தம் பிள்ளைகள் வளர வளரப் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணிக் காத்திருந்தார்கள். மாறவில்லையே என்ற ஏமாற்றத்தை விவரித்தார்கள்.
ஸெஷனில் எடுத்துக் கொண்டோம். விஸ்தாரமாக விவரித்ததும் தியாகராஜன் சுபா புரிந்து கொண்டார்கள். வளரும் பிள்ளைகளுக்குச் செய்யலாம்-கூடாது என்ற எல்லைகளை, வழிமுறைகளைத் தெளிவு படுத்துவதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டார்கள். தானாகப் புரிந்து கொள்வார்கள், எல்லைக்கோடு தேவையில்லை என்று விட்டுவிட்டால் ஜெயா-ஜகன் போலவே நினைத்தபடி செய்வார்கள் என.
விளைவு, தியாகராஜன்-சுபா தமது பிள்ளைகளிடம் கண்ட இன்றைய சுபாவம். ஜெயாவிற்கும் இதே சுயநல குணம்.
ரத்னா, ஜகனுக்குப் பெற்றோரின் குணாதிசயங்களால் தமக்கு நஷ்டமே தவிர லாபம் ஏதும் இல்லை என்ற ஆதங்கம் பெரிதாக இருந்தது.
இதற்கு ஜெயாவின் பெற்றோரும் உடந்தையாக இருந்தார்கள். ஜெயாவின் தந்தை பிரபல நிர்வாகம் நடத்துபவர். இல்லாதவர்களை தம்மிடம் நெருங்க விடமாட்டார். அவர்களால் செலவுகள் நேரலாம் என்பதால்.
தியாகராஜன்-சுபா ஜெயாவின் தந்தையை நேருக்கு நேர் சந்திக்கும்போது கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது கடினமாக இருப்பதாகக் கூறினார்கள்.
இவற்றை ஸெஷனில் ஆராய்ந்ததில் தன்னுடையதிலிருந்து வேறுபட்ட வாழ்முறைகளைக் கண்டுகொண்டு, புரிந்து கொண்டு எதிர்கொள்ளத் தியாகராஜன்-சுபா கஷ்டப் படுகிறார்கள் எனப் புரியவந்தது.
மேற்கொண்டு ஜகன், ஜெயா, ரத்னா இவர்களுடன் தியாகராஜன்-சுபா செயல்படும் வழிகளை மாற்ற முடிவானது.
ஒரு முயற்சி. தியாகராஜன் வியாபாரத்திலிருந்து பெரிய அளவில் லாபம் பெறுபவர். இதுவரை, பலருக்குத் தாராளமாகப் பண உதவி செய்வார், எனினும் யாரிடமும் சொல்ல மாட்டார். இதை மாற்றி, இப்படிச் செய்யப் போவதை ஜகனிடம் பகிர ஆரம்பித்தார்.
அனுபவித்தால் வித்தியாசம் புரிய வாய்ப்புண்டு என ஸெஷனில் உணர்ந்தார். ஜகனின் நண்பர்களுடன் அவ்வப்போது வீட்டிலோ வெளியிலோ உணவிற்குச் சேர்ந்துகொள்ளத் துவங்கினார். தன் பங்கிற்குச் சுபா தாம் அன்னதானம் செய்யும்போது ஜகன்-ஜெயாவை உதவி செய்ய வைத்தாள்.
ஆர்வத்தோடு இல்லாமல் ஜெயா-ஜகன் ஏளன எண்ணத்தில் பங்கேற்றார்கள். பலர் நன்றி கூறுவதை, திருப்தியை வெளிப்படையாகச் சொல்வதைக் கவனித்தார்கள். தாழ்வாக ஜகன் பேசினாலும், துளியூண்டு சாப்பாட்டிற்கு இத்தனை வரவேற்பா என வியந்தான். சுபா தன் அனுபவங்களைத் தாராளமாகப் பகிர்ந்தாள்.
ஸெஷனில் தாம் செய்யும் தர்மங்களைப் பகிரங்கமாகத் தெரியவைப்பது கூச்சம் அளிப்பதாக சுபா-தியாகராஜன் கூறினார்கள். பிள்ளைகளின் சிந்தனை மற்றும் மனநிலையை மாற்ற இவ்வாறு செய்தாக வேண்டும் என்றதைப் பல ஸெஷன்களுக்குப் பின்னர் ஏற்றுக் கொண்டார்கள். இந்த செயல்பாட்டைப் பிள்ளைகள் வளரும்போது செய்யத் தவறியதால் இப்போது தேவைப்படுகிறது என அறிந்தார்கள்.
நாளடைவில் பல சூழல்களில் நன்கொடை ஏதேனும் தரலாம் என்று தோன்றும்போது யோசித்து முடிவெடுப்பதில் ஜகன்- ரத்னாவின் பங்கேற்பை அதிகரித்தார்.
தியாகராஜன்-சுபாவிற்குத் தன்னடக்கம் அதிகம்! பல ரோல் ப்ளேவின் பின்னர்தான் பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் இவற்றையெல்லாம் பற்றிப் பேசச் சுபா-தியாகராஜன் ஒப்புக்கொண்டார்கள்.
எதேச்சையாகத் தியாகராஜனின் MBA பட்டப்படிப்பு வகுப்புத் தோழர்களான ஜெயந்த், வசு, ஷியாம், கேப்ரியல், உல்லாஸ், டெஜிந்தர் வந்தார்கள். வழக்கம்போல தியாகராஜன் சுபா குடும்பத்தினருடன் போஜனம். அவர்களில் பலர் உண்பதற்கு முன் தியாகராஜன் சுபா செய்வது போலவே நன்றி கூறும் பிரார்த்தனை சொன்ன பிறகே ஆரம்பித்தார்கள்.
குடும்பம், பொழுதுபோக்கு, வியாபாரம், இப்படிப் பல விஷயங்களைப் பற்றிப் பேச்சு. அதன்போது எல்லா மதத்திலும் சம்பாதித்த லாபத்தில் பத்தில் ஒரு பங்கு தானம் தருவதைப் பற்றியும் பேச்சு எழ, அவரவர் தம் அனுபவங்களைப் பகிர ஆரம்பித்தார்கள். ஜகன் ரத்னா ஜெயா இதைக்கேட்டுத் திகைத்துப் போவதைப் பார்த்து, தியாகராஜன்-சுபா கண்ணில் கண்ணீர் தாண்டவம் ஆடியதை ஸெஷனில் மெய்சிலிர்க்கப் பகிர்ந்தார்!
இருவரையும் எதிர்த்து நின்றார்கள் ஜகன் ஜெயா ரத்னா. இவ்வளவு வருடங்களாகப் பெற்றோர் செய்யும் செயல்களைப் பார்த்தும் கடுகளவும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஸெஷனில் இந்த நடத்தையை மேலும் ஆழமாகப் பார்க்கவும் ஏற்றுக் கொள்ளவும் தியாகராஜன் முன்வந்தார். சுயநலம் அலட்சியம் கேலி இவற்றைச் சுபா தியாகராஜன் திருத்தாததின் விளைவுகள்.
தம்பதியர் வீட்டில் உதவுவோரின் திறனைப் பற்றிப் பிள்ளைகளிடம் பேசுவதை ஆரம்பித்தார்கள். வேலைக்கு வராத போது ஜகனை விசாரிக்கப் பரிந்துரைத்தார்கள். தகவல்கள் கேட்க, அவர்களின் நிலை புரிய வர அவர்களைச் சிறுதுளி மனிதநேயத்துடன் ஜகன் நடத்தினான்.
ஜகன் ஸெஷனுக்கு வரச் சம்மதித்தான். ஜெயா மறுத்து நின்றாள்.
ஸெஷனில் ஜகனிடம் தாம் வாழ்வின் முழுத் திருப்தியை அடைந்ததைத் தியாகராஜன் விவரித்தார். ஜகன் சங்கடப் பட, தோட்டக்காரன் வராததைப் பற்றி ஜகன் விசாரித்ததை நினைவூட்டி, கண்களை மூடியவாறு அந்த தருணத்தை நினைவு படுத்திக்கொள்ளச் சொன்னேன். யார் இருந்தார்கள், என்ன பார்த்தான், கேட்டது, முகர்ந்தது இதையெல்லாம். அனுபவத்தைப் பகிர, நினைவூட்டல் புதுத் தெம்பைத் தந்ததை ஜகன் ஒப்புக் கொண்டான். முதன் முறை!
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய தியாகராஜன், தன்னிடம் கொடுத்திருந்த புது ஆராய்ச்சித்தாள் தன் வாழ்வின் எதிரொலியாக இருப்பதை விவரித்தார். ஹார்வர்ட் ஸ்டடியில் சொல்லிருப்பதைப் போலவே வாழ்வை அர்த்தமுள்ள குறிக்கோளுடன், உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் வாழ்வு மலர்ந்திருப்பதென்று.
ஜகன் ஸெஷன் ஆரம்பித்ததே சுபா-தியாகராஜன் பணிவுடன் அவனைக் கேட்டுக் கொண்டதால்.
ஜெயாவோ ஸெஷன்களுக்கு வருவதை நிராகரித்து விட்டாள். பாதி எதிர்ப்பு மீதி மாறிவிடுவோமோ என்ற அச்சத்தால்! இதை “resistance in therapy” என்போம்.
செயலே சொற்களாக
கணக்கில்லாமல் தரும் மனம்!
யாருக்கும் எப்போதும்
தருவது, தயக்கமில்லாமல்!
உத்தமமான வாழ்வு நிலையாகும்!
****************************

