
நீர்வழிப் படூஉம் (நாவல்) –
எழுத்தாளர் தேவிபாரதி
முதல் பதிப்பு செப்டம்பர் 2020
ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதியின் நீர்வழிப்படூம் என்ற இந்த நாவல் 2023 – ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுள்ளது.
எழுத்தாளர் ஜி. குப்புசாமி இந்த நூலின் கடைசிப் பக்கத்தில் நாவலைக் குறித்து ” தமிழ் நாவல்களில் இதுவரை இடம் பெற்றுள்ள கதை மாந்தர்களில் தனித்துவமான ஒருவர் எனக் காரு மாமாவைச் சொல்ல முடியும்… தகிக்கும் வறுமையில் வாழ்வை எதிர்கொள்ளத் திணறிக் கொண்டிருக்கும் அந்த மனிதர்களின் முரட்டுத்தனத்துக்குள்ளும் மூர்க்கமான தோற்றத்துக்குள்ளும் அவற்றின் ஆழங்களில் உலர்ந்து போகாமல் இருக்கும் ஈரத்தை தொட்டுப் பார்க்கிறது இந்த நாவல். தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக நீர்வழிப்படூம் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். ” என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
எழுத்தாளர் தேவிபாரதி இந்த நாவலைக் குறித்து எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.
வெள்ளக்கோவில் அருகில் உள்ள உடையாம்பாளையம் ஊரில் தான் நூலாசிரியரின் தாயாரும், சிறிய தாயாரும், பெரியம்மாவின் மகள் காளியம்மா அக்காவும் தங்களது பிள்ளைப் பிராயங்களையும், பதின் பருவங்களையும் கழித்திருந்தார்கள். படாத பாடுபட்டு அவர்களை வளர்த்து ஆளாக்கி இருந்த ஆசிரியரின் பெரியம்மாவும், காரு மாமாவும் அவர்களைக் கட்டிக் கொடுத்து வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு யாருமற்ற அந்த ஊரில் யாருமற்றவர்களாய் வாழ்ந்து தீர்த்தார்கள். காரு மாமா அந்த ஊரின் குடிநாவிதனாக இருந்தார். பெரியம்மா காரு மாமாவுக்குத் துணையாக இருந்து அவரது பண்ணையக்காரர்களுக்கு ஊழியம் செய்து வந்தாள். அவளிடம் இருந்த சிறுகத்தி பண்ணையக்காரிச்சிகளுக்குப் பிள்ளைப்பேறு பார்க்கப் பயன்பட்டது. சிறுவயதில் கதாசிரியர் கேட்ட பட்ட கதைகள் எல்லாம் அவர்களது குருதியாலும், கண்ணீராலும் நனைந்திருந்தன. வாழ்வின் கருணையின்மையைப் பொருட்படுத்தாமல் அதன் துயரங்களைத் தின்றும் அது பிழிந்து தந்த கண்ணீரைப் பருகியும் வாழ்ந்து மறைந்தவர்கள் அவர்கள். நீர்வழிப் படூம் நாவல் அவர்கள் பட்ட கதை என்கிறார் நூலாசிரியர் தேவபாரதி.
“நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்” என்பது கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலின் வரி. இதன் பொருள் “ஆற்று நீரில் செல்லும் தெப்பம் போல, அரிய உயிரானது தனது போக்கின் வழியே செல்லும்” என்பதாகும். அதிலிருந்தே நாவலின் தலைப்புக்கான நீர்வழிப் படூஉம் என்ற 2 வார்த்தைகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்துள்ளார் தேவிபாரதி.
நீர்வழிப்படூம் நாவலின் தொடக்கம் காரு மாமாவின் இறப்பில் தொடங்குகிறது. மாமாவின் மனைவி ராசம்மா அத்தை அவரை விட்டு விட்டுச் செட்டியுடன் குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் சென்றது; காரு மாமா வாழ்ந்த வாழ்க்கை, அவரைச் சார்ந்த சொந்தங்களின் வாழ்க்கை எல்லாவற்றையும் கொங்கு மண் சார்ந்து கூறுகிறார் தேவிபாரதி. கதையில் எண்ணற்ற பாத்திரங்கள் வருகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சரியாக நாவலில் பொருந்தி இருக்கின்றது.
காரு மாமா கவுண்டர் பண்ணையக்காரர்களுக்கு செய்த ஊழியத்தையும், அவர்களும் குடும்பத்தைக் காப்பாற்ற செய்த உதவிகளையும் தொட்டுச் செல்கிறார் கதாசிரியர். கதை சொல்லியின் அம்மா, அப்பா, பெரியம்மா, ராசம்மா அத்தை, முத்தையன் வலசுப் பெரியப்பா, சௌந்தரா பெரியம்மா, சுந்தராடி வலசு பெரியம்மா, ராசம்மா அத்தை மகள் ஈஸ்வரி, அத்தையின் தங்கை மகள் சாவித்திரி போன்ற பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் வெவ்வேறு காலக்காட்டங்களில் காட்டுகின்ற மாறுபட்ட முகங்கள் தான் நாவலின் ஜீவன் எனலாம். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்டு வாழ்வதே மனிதன் செய்யக்கூடியதாக இருக்கிறது.
கதையின் நடை சிறப்பாக இருக்கிறது. வட்டார மொழி வழக்கு இருந்த போதிலும் தடையின்றி தொடர்ந்து வாசிக்க வைக்கிறது நாவல். ஒரு வாக்கியம் சில இடங்களில் பெரிதாக நீள்கிறது.
“தன் கூர்ந்த பார்வையால் சாட்சியாக நின்ற மற்ற எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரு மாமா விட்டுச் சென்றிருந்த அந்த சிறு உலோகத்துண்டுகளின் மீது தன் முழு வாழ்வையும் பணயம் வைத்து அவற்றை உருட்டி வீசினாள் அத்தை”
நாவலின் இறுதிக் கட்டம் நம்மைப் பரபரப்புக்கு உள்ளாக்குகிறது. தமிழின் தனித்துவமான நாவல்களில் முக்கியமான ஒன்று நீர்வழிப் படூஉம்.
