![]()
சஞ்சாரம் – எஸ். ராமகிருஷ்ணன்
2018-ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்ற ‘சஞ்சாரம் எஸ். ராவின்’ 7-வது நாவல். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.
சஞ்சாரம் நாவல் பக்கிரி எனும் நாதஸ்வர கலைஞனின் கதை மூலம் கரிசல் நிலத்தின் நாதஸ்வர இசையைப் பற்றி, நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கைத் துயரைப் பற்றி பேசுகிறது.
சஞ்சாரம் நாவல் நாதஸ்வரம் தொடர்புடைய கதைகளை கதம்ப மாலை போல் தந்திருக்கிறது. பல கிளைக் கதைகளின் சங்கமமாக இருக்கிறது. கிளை கதைகள் நாதஸ்வரம் தொடர்புடையவை.. அவை நாதஸ்வரக் கலைஞர்களின் வியக்கத்தக்க மற்றும் வேதனைக்குரிய கதைகள் ஆகும். நாதஸ்வரத்தின் பெருமையை சொல்வதற்காக அரட்டானம் லட்சய்யாவிடமிருந்து முதல் கிளை கதை தொடங்குகிறது..
கரிசல் பூமியைப் பற்றி நிறைய கிளை கதைகளை எஸ். ரா. சொல்கிறார்.
கரிசலுக்கு மழை இல்லாமல் போனதற்கு ஒரு கதை இருக்கிறது. கரிசல் கிராமங்களில் மேல் ஊரோடி பறவைகள் பறந்து வருகின்றன.
ஒரு சமயம் மக்கள் ஊரோடிகளைப் புறக்கணித்தனர். அன்று முதல் மழை இல்லாமல் போனது என்கிறது கதை.
ஒரு கதை கரிசலில் சூறைக்காற்று வீசுவதற்கான காரணத்தை கூறுகிறது.
பொம்மக்காபுரம் கிராமத்திற்கு ஓர் இடையன் ஆடுகளை மேய்த்து வருகிறான். இரவில் தங்குகிறான். அவனுடைய 50 ஆடுகள் திருடுப் போயின, இடையன் தற்கொலை செய்து கொள்கிறான். அவன்தான் சூறைக் காற்றாக சுழன்று சுழன்று தன் ஆடுகளைத் தேடுவதாக கதை சொல்கிறது.
ஒரு வெள்ளைக்காரன் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள சித்தேரி மடத்திற்கு வருகிறான்.. அங்கு தான் பக்கிரியும் நாதஸ்வரம் வாசிக்கக் கற்று கொண்டான். வெள்ளைக்காரன் நன்றாகவே நாதஸ்வரம் கற்று கொள்கிறான், அந்த ஊரிலுள்ள வண்ணாத்தியுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணமும் செய்துக் கொள்கிறான்.
தன்னாசி என்கிற நாதஸ்வர கலைஞரனின் கதை உருக்கமானது.. பார்வையற்றவனாக அவன் நாதஸ்வர மேதையாகிறான். அவனுடைய இசை வாழைக்காய்யை பழுக்க வைக்கிறது. அம்மை நோயை குணமாக்குகிறது.. அவன் வாழ்வின் சோகம் விரும்பிய பெண் சரஸ்வதியின் தற்கொலை.. தன்னாசி தாசிகளிடம் தஞ்சமடைகிறான். சம்பாத்தியம் எல்லாம் இழக்கிறான், அவன் மேல் உண்மையான அன்பு கொண்ட தாசி தன்னாசிக்கு சமாதி கட்டுகிறாள்.
நாதஸ்வர கலை சிறப்போடு இருந்த காலத்தை நாவல் பதிவு செய்திருக்கிறது. ஓராண்டிற்கும் மேலாக நாதஸ்வர இசை கலைஞர்களைப் பற்றி விவரங்களை சேகரித்து சஞ்சாரம் நாவலை எஸ்.ரா.. எழுதியிருக்கிறார். இது நாவல் அல்ல. நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய ஆவணம்.
நாதஸ்வர கலையின் இன்றைய நிலையைப் பற்றி தமிழ்ச் சமூகத்தின் அக்கறையை இந்நாவல் கோருகிறது.
நாதஸ்வர கலை மங்கள இசை தான். ஆனால் மரியாதை இல்லை. கற்பவர்கள் இல்லை. மேதைகள் இல்லை. செத்துப் போன பண்பாட்டின் ஆவியாக நாதஸ்வர கலை திரிகிறது.
சஞ்சாரம் நாவலின் வடிவம் பற்றி விமர்சனம் உண்டு. அதற்கு எஸ். ரா. நாவலின் வடிவத்தை ஆரஞ்சு பழத்திற்கு உவமிக்கிறார். கிளை கதைகள் தனித்தனி சுளையாக இருந்தாலும் பழம் தானே!
‘சஞ்சாரம்’ நாவலுக்கான சாகித்ய அகடமி விருது எஸ். ரா.. வின் ஒட்டு மொத்த படைப்புகளுக்கான விருது என்கிறார். பவா செல்லத்துரை, இந்த கருத்தும் கவனத்திற்குரியது.
