நீர்வழிப் படூஉம்.. - தேவிபாரதி - நற்றிணை பதிப்பகம் | panuval.com

நாவல் – நீர்வழிப் படூஉம். ஆசிரியர் – தேவிபாரதி. வெளியீடு – தன்னறம் நூல்வெளி.

முதல் பதிப்பு -2022. பக்கங்கள் -224  விலை – ரூ. 220/

“கதை என்பது உண்மையை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை” என்கிறார் ஜெர்மனியின் முக்கிய படைப்பாளியான குந்தர் கிராஸ்.

”கதை என்பது வாழ்வை அதற்குத் தெரியாமல் படம் பிடிப்பது” என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் சால் பெல்லோ.

அந்தவகையில் வாழ்கையின் போக்கில் விதி வழி போகிற எளிய கிராமத்து மனிதர்களின் பாடுகளை, சக மனிதர்களை, அவர்களின் குறை நிறைகளோடு அவர்களின் வாழ்க்கையை அன்பை கண்முன்னே அற்புதமாக வடித்துக் காட்டுகிற நாவல் நீர்வழிப் படூஉம்.

இந்த நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனை தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள். காரு மாமாவின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். அத்தனை சொந்தங்களுடன் பிறந்து வாழ்ந்த காரு மாமா ஒரு அனாதை போல் தனியாக மரணம் அடைந்தது எத்தனை துயர் நிறைந்த ஒரு அவலம். உடன் பிறந்தவர்களின் வாழ்வுக்காக அவர் அடைந்த பெருந் துயரங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனைவியையும், குழந்தைகளையும் தேடி அவர், பழனி மலை அடிவாரங்களில் அலைகிற கொடுமை, மனதை நெகிழ வைக்கிறது.

ஒரு கிராமிய வாழ்வில், குடிநாவிதர் என்று அறியப்படுகிற நாவிதர்கள், அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்வில் பிறப்பு முதற்கொண்டு இறப்பு வரை, ஏன் இறப்பிற்குப் பிறகும் கூட எந்த அளவு பிணைந்திருக்கிறார்கள் என்பதை மிக யதார்த்தமாக நாவலில் காட்டுகிறார் தேவிபாரதி.

குடிநாவிதர்களுக்கு அவர்களின் பன்னாடிகள் மிகப்பெரிய அனுசரணையாகத் தான் இருக்கிறார்கள். நல்லது கெட்டதுகளில் உதவி செய்கிறார்கள். ஏன், பிரசவம் பார்க்கும் நேரத்தில் அவர்களின் ஆணைகளுக்கு கூட அடிபணிகிறார்கள். ஒரு குடிநாவிதனை இழக்க பன்னாடிகள் அவ்வளவு எளிதில் துணிவதில்லை. ஏனென்றால் அந்த இழப்பு எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக அறிந்தவர்கள்.

அவர்கள் மிகவும் எளிய மனிதர்கள். அவமானங்களையும் கேவலங்களையும் உண்டு, செரித்து வளர்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்கான விதி என்று அதை இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆதரவாயிருக்கிறார்கள். துரோகம் செய்கிறார்கள்.வன்மம் கொள்கிறார்கள். உறவை முறித்துக் கொள்கிறார்கள். மன்னித்து அரவணைக்கிறார்கள். துக்க வீடுகளில், லிங்க நாவிதன் கற்றுத் தந்த ஒப்பாரிப் பாடல்களைப் பாடி, இறந்த மனிதனிடமிருந்து கொஞ்ச நேரம் எல்லோருடைய கவனத்தையும் தன் பால் ஈர்க்கிறார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்வை மிகப் பெரிய போராட்டமாக நினைப்பதில்லை. ஆண்களுக்கு சவரக் கத்தியும்,பெண்களுக்கு பிரவசத்திற்குப் பயன்படும் கறம்பக் கத்தியும் அலட்சியமாக அவர்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கான தைரியத்தைத் தருகின்றன. அவையும் கை விட்ட பின், அரசின், முதியோர் உதவித் தொகை அவர்களை அரவணைக்கிறது. நாவலின் எந்தவொரு மனிதரையும் அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியாது. செட்டியோடு ஓடிப் போன காரு மாமாவின் மனைவி, நாவலின் இறுதிப் பகுதியில் தாலி அறுக்கும் சடங்குக்காக வந்து சேர்கிறார்.

அவள் ஓடிப்போன நாளில் இருந்து தனது அண்ணன் உடலாலும்,  மனதாலும் படும் வாதையை காணச் சகிக்காமல் அவளை அத்தனை கெட்ட வார்த்தைகளாலும், தூற்றிக் கொண்டே இருக்கும் அம்மா, அவள், நிர்க்கதியாக நிற்பதை அறிந்து, அத்தனையும் மறந்து மன்னித்து அவளை வாரி அணைத்துக் கொள்வதில் கிராமிய உணர்வு அம்மாவின் கருணை எல்லாம் மிளிர்கிறது.

“நீ ஒரு ரண்டப் போட்டு இந்த ஆட்டத்தை செயிச்சுக்குடு ராசமக்கா”  விளையாட்டின் முடிவு மட்டுமல்ல, மூன்று பேரில் விதியையும் தீர்மானிக்க போகிற உருட்டலுக்காக கரங்களில் காத்திருக்கின்றன தாயக்கட்டைகள்.
நாவலை இந்த இடத்தில் முடித்து விடுகிறார் தேவிபாரதி. இந்தநாவலின் வழியாக காரு மாமாவுக்கும் ராசம்மா அத்தைக்கும் நியாயம் செய்து விட்டதாக நான் கற்பனை செய்து கொள்ளவில்லை என்கிறார் தேவிபாரதி. அதுதான் நிதர்சனம்.