“இது இருள் அல்ல!” நாவல் விமர்சனம்
நான் விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்ட புத்தகம் இலக்கியத் தோட்டத்தில் மலர்ந்து மணம் பரப்பி பயணித்துக் கொண்டிருக்கும் அருமை சகோதரி அன்னபூரணி தண்டபாணி அவர்கள் எழுதிய நாவல் “’இது இருள் அல்ல!”
இந்த நாவல் 2022 இல் பிரசுரிக்கப்பட்டது. புஸ்தகா டிஜிடல் மீடியா அவர்கள் பப்ளிஷ் செய்துள்ளார்கள்.
சாதாரணமாக அன்றாட வாழ்வில் ஒரு காய்கறி வாங்கப் போனாலும் கூட,தேர்ந்து எடுக்கும் காய்கறிக்கு பின்னால் ஒரு நல்ல காரணம் இருக்கும்.உடலுக்கு நல்லது ,ருசியானது, எந்த பதார்த்தம் செய்வதற்கு உகந்தது என்பது போல்.
அப்படியிருக்க,இலக்கியத்தில் ஒரு விமர்சனம் என்றால் தேர்ந்து எடுக்க காரணம் நிச்சயம் வேண்டும் அல்லவா?
இன்று வரை விருதுகள் வாங்காமல் இருக்கும் படைப்பாளிகள் கதைகளுக்கு முன்னோட்டம்,பின்னோட்டம்,விமர்சனம் ஆகியவை வழங்கினால்,ஒரு நாள் அவர்களும் விருதுகள் வாங்குவார்கள்.
இப்பொழுது கதைக்குள் செல்வோமா?
இந்த நாவலை கையில் எடுத்தவுடன் படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்க முடியாத தாக்கம்,அடுத்து என்ன,என்ன என்று ஆவல் மிகுந்து பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்ளும்.
புதிர்கள் நிறைய கோர்த்த மாலை.ஒவ்வொன்றாக விடுபடுமா , எப்படி என்று ஓயாத கேள்வி நம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த நாவலில் நடமாடும் கதாப்பாத்திரங்கள் மிகவும் வித்தியாசமான சமூக சூழலில் திக்குமுக்காடி , கரை சேர தவிக்கும் உயிர்கள்.
வாசு ,யாமினி என்ற இருவரையும் விதிவிளையாடி ஒன்று சேர்க்கிறது.இருவரும் அவரவர் பாதையில் வீண் பழிகளுக்கு ஆளாகியும், வேர் தெரியாமலும், பல வித போராட்டங்களுக்கு நடுவில் எதிர்நீச்சல் அடிக்கிறார்கள்.
யாமினி தவறாக புரிந்து வாசுவை சுட்டியதால்,அவன் யாமினியை விருப்பமின்றி மணக்கும் கட்டாயத்துக்கு ஆளாய் தவிக்கிறான்.
இவர்கள் திருமணத்தில் கதை ஆரம்பம்.
யாமினி தான் செய்த தவறை உணர்ந்து குற்ற உணர்வோடு, வாழ்வை முடித்துக் கொள்ள முற்படுகிறாள்.
வாசுவின் பெற்றோர்கள் கிருஷ்ணா,ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும், பவதாரிணியும் கதையில் அசையா தூண்கள்.
கதை கலகலக்க வாசுவின் தங்கை ஐஸ்வர்யா, மாமா மகள் சௌந்தர்யா இருவரும் ஜமாக்கிறார்கள்.
ஆகாஷ்,ஷிவானி இருவரும் வாசுவிற்கு பக்க பலம் அளிக்கும் நண்பர்கள்.நட்புக்கு அர்த்தம் இவர்கள்.
ஒரு நேரம் மர்ம கதை போல் தோன்றும் குடும்ப கதை ஏன் என்றால் அத்தனை மர்ம முடிச்சுகள் போட்ட கதாசிரியை கடைசி வரையிலும் நகர்த்தி ஒரு வழியாக எல்லா முடிச்சிகளையும் ஜடை பின்னல் அவிழ்ப்பது போல் அருமையாக அவிழ்த்துள்ளார்.
இளம் பெண்களுக்கு சமூகம் இழைக்கும் துரோகங்கள், கீழ்த்தர செயல்கள் புரிந்தும் சட்டம் செய்ய முடியாதவைகளைக் கூட சில தனி நபர்கள் செய்கிறார்கள் கிருஷ்ணா,வாசு,அவன் நண்பன் ஸ்டீபன் போன்றவர்கள்.
கடைசியில் வாசுவும் யாமினியின் ஒருவரை ஒருவர் மதித்து,நேசித்து,காதல் மொட்டு விரிந்து மலர்ந்து மணம் வீசி இரு பெண் குழந்தைகளை பெற்று வளர்க்கிறார்கள்.
கதையை கையாண்டிருக்கும் விதம் பாராட்ட வேண்டும்.
கதையின் விறுவிறுப்பு அலாதி.இருள் விலகி பகலவன் ஒளி வீசக் கதை நகர்ந்து நம்மையும் உடன் பயணிக்க வைக்கும் திறமைசாலி எழுத்தாளர்.
நல்ல ஒரு நாவலை வாசித்து விமர்சிக்க வாய்ப்பு கிடைத்து என் பாக்கியம்.

