செல்லாத பணம் – இமையம்

            செல்லாத பணம் - இமையம் - க்ரியா வெளியீடு | panuval.com

செல்லாத பணம்

 இமையம்

க்ரியா வெளியீடு

     

2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வென்ற நாவல் செல்லாத பணம்

பணம் செல்லாமல் போகும் ஒரு தருணத்தை மையமாக வைத்து ‘செல்லாத பணம்’ நாவல் எழுதப்பட்டுள்ளது,

நூலின் அட்டைப் படமே கதையைச் சொல்லி விடும், ஒரு பெண் தீயில் எரிகிறாள்,

அந்த பெண்ணின் பெயர் ரேவதி,

ரேவதி படித்தவள், படிக்காத ஒருவனை காதலித்து திருமணம் செய்கிறாள். அவன் குடிகாரன், பொறுக்கி. ரேவதி இந்த பிரச்சனையால் தீக்குளிக்கிறாள்.

ரேவதி தீக்குளித்த செய்தி வருகிறது. பெற்றோர் பதறுகிறார்கள். மகளைப் பார்க்க ஓடுகிறார்கள். 10 லட்சம் ரூபாயை டாக்டர் முன் வைத்து காப்பாற்ற சொல்லி துடிக்கிறார்கள்.

ரேவதியின் உடம்பில் 90% தீக்காயம், கோடி கோடியாக கொடுத்தாலும் அவளைக் காப்பாற்ற முடியாது. பணம் செல்லாமல் போகிற இடம் இதுதான். இந்த இடத்தை களமாக்கி ஓர் உணர்ச்சிக் கரமான நாவலை இமையம் எழுதியிருக்கிறார்.

ஒரு பெண் தீக்குளித்தால் அவள் படும் வேதனை, அப்பெண்ணை பெற்றவர்கள் உறவினர்கள் படும் வேதனையை அருகில் இருந்தது பார்த்தது போல் இமையம் எழுதியிருக்கிறார். அதனால் முழுமையான வாசக அனுபவம் சாத்தியமாகிருக்கிறது.

மருத்துவமனை காட்சிகள், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளெல்லாம் கண்ணாடியில் பார்ப்பது போல் நம் கண் முன் விரிகிறது உண்மை. இதுவே இந்நாவலின் சிறப்பு.

ரேவதியின் பிணம் தரப்படுகிறது. தோல் உரிக்கப்பட்ட பாம்பு போல் அவள் உடல் இருக்கிறது, அதைப் பார்த்த அம்மா அமராவதி அழுது புலம்பும் வரிகளை கண்ணீரோடுதான் நாம் படிக்க முடியும்.    பிணத்தினுடைய முகத்திலிருந்து கால் வரை இரண்டு கைகளாலும் ஆசையுடன் கைக் குழந்தையை தடவிப் பார்ப்பதுப் போல் தடவிப் பார்த்தாள். பிணத்தின் முகத்தோடு தன்னுடைய முகத்தை வைத்து அழுத்தினாள். ‘தூங்கிட்டியா அம்மா? தூங்கு. இனி ஒனக்கு எந்த தொந்தரவும் இல்ல. தப்பு செஞ்சிட்டோமேன்று இனி நீ அழுவ மாட்ட, எந்த நாயும் இனி ஒன்ன அடிக்க முடியாது. ஒதைக்க முடியாது. இனி அடிக்கு பயந்துகிட்டு எதுத்த வீடு, பக்கத்து வீடுன்னு நீ ஓடி ஒளிய வேண்டியதில்ல. அம்மாவுக்கு தெரிஞ்சிருமோன்னு எதயும் நீ மனசுல போட்டு மறைக்க வேண்டியதில்லை. எங்கம்மாகிட்ட சொல்லிடாதிங்கன்னு யாருகிட்டயும் கெஞ்ச வேண்டியதில்ல….. நீ சாவலடி என் தங்கமே. ஒன்னோட அம்மா நான் செத்தாத்தான் நீ சாவ. என் உசுரு இருக்க மட்டும் நீ என் நெஞ்சில இருப்பம்மா. என் பெண்ணே நல்லாத் தூங்கு…….

‘செல்லாத பணம்’ நாவல் பல கேள்விகளை எழுப்புகிறது. கல்வி நம் பெண் பிள்ளைகளை எப்படி உருவாக்கி இருக்கிறது? பெற்றோருக்கு இருக்கும் (சாதி, மதம், அந்தஸ்து பார்த்தல்) பிற்போக்கு எண்ணங்கள் இன்னும் ஒழிந்து விடவில்லை என்பதையும் சுட்டி காட்டுகிறது.

நம் சமூகத்தில் பெண்ணுரிமை இல்லை. ஆணாதிக்கம் தலை விரித்தாடுகிறது. பெண்கள் தான் தீக்குளிக்கிறார்கள் என்று பெண்களின் மீதான குடும்ப வன்முறையை நாவல் வலுவாக சொல்லி இருக்கிறது.

சமூக எதார்த்தத்தை செல்லாத பணம் படம் பிடித்து காட்டுகிறது. படித்து முடித்த பிறகு நமக்குள் ஏற்படும் மனவலி தவிர்க்க முடியாத ஒன்று.