மரப்பாச்சி சொன்ன ரகசியம் (PB)

 

மரப்பாச்சி சொன்ன இரகசியம்

ஆசிரியர்: யெஸ். பாலபாரதி

வானம் பதிப்பகம் வெளியீடு

2018

 விலை ரூ. 60

 பக்கங்கள் 88

எழுத்தாளர் திரு. யெஸ். பாலபாரதி அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான விருதைப் பெற்றுத் தந்த சிறார் நாவல் இது.

எழுத்தாளர் பாலபாரதி அவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிகை அலுவல், சமூகச் செயல்பாடு என்று பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்தவர். ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து எழுதி வருவது இவருடைய தனிச்சிறப்பு.

குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவைப் பற்றித் துணிச்சலுடன் பேசி, குழந்தைகளுக்கு, பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் ( good touch, bad touch) பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த நூல்.

செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்றை, ஷாலினி என்கிற சிறுமிக்கு அவளுடைய பாட்டி தருகிறார். அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. இளவரசி என்ற பெயரைக் கொண்ட அந்தப் பொம்மையால், ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள்தான் இந்நூல்.

முதலில் கதையைப் பார்க்கலாம்.

மரப்பாச்சிக்கும், ஷாலினிக்கும் நடுவில் நல்ல நட்பு உருவாகி விடுகிறது. பள்ளிக்கும் மரப்பாச்சியை எடுத்துச் செல்கிறாள் ஷாலு. ஷாலினியின் அன்றாட வாழ்க்கையில் மரப்பாச்சி செய்யும் சாகசங்களைப் பேசுகிறது இந்தக் கதை.

ஷாலுவின் தோழியான பூஜாவிற்காக மரப்பாச்சி செய்கிற உதவியே இந்த நூலின் முக்கியமான கருத்தாக அமைகிறது.

பூஜாவின் வீட்டிற்குக் கீழே குடியிருக்கும் தாத்தா, பூஜாவிற்குப் பாலியல் தொந்தரவு தருவதுடன் வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட மரப்பாச்சி, பூஜாவிற்குத் துணிச்சலை ஊட்டியதோடு, அவளுடைய அம்மாவிடம் இந்தப் பிரச்சினையைப் பகிர வைக்கிறது. தீர்வும் கிடைத்துவிடுகிறது.

பூஜாவின் மூலமாக இந்தப் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்கிறார் ஆசிரியர்.

குட் டச், பேட் டச் என்கிற சொற்களுக்கு பாதுகாப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தி மொழி பெயர்த்தது ஆழ்ந்த அர்த்தமுள்ளதாக அமைந்து ஆசிரியருக்குப் பெருமை சேர்க்கிறது. பிரச்சினையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் பெரியவர்களிடம் சொல்லவேண்டும் என்கிற அறிவுரையைக் குழந்தைகளுக்குத் தருவதோடு, இது போன்ற சமயங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று பெற்றோர்களுக்கும் அறிவு புகட்டுகிறது இந்தப் படைப்பு. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில், இதற்கான விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்ட காரணத்துக்காகவே இந்த நூலை, . அனைத்துக் குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

கயிற்றின் மீது நடப்பது போன்ற கடினமான செயலை, எச்சரிக்கையுடனும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் பதித்துள்ளார். பாரம்பரியமான மரப்பாச்சியையும், நவீன யுகத்தையும் இணைத்த விதமே புதுமையானது. மரப்பாச்சி செய்யும் அட்டாகாசங்கள் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. முக்கியமாக பூஜா விஷயத்தில் செய்த சாகசத்தோடு, சேட்டைக்கார நேத்ரா விஷயத்தில் மரப்பாச்சி செய்யும் சாகசங்களும் அற்புதம். பள்ளியில், ஷாலு கையில் இருந்து மரப்பாச்சியைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் சேட்டைக்கார நேத்ராவையும் மரப்பாச்சி படாதபாடு படுத்துகிறது.

எளிமையான நடை, குழந்தைகளுக்கேற்ற சுவாரஸ்யமான கதை சொல்லல், சமூகத்திற்குத் தேவையான அதிமுக்கியமான பிரச்சினை பற்றித் துணிச்சலுடனும் அழுத்தமாகவும் பேசிய விதம் ஆகியவை இந்த நூலின் சிறப்புகள்.

அனைத்துக் குழந்தைகளிடமும் இந்தக் கதையைக் கொண்டு சேர்ப்பது நமது கடமை.