ஆசிரியர் : டாக்டர். அகிலாண்டபாரதி
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்
பக்கங்கள் : 193
ஆண்டு : 2023
விலை: 235/-
**************
நல்ல வெயிலில் ஒரு கூலிங்கிளாஸ்தான் அதிகபட்சம் நமது கண் பாதுகாப்பு. ஆனால் உலகை நமக்கு காட்டும் ஒரே ஜீவன் அது. கண்பற்றி எழுதாத நபர்கள் இல்லை. கண்ணை உதாரணம் காட்டாத கவிஞர் கிடையாது. அதை பற்றி அறிவியல்பூர்வமாக படிக்கவேண்டும் என்றபோது கிடைத்த நூல் இது.
25 சிறு சிறு கட்டுரைகள். நான்கு ஐந்து பங்கங்கள் கொண்ட கட்டுரைகள். அத்தியாயத்தின் இறுதியில் அந்த கட்டுரை தொடர்பான குறிப்புகள் விளக்கங்கள், என அழகான வடிவமைப்பு.
கண்ணைப்பற்றி அறிவியல் பூர்வமான விளக்கப்படம் போல ஆரம்பிக்கிறார். புருவம் முதல் விழித்திரை ஊடுருவி உள்வரை படம் போட்டு காட்டுகிறது. நாம் சாதாரணமாக பார்க்கும் கண்ணின் முழு கட்டமைப்பு அசர வைக்கிறது. மனிதனின் கண்கள் ஒருமணி நேரத்தில் 1200 முறையும் ஒரு நாளில் 28,800 முறையும் மூடித்திறக்கப்படுகின்றனவாம். விழித்திருக்கும் பொழுதிலும் பத்துசதவீத நேரம் நம் கண்கள் மூடியே இருக்குமாம். விழித்துக்கொண்டே தூங்குவது இதுதான்போல.
கண்ணில் வரும் குறைபாடுகளை பற்றி விளக்கம் தொடர்கிறது. பிறவி குறைபாடு வரும் காரணங்கள், அதை உடனே சரிசெய்ய வேண்டிய முக்கியத்துவம், அதை பற்றிய விழிப்புணர்வு குறைபாடு என நிஜ நிகழ்வுகளின் அடிப்படையில் நகர்கிறது. தேவைக்கு கண்ணாடி போடவேண்டிய அவசியம், அதோடு விடாமல் தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது முக்கியம் எனவும் சொல்கிறார். கண்ணாடியைத் துடைப்பதற்கு கண்ணாடியுடன் கொடுக்கப் பட்டிருக்கும் துணியை பயன்படுத்துவதே நல்லதாம். நாமெல்லாம் சட்டையின் நுனி, கர்ச்சீப்.
மாறுகண் அதிர்ஷ்டம் என யாராவது சொன்னால் தலையிலேயே ரெண்டு போடலாம். கொஞ்சம் பார்வையின் சிக்கல்தான் அது. ஆனாலும் சிறு வயதிலேயே அதையும் சரிசெய்ய முடியுமாம். அதை தொடர்ந்து சிகப்பு கண் எனப்படும் மெட்ராஸ் ஐ பற்றிய சிறு கட்டுரை.
கண்தானம் பற்றிய கட்டுரை மனப்பாடம் செய்ய வேண்டிய ஒரு ஆவணம். இந்தியாவில் நாளொன்றுக்கு மரணமடைபவர்களில் 10-20 சதவீதத்தினர் கண் தானம் செய்தாலே கருவிழி பாதிப்புடைய அனைத்து நபர்களுக்கும் கண்ணொளி கிடைக்க வாய்ப்புண்டு என குறிப்பிடுகிறார். முதல் கண் அறுவைச்சிகிச்சை 1905ல் நடந்தது என்பது கூடுதல் தகவல். எனினும் நுறு ஆண்டுகள் ஆகியும் இதைபற்றிய விழிப்புணர்வு இல்லை என வருத்தப்படுகிறார் ஆசிரியர்.
தூசி, அடர்வெளிச்சம் கண்ணை பாதிக்கும் விதம், வருமுன் காக்கும் நடவடிக்கைகள் என அழகாக நகர்கிறது நூல். எந்த சூழ்நிலையிலும் சுயமருத்துவம் கூடவே கூடாது என ஆணித்தரமாக சொல்கிறார். ஏனெனில் எத்தனை சிகிச்சை முறைகள் வந்தாலும் இயற்கையான பார்வைக்கு எதுவும் நிகரில்லை. அதை தவறவிட்டு வருத்தப்படுவதில் பயனில்லை.
கள்ளச்சாராயம், அதன் கெமிக்கல்கள், பார்வையை பறிக்கும் அதன் விபரீதம் எனும் கட்டுரை திகீர்.
சிறுவயதில் கண்ணில் ஏற்படும் குறைகள், நோய்கள், அதை கவனிக்கும் முறைகள், தானாக மருத்துவம் பார்த்துக்கொளுவதால் ஏற்படும் விபரீதம், கணினி தற்போது செல் திரைகளின் அதீத பார்வையிடலால் தோன்றும் குறைகள் என அழகாக சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.
டாக்டர்.அகிலாண்டபாரதி மருத்துவராக மட்டும் இல்லாமல் ஒரு கதாசிரியராகவும் எழுத்தாளராகவும் இருப்பதால், ஒரு அறிவியல் கட்டுரை தொடரை கொஞ்சமும் சலிப்பேற்றாத வகையில் விறுவிறு நடையில் அழகாக எழுதிச்செல்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கிய மருத்துவ புத்தகம் இது.

