தலைப்பு : ஓவியமோ அற்புதமோ – (நாவல்)
ஆசிரியர் : ராஜலட்சுமி நாராயணசாமி
பதிப்பகம் : ஶ்ரீ பதிப்பகம்
ஆண்டு : 2022
விலை: 360/-
**************
//கரியகுன்று போல திண்ணிய உடல், இருக்கிறதா இல்லையா எனத்தெரியாதபடிக்கு ஒரு சரீரம். சராசரி உயரம், மண்வெட்டியும் கடப்பாரையும் பிடித்து இறுகி உருண்டுதிரண்டிருந்த புஜங்கள், வெள்ளி உருகி ஓடுவதுபோல அவன் அங்கக்கட்டுகளில் வழிந்தோடும் வியர்வை, வானத்து இருட்டை எடுத்து பொட்டுவைத்தாற்போல கருமணிகள், அதனுள் மின்னும் நட்சத்திரமாய் கருவிழிகள்……..//

நடுநடுவே கதையின் நாயகனும் ரைட்டருமான நந்தன் எழுதுவதாற்போல வரும் வர்ணனைகள் நமக்கு ஒரு ஆச்சரியத்தை கொடுக்கின்றன. நாயகியின் ஓவியங்களுக்கு ஆசிரியர் எழுதும் விபரங்களும், நாயகனினின் எழுத்து நடையாய் ஆசிரியரின் வித்தியாசமான நடையும் புதுவித வாசிப்பு அனுபவத்தை கொடுக்கின்றன.

ஒரு ஃபேண்டஸி டைப் கதை.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் நந்தன். அவனது நாவல்கள் எழுதப்படும் முன்பே உலகம் முழுதும் எதிபார்ப்பை உருவாக்கி நல்ல வியாபாரம் ஆகும் அளவுக்கு பெரிய நபர். ஆனால் தன் முகத்தை வெளியே காட்டிக்கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை. சராசரியாக மனிதர்களுடன் பயணித்து, அனுபவத்தேடல்களை அடைய அது முட்டுக்கட்டியாகிவிடும் என்பதால் முகம் காட்டா எழுத்தாளனாக வரும் பாத்திரம். அவனது புதிய தொடருக்கு, தொடர் ஓவியம் வரைய உலக அளவில் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.
பூங்குழலி, கதையின் நாயகி. அழகான ஓவியர். பார்ப்பதை அப்படியே வரைவது தவிர அதனுடன் ஓவியரின் முத்திரையை பதிப்பதுபோல அழகாக கற்பனைகளுடன் வரையும் பெண். அவள் இந்த விளம்பரத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறாள்.
இவளது திறமையான ஓவியத்தைப் பார்த்து மயங்கி இவளையே ஒப்பந்தம் செய்கிறார்கள். நாயகனும், நாயகியும் சந்தித்துக்கொள்வதில்லை. அதே சமயம் வெளிநாட்டில் இருக்கும் நாயகன், புதிய நாவலின் களமாக இந்தியா வர, அங்கே பூங்குழலியும் அவனும் மாமல்லபுரத்தில் இன்னார் யாரென்றே தெரியாமல் பழக ஆரம்பிக்க, அவளுக்கு நண்பனாக, மாமல்லபுரத்தில் வாங்கிய ஒரு கல்லால் ஆன அபூர்வ ஓவிய பிரஷ்ஷை பரிசாக தருகிறான் நந்தன்.

ஆரம்பமாகிறது வில்லங்கம்.

அந்த தூரிகையைகொண்டு வரையும் ஓவியங்கள், அவள் நினைப்பதைவிட அதுவாகவே வேறுவகையில் தன்னை தகவமைத்துக்கொள்கிறது. நடக்க இருப்பதை காட்சி ரூபமாக வரைந்துகாட்டுகிறது. அதில் வரும் ஓவிய மனிதர்களை ஏற்கனவே சந்தித்ததுபோன்ற உணர்வுகளில் ஆட்படுகிறாள் பூங்குழலி. அரச கால நாவலுக்காக வரையப்படும் ஓவியங்களில் நிகழ்கால உயிருள்ள நபர்களின் முகங்கள் வந்து உட்கார்ந்துகொள்ள, அந்த தூரிகையின் மர்மம் பற்றி அறிய முற்படுகிறார்கள் நாயகனும் நாயகியும். கதையின் முக்கால்வாசிக்கு அப்புறம், கிட்டத்தட்ட முடிவு நெருங்கும்போதுதான் ஒருவரை ஒருவர் இன்னாரென்றே அறிந்துகொள்கிறார்கள். துணைக்கு பூங்குழலியின் அண்ணனும் சேர்ந்துகொள்ள ஒரு பரபரப்பான த்ரில்லராக வேகமெடுக்கிறது கதை.
புதிய வகையான கதை. கிட்டத்தட்ட, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘டிவைன் லவ்வர்ஸ்’ போன்ற படங்களின் சாயல் முதலில் தோன்றுகிறது. ஆனால், கற்பனையின் லாவகமும், நகரும் வேகமும் வேறுவகையில் கதையை கொண்டுசெல்கின்றன. முக்கியமாக ஆசிரியரின் கைவண்ணத்தில் அங்கங்கே இணையும் கவிதையின் வரிகள் ‘அட’ என ஆச்சரியப்படுத்துகின்றன. கூடவே செய்யுள் வரிகள் போலவும் வருபவை பொருத்தமாக அமைந்து இன்னமும் சுவை கூட்டுகின்றன. பேச்சு நடைக்கும், கால மாற்றத்தின் வழக்கு நடைக்கும் உள்ள வித்தியாசத்தை அனாயசியமாக தண்டிச்செல்கிறார் ஆசிரியர். முடிவை நெருங்க நெருங்க பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. ஓவியம் பற்றி அவரது விவரணைகளும், இடங்களைப் பற்றிய வர்ணனைகளும், ஒரு நாவலை எழுதும் முன் அவர் சேகரித்த தகவலளையும் அவரது உழைப்பையும் விளக்குகிறது.

அழகான மாயஓவியம் போன்ற ஃபேண்டஸி த்ரில்லர்.