தலைப்பு : சிதம்பரம் கோயில் சில உண்மைகள்
ஆசிரியர் : ச.செந்தில்நாதன்
பதிப்பகம் : சிகரம் அறக்கட்டளை
பக்கங்கள் : 64
ஆண்டு : 2007
விலை: 25/-
**************
சிதம்பரம் கோயில் எப்போதும் எனக்கு ஒரு ரகசியக்கனவுதான். சிதம்பர ரகசியம் எனும் சொற்றொடரால் ஒரு மர்மத்திரையை மனதில் ஏற்றியிருந்தார்கள். சிகரம்.ச.செந்தில்நாதனின் “சிதம்பரம் கோயில் சில உண்மைகள்” நூலை கேள்விபட்டதும் வாசிக்கவேண்டும் எனவும் ஆவல் ஏற்பட்டது.
இந்நூலை எழுதவேண்டிய கட்டாயம் பற்றியும், அதற்கான தரவுகளை தேடுவதில் இருந்த சிரமங்களையும் முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர்.
முதல்பகுதியில், இதுவரை சிதம்பரம் கோயிலில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை எழுதுகிறார். இக்கோயில் எழுந்த ஆரம்பகாலம் தொட்டே பிரச்சினைகளின் களமாகவே இருந்து வந்துள்ளது. பிற்காலச்சோழர்களின் காலத்தில்தான் கோயில்கள் அதிகமாக கட்டப்பட்டன என்பது வரலாறு. நந்தனார் காலம் தொட்டு தற்போது ஆறுமுகச்சாமி ஓதுவார் காலம் வரை சிதம்பரம் கோயில் எப்படி பிரச்சினைகளை சந்தித்து வருகிறது எனச் சொல்லுகிறார் ஆசிரியர். புராணக்கதைகள் மூலம் கோயிலை சாதாரணர்கள் இடமிருந்து அந்நியமாக்க எவ்வாறெல்லாம் கதைகள் புனையப்பட்டன என விளக்குகிறார். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் முக்கியமாக இக்கோயில் எப்படி அமைந்தது எனவும் எழுதுகிறார். தசாவதாரம் சினிமாவில் முதலில் காட்டப்படும் காட்சிகூட சிதம்பரம் கோயிலின்மீது இருக்கும் வைணவ தாக்கத்தின் விளைவே எனவும் தோன்றுகிறது.
நந்தன் சரித்திரம் சாகாவரம் பெற்றதன் பிண்ணனி புரிகிறது. தற்போது நாம் வாசிக்கும் தேவாரம் கரையான் அழித்தது போக மீதம்தான் என்பதே அதிர்ச்சி. மனிதனின் சுயநல நோக்கம் எவ்வளவு கலை பொக்கிஷங்களை காவு வாங்குமோ. வள்ளலாரின் புரட்சி, ஆறுமுக ஓதுவாரின் முயற்சி, நீதிமன்ற தீர்ப்பின் சாரம் என பேசுறது இந்த முதல் பகுதி.
இரண்டாம் பகுதியில் சிதம்பரம் கோயிலுக்கும் தீட்சிதர்களுக்கும் இருக்கும் உறவுபற்றி பேசுகிறார். வழக்குகளில் தொன்றுதொட்டு வரும் வழக்கம் என உரைக்கும் சொற்றொடரை மறுக்கிறார் ஆசிரியர். எப்படி தீட்சிதர்களுக்கு அவ்வளவு உரிமை இக்கோயிலின் மீது கிடைத்தது, அதன் காலம் என்ன என்று தெளிவாக விளக்குகிறார். கூற்றுவநாயனார் எனும் சிற்றரசனின் வரலாறு வியப்பூட்டுகிறது. அரசனின் ஆணையையே மறுத்து முடிசூட்ட முடியாது என விலகி ஓடுகின்றனர் தீட்சிதர்கள். சாதாரண மக்கள் எம்மாத்திரம்?
கோயிலின் மேல் நடந்த இரு முக்கிய வழக்குகளை மூன்றாம் பகுதியில் விளக்குகிறார் ஆசிரியர். தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்க தீட்சிதர்கள் மேற்கொண்ட முயற்சிகள், தீர்ப்பின் தன்மை என செல்கிறது இப்பகுதி. முதல்வழக்கு ஆங்கிலேயர் காலத்தில் நடந்தது. இரண்டாவது 1951ல் நடந்தது. இரு வழக்குகளிலும் தீட்சிதர்களின் வாதமாக “சிதம்பரம் கோயில் பொதுக்கோயில் அல்ல. அது தனியார் கோயில். அதன் உரிமை முழுவதும் தீட்சிதர்களுடையது” என்றே இருக்கிறது. இனி அரசு என்ன செய்யவேண்டும் என நான்காம் பகுதியில் எழுதுகிறார் ச.செந்தில்நாதன். தற்போது நடைமுறையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை மூலம் பழைய வழக்குகளின் தீர்ப்புகளில் இருக்கும் ஓட்டைகளை கண்டறிய முடியும் எனவும், தமிழ் பாடும் உரிமைகூட மறுக்கப்படும் ஒரு முழுமையான தமிழ்க்கோயிலை மீட்கும் நடவடிக்கை அவசியம் எனவும் சொல்கிறார் ஆசிரியர்.
இறுதியாக,
//தில்லைக்கோயிலில் எழும் திருமுறைகள் பிரச்சினை வெறும் ஆத்திகர்கள் பிரச்சினை அல்ல. பண்பாட்டுப்பிரச்சினை; மொழியும், ஆன்மீகமும் பண்பாட்டில் அடங்கும்! இப்போது பந்து அரசின் கையில்!
தமிழகஅரசு என்ன செய்யப்போகிறது?//
என முடிக்கிறார்.
வரலாற்று ஆதாரங்களுடன் அருமையான ஆய்வுநூல்.

