சூல் - சோ.தர்மன் - அடையாளம் பதிப்பகம் | panuval.com

 

சோ. தர்மன் எழுதிய “சூல்”

(2019  வருடத்திய சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகம்)

வெளியீடு –  முதல் பதிப்பு – 2016

பதிப்பகத்தார் – அடையாளம், புத்தாநத்தம் –  621310

விலை – ரூபாய்  380.00

 

எழுத்தாளர் சோ. தர்மனுக்கு ஒரு தனி உலகம் உண்டு. எங்கும் காணக்கிடைக்காத உலகத்தை நம்பகமாகத்தன் கற்பனையுலகில் உருவாக்கி தருவதில் வல்லவர் எழுத்தாளர் சோ. தர்மன்.

நேரடியான நடை தான் அவருடைய சொத்து. நாவலில் மிகை என்பதே கிடையாது. எங்கும் காணக்கூடிய, குறிப்பாக கிராம வெளிகளில் பார்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் தான் அவருடைய இந்த நாவலில் வலம் வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில் தர்மன் அவர்கள் அற்புதமான தமிழ் எழுத்தாளராக கருதப்படும் ஒருவர்.

அடித்தள மக்களை சார்ந்து எழுபட்ட நாவல் இது. ஆனந்த விகடன், சுஜாதா அறக்கட்டளை, சாகித்ய அகாடமி, மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகள் விருதுகளை தந்துள்ளன.

இவருடைய படைப்புகள் பல கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இருக்கின்றன. பலர் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

அய்யனார் கோவில் புளியமர நிழலில் கூடியிருந்த மக்களில் இருந்து கதை தொடங்குகிறது. கிராமங்களின் குடிதண்ணீர் தேவையை போக்குவது அந்த கிராமங்களில் உள்ள கண்மாய்கள் தான். கண்மாய் தண்ணீர் இருக்கும் வரை தான் குடிநீர் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடியும். மனிதர்கள் மட்டும் அல்லாமல், கால்நடைகள், ஆடுகள் மற்றும் பசுக்கள் போன்றவற்றிற்கும் கண்மாய் தான் தண்ணீர் தந்து உதவிக்கொண்டு இருக்கும்.

தண்ணீர் வற்றி, தரை தெரியும் காலம் தான் கிராமங்களின் தூரதிர்ஷ்டமான காலம். சிறு சிறு கிணறுகள் தோண்டி தண்ணீர் எடுப்பார்கள். காலத்தில் பொழியும் மழை பொய்த்து விட்டால், கிணற்று தண்ணீரும் கிடைக்காது.

கரை மீது நின்று கொண்டு இருக்கும் பரம்பரை நீர்பாய்ச்சி பல்வேறு சாத்திரங்கள் செய்து கொண்டு இருப்பதில் இருந்து கதை தொடங்குகிறது.

கண்களில் தென்படும் பனைமரங்கள், கொவ்வை செடிகள், புளியமரம் போன்றவற்றை பற்றி எழுத்தாளர் எளிய நடையில் விவரிப்பது அற்புதமாக இருக்கிறது.

படிக்க ஆரம்பித்தவுடனே, நாமும் அவருடன் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம். நம்மை வரதம்பட்டி, பிக்கிலிப்பட்டி, வள்ளிநாயகிபுரம், ராவுத்தன்பட்டி போன்ற கிராமங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லுகிறார்.

ஊர் சாற்றும் தொத்தல் பகடை தெருக்கள் வழியே  ஊர் சாற்றிக்கொண்டு போவதை விவரிப்பது அற்புதமாக இருக்கிறது.

எங்கும் கிராமத்து மக்களின் பேச்சு வாசனை தான் நம்மை வசப்படுத்துகிறது.

“பொம்பளைகளா, பொக்குகள் மட்டும் தின்னுங்க; நல்ல பருப்பை தின்னா பிறகு சம்பளம் தரமாட்டான். திங்கணும்கிறதுக்காகவே பருப்பை உடைக்கக்கூடாது. காது கேக்கா பொம்பளைகளா?”

“யாரு எப்ப கேக்கலைன்னு சொன்னாக மாப்ள; தெளிவா கேட்டுக்க; ஒங்க அக்கா புள்ளபெத்திருக்கா; அந்தப்புள்ள தான் அழுகுது; நீங்க போயி அழுகைச் சத்தத்தை  அமத்துங்க மாப்ள; மாமனப் பாத்ததும் அழுகை நின்றுரும்.”

“சூல்” – அனைவரும் படித்து இன்புற வேண்டிய நாவல்.