
அந்தோணியின் ஆட்டுக்குட்டி
2005 வெளியீடு
ஆசிரியர்: மா. கமலவேலன்
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
விலை ரூ. 25
பக்கங்கள்: 64
பால புரஸ்கார் விருதைப் பெறுகின்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமையை, இந்த நூலின் ஆசிரியரான திரு. மா. கமலவேலன் பெறுகிறார். “ அந்தோணியின் ஆட்டுக்குட்டி” என்ற இந்த நூல், 2010 ஆம் ஆண்டிற்கான விருதை வென்றது.
சிறார் இலக்கியத்தில் இவருடைய பங்களிப்பு மகத்தானது. கண்ணன், அரும்பு, கோகுலம், சிறுவர் மணி, சுட்டி விகடன் போன்ற சிறார் இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை,, நாடகம், வாழ்க்கை வரலாறு, வானொலி மற்றும் தொலைக்காட்சி சித்திரங்கள், உரைச் சித்திரங்கள் என்று பற்பல நூல்களை எழுதி இலக்கியத் தொண்டாற்றியுள்ளார்.
பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயா அவர்கள் எழுதிய, “ இந்தியா 2020” என்ற நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்தது இவருடைய மிக முக்கியமான சாதனை. இதைத் தவிர வாழ்கை வரலாறு நூல்களில் திரு. கே. ஆர். நாராயணன் பற்றிய சிறுவர்களுக்கான நூல், தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. கோவை லில்லிதேவ சிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது மற்றும் மால்கம் ஆதிசேஷையா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
காவல் துறை உயரதிகாரியான திரு. சைலேந்திர பாபு அவர்கள் சாலைப் பாதுகாப்பு வார விழாவில் ஆற்றிய உரை, இந்தக் கதை எழுதத் தூண்டியதாகத் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
விபத்தில் அடி பட்டவர்களுக்கு உதவி கிடைக்காதது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்கள் திருடப்படுவதையும் பற்றிய அவருடைய ஆதங்கம் ஆசிரியரின் மனதை வெகுவாகப் பாதித்திருக்கின்றது.
தன்னைப் பாதித்த விஷயங்களையே கதைக்களமாக அமைத்து மனிதநேயத்தைப் போற்றும் விதமாகக் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டிற்குரியது.
அந்தோணி என்கிற ஏழைச் சிறுவன் பற்றிய கதை இது. தந்தையை இழந்து, தாயின் பூ வியாபாரத்தில் சொற்ப வருமானத்தில் அந்தோணியின் குடும்பம் தள்ளாடுகிறது. வறுமையின் காரணமாகக் கல்வியைக் கைவிட்டு ஆடு மேய்க்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறான் அந்தோணி. படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இளைஞர்கள் சேர்ந்து நடத்தும் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து, சாலை விதிகளையும், மற்ற பொதுவான விஷயங்களையும் தெரிந்து கொள்கிறான்.
அவர்களுடைய ஊரைச் சேர்ந்த கொடியவனான இராயப்பனும், அவனுடைய கூட்டாளிகளும் ஊரில் நடக்கவிருக்கும் தோமையார் திருவிழாவிற்காக மக்களை மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். அந்தோணியின் அம்மாவிடம் பணம் இல்லாததால், அந்தோணிக்குப் பிரியமான ஆட்டுக்குட்டியைக் கவர்ந்து செல்கிறான் இராயப்பன்.
ஆட்டுக்குட்டியை மீட்கும் நோக்கத்துடன் நடு இரவில் செல்லும் அந்தோணி, சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி நடக்கும் விதத்தைப் பார்க்கிறான். இராயப்பனும் அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து விபத்தில் காயமுற்றுக் கிடக்கும் மனிதர்களின் உடைமைகளைப் பறிப்பதைப் பார்த்துப் பெறுகிறான். பொறுப்புணர்வுடன் விபத்தைப் பற்றிக் காவல்துறைக்குத் தெரிவித்துவிடுகிறான். காயமுற்ற பயணிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கிறது. இராயப்பன் குழு செய்த திருட்டையும் அந்தோணி, காவல் துறை அதிகாரிடம் கூறி விடுவதால், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதோடு தண்டனையும் பெறுகிறார்கள். ஆட்டுக்குட்டியும் அந்தோணிக்குத் திரும்பக் கிடைக்கிறது.
விபத்தில் அடிபட்டோர்க்கு உதவ வேண்டும் என்கிற விழிப்புணர்வைச் சிறுவர்களுக்குத் தூண்டுகிற நாவல்; மற்றும் மனிதநேயத்தை அந்தோணி மூலமாக வலியுறுத்துவதோடு, குற்றத்தைக் கண்டு அஞ்சி ஒளியாமல், எதிர்க்கும் துணிச்சலையும் இளையோர்க்கு ஊட்டுகிறது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தேவையான நீதிகளைக் கதையோடு பொருத்தமாக இணைத்து, சுவாரஸ்யமான மொழிநடையில், எளிமையாகப் படைத்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
