ஆதனின் பொம்மை
ஆசிரியர்: உதயசங்கர்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
விலை ரூ. 80
வானம் பதிப்பகம்
96 பக்கங்கள்
எழுத்தாளர் திரு. உதயசங்கர் அவர்கள் எழுதி, 2021 பிப்ரவரியில் வானம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தச் சிறார் நாவலுக்கு, 2023 ஆம் ஆண்டிற்கான, “ பால சாகித்திய புரஸ்கார் விருது” கிடைத்தது.
கரிசல் இலக்கியத்தின் தலைமையகமான கோவில்பட்டியில் வசிக்கும் இவர், இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருதைப் பிறந்த மண்ணுக்கு சமர்ப்பணம் செய்து மகிழ்ந்தார்.
கடந்த 44 ஆண்டுகளாக இவர் எழுதிய படைப்புகள் பற்பல. பெரியவர்களுக்கான சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், குறுநாவல், கட்டுரை நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்து இலக்கியத் தொண்டாற்றியுள்ளார். சிறார் நூல்கள் என்று பார்த்தால் இதுவரை 118 நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிறுகதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், இளையோர் கதை, மொழிபெயர்ப்பு நூல்கள் என்பவை அடங்கும்.
இவருக்குப் பெருமை சேர்க்கும் மற்ற விருதுகளில் தமுஎகச புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை நூல், கலை இலக்கியப் பெருமன்றம் சிறுவர் இலக்கிய விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது, தமிழ்ப் பேராயம் அழ. வள்ளியப்பா விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
கீழடி ஆய்வு முடிவுகள் வந்தபோது தமிழ்ப் பண்பாட்டின் செழுமையையும், தொன்மையையும் பற்றிய சர்ச்சை எழுந்து மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. அந்த அறிக்கையில் வந்த கருத்துகளை ஒட்டி உதயசங்கர் அவர்கள் தன்னுடைய கதைக்களனை அமைத்திருந்தது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இவருடைய மற்றொரு படைப்பான, “புலிக்குகை மர்மம் ” என்கிற கதையில் வரும் கேப்டன் பாலுவே இங்கும் நாயகன். கோவில்பட்டியில் இருந்து கீழடியில் இருக்கும் மாமாவின் வீட்டிற்கு விடுமுறை நாட்களைக் கழிக்க வேண்டாவெறுப்பாக வருகின்றான் பாலு. மாமாவின் மகளான மதுமிதா நல்ல புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் இருக்கிறாள். வீட்டில் சிறிய நூலகத்தையே வைத்திருக்கும் மதுமிதா, செஸ் மற்றும் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளில் பரிசுகளை வென்றிருப்பதோடு கவிதை எழுதுவது, புத்தகம் வாசிப்பது போன்று பல்வேறு திறமைகளைக் கொண்டவளாக இருப்பது பாலுவிற்கு ஆச்சரியமளிக்கிறது.
திடீரென்று கதையில் வரும் திருப்பம் மிகவும் சுவாரஸ்யமானது. மாமாவுடன் தென்னந்தோப்பிற்குச் செல்லும் பாலுவுக்குப் பொம்மையின் உருவத்தில் ஒரு மண்பானை ஓட்டுச்சில் கிடைக்கிறது. அதிலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதன் என்கிற சிறுவன் தோன்றுகிறான். கால யந்திரத்தில் பாலுவைத் தன்னுடைய காலகட்டத்திற்குக் கூட்டிச் செல்கிறான்.
பழந்தமிழர் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு தகவல்களைப் பார்த்து, கேட்டு, அனுபவித்துக் தெரிந்து கொள்கிறான் பாலு.
பழங்காலத் தமிழர் உணவு, சாதி, மத, இன வேறுபாடு இல்லாத சமுதாயம், வர்ண பேதம் இல்லாத வாழ்க்கை, ஆண், பெண் கல்வியில் சமத்துவம் என்று அனைத்துமே சிறப்பாக இருந்திருக்கின்றன.
கதை கீழடியில் தொடங்கி சிந்து சமவெளி மக்களின் நாகரிகம், அதன் மேன்மை, ஆரியர் வருகை, ஆரியர்களின் நரபலி போன்ற காட்டுமிராண்டித்தனமான வழக்கங்கள், அவர்களால் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் தெற்கில் வைகை நதிக்கரையில் புதிய நகரை நிர்மாணிப்பது வரை தொடர்கிறது.
தொன்மை வாய்ந்த தமிழ் மண்ணின் வரலாறு இளையோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கதையாகத் தரப்பட்டுள்ள விதம் மிகவும் சிறப்பு.
விறுவிறுப்பான கதையோட்டம், ஆர்வத்தைத் தூண்டும் நடை, எளிமையான மொழி, கீழடி ஆய்வுகளின் சிறப்புகளைப் பொருத்தமாகச் சேர்த்தது போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த நூலை விருதிற்குத் தகுதியானதாக அறிவிக்கின்றன.
இளையோர் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் இது.
புவனா சந்திரசேகரன்.
