
25.01.26 ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கு குவிகம் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பல துறைகளில் கோலோச்சிய முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இழப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை.
குவிகத்துடன் தொடர்பு கொண்டவர்.
மார்ச் 4, 2025 அன்று பேராசியர் சிந்தாமணி மொழிபெயர்த்து , குவிகம் பதிப்பகத்தில் வெளியிட்ட பொன்னியின் செல்வன் ஆங்கில மீள் பதிவின் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கி சிறப்பானதொரு உரையும் நிகழ்த்தியவர்.
குவிகம் அளவளாவலில் “ஆழ்வார்கள் அமுது” என்ற தலைப்பில் நவம்பர் 9 , 2025 அன்று உரை நிகழ்த்தி இலக்கிய இன்பத்தை வழங்கியவர்.
அன்னாரின் மறைவு குறித்து அவரது உள்ளங்கவர்ந்த நண்பர் பேராசிரியர் சிந்தாமணி அவர்கள் எழுதிய உருக்கமான அஞ்சலி :
தமிழ்க் கடல் அமரர் முனைவர். தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்களை நான் ஆங்கில மொழியாக்கம் செய்த ” பொன்னியின் செல்வன் ” நூல் வெளியீட்டு விழா அன்றுதான் என் வாழ்வில் முதல்முறையாகச் சந்திக்கும் நற்பேறு பெற்றேன். அவ்விழாவிற்குத் தலைமையேற்று என்னை மனதார வாழ்த்தினர். என் ஏற்புரையில், அவர் என்னை வாழ்த்திப் பேசிய பேச்சை விட உயரிய விருது எனக்கு ஏதும் தேவையில்லை எனச் சொன்னேன்.
அவரோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம் பற்றிய சில நினைவுகள்.அவர் நிகழ்த்தியுள்ள அற்புதமான இலக்கிய உரைகளைப் பன்முறை கேட்டு அவர்பால் மிகுந்த பக்தி கொண்டு இருந்தேன்.
முகநூலில் அவர் எழுதியிருந்த ஒரு வசன கவிதையைப் படித்தேன்:
பாவம்! வாயில்லாச் சீவன்கள்
புல்லைக் கட்டுக் கட்டாய்ப் போட்டனர்
ஆடுகள் கத்திக் கொண்டு விரைந்து வந்தன
புண்ணாக்கை வீசை வீசையாய்ப் போட்டனர்
மாடுகள் துள்ளிக் குதித்துத் தாவி வந்தன
தானியங்களைக் கூடை கூடையாய் வீசினர்.
கோழிகள் வேக வேகமாய் ஓடி வந்தன.
ஏன் இந்த இலவசக் கரிசனம்?
எல்லாம் முடிந்தபின் வெட்டிக்
கூட்டாய்த் தின்று
கொழுக்கத்தான்!
பாவம் வாயிலாச் சீவன்கள்!
ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்தில் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முகநூலில் பதிவு செய்தேன். அதைப் படித்த அவர், தம் முகநூலில் ஒரு சிறிய முன்னுரையோடு என் மொழியாக்கத்தைப் பதிவு செய்தார்:
This is a translation of my verse entitled ‘paavam vaai illaa seevangal’ by an English Professor by name Chintamani whom I am yet to see. It excels even the original that compelled me to post it
Alas! Dumb creatures
They threw bundles and bundles of grass
Sheep came screaming and scampering.
They hurled pounds and pounds of oil cakes
Cows came leaping and hopping.
They scattered baskets and baskets of grains.
Hens came hurrying and scurrying.
Why this gratuitous solicitude?
Only to slaughter for mob feasting and fattening after all is over.
Alas! Dumb creatures. ( K. Chintamani)
அவர் எனக்குத் தந்த நற்சான்றிதழைப் படித்த போது நான் அடைந்த பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை.
அவர் மேல் கொண்ட பக்தியால், சில வெண்பாக்களை அவர் மீது இயற்றினேன்.
கந்த னருளால் கனிந்ததே எம்ஞான/
சுந்தரத் தெய்வத் தொடுறவு- செந்தமிழின்/
ஆழம் அகலமறி அற்புதரி வர்திருத்தாள்/
ஏழையன்ப ணிந்தன னின்று.
எம்மைப் பணிகொண்ட எந்தையிவர் தாள்பணிந்தேன்/
செம்மை நலம்,புகழ் செல்வமொடு- எம்ஞான/
சுந்தரப் பெம்மான் சுடர்வேலன் பேரருளால்/
சந்ததம் வாழ்க தழைத்து.
பன்மொழி வித்தகர் பல்லா யிரர்வியக்கும்/
நன்மொழி நாவலர் நல்லவர்- இன்மொழி/
ஞானசுந்த ரப்பெம்மான் நற்பண்பு நம்மவர்க்குத்/
தேனமு தென்றே தெளி.
ஞானவடி வார்ந்தவெம் ஞானசுந்த ரப்பெம்மான்/
தேனமுத நற்றாள் தினந்தொழுதேன்- ஊனுருக்கும்/
பேரன்பு சால்மேதை பேதையெனை ஆட்கொண்டார்/
பேரன்பு யான்பெற்ற பேறு.
நற்றமிழ்முற் றக்கற்ற ஞானசுந்த ரப்பெம்மான்/
பொற்றாள் பணிந்தென்றும் போற்றுகின்றேன்- எற்றென்/
றுரைப்பனவர் பேரறிவு ஊமையிப் பேதை/
விரைமலர்த்தாள் தாழ்ந்தனன்மண் வீழ்ந்து.
நற்றமிழ் வல்லவெம் ஞானசுந்த ரப்பெம்மான்/
சொற்றமிழ்த்தி றம்நம் செவிக்கமுது- கற்றுணர்ந்து/
நெஞ்சைக் கரைவிக்கும் நீர்மையர் வாழ்கஅவர்/
கஞ்சமலர்த் தாள்என் கதி.
( கு. சிந்தாமணி)
அவர் எழுதியுள்ள ‘ கற்பக மலர்கள்’ என்ற தலைப்புடைய 133 திருக்குறள் கட்டுரைகள் கொண்ட நூலை செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடத் திட்டமிட்டது. அந்நேரத்தில், என் வாழ்வில் அவரை ஒருமுறை மட்டுமே சந்தித்திருந்த என் பெயரை ஐயா அவர்கள் பரிந்துரைத்தார். இன்றுவரை ஏன் அவர் செய்தார் என்பது வியப்பாகவும், புதிராகவும் உள்ளது.
என் வாழ்வின் மிகப்பெரிய நற்பேறு என்ற பணிவுடன், பக்தியுடன், அவர் நூலை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டுரையை மொழிபெயர்த்தப் பின்னர் அவருக்கு அனுப்புவேன். அவர் அதை நன்கு ஆழ்ந்து படித்து, என் மொழியாக்கத்தை வியந்து பாராட்டுவார். அந்த மேதை சொல் எனக்கு மகிழ்ச்சியாக இருந்த போதிலும், கூச்சத்தில் நெளிவேன். செம்மைசேர் திருத்தங்களும் சொல்வார். அவற்றை அவ்வண்ணமே பதிவுசெய்வேன்.
இதுவரை 99 கட்டுரைகள் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்பிவிட்டேன். 99 ஆவது கட்டுரைக்கு அவருடைய பதில் கடந்த நான்கு நாட்களாக வரவில்லை. மேலும் ஒவ்வொரு நாளும், நான் காலைவணக்கம் என அவருக்கு வணக்கம் தெரிவிப்பேன் Whatsappல். அவரும் காலை வணக்கம் ஐயா எனப் பதிவிடுவார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடைவிடாமல் நாள்தோறும் அவரும், நானும் காலைவணக்கப் பதிவுகளப் பரிமாறிக் கொள்வது தவறாது நிகழ்ந்துவந்தது.
கடந்த நான்கு நாட்களாக அவரிடம் இருந்து காலை வணக்கம் என்ற பதிவு வரவில்லை. ஏன் எனத் தெரியவில்லை. அவர் மறைவு செய்தியை ஒரு நண்பர் மூலமாக அறிந்த போது, இதயம் நொறுங்கியது போல உணர்ந்தேன். அவருடைய மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். அவருடைய மருமகள் என்னோடு பேசி, வணக்கத்திற்குரிய ஐயா மறைந்த செய்தியை உறுதிப்படுத்தினார். கண்கள் கலங்கின; கையறுநிலையில் செய்வதறியாது திகைத்தேன்.
அன்பே வடிவான, அருளுள்ளம் கொண்ட தெ. ஞா ஐயா அவர்கள் எனக்கு வழிபடும் தெய்வம். என் பெற்றோர்களை நாள்தோறும் வணங்குவதைப் போல, ஐயா அவர்களையும் நாள்தோறும் காலை, இரவு இருநேரங்களிலும் வணங்குகின்றேன்.
இனி அவர் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை எவ்வாறு செய்வது, தொடர்வது அவருடைய செம்மைசேர் திருத்தங்களின்றி, இன்சொற்களின்றி என மயங்குகின்றேன்.
இறுதியாக நான் அவருக்கு அனுப்பிய 99 ஆவது கட்டுரையின் தலைப்பு ‘நிறைகுடங்கள்’. எத்தனை பொருத்தமான தலைப்பு அவருக்கு. தெ.ஞா. ஐயா அவர்கள் நிறைகுடம் – RICH REPOSITORY OF PERFECTION- PARAGON OF PERFECTION- A POT FULL TO THE BRIM. அக்கட்டுரையின் இறுதியில் அவர் எழுதியிருந்த வாசகங்களுக்கு அவரே இலக்கியமாக உள்ளார். அதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:
Only because of their incredible virtues, do the paragons of perfection dazzle like glittering carbuncle gems while alive and even after their demise, the radiance and lustre of their undying and undiminished glory not fading out even after their departure from this earthly abode.
பேரறிஞர் தெ.ஞா அவர்களுக்கு என் நெஞ்சம் நெகிழும் பக்தியை, அன்பை மாலையாகத் தொடுத்து அவர் திருத்தாள்களில் சூடி அஞ்சலி செலுத்துகின்றேன். நம்மோடு வாழ்ந்த நிறைகுடமாகிய சான்றாண்மை மிக்க ஐயா இனி இறைவனால் கொண்டாடப்பட்டு என்றென்றும் அவன் திருவருளில் நிறைந்து, கலந்து வாழ்வார் என்பது திண்ணம். அவரோடு இந்த அற்புத உறவை எனக்கருளிய இறையருளைப் போற்றி வணங்குகின்றேன்
அவரது வாழ்க்கைக் குறிப்பு மற்றும் சிறப்புகள்
மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் ஞானசுந்தரம் பிறந்தார். கும்பக்கோணம் அரசு கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர்ச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்பவழ நடையில் அமைந்த திவ்யப்பிரபந்த உரைகளைப் பற்றியதாகும். இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.

பச்சையப்பன் கல்லூரி, பரமத்தி வேலூர்க் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னைக் கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றிலும் ஈராண்டுகள் அயற்பணியாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலுமாக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணிசெய்துள்ளார்.
இறுதியாக 1993இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். பின்னர் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு அடைந்தார்.
புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
மூன்றாண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார்.
எழுதிய நூல்கள் எண்ணற்றவை. அவற்றுள் முக்கியமானவை:
- வைணவ உரை வளம்,
- குறுந்தொகைத் தெளிவு,
- கற்பக மலர்கள் (திருக்குறள் கட்டுரைகள்)
இராம காதை-முதலும் வழியும் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்,
யுத்த காண்டம் - திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி-மூலமும் உரையும்
- வைணவக் கலைச்சொல் அகராதி
- திருக்குறள் கட்டுரைகள்
- என் இலக்கியத் தேடல்
சென்னை, கோவை கம்பன் கழகங்களும் கங்கைப் பதிப்பகமும் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்புகளின் பதிப்பாசிரியர் குழுவில் ஞானசுந்தரம் இடம்பெற்றார்.
விருதுகள்:
நல்லாசிரியர் விருது, சிறந்த தமிழ்ப் பேராசிரியர் விருது, தமிழறிஞர் விருது, சடையப்பர் விருது , இராசா சர் முத்தையா செட்டியார் விருது,
கவிஞர் வாலி விருது, சாதனையாளர் விருது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் திறனாய்வாளர் விருது போன்ற பல விருதுகள் பெற்று அந்த விருதுகளுக்குப் புகழ் சேர்த்தவர்.
