
மார்கரெட் எலிசபெத் நோபிள் என்பதுதான் நிவேதிதாவின் இயற்பெயர். அயர்லாந்தின் டங்கானன் என்ற ஊரில் 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் சாமுவேல் ரிச்மாண்ட் நோபிள், மேரி இஸபெல் ஹாமில்டன் தம்பதியினருக்கு மூத்த மகளாக அவர் பிறந்தார். ஆரம்பத்தில் கிறிஸ்தவ மதத்தின் மீதும் புத்த மதக் கருத்துகளின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1884-ம் ஆண்டு ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த நிவேதிதா, புதிய கல்வி முறையை குழந்தைகளுக்குக் கற்பிக்க 1892-ம் ஆண்டு ஒரு பள்ளியைத் தொடங்கினார். 1895-ம் ஆண்டு, இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் நிவேதிதா. விவேகானந்தரின் கருத்துகளும் இந்தியா பற்றிய பெருமைகளும் சகோதரி நிவேதிதாவை இந்தியாவுக்கு வருமாறு தூண்டின.
1898-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு ஒரு மாணவியாக வந்த அவருக்கு 1898-ம் ஆண்டு, மார்ச்சில் தீட்சை அளித்த விவேகானந்தர், அவருக்கு ‘நிவேதிதா’ என்ற பெயரைச் சூட்டினார். ‘அர்ப்பணிப்பு’ என்பதுதான் அதன் பொருள்.
நிவேதிதா தான் நம்ப முடியாத பல கருத்துகளுக்கு விவேகானந்தரிடமிருந்து வாதங்களின் முலம் உணர்ந்து அவற்றில் தெளிவினைப் பெற்றார்.ஆன்மிக வாழ்வைவிட மக்களுக்கான சேவையே அப்போதைய தேவை என்பதை உணர்ந்த நிவேதிதா, கொல்கத்தாவில் பெண்களுக்காகத் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அன்னை சாரதா தேவிதான் அதை திறந்து வைத்தார். அப்போது முதலே அன்னை சாரதாதேவியை தனது குருவாக வரித்துக்கொண்டார் நிவேதிதா. அன்னையிடம் பேசுவதற்காகவே வங்காளம் கற்றுக்கொண்டார் அவர். அன்னையின் ஆன்மிகக்கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினார்.
ஆதரவற்ற பெண்களுக்கு ஓவியம் வரைதல், துணி தைத்தல், மண் பொம்மைகள் தயாரித்தல் போன்றவற்றைப் பயிற்றுவித்தார். தனது சேவைகளுக்கான செலவுகளுக்காக அமெரிக்க, இங்கிலாந்து நண்பர்களிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொண்டார்.
கொல்கத்தாவை பிளேக் நோய் கடுமையாகத் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ தாதியாக சேவை செய்து உதவினார் நிவேதிதா. அப்போதுதான் கொல்கத்தா மக்களால், `சகோதரி’ என்று அழைக்கப்பட்டார். மேலைநாட்டினருக்கு இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ’ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1901-ம் ஆண்டு நிவேதிதா தன் சமூகப் பணிகளுடன் தனது ஆன்மிகம் குறித்த தேடலையும் தொடங்கினார். 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவு அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால்,அவர் தன் பணிகளை இன்னும் அதிகமான அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யத் தொடங்கினார்.
சுவாமி விவேகானந்தருக்குப் பிறகு அரவிந்தருடன் நட்பானார். இந்தியாவின் விடுதலை போராட்ட நிலைப்பட்டில் அவர் மீது கோபம் கொண்டிருந்தது அதன் காரண்மாக .பிரிட்டிஷ் அரசு ராமகிருஷ்ண இயக்கத்தை முடக்கிவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தால் அதில் இருந்து விலகிக்கொண்டார்.
நிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புணர்வு குறித்தும்தான் இருந்தன. இவரது கட்டுரைகள் படித்த இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இந்திய சுதந்திரம் உச்சம் பெறாத காலத்திலேயே வங்கமொழியின் ‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய மொழியாக அறிவித்து, அதைத் தனது பள்ளியில் பாடச் செய்தார்.
1902-ம் ஆண்டு டிசம்பரில் சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதா சென்னையில் பல்வேறு கருத்தரங்கங்களிலும் விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவிலும் கலந்துகொண்டார். பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `அறிவியல் சார்ந்த நடைமுறைக் கல்வியே நாளைய இந்தியாவை வளமிக்கதாக மாற்றும்’ என்று தொடர்ந்து எழுதினார். இந்தியாவின் பாரம்பர்யம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து ஆழ்ந்து அறிந்துகொண்டார்.இந்தியாவின் தேசியக்கொடியை ஆரம்ப காலத்திலேயே வடிவமைத்தார் சகோதரி நிவேதிதா. இவர் உருவாக்கிய தேசியக்கொடியில் வஜ்ஜிராயுதம் மற்றும் தீபங்களை அமைத்திருந்தார். இந்திய ஓவியங்களை புனரமைக்க நந்தலால் போஸ், அஜித் ஹல்தார் போன்ற ஓவியர்களை ஆதரித்தார். தாகூரால் ‘லோகமாதா’ என்றும், அரவிந்த் கோஷால் ‘அக்னிசிகா’ என்றும், அரவிந்தரால் ‘வீரத்துறவி’ என்றும் போற்றப்பட்டார்.
1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். பாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் ‘எங்கே உங்கள் மனைவி?’ என்று கேட்டார். அவர் ‘எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை’ என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீட்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது. பாரதி, `தேசிய கீதங்கள்’ என்ற நூலின் முகப்பில், தனது ஆன்மிக குருவான நிவேதிதா தேவிதான் அந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர் என்று புகழ்ந்துள்ளார்.
நிவேதிதாவின் பேச்சும் எழுத்துக்களும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டவர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது. உபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு மிகவும் விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகி அவ்வப்போது கேட்பார்..
1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் டார்ஜிலிங் சென்றார். சகோதரி நிவேதிதா. அங்கு நிலவிய தட்பவெப்பநிலை அவருக்கு ஒப்புக்கொள்ளவில்லை.அதனால் அவரது உடல் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில், தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக எழுதி வைத்தார். 1911, அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்தார். ‘என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது’ என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் இறைவன் திருவடி சேர்ந்தார்.
இந்தியர்களின், ஆன்மீகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, விளங்கியவர்.இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தை ஆழமாகவும்,அழுத்தமாகவும் பதித்தவர் ஆவார். கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை எந்த நாளும் நாம் போற்றி வாழ்வோம்.
