அத்தியாயம் பதிமூன்று

பகவத் கீதையின் ஐந்தாம் அதிகாரமான கர்ம சந்நியாச யோகம், அர்ஜுனனின் மனதில் எழும் ஒரு நுணுக்கமான ஆனால் ஆழமான குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கிறது. பகவத் கீதையில் மூன்று அத்தியாயங்கள் சந்நியாசத்தைத் தங்கள் தலைப்பாக ஏற்று நிற்கின்றன. அவை நான்காம் அதிகாரமான ஞான கர்ம சந்நியாச யோகம், ஐந்தாம் அத்தியாயமான கர்ம சந்நியாச யோகம் மற்றும் பதினெட்டாவது அத்தியாயமான மோக்ஷ சந்நியாசம் என்பவையாம். ஆறாவது அத்தியாயத்திலும் முதல் ஆறு சுலோகங்கள் சந்நியாசத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஒரு இல்லறத்தானுக்கு, ஒரு இல்லறத்தானால் அறிவுறுத்தப்பட்டு, ஒரு இல்லறத்தானால் எழுதப்பட்ட ஒரு காவியத்தில் சந்நியாசத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஏன்? நியாச என்ற சொல் தூய்மைப் படுத்துவதைக் குறிக்கும். சம் என்றால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து என்று பொருள். அதாவது வேண்டாதனவற்றை விட்டெறிந்துவிட்டு தூய மனதுடன் அமைதியாய் இருப்பதே இந்தச்சொல்லின் அடையாளம்.
வைதீக பரம்பரையில், ஒரு மனிதனில் வாழ்க்கையின் பருவ நிலைகளையும் ஆசிரமம் என்ற சொல் மூலமே குறித்தனர். ஒரு மாணவனாக அறிவை வளர்த்துக் கொள்ளும் பருவமே பிரும்மசரிய ஆசிரமம் எனப் பட்டது. இல்லறத்தானாக இருப்பது கிருஹஸ்த ஆசிரமம் எனப்பட்டது. பொறுப்புக்களில் இருந்து மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு கடவுள் சிந்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே வானப்பிரஸ்த ஆசிரமம் எனப்பட்டது. சுவாமி பரமார்த்தானந்தா இந்த ஆசிரமத்தில் இருப்பவர், தன் வீட்டிலேயே ஒரு விருந்தாளியாய் எதிலும் பட்டும் படாமலும் இருக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும் என்பார். இவை அனைத்துமே சந்நியாசத்திற்குப் போடப்படும் அடித்தளங்களாக போற்றப்பட்டன. திட்டமிட்ட நன்கு வழிநடத்தப் பட்ட முயற்சியே சந்நியாசத்திற்கு ஆதாரமாய் அமைந்தது.
சந்நியாசம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இவற்றில் முதன்மையானது துறப்பது என்பதே. எதைத் துறக்க வேண்டும்? நம் அறியாமையையும், நம் அகங்காரத்தையும் துறக்க வேண்டும். வித்யாரண்யர் சன்னியாசிகளை இரண்டு வகையாகப் பகுத்திருக்கிறார். ஞானம் வேண்டி கடவுள் தத்துவத்தைக் குருவிடம் பணிவுடன் கற்று உணர்ந்து, சிந்தனையின் மூலம் ஞானம் பெறும் சந்நியாசி, திட்டமிட்டு, உழைத்து, நல்வழிப்பட்டு, சந்நியாசியாகிறான். இந்த சந்நியாசிகளையே ஆசிரம சந்நியாசிகள் என்பர். ஒரு இல்லறத்தானும் தியானத்தின் மூலம் ஞானம் பெற்று தன்னை உணர்ந்து வித்வத் சந்நியாசியாகலாம். பகவான் ரமணரும் தனது உபதேச சாரத்தில் நாம் செய்யும் செயல்கள் எவ்வாறு பறந்து விரிந்து கொண்டே போய், நம்மை ஒரு சிலந்தி வலையில் மாட்டிய ஒரு பூச்சியைப் போல சம்சாரக் கடலில் மாட்டிக்கொண்டு அவதிப்பட வைக்கும் என்பதையும், செயலில் இருந்து மெல்ல மெல்ல துறவு மூலம் வெளி வர வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்.
முந்தைய அதிகாரங்களில், கிருஷ்ணர் கர்ம யோகத்தையும் சந்நியாசத்தையும் புகழ்ந்து பேசியிருப்பதால், இவ்விரண்டில் எது உயர்ந்த பாதை என்பதில் அர்ஜுனனுக்கு சந்தேகம் எழுகிறது. செயலை விட்டு விலகும் சந்நியாச வாழ்க்கை மேலானதா, அல்லது கடமைகளைச் செய்துகொண்டே வாழும் கர்ம யோக வாழ்க்கை சிறந்ததா என்பதே அவனுடைய கேள்வியாகும்.
இந்த அதிகாரம், இந்த இரண்டு பாதைகளும் எதிர்மறையானவை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பொறுப்புக்களைத் துறந்து துறவு மேற்கொள்வது ஆசிரம சந்நியாசத்தைக் குறிக்கும். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் ஐந்து விதமான துறவிகளைப் பற்றிக் கூறுகிறார்.
- வேலை எதுவும் செய்யாது வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் ஒருவனும் கேவல கர்ம சந்நியாசியாகப் பார்க்கப் படுகிறான். இதுவே கீழிருந்து முதல் நிலையில் இருக்கும் சந்நியாசி.
- அடுத்தபடியாக கிருஷ்ணர் கூறுவது, மரவுரி தரித்து காவியுடை அணிந்த ஆசிரம சன்னியாசியை.
- இதற்கு மேல் நிலையில் கிருஷ்ணர் வைப்பது ஒரு கர்ம யோகியை.
- அதற்கும் மேலே இருப்பவர் கர்ம யோகிகளில் தலை சிறந்தவனாகப் பார்க்கப்படும் பல (phala) சந்நியாசி என்பவர்.
- தலை சிறந்த சந்நியாசியாக ஸ்ரீகிருஷ்னரால் போற்றபடுபவர், வித்வத் சந்நியாசி என்று கூறப்பட்ட, அகங்காரத்தையும் செயலையும் மனதளவில் துறந்த இல்லறத்துறவி.
அத்வைத வேதாந்த விளக்கத்தின் படி, சந்நியாசமா இல்லற வாழ்க்கையா – எது உயர்ந்தது என்ற கேள்வி எழ முக்கிய காரணம் “சந்நியாசம்” என்ற சொல்லின் தவறான புரிதலாகும். செயலை முற்றிலும் விட்டு விலகுவதே சந்நியாசம் என்ற பொதுவான எண்ணத்தை கிருஷ்ணர் மறுக்கிறார். உண்மையான சந்நியாசம் என்பது செயலை விட்டு விடுவது அல்ல; செயலில் உள்ள அகந்தை, ஆசை, உரிமை உணர்வு ஆகியவற்றை விட்டு விடுவதே ஆகும். ஒருவர் உலகில் வாழ்ந்துகொண்டே, தன் கடமைகளைச் செய்துகொண்டே இருந்தாலும், செயல்களின் பலனை நாடாமல் இருந்தால், அவர் உள்ளார்ந்த சுதந்திரத்தை அடைய முடியும்.
இந்த அதிகாரத்தில், கர்ம யோகம் குறைந்த நிலை அல்ல; மாறாக, உண்மையான சந்நியாசத்திற்கு அவசியமான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. சுயநலமற்ற செயல்களால் மனம் சுத்திகரிக்கப்படுகிறது; ஆசைகள் குறைகின்றன; அகந்தை மெதுவாகக் கரைகிறது. மனச்சுத்தி இல்லாமல் மேற்கொள்ளப்படும் சந்நியாசம், ஞானத்தின் வெளிப்பாடாக இல்லாமல், பொறுப்பிலிருந்து தப்பிக்க முயலும் வழியாக மாறும் அபாயம் உள்ளது. ஆகவே, கர்ம யோகம் மனத்தைப் பக்குவப்படுத்தி, ஞானத்திற்கு தகுதியானதாக மாற்றுகிறது.
ஆசிரமம் என்பது ஆன்மீக சாதனைகளுக்கான இடம். இல்லறத்தானாக இருக்கும் ஒரு கர்ம யோகியை கிருகஸ்தஆசிரமத்தில் இருப்பவன் என்று கூறுவதன் மூலம், ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தின் முக்கியத்துவத்தை முன் வைக்கிறார். உறவுகளுக்கும் செயல்களுக்கும் நடுவில் ஒரு பற்றற்ற நிலையில் ஒரு தாமரை மலரைப் போல இருப்பவன், ஒரு சந்நியாசியை விட உயர்ந்தவனாகக் கருதப் படுகிறான்.
கிருஷ்ணர் மேலும் விளக்குவது என்னவென்றால், உண்மையான சந்நியாசி செயலை வெறுக்காதவனும், அதன் பலனை விரும்பாதவனும் ஆவான். அவனுக்கு உள்ளார்ந்த முரண்பாடுகள் இல்லை. “நான் செய்கிறேன்” அல்லது “இந்த பலன் எனக்கே” என்ற எண்ணம் இல்லாததால், செயலில் இருந்தபோதும் அவன் மனம் அமைதியாக இருக்கிறது. இந்த நிலை நைஷ்கர்ம்யம் என அழைக்கப்படுகிறது — செயலில் இருந்தபோதும் செயல்வினையால் கட்டுப்படாத நிலை.
இந்த அதிகாரத்தின் முக்கியமான கருத்துகளில் ஒன்று சமதர்ஷனம் (சம பார்வை) ஆகும். ஞானி, ஒரு பண்டிதனையும், ஒரு மிருகத்தையும், சமூக ரீதியாக தாழ்த்தப்பட்ட ஒருவரையும் ஒரே ஆத்மாவின் வெளிப்பாடாகவே காண்கிறான். இது சமூக வேறுபாடுகளை மறுப்பதல்ல; மாறாக, அந்த வேறுபாடுகள் உடல்–மன நிலைகளுக்கே உரியது என்றும், ஆத்மாவிற்கு அல்ல என்றும் உணர்வதாகும். இத்தகைய பார்வை அகந்தை, பாரபட்சம், அதீத உணர்ச்சி போன்ற எதிர்வினைகளை அழிக்கிறது.
ஐந்தாம் அதிகாரம், விடுதலை மரணத்திற்குப் பிறகு கிடைப்பதல்ல; இவ்வாழ்க்கையிலேயே அடையக்கூடியது என்பதை வலியுறுத்துகிறது. உலகில் வாழ்ந்துகொண்டே, செயல்களைச் செய்துகொண்டே, இன்ப–துன்ப அனுபவங்களில் ஈடுபட்டபோதும், உள்ளார்ந்த சுதந்திரத்தைப் பேணும் நிலை ஜீவன் முக்தி என அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மனிதர் மன நிலைத்தன்மையும், உணர்ச்சி முதிர்ச்சியும், இயல்பான கருணையும் கொண்டவராக இருப்பார்.
கிருஷ்ணர் இங்கு தெளிவாகக் கூறுவது என்னவென்றால், மனிதனைக் கட்டுப்படுத்துவது செயல் அல்ல; அவித்யை (அறியாமை) தான். செயல்கள் உடல், புலன்கள், மனம் ஆகியவற்றின் இயல்பான செயல்பாடுகளாக நடைபெறுகின்றன. ஞானி இதை உணர்ந்து, செயலைச் செய்பவனாக அல்லாமல், செயலைக் காணும் சாட்சியாக இருப்பான். இதனால் கடந்த கால குற்ற உணர்வும், எதிர்காலப் பயமும் மறைந்து விடுகின்றன.
கர்ம யோகம் மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது; ஆனால் உண்மையான விடுதலை ஞானத்தினாலேயே கிடைக்கிறது. ஞானம் என்பது ஆத்மா எப்போதும் சுதந்திரமானது, பூரணமானது, செயல்களால் பாதிக்கப்படாதது என்பதை உணர்வதாகும். இந்த அதிகாரம் கர்ம யோகம், ஞான யோகம், மற்றும் தியானத்தின் பங்கையும் ஒருங்கிணைத்துக் காட்டுகிறது. தியானம் மனத்தை நிலைநிறுத்த உதவுகிறது; ஆனால் அறியாமையை அழிப்பது ஞானமே.
அதிகாரம் முடிவில், ஞானி பிரும்மத்தில் நிலைத்தவனாக, ஆசை–பயம் அற்றவனாக, உள்ளார்ந்த அமைதியுடன் வாழ்பவனாக வர்ணிக்கப்படுகிறான். உள்ளார்ந்த அமைதி எல்லாவற்றையும் துறப்பதால் ஏற்படுவதில்லை. ஆனால், குழப்பங்களுக்கும் பிரச்னைகளுக்கும் நடுவே நிர்மலமான மனத்துடன் அமைதியாய் இருப்பது. உலகில் முழுமையாக செயல்பட்டபோதும், உள்ளார்ந்த சுதந்திரத்தை இழக்காமல் இருப்பதே இந்த அதிகாரத்தின் மையச் செய்தி.
எனவே, கிருஷ்ணர் கூறும் இறுதி கருத்து இதுவே:
செயலை விட்டு விட வேண்டாம்; அறியாமையை விட்டு விடுங்கள்.
