Rama God Images – Browse 23,712 Stock Photos, Vectors, and Video | Adobe Stock10,500 க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட காவியமாம் கம்ப ராமாயணம் தமிழரின் வாழ்வோடு ஒன்றிய ஒன்று. காப்பிய நோக்கம் என்று பார்த்தால், அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

காப்பியச் சிறப்பு என்று பார்த்தால், நடையில் நின்றுயர் நாயகனாக விளங்கும் இராமன், தெய்வநிலையில் இருந்து இறங்கி., மனிதச் சட்டை அணிந்து மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்து காட்டிய தன்மைகளையும், சிறப்புகளையும் விளக்கும் காப்பியம் மட்டுமல்ல, கம்பர் வலியுறுத்தும் நீதியும் அறனும் மக்கட் சமுதாயம் திருக்குறள் போல, பகவத் கீதை போல, எக்காலத்துக்கும், எல்லோர்க்கும், பொதுவானவை ஆகும்.

கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் இராமன் மூலம் தெரிவிக்கின்றது. பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது.

பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி இந்நூல் கூறுவதைக் காணலாம்.

இலக்கியச் சிறப்பு என்று பார்த்தால், சந்தம் (ஓசை நயம்) வாசிப்போரைக் கொள்ளை கொள்ள வைக்கிறது. அதனால் தான், கம்பன் அனைவராலும் பாராட்டப்படுகின்றான்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்று மஹாகவி பாரதி பாடுகிறான்.

அவனே, இன்னும் ஒருபடி மேலே சென்று, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்கிறான். .

பல்கலை வித்தகரும், நிஜமான தமிழ்ப் போராளியுமான வ வே சு அய்யர் அவர்கள் கூறுவார்கள் – வால்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார். அவர் அப்படிக் கூறலாம். காரணம் 10 மொழிகள் அறிந்தவர் வ வே சு அய்யர். ஆனால் வேற்று மொழி கலப்பில்லாத தமிழ் தான் பேசுவார். (பாரதி, அரவிந்தர், சிவா இவர்களுடன்  பயணித்தவர்)

கம்பன் வால்மீகி இராமாயணத்தைத் தழுவி இயற்றினாலும், அதில் தமிழ் கலாச்சாரத்தையும், உயர்ந்த பண்புகளையும் புகுத்தி, ராமனை மானுடச் சிகரமாகக் காட்டியுள்ளது தனிப் பெருமை என்று வ வே சு அய்யர்,மூதறிஞர் ராஜாஜி மற்றும் பேராசிரியர் அ .சீனிவாசராகவன் போன்ற பல அறிஞர்கள் பாராட்டி எழுதியுள்ளார்கள்.

தெய்வீகமும் மனிதநேயமும் இந்திய இலக்கியத்தின் இரண்டு முக்கிய அம்சங்களாகும். வால்மீகியின் ராமாயணம் மனித குணத்தையும் நடத்தையையும் கையாளும் முதல் மற்றும் முதன்மையான காவியக் கவிதையாகும். கம்பன் தனது நாயகனின் தெய்வீக மற்றும் மனித குணங்களை வால்மீகியின் கருப்பொருளிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறையுடன் சித்தரிக்கிறான்.

ராமனையும் மற்றவரையும் பாடுமுன், கோசலை நகரையும், அயோததியையும் அவன் பாடும் அழகும் அதி அற்புதம்.

கோசலை நாட்டைப் பற்றி,

வரம்பெலாம் முத்தம் ; தத்தும்
     மடை எலாம் பணிலம் ; மா நீர்க்
குரம்பெலாம் செம்பொன் ; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் ; சாலிப்
    பரப்பெலாம் அன்னம் ; பாங்கர்
கரம்பெலாம் செந்தேன் ; சந்தக்
      கா எலாம் களிவண்டுக் கூட்டம்.

 

என்றே பாடுகிறான். அதாவது, கழனிகளின் வரப்பு எங்கும் முத்துக்கள்! நீர் பாயும் மடைகளில் எல்லாம் சங்குகள்! வாய்க்கால்கள் எங்கும் சிவந்த பொன் கட்டிகள்! எருமைகள் விழுந்து புரள்கிற சேற்றுக் குட்டைகளில் எல்லாம் செங்கழு நீர் மலர்கள்; குவியல் குவியலாக! பரம்பு அடித்துச் சமன் செய்யப்பட்ட வயல்கள் தோறும் பவளம்! நெல் பயிர்கள் நடுவே அன்னப் பறவைகள்! நறுமணம் வீசும் பூங்கா எங்கும் வண்டுக் கூட்டம் என்றே நயத்துடன் கூறுகிறான் கம்பன்.
தலைநகர் அயோத்தி பற்றி,

நில மகள் முகமோ ! திலகமோ !
   கண்ணோ ! நிறை நெடு மங்கல நாணோ !
இலகு பூண் முலைமேல் ஆரமோ !
   உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர் கொலோ மாயோன் மார்பின்
   நல்மணிகள் வைத்த பொற்பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ ஊழியின்
   இறுதி உறையுளோ யாது உரைப்பாம்

ன்று பாடுகிறான்.

இந்த நகரம் என்ன பூமி தேவியின் திருமுகமோ! அம்முகத்தில் விளங்கும் திலகமோ ! நில மடந்தையின் கண்ணோ திருமங்கலச் சரடோ மார்பிலே விளங்கும் ரத்தின மாலையோ! திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலரோ! திருமால் மார்பிலே உள்ள நல் மணிகள் வைத்த தங்கப் பெட்டியோ ! வைகுண்டமோ ! ஊழிக்காலத்திலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறோ !இவற்றுள் எது என்று சொல்வது என்று அவன் வியப்பதாக், நம்மை வியக்க வைக்கிறான்.
அவர் தனது காவியத்திற்கு ராமாவதாரம் என்று பெயரிட்டாலும், கதாநாயகனைப் பல மனித குணங்களால் அலங்கரித்தான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனே வான் உறையும் தெய்வம் என்ற வள்ளுவனின் கருத்துக்கேற்ப, ஒரு மனிதன் தனது நிலையை எவ்வாறு கடவுளுக்கு உயர்த்த முடியும் என்பதைத்.தமிழ் மரபிற்கு ஏற்ப நடையுடை நாயகன், அதாவது நடையின் நின்றுயர் நாயகன் என்கிறான்.

நடையின் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்தது இராமாவ தாரப்பேர்த்
தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே

தேவர்கள் முதல் முனிவர்கள் வரை, ராமனை விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றினாலும், அவர் மானுடத் தன்மையுடனே அனைவரையும் அன்புடன் அணுகுவதைப் பார்க்கிறோம்.

கம்ப ராமாயணத்தில், ராமனின் அழகு, வீரம் மற்றும் நற்பண்புகளைப் போற்றும்படி பல பாடல்களைத் தந்துள்ளான் கம்பன்.

மிதிலையில் சீதை ராமனை முதன்முதலில் காணும் காட்சி மற்றும் ராமனின் தோற்றத்தை விவரிக்கும் பாடல்கள் கம்பரின் கவித்திறனுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

தாடகையின் வதம் முடிந்தபின், ராமனைக் கம்பன் பாராட்டுவதில் உள்ள கவிநயம் மிக அழகு

அல்லின் மாரி அனய நிறத்தவள்
சொல்லு மாத்திரையில் கடல் தூர்ப்பதோர்
கல்லின் மாரியைக் கை வகுத்தாள் அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்

இரவிலே தோன்றும் கருமேகம் போலும் நிறங்கொண்ட அந்த தாடகை என்ன செய்தாள்? ஒரு சொல் சொல்லி முடிக்கும் நேரத்துக்குள்ளே கல்மாரி பெய்தாள். தனது கைகளாலே வாரி வீசினாள். எத்தகைய கல்மாரி? கடலையும் தூர்க்கக் கூடிய கல்மாரி. வில் வீரனாகிய இராமன் என்ன செய்தான்? தனது வில்லினின்றும் அம்பு மாரி பெய்தான் தாடகை பெய்த கல் மாரியைத் தடுத்தான்.

இன்னொரு பாடலில்,

சொல் ஒக்கும் கடிய வேகச்
    சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
   விடுதலும் வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
   அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
   பொருள் எனப் போயது அன்றே

என்று பாடுகிறான். அதாவது, செம்மலாகிய இராமன். இருள் போலும் கருநிறங்கொண்ட அந்த அரக்கி மீது ஓர் அம்பு விடுத்தான். அது வெகு வேகமாகப் பாய்ந்து சென்று அந்த அரக்கியின் மார்பைத் துளைத்துக்கொண்டு பின்புறமாக வெளியேறிற்று. எதுபோல? கல்வி அறிவு இல்லாத அற்பர்களுக்கு நல்லோர் கூறிய நல்லுரை போல.
இராமனின் விற்திறத்தை முதன் முதலாக கம்பன் காட்டும் இடம். தோள்வண்ணம் அங்கு கண்டேன் என்று வியக்கவேண்டிய இடம்.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் 
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்”

என்ற பாடலில் எட்டு வண்ணம் வைத்தான். ராமனின் தோற்றத்த்தைப் பற்றிக் கூறும்போது

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்

சூரியனின் ஒளி இராமனின் மேனியில் இருந்து வரும் விரிகின்ற ஜோதியில் மறைய ,சீதைக்கு இடை என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா, அது பொய்யா நிஜமா என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும, இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போனான்.

அவன் நிறம் மை போன்ற கருமையோ – மரகத மணி போன்ற பச்சை நிறமோ – கடல் போல நீலமோ – மழை மேகம் போல் கருப்போ கடல் என்று கூறுவதுடன் நிற்காமல், அவன் ராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறானாம்.அவனுக்கு வேறு எதுவும் கூறத் தெரியவில்லையாம். ஐயோ எப்படி சொல்லுவது இவன் வடிவழகை என்று நினைத்த கம்பன், மரபாக பயன்படுத்தாத ஒரு எதிர்மறைச் சொல்லை அவன் நிறைவாகக் கூறியிருப்பது கம்பனின் தனிச் சிறப்பு.
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்ற வார்த்தைகள், ஒரே பொருளின் அழகை பலவகை ஒப்புமைகளால் கேள்வி வடிவில் சொல்லியிருப்பதுடன், உவமை நயம் மற்றும் அலங்கார நயம், இனிமை நயம் என்றே நம்மைப் பிரமிக்கவைக்கிறது.

நாடகங்கள், கூத்துக்கள், திரைப்படங்கள் என இந்த தேசம் முழுவதும் ராமாயணத்தையும், ராமனையும் அன்றிலிருந்து இன்றுவரை போற்றிப் பாராட்டி வருகிறோம்.

கவிஞர் மருதகாசி, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி , ராமன் புகழை ,மூவரும், காலத்தால் அழியாத பாடல்களை திரைப்படம் மூலமாக தந்து, படித்தவர்கள் மட்டுமில்லாமல், பாமரர்களையும் சென்றடையும்படி செய்து இருக்கிறார்கள்.

மொத்த ராமாயணத்தை கவிஞர் மருதகாசி , அவர்கள்1960 களில் வெளிவந்த லவகுசா திரைப்படத்தில்,

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகுதே

என்றும்,

கண்ணதாசன்,ராமனை முழுவதும் போற்றி, 1970 களில் லட்சுமி கல்யாணம் என்ற திரைப் படத்தில்,

ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

என்றும்,

வாலி அவர்களும் அவர் பங்கிற்கு, 1980 களில் ராகவேந்திரர் என்ற படத்தில்

ராம நாமம் ஒரு வேதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்

அவன்தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்

மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது..
இசைத்தே நாமமே நாளும் ஓது

 

கம்பனிடமும், ராமனிடமும் தான் கொண்ட ஈடுபாட்டைக் கண்ணதாசன் எழுதுகிறான்:

1950களில், திரு அண்ணாதுரை கூறியபடி, கம்ப ராமாயணத்தை விமர்சிக்கலாம் என்றே படிக்க ஆரம்பித்த நான்,கம்பனின் ஆத்மார்த்த ரசிகன் ஆனேன். அவனின் சந்த நயமும், வார்த்தைகளின் அழகும் என்னை அவனின் அடிமை ஆக்கியது என்கிறான்.

அவன் மனத்தில் படிந்த கம்பனின் தாக்கங்கள், பல பாடல்களில், கவி அரங்கங்களில் வந்துதித்தது.

விருத்தம், சந்தம், மொழி அழகு – இவற்றில் கம்பனை மிஞ்சும் கவிஞன் கிடையாது. என்று
என்றவன்,

எப்படியோ எனக்கும் கம்பனுக்கும் தொடர்புண்டு
செப்புவதெல்லாம் கம்பன் செந்தமிழாய் வருவதனால்
தந்தை எனக்கு தந்ததெல்லாம் புத்திமதி
தாயான கம்பனோ தந்தததுதான் இந்தமதி,

என்று பாடினான்.

நிறைவில் எல்லாப் பெருமைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்த இராவணன், தலை நிமிர்ந்து ஆணவத்தோடு ஆட்சி புரிந்த இராவணன், முதல் நாள் போர் முடிந்ததும்,ஒரே நாளில் அத்தனை பெருமைகளையும் இழந்து தலை குனிந்து சாதாரண மனிதனாக நடந்து சென்றான்.

பிறன்மனை கவர்ந்தான் என்ற ஒரு முறையற்ற செயல் அவனை வீழ்த்தியது. நிறைவில் எல்லா உறவுகளும இழந்தபின், இராவணன் கண் திறக்கிறது.
இராமன் இராமன்தான். அவனுக்கு, நிகர் யாரையும் கூறமுடியாது. நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்றான்; குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட்டது அவனுக்கு ஒரு பெருமை என்றே ராமனை வணங்கினான்,

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமுமின்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்

அளவிலாப் பெருமைகள் நிறைந்த ராமன் திருவடி பணிவோம். அறம் காட்டிய வழியில் செல்வோம்.