நான் அனுப்புவது கடிதம் அல்ல ……. 

          உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில், அதாவது நம் இளமைப் பருவத்தில், (பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம், ஏன் ஒரு பதினைந்து ஆண்டுகள் முன்புவரை கூட) தபால்காரர் வரவை எதிர்நோக்கி வெகு ஆவலாகக் காத்திருந்த நாட்கள் உண்டு! அவை இப்போது எங்கே போய்விட்டன? தொழில்நுட்ப வளர்ச்சியில் எதையெதையோ அடைந்து, எவற்றையெல்லாமோ இழந்து, இழந்ததைப் பற்றி யோசிக்கவும் பொழுதில்லாமல் காலத்தின் வேகத்தில் இழுபட்டு, ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இவற்றுள் ஒன்றே வாழ்க்கையின் சின்னதொரு சந்தோஷமான ‘கையால் எழுதப்பட்ட’ கடிதங்கள்!

          எத்தனை வகைகள்: தபால் கார்டு, இன்லண்ட் கடிதம், உறையிலிட்ட கடிதம், ஆகாய வழி அஞ்சல், இன்னபிற. தந்தி! எக்ஸ்பிரஸ் தந்தி!! அம்மம்மா! ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான உணர்வுகளை எழுப்பின. ஒன்றொன்றாகப் பார்க்கலாமா?

          தபால் கார்டு எனப்படும் அஞ்சல் அட்டை மிகப்பிரசித்தம். வெள்ளந்தியான மக்கள், தங்கள் குடும்ப விவகாரங்களை மற்றவர்கள் படித்து அறிந்து கொள்ளப் போகிறார்களே என எண்ணவே மாட்டார்கள். இதனை எழுதப் படிக்கத் தெரியாத வீட்டுப் பெண்கள், மற்றவர்களிடம், ஏன் தபால்காரரிடமே கொடுத்து எழுதித் தரவோ, படிக்கவோ வேண்டிக்கொள்வார்கள். இப்போதுதான் கைபேசிகள் கணக்கிலடங்காமல் வந்துவிட்டனவே! உடனுக்குடன் பேசித் தகவல் பரிமாற்றம் நடந்து விடுகிறது.

          எங்கள் குடும்பத்தில் பெரியம்மாவிடமிருந்து எங்கள் தாயாருக்கு வரும் தபால் கார்டுகள் மிகச் சுவையானவை. அவர் அஞ்சலட்டையில்தான் எழுதுவார். அவர் கேரளத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே வாழ்ந்ததனால் மலையாளத்தில்தான் எழுதுவார். முகவரி எழுதும் இடத்தை மட்டும் பெரிய மனது பண்ணி விட்டுவிட்டு மற்றபடி சுற்றிச்சுற்றி கோலம் போட்டதுபோல நுணுக்கி நுணுக்கி எழுதுவதில் மிக சமர்த்தர் அவர். அந்தத் தபால்கார்டை அம்மாவிடம் அல்லது அப்பாவிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி ரசிப்பதில் எங்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இருக்காது. உங்களுக்கு அந்த விஷயதானத்திலிருந்து  ஒரு ‘சாம்பிள்’ தருகிறேன்.

          ‘சௌ ……..திற்கு, ஆசிர்வாதம். இங்கே எல்லாரும் சுமாராய் க்ஷேமமே! (இன்றுவரை ‘சுமார்’ எனும் இதன் பொருளை விடுவிக்க எங்கள் குடும்பத்தில் அனைவரும் முயன்று கொண்டிருக்கிறோம்; பெரியவர்கள் காலமெல்லாம் ஆகி விட்டது!) எனக்கு கொஞ்சமாய் ஜலதோஷம். பரவாயில்லை, வெள்ளிக்கிழமை ஆச்சே என்று தலைக்குக் கொஞ்சமாய் எண்ணெய் தேய்ச்சுக் கொண்டேன். எதிராளாத்துக் காமாட்சி மாமியாத்தில் லட்சுமிப்பசு கன்னு போட்டிருக்கு. கிடாக்கன்னு என்று அவாளுக்குக் கொஞ்சம் வருத்தம். நீலா மாமியாத்து மாட்டுப்பெண்ணுக்கு மூணுமாசமாம். பாவம் பகவான் இப்போவாவது கண் திறந்தாரே, கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுத்தே…. (இதைப் படித்துவிட்டு அம்மா ‘சின்னப்பொண்களுக்கு முன்னால …….’ என்று முகம் சிவக்கத் தன் தலையில் தட்டிக்கொள்வார்!)

          ஒருவழியாக ஊர்ச்செய்திகள் எல்லாம் எங்களுக்கும் தெரியும். பாட்டியின் கடிதங்களோ அருமையான பொக்கிஷங்கள். பாட்டி கடிதம் எழுதி கவரில்தான் அனுப்புவார். அது என்ன காரணத்தாலோ ‘கடுதாசி’ என்றே குறிப்பிடப்படும். மேற்கண்ட செய்திகளே சிறிது பெரியவர்கள் தோரணையில் விவரிக்கப்படும். தவிர, “ஜானா கேட்ட ‘அலங்காரம்’ பாட்டையும் இதில் எழுதி அனுப்பியிருக்கேன். வத்சலா கல்யாணக்கும்மி அடுத்த தடவை அனுப்பறேன். வரிகளை ஞாபகப் படுத்திண்டு உட்கார்ந்து எழுதணும். நேரமாகும்,” இவை என்னைப் பொறுத்தவரை பொக்கிஷங்கள். பாட்டி இருந்த காலத்தில் ஒலிப்பதிவு செய்ய டேப் ரிக்கார்டர்கள் கிடையாது. ஆகவே நிறையப் பாடல்களை என்னால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை என்பது என் மிகப்பெரிய வருத்தம்.

          கடிதங்களுக்கு வருவோம். நான் சின்னஞ்சிறுமியாக இருந்த காலத்தில் தாயாருடன் அவருடைய அடுத்த குழந்தைப் பேற்றுக்காகத் தாத்தா வீடு சென்றிருந்தேன். அப்போதுதான் நான் தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு இருந்தேன். ஒரு தபால்கார்டில் நான் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தை அவர் பத்திரமாக நீண்ட நாட்கள் வைத்துக் கொண்டிருந்தார்.

          “அன்புள்ள அப்பாவிற்கு, நமஸ்காரம். பாப்பா (எனது மூன்றுமாத தங்கைப்பாப்பா) முந்தா நேத்திக்குச் சிரிச்சுது. அதுக்கு ஆரஞ்சு சுளையின் சாறைக் குடுக்கிறார்கள். மாமா எனக்கு கலர் பென்சில் வாங்கித் தந்தார்.” பின்பு ஜிலேபி, முறுக்கு, பூனை, காக்காய் படங்கள்.

          நான் ஒரு பெரிய உலகப்புகழ்பெற்ற புள்ளியாய் இருந்தால் அந்தக் கடிதம் இப்போது பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கும்! எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேண்டுமே!

          உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எனக்கொரு நல்ல தோழி கிடைத்தாள். அவர்கள் மலேயாவிலிருந்து திரும்பிய இந்தியர்கள். இரு ஆண்டுகளின் பின்பு என்ன காரணத்தாலோ திரும்ப மலேயாவுக்கே சென்று விட்டார்கள். நீண்ட நாட்கள் கடிதத் தொடர்பில் இருந்தோம். அந்த வயதில், அதுவும் எனக்கே எனக்காக மலேயாவிலிருந்து ஒரு தோழி கடிதம் எழுதி அனுப்புவதென்பது எனக்குப் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. திடீரெனக் கடிதங்கள் நின்றுவிட்டன. இன்றும் கூட யாராவது மலேயாவிலிருந்து வந்தால் அவளையும் அவள் தந்தையையும் பற்றிக் கேட்பேன். ஒரு செய்தியும் கிடைக்காதது வருந்தத்தக்கதுதான்.

          அடுத்த வகை, பேனா நண்பர்கள். எனக்கு அந்தக் காலத்திலேயே ஜப்பானிலிருந்து ஒரு பேனா நண்பி கிடைத்தாள். புகைப்படம் கூட அனுப்பினாள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கடிதம் எழுதிக் கொள்வோம். தபால்தலைகள் சேகரிப்பது அந்தக் காலத்திய சிறார்களின் அருமையான பொழுதுபோக்கு. ஆகவே இருவரும் பல தபால்தலைகளைக் கடித உறைகளில் பரிமாறிக் கொள்வோம். இந்தக் கடிதத் தொடர்பும் சில ஆண்டுகளின்பின்பு நின்று போயிற்று. நீண்ட நாட்கள் ஐடோ நகமுரா (Ito Nakamura) எனும் அந்தப் பெண்ணின் புகைப்படமும் கடிதங்களும் என வசமிருந்தன.

          இப்போதுதான் உலகம் குறுகிவிட்டதே! சேகரித்த தபால்தலைகளை என்ன செய்வது, பேனா நண்பர்கள் என்பவர்கள் யார் என்றெல்லாம் அடுத்த தலைமுறைக்குக் கதைதான் சொல்லவேண்டும்.

          அஞ்சலட்டைகள் பள்ளிக்கூடங்களில் தேர்வுக் காலங்களில் சுய முகவரி எழுதிக் கொடுக்கப்பட்டன. நாம் தேர்வுகளில் தேறி அடுத்த உயர் வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறோமா என்பதனை அந்தக் கார்டில் காணும் ஒரு சொல்லே (promoted) ஊர்ஜிதம் செய்யும். பின்பு மதிப்பெண்கள், ‘ராங்க்’ சம்பந்தமான அறிவிப்புகள், கல்லூரியில் சேர்க்கை அனைத்துமே கடிதங்களில்தான் உண்டு. ஒவ்வொன்றின் வருகையும் இதயத்தைப் படபடக்க வைக்கும்!

          அந்தக் காலகட்டங்களில் கடிதங்கள் எழுதுவதற்கென்றே அருமையான காகிதங்கள்  கிடைக்கும். பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம், மும்பையிலிருந்து சில புத்தகப் பதிப்பகங்கள் இவற்றை விற்பனை செய்தன. உயிருக்குயிரான நண்பர்களுக்கும், உள்ளம் கவர்ந்தவர்களுக்கும் எழுத இவை பயன்படுத்தப்பட்டன. என் தோழி ஒருத்திக்கு அவள் உள்ளம் கவர்ந்தவரிடமிருந்து வாசனை மிகுந்த கடிதங்கள் வரும். உறை பிரிக்கப்படும்போதே நாங்கள் ‘அறிபுன்னகை’ செய்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். இன்னொருத்தி, தனக்கு வரும் இந்தக் கடிதங்களை ஒரு ஃபைலில் தேதிவாரியாக அடுக்கிவைத்து அடிக்கடி படித்து மகிழ்வாள். சிலசமயங்களில் இக்கடிதங்கள் தபால்காரரிடமிருந்து கைப்பற்றப்பட்டு, உரியவர் ‘தண்டம்’ (ransom) கொடுத்தபின்பே அவரிடம் அளிக்கப்படும். ‘நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்,’ எனும் திரைப்பாடல் உங்கள் காதுகளில் ஒலிக்கின்றதல்லவா? எத்தனை இனிமையான கல்லூரி நாட்கள் அவை!

          இது கிடக்க, உலகின் முதல் காதல் கடிதம் யாரால் எழுதப்பட்டது தெரியுமோ? அதுதான் நம்ம ருக்கு என்கிற ருக்மிணி இருக்காளே, அவள் கிச்சா என்கிற கிருஷ்ணன்மீது பிரேமை கொண்டிருந்தாள்; அப்பா அம்மாவோ சுயம்வரம் நிச்சயித்தாயிற்று. கிருஷ்ணனுக்கு கடிதம் எழுதுகிறாள்: ‘உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனே! நான் உன்னை என் கணவனாக வரித்து விட்டேன். சிங்கத்திற்கு உரியதை நரி வந்து எடுத்துக் கொள்ளலாமோ?’ என்று எப்படி தன்னைக் கவர்ந்து செல்வது என்கிற வழிசொல்லி ஒரு அவசரமான கடிதத்தை எழுதுகிறாள். பின் நடந்ததுதான் நம் எல்லாருக்கும் தெரியுமே!

          சுபச்செய்திகள், திருமணம், குழந்தை பிறந்தது, சஷ்டியப்த பூர்த்தி ஆகியன மஞ்சள் அல்லது குங்குமம் நான்கு மூலைகளிலும் தடவப்பட்ட கடிதங்களால், அஞ்சலட்டைகளால் அறிவிக்கப்படும்.

          வயதான உறவினர்களின் அல்லது தாத்தா பாட்டிகளின், ஏன் எந்த இறப்புச் செய்தியுமே நான்கு மூலைகளிலும் கருப்பு மை பூசிய கடிதங்கள், பெரும்பாலும் அஞ்சலட்டைகளால் அறியப்படும். எங்கள் தாயார் ஒருசில நாட்களில் இவற்றைக் கிழித்து எறிந்து விடுவார். வீடுகளில் வைத்துக் கொள்ளக் கூடாதாம்.

          எனது ஆராய்ச்சிக்காலத்தில் கடிதப் பரிமாற்றம் மூலம் சில ஆச்சரியமான நிகழ்வுகள்: ஒரு முக்கியமான புத்தகம் அந்தத்துறையில் உள்ள ஆராய்ச்சியாளரால் வெளியிடப்பட்டது – ஒரே ஒரு பிரதிதான் நூலகத்திலேயே உண்டு. எப்போதும் அதனை வாங்கிப்படிக்க ஆராய்ச்சி மாணவர்கள் காத்துக்கொண்டே இருப்பார்கள். இந்தியாவில் அப்போது வெளிநாட்டு நூல்கள் அதிகம் கிடைத்ததில்லை. நான் வெகு துணிச்சலாக அந்த ஆராய்ச்சியாளருக்கு ஒரு கடிதம் எழுதி, எங்கு ஒரு பிரதியை வாங்கலாம் எனக் கேட்டேன். அவர் இங்கிலாந்தில் இருப்பதாக என் எண்ணம். நீண்ட நாட்கள் பதிலேதும் வரவில்லை. நான் கிட்டத்தட்ட மறந்தும் போய்விட்டேன். ஒருநாள் தபால்காரர் ஒரு பெரிய புத்தகப் பார்சலை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார். அது இங்கிலாந்தில் உள்ள ஒரு பதிப்பகத்தாரிடமிருந்து வந்திருந்தது. பேராசிரியர் William Hayes உங்களுக்கு அனுப்பக் கூறியிருந்தார். அனுப்பியுள்ளோம் எனும் குறிப்பு மட்டும். நல்ல விலை இருக்கும். பதிப்பகத்தாரையே திரும்பக்கேட்டு பேராசிரியருக்கே ஒரு கடிதம் எழுதினேன்.

          “தாங்கள் அனுப்பச் சொன்ன புத்தகம் கிடைத்தது. மிக்க நன்றி. அதன் விலையைத் தங்களுக்குத் திருப்பிக் கொடுக்க (reimburse) விரும்புகிறேன். எப்படி அனுப்புவது என்று தெரிவியுங்கள்.”

          பத்து நாட்களுக்குள் ஒரு மறுமொழி வந்தது.

          “எனக்கு நீங்கள் விலையைத் திருப்பித்தர வேண்டாம். இது உங்களுக்கு எனது பரிசாக இருக்கட்டும். இதனைப் படித்துப் பயன்பெற்று மகிழ்வீர்கள் என்று எண்ணுகிறேன்.”

          என்ன செய்திருப்பேன் நான் என எண்ணுகிறீர்கள்? பிரமித்துப்போய் நின்றேன். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தின் கீழ் அவர் கைப்பட அவருடைய கையெழுத்து! ஒரு இளம் ஆராய்ச்சி மாணவியின் மனநிலையை இந்த சந்தர்ப்பத்தில் உங்களால் ஊகிக்க முடிகின்றதா? அந்த ஆராய்ச்சியாளர்தான் Dr. William Hayes. புத்தகத்தின் பெயர் The Genetics of Bacteria and their Viruses. இன்றும்கூட அதனை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். இவர் கிட்டத்தட்ட நோபெல் பரிசு வாங்கும் அளவு தனது ஆராய்ச்சியை நடத்தியவர். இன்று நுண்ணுயிரியல், அணுக்கூறியல் (Microbiology, Molecular genetics) சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கெல்லாம் இவரே அடிகோலியவர். அறிவியல் துறையில் உள்ளோருக்கு இவர் பெயர் கட்டாயம் தெரியும்.

          பல்கலைக்கழகங்களில் நாம் ஆராய்ச்சியின் முடிவுகளை ஆய்வேடாக சமர்ப்பித்து, முனைவர் பட்டத்திற்காகக் காத்திருப்போம். இந்த ஆய்வு முனைவர் பட்டத்திற்குத் தகுதியா எனக்கூற இவற்றை அத்துறையைச் சார்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள்/ பேராசிரியர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஒருவர் வெளிநாட்டவர். நமக்கு இவர்கள் யாரெனக் கூடத் தெரியாது. இவர்களிடமிருந்து வரும் பரிவுரையை (அது சாதகமோ, பாதகமோ) பல்கலைக் கழகத்தார் நமக்குக் காட்டவும் மாட்டார்கள்.

          இப்படிப்பட்ட நிலையில் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம்: எனது ஆய்வேட்டைப் படித்துப் பரிந்துரை எழுதிய ஆராய்ச்சியாளர், பல்கலைக் கழகத்திற்கு எழுதிய கடிதத்தின் பிரதியை எனக்கும் அனுப்பி வைத்துவிட்டார். பெரும் பாராட்டாக அமைந்த அக்கடிதத்தைப்பற்றி நான் யாரிடமும் மூச்சுகூட விடவில்லை. இது இன்னொரு பொக்கிஷம்!

          ஆ! இன்னொருவகை! ஒருத்தர் மீது வம்புகூற, வன்மம் தீர்த்துக்கொள்ள கிடைத்த கடிதம் – மொட்டைக் கடுதாசி! பெயர் போடாமல் கையெழுத்தைக் கிறுக்கலாக எழுதி எங்காவது அந்தக் கடிதத்தைச் சொருகிவைத்துவிட வேண்டியது. விளைவுகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்தக் காலத்தில் கொஞ்சம் கடினம். ஏனெனில் குறுஞ்செய்தியோ, வாட்ஸப்போ, மின்னஞ்சலோ, நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுமே! தொழில்நுட்பத்தில் ஏதாவது வழி கண்டு பிடிப்பார்கள் இதற்கும்!!

          சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது இங்கு நிறுத்தி வைக்கிறேன்.

          வாழ்க்கை எனும் ஓடம் தான் பயணிக்கும் திசைகளிலெல்லாம் புதுப்புது  இனிமையான பாடங்களை நமக்குக் கற்பித்தபடியே இருக்கிறது. நாமும் அதன் போக்கிலேயே போய் ஆச்சரியமான சுவையான அனுபவங்களைப் பெறுகிறோம்.

          இதில் எல்லாம் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தபால்காரர் நாம் அனைவருமே ஆவலாக எதிர்பார்த்த ஒரு மனிதர். நல்ல செய்தி கொண்டுவந்தால் அவருக்கு, செய்தியின் பரிமாணத்தைப் பொறுத்து இனிப்போ, மிட்டாயோ அல்லது பணமோ அளிக்கப்படும். நாம் தேர்வில் பாஸ் செய்துவிட்டால் அம்மா கிளறிய மைசூர்பாகில் இரண்டு வில்லைகளோ, அல்லது சில பாரி மிட்டாய்களோ வழங்கப்படும்.

          காகிதத்தில் எழுதிய கடிதங்கள் ஆகிய இவையெல்லாம் இன்று மிகவும் சுருங்கிப்போய் வாட்ஸப், மின்னஞ்சல் என்று ஆகி விட்டது. உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் அடுத்த நிமிடமே தொடர்பு கொள்ளுமளவு தொழில்நுட்பம் வளர்ந்து பிரம்மாண்டமாகி விட்டது. அதோடு பொருந்துவதுதானே புத்திசாலித்தனம்? இருந்தாலும் கடந்துபோன ‘அந்த இனிய நாட்களை’ எண்ணி ஏங்காமல் இருக்க முடியவில்லைதான்!!

                                        மீண்டும் சந்திப்போம்.

                                        —————————–