அழகான சென்னை

அழகான சென்னை அலங்கார சென்னை
அனுதினமும் என்னை ஆதரிக்கும் அன்னை
வானை முட்டும் கட்டிடங்கள் ஆயிரமோ ஆயிரமோ
வண்ண வண்ண விளக்குகளும் தோரணமோ தோரணமோ
நீல நிறக் கடல் அலையும் தேவன் தந்த வரமல்லவா
நீள வெளிக் கடற்கரையும் இயற்கை தந்த அழகல்லவா
மயிலூரில் குடியிருக்கும் கற்பகத்தாய் இங்கே
மயிலோனும் குடியிருக்கும் கந்த கோட்டம் இங்கே
பார்த்தனுக்கு காட்சி தரும் சாரதியும் இங்கே
பரமகுரு சீடரும் அமர்ந்த மலை இங்கே
அடிக்கரும்பை இனிக்க வைத்த திருவொற்றியூர் இங்கே
ஆற்காடு நவாப் அளித்த அமீர்மகாலும் இங்கே
அருள் மாரி கருமாரி திருவேற்காடும் இங்கே
கன்னி அன்னை மேரியின் கடல் கோவிலும் இங்கே
காஞ்சித்தாய் காமாட்சி மாங்காடும் இங்கே
பஞ்சரத்ன பாடல் பெற்ற கோவூரும் இங்கே
ஆங்கிலேயர் கட்டி வைத்த ஜார்ஜ் கோட்டை இங்கே
திரைப்படத்தில் மினுமினுக்கும் கோலிவுட்டும் இங்கே
மூதறிஞர் பேரறிஞர் கர்மவீரர் எம்ஜியார்
ஆட்சி செய்து அமைதி கொண்ட புனித மண்ணும் இங்கே
புரட்சிகவி பாவேந்தர் கண்ணதாசன் வாலி என்று
தமிழுக்கு அழகு செய்த தமிழ் மண்ணும் இங்கே
