தருமிக்கு பாங்க் லோன்

 image

தினத்தந்தியில் விளம்பரம்

“ வங்கியிலே சிறு தொழில் செய்வோர்க்கு கடன் வழங்கப்படும்”

தருமி:  ஐயகோ ! பாங்க் லோன் ஆச்சே ! இந்த நேரம் பார்த்து என் கையில் ப்ராஜெக்ட் ஒண்ணும் இல்லையே! எனக்கில்லே ! எனக்கில்லே ! வேற எவனோ வாங்கிக்கப் போறான்!

சிவன்: நண்பரே!

தருமி:  யாருய்யா அது?

சிவன்: பிராஜெக்ட்  ரிபோர்ட் ஒன்று கிடைத்தால் பாங்க் லோன் உமக்குக் கிடைக்குமல்லவா?

தருமி:  ஐயகோ ! அடுத்த நிமிஷம் என் கையில் காசு பணம் துட்டு மணி மணி !

சிவன்: சரி! நான் உனக்கு அந்த பிராஜெக்ட்டைத் தருகிறேன்!

தருமி : நீ.. எனக்குத் தர்ரியா? சொந்தமா எடுத்துக்கிட்டு போனாலே கன்னா  பின்னான்னு கேட்டுட்டு சம்திங் வேற கேட்கிறாங்க!

சிவன்: பரவாயில்லை . எடுத்துச் செல்.

தருமி: சரி.. பணம் கிடைத்தால்  எண்ணி வாங்கிக்கிட்டு வருகிறேன்! வேறு எதையாவது எண்ண வைத்தால்?

சிவன்: என்னிடம் வா. நான் பார்த்துக்  கொள்கிறேன்!

தருமி : சரி! பெயிலில் எடுப்பார் போல இருக்கு. நீர்  பிராஜெக்ட்  ரிபோர்ட்டைக் கொடும். பாங்கில் கொடுப்பதை அப்படியே கொண்டு வந்து தருகிறேன். பிறகு நீரா பார்த்து ஏதாவது கொடும்!

                       image

மேனேஜர்: ஆஹா! அருமையான பிராஜெக்ட்! சிறு தொழில்  டார்கெட்டில்  ஒன்று!  இப்போதே லோனை ஸாங்ஷன் செய்கிறேன்!

அக்கவுண்ட்டண்ட் : மேனேஜர் சார்! சற்றுப் பொறும். மிஸ்டர் தருமி ! சற்று இங்கே வருகிறீர்களா?

தருமி: வர மாட்டேன்! லோன் செக் வாங்கிக்கிட்டு வருகிறேன்! அதற்குள் என்னய்யா அவசரம்!

அக்கவுண்ட்டண்ட்: அதில்  தான் பிரச்சினை !

தருமி: என்னய்யா பிரச்சினை?

அக்கவுண்ட்டண்ட்: இந்த  பிராஜெக்ட்  ரிபோர்ட் உம்முடையது தானே?

தருமி: பின்னே கமிஷனுக்கு ஏதாவது சார்டர்டு  அக்கவுண்ட்டண்ட் கிட்டேயா வாங்கிட்டு வந்தேன்!? என்னுடையது தான்! ! என்னுடையது தான்!

அக்கவுண்ட்டண்ட்: அப்படியானால்  கேஷ் ப்ளோ  ஸ்டேட் மெண்டை விளக்கிக் கூறி லோனைப் பெற்று கொள்ளலாமே !

தருமி: என்னய்யா இது!  மேனேஜருக்கே  விளங்கி விட்டது! இடையில் நீர் வேற!

அக்கவுண்ட்டண்ட்:  உன் பிராஜெக்ட்டில் நிறைய பிழை இருக்கிறது!

தருமி: எதில் இல்லை? உங்கள் பாங்க் பேலன்ஸ் ஷீட்டில் இல்லையா? நல்ல பிராஜெக்ட் சார்! எவ்வளவு தப்பு இருக்கோ அவ்வளவுக்கு குறைச்சிக்கிட்டு பாக்கித் தொகைக்கு செக் தர்ரது!

அக்கவுண்ட்டண்ட்: மிஸ்டர் தருமி ! ஹர்ஷத் மேத்தாவுக்கும் கேட்டன் பரீக்கிற்கும் லோன் கொடுத்த எங்கள் வங்கியில் தவறான பார்ட்டிக்கு லோன் தருவதை தடுப்பவன் இந்த அடியேன் தான் !

தருமி: அட சே ! இதுக்குத் தான் புதுசா பிராஜெக்ட் போட்டவனை எல்லாம் நம்பக் கூடாது! எனக்கு லோன் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!