ராமாயண கிரிக்கெட்

image

 சென்னை 28ல் தனியாக இருந்த ‘ வோர்ல்ட் கப் ’பைப் பார்த்த ஸ்ரீ லங்கா கேப்டன் ராவணனின் தங்கை சூர்ப்பனகை அதைத் திருடும்போது  லக்ஷ்மணன் பேட்டால் அடிக்க மூக்கில் அடிபட்டு ஓடினாள்.   அவள் கேப்டன் ராவணனிடம் விஷயத்தைக் கூறியதும் அவன் விடுதலைப் புலிகள் வேஷத்தில் வந்து’ வோர்ல்ட்  கப்’பைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான்.  ராமனும், லக்ஷ்மணனும் மனம் தளர்ந்து ‘ வோர்ல்ட் கப்’பைத் தேடியபடி சென்னைத் தெருவெல்லாம் ஓடினார்கள். 

   வரும் வழியில் ‘ கிஷ்கிந்தா கிரிக்கெட் ‘ கிளப்பின்  மெம்பரான  அனுமனைச் சந்தித்தனர்.  அனுமன்   ராமனை  அயோத்யா குப்பத்தில் நடைபெறும் வாலி – 11 Vs  சுக்ரீவன் – 11  போட்டிக்கு அம்பயராக இருக்கும்படி வேண்டிக் கொண்டான்.மற்ற அம்பயர்கள் எல்லாம்  தாதா  வாலிக்குப் பயந்து அவனுக்கு அவுட்டே கொடுப்பதில்லை என்றும் சொன்னான் சொல்லின் செல்வன் அனுமன்.  மேட்சின்  போது சுக்ரீவன் போட்ட ‘ நோ பாலுக்கு ‘ ராமன் வாலியை ‘ LBW ‘என்று சொல்லி அவுட் ஆக்கினான். “ ராமா !  நீயே இப்படி செய்யலாமா?” என்று கேட்டு லோக்கல் மேட்சில் இருந்து ரிடயர்ட் ஆனான் வாலி.

   சுக்ரீவனைக் கேப்டனாக்கி அவன் ஆட்களை விட்டு ‘ வோர்ல்ட் கப்’ பைத் தேடும்படி கேட்டுக் கொண்டான் ராமன்.

   அனுமன் அது ஸ்ரீ லங்காவில் இருக்கிறது என்று கண்டு சொன்னான். உடனே லக்ஷ்மணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஸ்ரீ லங்கா புறப்பட்டான் ராமன்.  அங்கே ‘ வைஸ் கேப்டன் ‘ விபீஷணன் கட்சி மாறி இவர்கள் டீமில் சேர்ந்து கொண்டான்.

     மேட்ச் தொடங்கியது. முப்பத்து முக்கோடி தேவரும் ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்தனர்.முதலில் பேட் செய்த ராமன் – லக்ஷ்மணன் – ஓபனிங் பேட்ஸ் மென் இருவரும் பவுண்டரி, சிக்சராகவே  அடித்தனர்.  ராவணனின் பௌலர்கள் எல்லோரும் களைத்துப்  போயினர்.  ஆனால் திடீரென்று  ஆல்  ரவுண்டர்  இந்திரஜித்  ஒரு  ‘ பவுன்ஸர் ‘  போட லக்ஷ்மணன் அடிபட்டு மயங்கி விழுந்தான்.  ராமன் துடித்துப் போனான்.  ஆனால் அனுமன் ஓடி  வந்து  முகத்தில்  ‘ ஸ்பிரே ‘ பண்ண லக்ஷ்மண் எழுந்து விளையாடத் துவங்கினான்.  ஐம்பது ஓவரில் ஆயிரம் ரன் எடுத்து ராமன் லக்ஷ்மண் இருவரும் ‘ நாட் அவுட் ‘ பொசிஷனில் ‘ டிக்ளேர் ‘ செய்தனர்.

  அடுத்து வந்தது ஸ்ரீ லங்காவின் பேட்டிங்.  ராமன் லக்ஷ்மணன் பாஸ்ட் பௌலிங்கிற்கு  முன்னால்  ஆட முடியாமல் தவித்தனர்.  அங்கதனும் சுருள் பந்து போட்டு வேறு திணறடித்தான்..  ஆனால் பல செஞ்சுரி போட்ட கும்பகர்ணன் வந்து எல்லா பந்துகளையும் சிக்ஸராக  அடிக்க  ராமன் கவலைப்பட ஆரம்பித்தான்.  ஆனால் முடிவில் சுக்ரீவனின் சுருள் பந்தில் முகத்தில் அடிபட்டு,  ராமனின் பெருமையை உணர்ந்து,  “ ராமா” உன் கையாலேயே அவுட் ஆக விரும்புகிறேன் “ என்று சொல்ல அடுத்துப் போட்ட ராமனின் பந்தில் ‘ கிளீன் போல்டாகி ‘ வெளியேறினான் கும்பகர்ணன். 

   அதே போல் இந்திரஜித் எப்படிப் போட்டாலும் பவுண்டரியாக அடிப்பதைக்  கண்டு கலங்கிய ராமனிடம் ‘ ஷார்ட் பிட்ச் ‘ போட்டால் தடுமாறுவான் என்று விபீஷணன் சொல்ல லக்ஷ்மணன் அதே மாதிரி போட அவுட் ஆனான் இந்திரஜித்.  ஸ்டேடியத்தில் இருந்த முப்பத்து முக்கோடி தேவரும் ‘ ஜிங் ஜிங் ‘ என்று  ‘ ஜால்ரா ‘ தட்டி ஆரவாரம் செய்தனர்.

   அடுத்து வந்த ராவணன் கோபாவேசத்தில் அடிக்க ஆரம்பித்தான்.  ஆனால் அப்போது லைட் பெயிலியராகிக்  கொண்டிருந்தது.  ராமன் நினைத்திருந்தால்  அவனை அவுட் ஆக்கியிருக்க முடியும்.  இருந்தாலும் ராமன் பெருந்தன்மையுடன்  ராவணனை  ‘ இன்று  போய்  நாளை  வா ‘ என்று சொன்னான்.  ராவணன் அவமானத்தில் துடிதுடித்துப் போய்விட்டான்.

   மறுநாள் மேட்சில் ராவணன் தனது பத்து பேட்டுகளை மாற்றி மாற்றி விளையாடியும் ராமன் லக்ஷ்மணன் பௌலிங்கில் ரன் எதுவும் எடுக்கவே முடியவில்லை.  எல்லா ஓவரும் மெய்டனாகவே  போய்க் கொண்டிருந்தன.  கடைசியில் ராமனின் சூப்பர் பௌலிங்கில் க்ளீன் போல்டானான் ராவணன்.  "வோர்ல்ட் கப் “ திரும்பவும் ராமனிடம் வந்து சேர்ந்தது,  இருப்பினும் அது ஸ்ரீ லங்காவில் ராவணனிடம் இத்தனை நாள் இருந்ததே என்று சந்தேகப் பட்டு  உலக மக்களுக்காக  அதை ‘ Fire  Polish ‘ போட்டு எடுத்துச் சென்றனர்.

     ராமன் அயோத்திக்குக் கேப்டனாகும்  காட்சியில்லாமல்  எப்படி ராமாயணக் கிரிக்கெட் முடிவுறும்? ராமன் கேப்டனாகி, வோர்ல்ட்  கப் அருகில் இருக்க  பரதன்,  லக்ஷ்மணன், சத்ருக்னனுடன்  அனுமனும் கை கட்டி பவ்யமாக நிற்க ஓர் குரூப்  போட்டோ எடுத்துக் கொண்டதும் ராமாயண கிரிக்கெட்  முடிவுற்றது.

   image