அரசியல் ரம்மி
பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வரப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்!
எத்தனை கருத்துக் கணிப்புகள்!
மோடி அலை வீசுகிறதா? ஆம் ஆத்மி வலை வீசுகிறதா? காங்கிரஸ் விலை பேசுகிறதா?
பி ஜே பிக்கு இது அருமையான சந்தர்ப்பம்! கருத்துக் கணிப்புக்கு ஊடே அதன் வெற்றி மாலை தெரிகிறது! மோடி பிரதமராவதும் உறுதியாகத் தெரிகிறது!
தமிழ் நாட்டில் சீட்டுக் கட்டில் ரம்மி செட் சேர்ப்பது போலே கட்சிகள் ஒட்டிக் கொள்கின்றன! இந்த ஆட்டம் முடியும் வரை அவர்கள் ஒட்டி உறவாடுவார்கள்! அடுத்த ஆட்டத்தில் செட் மாறும்!

- தைரியமாக பிரதமர் கனவில் ஜெயலலிதா தனி அணி- நாற்பதும் எனக்கே என்று.
- பி ஜே பி , விஜயகாந்த் , வை கோ , ராமதாஸ் ஒரே அணியில் சண்டை .போட்டுக் கொள்கிறார்கள்!
- தி மு க விற்கு கூட்டணி என்று சொல்லிக் கொள்ள சில கட்சிகள் உள்ளன!
- ஆனால் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் மட்டும் பாவம் தனித் தனி!
- தேர்தல் நெருங்க நெருங்க இந்த ரம்மியில் கொஞ்சம் மாறுதல் ஏற்படலாம்!
- சில ஜோக்கர்கள் ரம்மிக்கு கை கொடுக்கலாம்.
- தேர்தலுக்குப் பிறகு புது செட் அமைந்தாலும் அமையலாம்!
நமது வாக்காளர்கள் எப்பவும் புத்திசாலிகள்!
இந்திராகாந்தியின் எமர்ஜென்சியை தூக்கி எறிந்து ஜனதாவைக் கொண்டு வந்தார்கள்!ஜனதா கிச்சடி ஆனதும் அதைத் தூக்கி அடித்து மீண்டும் இந்திராவைக் கொண்டு வந்தார்கள். ராஜீவ் காந்தியை எதிர்க்கட்சியில் உட்கார வைத்தார்கள்! வாஜ்பாயின் இந்தியாவை ஒளிர விட்டார்கள்! சோனியாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் ஆட்சியைத் தந்தார்கள்!
இன்றைக்கு மோடி கையில் செங்கோல் கொடுக்கப் போகிறார்கள்?
யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலும் பண பலமும் தான் உண்மையில் ஆட்சி புரிகின்றன! இவற்றின் பிடியிலிருந்து நம்மைக் காக்க யாருமேயில்லையா?
’ஏனில்லை ! நான் இருக்கிறேன்!’ என்று சினிமா பாணியில் யாராவது வரமாட்டார்களா? என்று ஆவலோடு காத்திருக்கிறான் இந்தியக் குடிமகன்!
