1752, 1, ஏப்ரல் :
ராபர்ட் கிளைவ் டயரியிலிருந்து:
இன்று திருச்சி மலைக்கோட்டைக்கு கீழே உள்ள ‘கிளைவ் ஹவுஸ் ‘ என்ற எனது வீட்டில் தங்கியிருக்கிறேன். எதிரே அழகான குளம். அருகே மெயின் கார்ட் கேட் ! பாரக்ஸ் முழுதும் குதிரைப்படை வீரர்கள்! போர்த் தளபதிக்கான சரியான அறை. கடந்த வாரம் முழுதும் ஒரே அலைச்சல்! புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரே மூச்சில் குதிரையில் வந்ததன் களைப்பு என்னை முற்றிலும் ஆக்ரமித்திருந்தது அப்படியே தூங்கிவிட்டேன். திடீரென்று உப தளபதி எழுப்பினான். பிரஞ்சுப் படை மெயின் கார்ட் கேட் வரை வந்துவிட்டதாம். என் மனைவி, மகன் இருவரும் காலையில் தான் கல்லணைக்குப் போயிருந்தார்கள்! இன்னும் வரவில்லையே! பிரஞ்சுப் படை அவர்களைப் பிடித்திருக்குமோ?
“சார்ஜ்” என்று ஆணையிட்டு என் குதிரையில் பாய்ந்தேன்! என்னுடன் 500 குதிரை வீரர்களும் வந்தனர். மெயின் கார்ட் கேட் திறக்கப்பட்டது. “மார்ச்” என்று கத்திக்கொண்டே பாய்ந்தேன். என்ன ஆச்சரியம்! எதிரே வெறும் பொட்ட வெளி! பிரஞ்சுப் படை வீரன் ஒருவனையும் காணோம். பக்கத்தில் மரத்தின் மறைவிலிருந்து இரு குதிரைகள் மெதுவாக வரும் சத்தம் கேட்டது! இருவர் கரங்களிலும் அழகிய பூங்கொத்துக்கள்!“வாழ்க ராபர்ட் கிளைவ் என்று என்மனைவி தமிழில் சொன்னாள். “இல்லையம்மா வாழ்க லார்ட் கிளைவ்” என்று என் மகன் சத்தமாக ஆங்கிலத்தில் கூறினான்.
இருவரும் என் அருகே வந்து மெதுவாக “இன்று ஏப்ரல் ஒன்று -முட்டாள்கள் தினம்’ என்று சொல்லிச் சிரித்தனர். 500 வீரர்களுடன் குதிரைகளும் சேர்ந்து சிரித்தன- அவர்கள் தளபதி முட்டாளாக்கப்பட்டதற்கு!
வேற வழி! நானும் சிரித்தேன்!. .


