’செவிநுகர்க் கனியது’ – எஸ்ஸார்சி

வள்ளுவரும் வாசுகியும்பார்க்கடல் துயிலும் பரந்தாமா, நின்னை வணங்குகிறோம்.

‘யாரது விளிப்பது என்னை, இத்தனை வைகறைப்போதில்’

‘யான் திருவள்ளுவன் என்னோடு என் இணையாள் வாசுகி’

‘வாரும் வள்ளுவரே தமிழ்க்கவிஞர்தானே நீர், ’துயிலும்’ என்று ஓர் அடைமொழி கொண்டு விளித்தீர் ஏனோ?

‘அரிதுயில் தங்களது, பாற்கடல் தானே தங்கள் பள்ளி’

‘ஆம் சரித்தான் நீர் தொடரும்’

‘மீண்டும் எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள் யான் தமிழ்க்கவிஞன் உண்மை’.

‘நீவிர் எக்காலமும் பூலோக மக்கள் நலம் விரும்பி. உம்மை யாம் அறிவோம். நீவிர் இருவரும் இவ்விடம் வந்ததற்குக் காரணம்?

‘நான் திருக்குறள் என்னும் அறநூல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்தேன். பூலோகக் காலகணக்கில் ஈராயிரம் ஆண்டுகள் முடிந்து போயின.’

‘ஆம் காலத்திற்கு நாம் எல்லோரும் கட்டுப்பட்டவர்கள். ஆகவேண்டியது ஆகத்தான் செய்யும்’

‘என் தமிழ்நிலத்து மக்கள் யான் எழுதிய திருக்குறள் புத்தகத்தை வாசித்து விட்டு அதன்படி எப்படி எப்படியெல்லாம் நெறியோடு வாழ்கிறார்கள். இன்னும் இந்த ஜடாமுடியனை நினைவில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களா. நான் சொல்லிவிட்டு வந்த குறள் அறம் மக்களால் எப்படி கொண்டாடப்படுகின்றது. இன்றைக்குத் திருக்குறளை வியாக்கியானம் எப்படிச் செய்கிறார்கள். கற்றதைப் பெற்றதை வைத்துக்கொண்டு எப்படித்தம் வாழ்க்கையை செம்மையாக நடத்துகிறார்கள் என்பதறிய மிகுந்த ஆவலாக உள்ளேன்.’

‘சரி வள்ளுவரே, வாசுகி உனது செய்தி’

‘எனது கணவர் எங்கு ஏகினும் அவரோடு இணைந்து செல்வதே யான் செய் தவம். எனக்கென்று பிரத்யேகமாய் விருப்பம் எதுவுமில்லை.’

‘ வாசுகி நீ எப்போதும் சொல்வது தான் இது. அவசியம் பூவுலகம் சென்று பார்க்கத்தான் வேண்டுமா’

‘ஆம் இறையே. எம் விருப்பம் அது’

‘அது வேண்டாமே என்று நினைத்தேன். வைகுண்டம் ஏகியபின்னும் உமக்கு பூர்வாசிரம வாசனை ஏனோ தொடர்கிறது.பிரமனிடம் இதற்கு யாது காரணம் என்பதைக் கேட்டுத்தான் தெளிய வேண்டும். புண்ணிய பாவ இருப்புக்கணக்குகள் பிரமனின் கணக்கதிகாரி சித்திராகுப்தன் வைத்துக்கொண்டிருக்கிறான். அவனை நான் எதுவும் கேட்கவும் முடியாது. அவன் எனக்குப்பதில் சொல்லவும் மாட்டான். பணியில் நேர்மையாளனை கடவுளர்கள் கூட அசைத்துப் பார்க்க முடியாது.’

’ஒரே ஒரு முறை என்னை நீங்கள் தயைகூர்ந்து பூவுலகம் சென்றுவர அனுமதிக்க வேண்டும் தாமோதரா. உன்னைத்தாள் பணிகிறேன்.’

பரந்தாமன் தேவ கணங்களை அழைத்தான். அவர்கள் உடன் வந்து வாய்பொத்தி திருமால் கட்டளைக்குக் காத்திருந்தார்கள்.

‘தேவ கணங்களே. ஒரு காரியம் செய்யுங்கள்.’

‘உத்தரவு பேரருளே உம்மை வணங்குகிறோம்’

‘இதோ பாருங்கள். தமிழ்க்கவிஞர் திருவள்ளுவர். அவரின் துணைவி வாசுகி. இவர்கள் இருவரையும் பாரத கண்டத்துத் தமிழ்நாடு அழைத்துச்சென்று இவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலை அவர்களோடு தொடர்பு உடைய ஊர்களை அங்கு வாழ்கிற மக்கள் இவர்கள் நினைவுகளை இன்று எப்படிப் போற்றுகிறார்கள் என்பதைக் காண்பித்து வாருங்கள். உங்களின் வருகையைப் பூலோக வாசிகள் யாராலும் காணவே முடியாது. எந்த இன்முகத்தோடு இங்கிருந்து புறப்படுகிறார்களோ அந்த இன்முகத்தின் மாற்று குறையாமல் இவர்களைத்திரும்பவும் வைகுண்டம் அழைத்துவந்து விடவேண்டும். கட்டளை. கணங்களே.’

‘மிக எளிய பணி கொடுத்துள்ளீர்கள். அரும்பெருங்கடவுளே. யாம் உடன் செயலில் இறங்குவோம். இக்கணம் விடைபெற்றுக்கொள்கிறோம். உத்தரவு’ தேவகணங்கள் திருவள்ளுவரையும் வாசுகி அம்மையாரையும் ஒரு புஷ்பப்பல்லக்கில் அமரவைத்து பூவுலகம் கொண்டு சென்றனர்.

’இறங்குங்கள் வள்ளுவரே, பார்த்து இறங்குங்கள் மைலாப்பூர் இது’

‘யான் பிறந்த திருப்பதி’

மைலாப்பூரின் மாடவீதிகளில் ஒரே மக்கள் கூட்டம். அறுபத்து மூவர் திருவிழா நிகழ்வு. சைவ நாய்ன்மார்கள் அறுபத்து மூவரோடு திருவள்ளுவ நாயனாரும் அறுபத்து நான்காவது நாயன்மாராய் உலா கொண்டு செல்லப்படுகிறார்.

‘பார்த்தாயா வாசுகி என்ன மரியாதை என்ன மகத்துவம்’

‘பார்த்தேன். கண்கொள்ளாக்காட்சி. மக்கள் உம்மைத் தெய்மாக்கித்தொழுகின்றனர். எனக்கு நிறைவு’

‘யான் எழுதிய நூலை என்னருகே காணோமே’

‘மக்கள் திருக்குறளை அவரவர் மனங்கொண்டு சேர்த்தபின் நூல் எதற்கு’

‘அதுவும் சரிதான்’

குறளை யாரும் ஓதாமல் கூட்டம் நகர்கிறது. வள்ளுவர் அதனை மனக்குறிப்பில் எழுதிக்கொள்கிறார்.

தேவ கணங்கள் வள்ளுவரையும் வாசுகியையும் ‘வாருங்கள் போகலாம்’

என்கின்றனர்.

‘அடுத்த வருவது திருவள்ளுவர் கோயில்’

இருவரும் பல்லக்கில் அமர்ந்துகொள்ள அது வான் வழியே பயணிக்கிறது.

‘யாருக்கும் நாம் தெரிய மாட்டோமா’

‘ஆம் யாருடனும் பேசவும் முடியாது. கண்கள் பார்க்கும் .காதுகள் கேட்கும் தமிழ் கேட்கும் அவ்வளவே’

திருவள்ளுவர் கோயில் வாயிலில் பல்லக்கு நிற்கிறது. இருவரும் இறங்கிக்கொள்கின்றனர்.

‘உங்களுக்கு ஒரு திருக்கோவில் பாருங்கள்’

திருவள்ளுவர் திருக்கோவில் , மயிலாப்பூர், சென்னை, Thiruvalluvar Temple,  Mylapore, Chennai - YouTube’அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் மைலாப்பூர் சென்னை 4’ வள்ளுவரே வாய்விட்டு படித்தார். நம் இருவரது சிலை பார்த்தாயா வாசுகி. எத்தனை மகத்துவம். கைலாய நாதன் கச்சி ஏகாம்பரன் மைலாப்பூரில் அவன் திருக்கோயிலுக்குள்ளே நமக்கும் ஒரு சந்நிதி.’

‘’ஜடாமுடியும் தாடியும் உமக்கு இருப்பதைப்பாருங்கள்’

‘ஆமாம் வாசுகி’

‘நீட்டலும் வேண்டா மழித்தலும் வேண்டா என்றீர்கள்தானே’

‘அத்ற்கென்ன அதனை வைத்தா மக்கள் நம்மைப்பார்க்கிறார்கள்’

‘அது இல்லை. ‘

‘ கருவறை வாயிலின் இருபுறமும் தூண்களில் எழுத்தாணி ஓலைச்சுவடி, ஆணும் பெண்ணும் கவனமாய்ப் படிக்கிறார்கள், கீழே பார் வீணை அதற்கும் கீழே தாமரை மலர் அம்மலர் மீது யான் எழுதிய குறள் கருங்கல்லில் அற்புதமாய் வடித்து இருக்கிறான் சிற்பக்கலைஞன். .என் சிலை உன் சிலை நமக்கு நிவேதனம் அபிஷேகம் கல்பூர ஆராதனை எல்லாம்’

‘வீணை இங்கெதற்கு நாதா’

‘வீணை மனித இசைஞானத்தின் வெளிப்பாட்டு உச்சம். உள்ளத்தூய்மை மாற்று குறைந்தால் வீணை வாசிப்பில் அது பிரதிபலிக்கும். பூவுலகில் பிறந்த எவரும் வீணையை வாசிக்கலாம். மனிதன் சிருஷ்டித்த இன மத நிற கலாச்சார பேதங்கள் இசைக்கருவி முன்னே சாம்பலாகி விடுகின்றன. ’

‘தாமரை மலர் மீது குறள்’

‘உலகிற்கு ஆதாரம் நீர். நீர் வளமை உரைப்பது தாமரை. இயற்கையின் அமைப்பும் உயிர்களின் வாழ்க்கையும் அறத்தைத்தாங்கி நிற்கின்றன. ஆக குறளைத் தாங்குகிறது தாமரை.

‘வாருங்கள் இன்னும் வள்ளுவர் கோட்டம் நாம் பார்க்கவேண்டுமே’

‘ ஏது வள்ளுவர் கோட்டமா’

‘இங்கு அருகிலேதான் உங்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் கல்லிலே எழுப்பியுள்ளார்கள்’

Tamil Nadu Tourism on X: "Valluvar Kottam is a monument in Chennai,  dedicated to the classical Tamil poet-philosopher Valluvar. #valluvarkottam  #Chennai #touristspot #TamilNadu #tourists #tourism #incredibleindia  #வள்ளுவர்கோட்டம் https ...இருவரும் பல்லக்கில் அமர்ந்து கொள்கிறார்கள். பல்லக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் வாயிலிலே நிற்கிறது. தேவ கணங்கள் அவர்களை வள்ளுவர் கோட்டத்துள் பைய அழைத்துச்செல்கிறார்கள்.

‘வாசுகி பாரேன் திருக்குறள் கருங்கல்லிலே பொறிக்கப்பட்டுள்ளது. எத்தகைய சாதனை’

’ஒருவரின் கவிதைப்படைப்பு கல்லிலே முழுவதுமாய் வடிக்கப்பட்டது இப்புவியுலகில் திருவள்ளுவருக்குத்தான்’ வாயிலில் வைக்கப்பட்டுள்ள பலகையை வாசுகி வாசித்துக்காட்டினார்.

’திருவாருர் தேர், கல்லிலே, அதனுள்ளே உமது அழகு சிலை.’

‘நல்ல காலம் இங்கே பூசை வழிபாடு இல்லை’

இருவரும் ஒரு பெயர் தெரியாத மரத்தின் கீழ் அமர்கின்றனர்.

‘நான் பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதிவிட்டு விடைபெற்றுக்கொண்டேன்.’

‘ இந்நிலத்து அறிவார்ந்த சான்றோர் இன்றுவரை திருக்குறளைக்காத்து அதனைக்காத்து கல்லிலே நிறுவிவிட்டனர். மகிழ்ச்சி’ வாசுகி சொன்னார்.

’தேவகணங்கள் ஆயிற்றா புறப்படலாமா’ என்றனர்.

’அத்தனை அவசரமாக நாம் இப்போது எங்கே செல்கிறோம்’

‘குமரிக்கு’

‘அங்கென்ன’

பல்லக்கில் மெதுவாய் அமருங்கள். பார்க்கலாம்’

வான் வழி மலர்ப்பல்லக்கு மேகவழிச்சென்று கன்னியாகுமரி முனையில் திருவள்ளுவர் சிலை அருகே நின்றது. கடற்காற்று வேக வேகமாய் வீசியது. அலைகள் கோபமாய் கரைமோதிக்கொண்டு இருந்தன.

‘பாருங்கள் அற்புதத்தை’ என்றனர் தேவ கணங்கள்.

‘நான் எனது திருக்குறளில் எத்தனை அதிகாரம் எழுதினேனோ அத்தனை அடி உயரத்தில் எனக்கு கற்சிலை. யாரோ ஒரு மனிதனுக்கு எத்தனைப்பெரிய மனம் பார்த்தாயா’

வாசுகி ஒரு பலகையில் எழுதியிருந்ததை வாசித்தார்.’ இப்பூவுலகில் ஒரு கவிஞனுக்கு இத்தனை உயர மரியாதையை வேறெங்கும் நீங்கள் காணமுடியாது’

வள்ளுவருக்குக்கண்கள் பனித்தன.

இருவரும் கடற்காற்றை வாங்கியபடி அங்கேயே சற்று அமர்ந்தனர்.

செய்தித்தாள் விற்பவன் தோளில் அவைகளை அடுக்கிக்கொண்டு விற்றுக்கொண்டே போனான்.

‘வாசுகி அது ஒன்று வேண்டுமே’

திருவள்ளுவர் சிலை | Tamil Nadu‘ எது அது. செய்தித்தாளா வேண்டும்’ தேவகணங்கள் உடன் ஓடி வந்தனர்.

‘எப்படி வாசிப்பீர்கள் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டுகள் முடிந்தபின்னும் அவ்வெழுத்தை உங்களால் வாசிக்கத்தான் இயலுமா’

‘தேவகணங்களே அது ’செம்மொழி தமிழ்மொழி’

என்றார் வள்ளுவர்.

தேவ கணங்கள் வள்ளுவருக்கு ஒரு நாளேடு வாங்கி வந்தனர். வள்ளுவர் நாளிதழைக்கையில் வாங்கினார். வாசித்தார்.

ஒரு செய்தியை வாசித்து விட்டு நாளிதழை தூர வீசினார்.

‘தேவ கணங்களே புறப்படலாம்’ என்றார் வள்ளுவர்.

பதறிப்போனார் வாசுகிஅம்மை.

‘என்ன படித்தீர்கள் இத்தனைக்கோபம்’

‘நீயும் படி வாசுகி’

‘புதுக்கோட்டை அருகே வேங்கை வாயிலில் தாழ்த்தப்பட்டோர் வாழ்விடத்துக்கு மய்யமாய் அமைந்து நிற்கும் மேல்நிலை குடி நீர்த்தொட்டியில் மனித மலத்தை வீசிவிட்டு மாயமாகிய பேர்வழியைத் தேடுகிறது காவல் துறை’

‘மாயமாகிய மனிதனை என்று போடாமல் விட்டார்களே’ என்றார் வள்ளுவர்.

‘நம் உற்றார் ஊறவு வாழும் பகுதிதான் அது’

‘ ஆம் வாசுகி. காலம் போனது. என் அறநூல் இன்னும் இம்மக்களை அறவழியில் கொண்டு சேர்க்கவில்லையே. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எழுதினேன். ஈராயிரம் ஆண்டுகளாய் அந்தச்சேதி மக்களைப்போய்ச்சேரவில்லையே. தமிழ்க்குடியா இன்னுமா இப்படி. வாசுகி என் நெஞ்சு துடிக்கிறதே, என் செய்வேன் வாசுகி’

கண்கள் பனித்தது கண்ட தேவகணங்கள்’ மலர்ப்பல்லக்கைத்தயார் செய்து இருவரையும் அமரச்செய்தனர். ‘நீவிர் மனம் நொந்தால், உமது கண்கள் ஈரமானால் நாங்கள் வைகுண்டவாசன் திருமாலுக்குப்பதில் சொல்லியாகவேண்டுமே அய்யனே’ என்றனர் தேவ கணங்கள்.

அடுத்த கணம் அவ்விருவரோடு வைகுண்டம் தொட்டது மலர்ப்பல்லக்கு.

திருமால் வைகுண்டதர்பாரில் அமர்ந்து இருந்தார். திருமகளும் உடன் தான் இருந்தார்.

’வாரும் வள்ளுவரே. என்ன முகம் ஒரு வாட்டமாய்’

‘பரந்தாமா. நான் என் மக்களைக்காணச்சென்றேன். ஆனால் ஆனால்..’

‘நான் அறிவேன் வள்ளுவரே. யாம் உனக்குச்சொல்ல விரும்பினோம். ‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு , சொன்னவர் நீர். ஆக நீர் உமது கண்களால் எதனையும் பார்த்து வருதல் சரி என்று விட்டு விட்டேன். ஆயினும் நீவிர் சற்றுக்கலங்கித்தான் போயிருக்கிறீர் இல்லையா’

‘ஆம் பேரருளே’ வாசுகிதான் பதிலுரைத்தார். வள்ளுவரால் பேசமுடியவில்லை.

வைகுண்ட வாசிகள் கண் கலங்க வாய்ப்பேது. அது இங்கு நிகழாத விடயம். ஆக தேவ கணங்கள் உடன் உம்மைக்கூட்டி வந்துவிட்டனர் அது வரையிலும் அவர்கள் தப்பினார்.

தேவகணங்கள் பாற்கடலோனை வணங்கித்துதித்து நின்றனர்.

‘ஒரு செய்திக்கே இப்படியா வள்ளுவரே’

‘வேண்டாம் அருட்கடலே என்னால் இயலவில்லை. மன்னியுங்கள்’ என்றார் வணங்கியபடி வள்ளுவர்.

‘எத்தனை அழகு எத்தனை இனிமை. இக்கணம் உமது பேச்சில் எம் நாயகா பெருமானே’ என்றார் திருவடி அமர் திருமகள்.

’தமிழ்க் கேட்டாய் நீ. செவி நுகர் கனியது அறியாயோ நீ’ ஆகத்தான் அத்தனை இனிமை என் இணையாளே’ கேசவம் விடை சொன்னது.

————————————————————————————-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One response to “’செவிநுகர்க் கனியது’ – எஸ்ஸார்சி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.