ராஜராஜசோழன் உலா (நிறைவுப் பகுதி)

image

நந்தினி வரவில்லையா?‘  என்று சிவாச்சாரியார் கேட்டதும் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அவர்கள் முகத்தில் இருந்த இனிமை மறைந்திருந்தது. சிவாச்சாரியார் தன் தவற்றை உணர்ந்து நடுநடுங்கி நின்றார்.

ஆதித்த கரிகாலன் கோபத்தோடு கேட்டான் – “சிவாச்சாரியாரே! யார் அந்த நந்தினி? அவளுக்கும் சோழ குலத்துக்கும் என்ன சம்பந்தம்?”

அரசே! என்னை மன்னித்துவிடுங்கள்! நான் உங்கள் வரலாற்றைப் பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புத்தகத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.. அதில் ..”

“பொன்னியின் செல்வனா? யார் அவன்?”

“மன்னர் மன்னா! ராஜராஜ தேவருக்குத்தான் அப்படி ஒரு பெயரைச் சூட்டியிருந்தார் கல்கி அவர்கள்!

“ஆஹா! தம்பி! இதுவரை எனக்குத் தெரியாமல் போயிற்றே! நானும் இனி உன்னை ஆசை தீர பொன்னியின் செல்வன் என்றே கூப்பிடப் போகிறேன்!” – குந்தவி  கூறினாள்.

“அது சரி! நந்தினி யார்?” – ஆதித்த கரிகாலன் மீண்டும் வினவினான்.

“அதில் தான் எங்களுக்குப் பெரிய குழப்பம்! அவள் வீரபாண்டியன் மகளா காதலியா … இல்லை ஆதித்த கரிகாலர் காதலியா….”

“என்ன சொன்னீர் சிவாச்சாரியாரே” – ஆதித்த கரிகாலனைக் கட்டுப்படுத்த வந்தியத்தேவன் வரவேண்டியதாயிற்று.

“எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்! இனி நான் உங்கள் வரலாற்றுக்குச்  சம்பந்தம் இல்லாதவர் பற்றிப்பேசமாட்டேன்!” – சிவாச்சாரியார் கதறினார்.

கருவூர்த்தேவர் பேச்சை மாற்றினார். “ அது சரி..பதும மலர் ஆதித்தன் கையில் சேர்ந்திருக்கிறதே! அவர் என்ன செய்யப் போகிறார்?”

“அது சேரவேண்டிய இடம் சிவபெருமானின் திருவடிகள் தான் ஸ்வாமிகளே!”

ஆதித்தன் உறுதியாகக் கூறினான்.

உலா மேலும் தொடர்ந்து அடுத்த மண்டபத்தை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. கரிகாலன் மெல்ல மெல்ல பின்னால் வந்து சிவாச்சாரியார் அருகே வந்தான். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் கவனிக்கவில்லை.

ஆதித்த கரிகாலன் சிவாச்சாரியாரிடம் “ என் கோபத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! நந்தினி என்ற பெயரைக் கேட்டது மாதிரியும் இருக்கிறது. கேட்காதது மாதிரியும் இருக்கிறது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ரகசியம் தெரிந்திருக்கிறது. அதை என்னிடம் மறைக்கிறார்கள். அதுவும் என் நன்மைக்காகத் தான் இருக்கும். நான் அடிக்கடி அலறுகிறேன்! கோபப்படுகிறேன்! துடிக்கிறேன்! அதற்குக் காரணம் ஒரு பெண் என்பது புரிகிறது! அவள் யார்? அவள் தான் நந்தினியா?

“அரசே! எங்கள் யாருக்கும் புரியாத புதிர் தங்களின் திடீர் மறைவு தான்! வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள்  சூழ்ந்தது என்று தான் புரிந்ததே தவிர அது எப்படி யாரால் எங்கு எவ்வாறு நடந்தது என்பது எங்கள் யாருக்கும் விளங்கவில்லை“ என்று தழுதழுத்த குரலில் சிவாச்சாரியார் கூறினார்.

“சிவாச்சாரியாரே! இது வரை யாருக்கும் தெரியாத- யாரிடமும் கூறாத எனது மரண முடிச்சைப் பற்றி உங்களிடம் மட்டும் சொல்கிறேன்! யாருக்காவது இது தெரிந்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும்”.

சிவாச்சாரியாரிடம் ஆதித்த கரிகாலன் தன் மரணத்தின்  காரணத்தைக் கூறினான். அவ்வளவு தான்! சிவாச்சாரியார் ஸ்தம்பித்துப் போய்விட்டார் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை! அப்படியே பிராகாரத்தில் சாய்ந்து விட்டார். ஆகித்தனும் மற்றவரும் உலாவில் தொடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தான் இரு கூறாய்ப் பிரிந்தது போலிருந்தது. தானும் வானத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு. அப்படியே பறந்து தன் வீட்டுக்குப் போனது போலவும் ஒரு நினைவு. அதே சமயம் அவர்கள் உலாவையும் அவரால் பார்க்க முடிந்தது. அந்த அரை மயக்க நிலையில் அவர் சற்றுக் கண்ணசைந்து விழித்த போது அனைவரும் அவரைச் சுற்றி நிற்பதை உணர்ந்தார்.   ராஜராஜன் அவர் அருகில் வந்தான்.

“சிவாச்சாரியாரரே! இதுவரை இந்த கோவிலில் எல்லா இடங்களிலும் எங்கள் ஆசைதீர உலா வந்தோம். ஆயிரம் ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறோம்! ஆனால் நாங்கள் மறைந்த பிறகு பார்க்க முடியாத இடம் என்றும் ஒன்று இங்கே உள்ளது. அதைப் பார்க்கத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ  வேண்டும்” என்று மும்முடிச் சோழன்-ராஜகேசரிவர்மன் –அருண்மொழிவர்மன் என்றெல்லாம் பெயர் பெற்ற ராஜராஜ சோழன் பணிவோடு வேண்டி நின்றான்.

“ ஆம் . சிவாச்சாரியாரே! கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் சிவபெருமானைத் தரிசிக்க விரும்புகிறோம்! ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் பதும மலரை அவர் காலடியில் வைத்தால் தான் எங்கள் கண்களுக்கு நாங்கள் பிரதிஷ்டை செய்த சிவபெருமானின் காட்சி கிடைக்கும்.! அதைத் தாங்கள் தான் நிறைவேற்றவேண்டும். மற்ற இடங்களுக்குச் செல்லும் உரிமை எங்களுக்கு உண்டு. ஆனால் கருவறையைத் திறந்து பதும மலரை வைக்கும் உரிமை உங்களுக்குத்தான் உண்டு.”

 

“மன்னர் மன்னா! வாருங்கள்! நீங்கள் கட்டிக் காத்த சிவபெருமானை உங்களுக்குத் தரிசனப் படுத்துகிறேன்!” – சிவாச்சாரியார் நெகிழ்ச்சியுடன் அனைவரையும்  கருவறைக்கு அழைத்துச் சென்றார்! அவரது இடுப்பில் கருவறையைத் திறக்கும் சாவி இருந்தது.

“ஆயிரம் ஆண்டுகளாக எங்களது தணியாத ஆசை இன்று நிறைவேறப் போகிறது!”- ராஜராஜன் கூறினான்!

 image

சிவாச்சாரியார் இடுப்பிலிருந்து சாவியை எடுத்து கருவறைப் பூட்டைத் திறக்க முயன்றார். அவர் கை நடுங்கியது. அவரால் முடியவில்லை! மனம் துடித்தது. தினம் கருவறையை சாதாரணமாகத் திறக்கும் அவரால் அன்று திறக்க முடியவில்லை!

 

“மன்னா! …நான் … ஏன் ..” வார்த்தை வராமல் தடுமாறினார் சிவாச்சாரியார்.

 நான் கூறுகிறேன்! என்று சொல்லிக் கொண்டே வந்தார் கருவூர்த்தேவர்.

“ மன்னா! சிவாச்சாரியாரின் கரங்களால் இனி கருவறைக் கதவை என்றுமே திறக்க முடியாது. அவர் வரும்போது மனிதராகத் தான் வந்தார். அவரிடம் கருவறைச் சாவியும் இருந்தது. இறைவனை அணுகும் உரிமையும் இருந்தது. ஆனால் அவர் எப்போது ஆதித்த கரிகாலன் வாயிலாக அந்த தேவ ரகசியத்தைக் கேட்டாரோ அப்போதே அவருடைய ஆத்மா அவருடைய உடலை விட்டுப் பிரிந்து விட்டது. இப்போது நம் முன் நிற்பது  அவருடைய ஆத்மா தான். இவரது உடலை ஏற்கனவே இவரது இல்லத்தில் சேர்த்து விட்டேன். இனி அவரும் உங்களுடன் செல்ல வேண்டியது தான். நாம் இன்று சிவபெருமானைத் தரிசிக்க இயலாது. சிவபெருமான் பாதம் பணிய நமக்குப் பதும மலர் வேண்டும். மானுடர் துணை வேண்டும். அதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதுவரை உங்கள் உலா.. ராஜராஜ சோழன் உலா தொடரட்டும்…. “ 

image

(முற்றும்)