24/25

image

image

அரங்கன் உறங்கும் அழகு திருவரங்கம்
உச்சியில் அமர்ந்தஅருமைப் பிள்ளையார்
புரங்கள் எரித்த ஆனைக்கா அண்ணல்
பக்திநிறைப் பெண்ணுக்கு தாயும் ஆனவன்
சக்தியாய் மிளிர்ந்த சமயபுரத்துஅம்மன்
அருணகிரிக்கு அருளிய வயலூர் குமரன் 
அனைத்தும் அமைந்த சிராப்பள்ளி புகழ்
அனைத்தும் சொல்வது அரிதே அரிதே!
 

புராணம்: 

  • ராம ராவண யுத்தம் முடிந்து பள்ளீகொண்ட பரந்தாமன் திருவுருச் சிலை தாங்கி வான வழியாய் வீடணன் வரஅந்தச் சிலை இலங்கை சென்றடைந்தால் அரக்கர் சக்தி மீண்டும் அதிகமாகிவிடும் என்று வானரர் பதைக்கஆனை முகத்தோன் தந்திரமாக திருமால் திருவுருவைக் காவிரிக் கரையில் ஸ்தாபித்த இடம்பூலோக வைகுண்டம் என்று வழங்கப்படும் திருவரங்கத் தலம் அமைந்த ஸ்ரீரங்கம் -108 வைணவத் தலங்களில் முதலானது. 
  • வீடணன் பிள்ளையாரை விரட்டிச்சென்று உச்சிமண்டையில் நச்சென்று குட்டினான். பிள்ளையார் ஓடி அமர்ந்த இடம் உச்சிப் பிள்ளையார் கோவில் என்ற மலைக்கோட்டை.
  • பிள்ளையார் சிலையின் உச்சி மண்டையில் குட்டுப்பட்டதழும்பு இன்றும் உண்டு.
  • செட்டிப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க ,அவளுடைய தாய்  காவிரியைக் கடக்க முடியாமல் அக்கரையில் தவிக்க, பெண்ணின் துயர் தீர்க்க சிவபெருமான் தானே தாயாக வந்து பிரசவம் பார்த்தான். தாயுமானவனாக அமர்ந்தான் மலைக் கோட்டையில்.
  • பஞ்ச பூதங்களில் ஒன்றான அப்புத் தலமாக (நீர்) அமைந்தது திருவானைக்கோயில்.

சரித்திரம்

  • இன்றும் இருக்கும் உறையூர், அன்றைய சோழர்களின் தலைநகரமாக இருந்தது. கோட்டையும் அகழியும் மதில்களும் இருந்தன.
  • உச்சிப் பிள்ளையாரும் தாயுமானவரும் எழுந்தருளியிருக்கும் மலையைச் சுற்றிக்  கோட்டை அமைந்திருந்ததால் மலைக்கோட்டை என்றே அழைக்கப்பட்டது.
  • சிதைந்த மதில் , கோட்டை வாசல் ஆகியவற்றை மலைக்கோட்டைக்குள்ளே இன்றும் காணலாம்.
  • அகழி இருந்த இடம் இப்போது சாலையாக மாறிவிட்டது.
  • காவிரியின் குறுக்கே கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய அணை இன்றும் காலத்தைக் கடந்து கல்லணையாக நின்று,பண்டைய சோழர்களின் பெருமையையும் பொறியியல் திறனையும் பறை சாற்றுகிறது. இங்கிருந்து தான் காவிரி,கொள்ளிடம்,கல்லணைக் கால்வாய் என்று   பிரிகிறது.
  • ஆங்கில ஆதிக்கத்தின் போது ராபர்ட் கிளைவ் இங்கிருந்து அதிகாரம் செலுத்தினார். இன்றும் அவர் இருந்த இடம் கிளைவ்ஸ் ஹவுஸ் என அழைக்கப்படும் செயிண்ட் ஜோசப் கல்லூரியின் கிளைவ்ஸ் ஹாஸ்டலாக இருக்கிறது.
  • ஆங்கிலேயர் காலத்துப் பல கட்டடங்கள் இடிபாடுகளோடு  காணக் கிடைக்கின்றன. மலைக்கோட்டைக்கு எதிராக  செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கம்பீரமான சர்ச் இதற்கு எடுத்துக்காட்டு.

இன்று:

  • தமிழ் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள திருச்சியிலிருந்து எந்த இடத்துக்கும் செல்ல 24 மணிநேரமும் பஸ் வசதி உண்டு. 
  • ஏராளமான புகைவண்டிகள் பல மாநிலத்திற்குள் செல்கின்றன.
  • இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அமைந்திருக்கிறது.
  • திருச்சி கல்வி கேந்திரமாக விளங்குகிறது.


 –  150 வருடத்தைக் கடந்த செயிண்ட் ஜோசப் கல்லூரி

–    சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி பெண்கள் கல்லூரி

–    இந்திராகாந்தி கல்லூரி

–    நேஷனல் கல்லூரி

–    உருமு தனலக்ஷ்மி கல்லூரி

–    பிஷப் ஹீபர் கல்லூரி

–    பாரதிதாசன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட்

–    நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் (முன்னாள் ரீஜனல் இஞ்சினீரிங்க் கல்லூரி)

–    பாரதிதாசன் பல்கலைக்கழகம்

           – இன்னும் எத்தனையோ  கல்லூரிகள், பள்ளிகள்  

காவிரித் தாயின் மடியில் கொள்ளிடத்தின் அரவணைப்பில் உள்ளதால்  நெல்லும்,கரும்பும்,வாழையும் விளையும் பொன்னான பூமி இது.

ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் தினமும் வந்து போகும் புண்ணிய பூமி இது. ஸ்ரீரங்கம், திருவானைக் கோயில், மலைக்கோட்டை, தாயுமானஸ்வாமி கோயில், சமயபுரத்து அம்மன், வயலூர் முருகன், பிச்சாண்டார்  கோயில், குழுமாயி அம்மன் கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், குங்குமவல்லி அம்மன் கோயில், விராளிமலை முருகன் கோயில் போன்ற கோயில்கள் திருச்சிக்குப் பெருமை சேர்க்கின்றன. 

புகழ்மிக்க பி‌எச்‌இ‌எல் (BHEL), துப்பாக்கித் தொழிற்சாலை இங்கு அமைந்துள்ளன.

முக்கொம்பு,கல்லணை ஆகியவை மகிழ்ச்சி தரும் சுற்றுலா தலங்கள்.

சுகம்:

காவிரியின் பாலத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒருபுறம் ஓங்கி உலகளந்தஉத்தமன் அரங்கனின் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோபுரம், மறுபுறம் அரவணைத்துக் காத்தருள் புரியும் உயர்ந்த உச்சிப் பிள்ளையார் மலைக்கோட்டை, கீழே நெளிந்து ஓடும் காவிரி அன்னை .. ஆகா! என்ன சுகம்  என்ன சுகம்!

மலைக்கோட்டை உச்சியில் நின்று  பார்த்தால் சிலுசிலுக்கும் காற்றின் சுகத்தோடு கீழே வளைந்து ஓடும் காவிரியையும், கொள்ளிடத்தையும், உயர்ந்து நிற்கும் அரங்கன் கோபுரத்தையும்  நீண்ட பாலத்தையும் பாலத்தில் ஊர்ந்து  வரும்   புகை வண்டியையும் பொடிப் பொடியாய் தெரியும் வீடுகளையும் காணலாம். காணக் கண் கொள்ளாக் காட்சி அது.   

image